பூமரப் பாவைகள் – 12 (2)

“வாசு, டேய் வாசு… எவ்வளவு நேரம் டா? வசுமதி, நேரமாகுது மா, சீக்கிரம் கிளம்புங்க” என்ற மாதவனின் குரலில் அத்தனை அவசரம்.

“பத்து நிமிஷம் குடுண்ணா, வந்திடுறோம்” உள்ளிருந்து பதிலுக்குக் கத்தினான் வாசுதேவன்.

“என்ன டா வசும்மா, ஏன் இப்படி உட்கார்ந்திருக்க? எல்லாம் எடுத்து வச்சாச்சு, எல்லோரும் கிளம்பியாச்சு, நமக்காகத் தான் வெயிட் பண்றாங்க. ஃப்ளைட்டுக்கு நேரமாகுது பாரு டா. எழுந்திரு” என்றான் அவள் தோள் பற்றிக் குலுக்கி, அசையாமல் செதுக்கி வைத்த சிலைப் போல அமர்ந்திருந்தாள் வசுமதி.

‘ஏன் இப்படி உட்கார்ந்திருக்க? என்னாச்சு உனக்கு?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டிருந்தாள் வசுமதி.

தங்களுக்குத் துபாயில் ஏதோ பெரிய பிரச்சனை காத்திருப்பது போன்ற பிரம்மை அவள் மனதில் எழுந்து, பூதாகரமாக நின்றது. இத்தனை நாட்களாக அவர்கள் வாழ்வில் நிறைந்திருந்த இனிமை, இனி இருக்கப் போவதில்லை என்பதைப் போல… இதே வாசுவை அங்குக் காண முடியாது என்பதைப் போல.. வாழ்க்கையே தலைகீழாக மாறி விடும் என்பதைப் போல…

அவள் மனதில் இனம் புரியாத கலக்கம் பரவுவதை அவளால் தவிர்க்க முடியவில்லை. தான், ஏன் இப்படி உணர்கிறோம், தனக்கு என்ன பிரச்சனை வரப் போகிறது என்று விளங்கிக் கொள்ள இயலாமல் தவித்தது அவள் மனம்.

“என்னடா வசும்மா?” என்று அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தான் வாசு.

“என்னாச்சு? இங்கேயே இருக்கணும் போல இருக்கா?” என்றான் அவள் முகத்தைக் கைகளில் ஏந்தி, ‘இல்லை, அப்படியில்லை’ என்று எப்படிச் சொல்வது, என்று யோசித்தபடி மௌனமாய் இருந்தாள் அவள்.

அவளின் தொடர்ந்த மௌனம் அவனைக் கலவரப்படுத்தி இருந்தது. “வசும்மா, லீவ் எக்ஸ்ட்டெண்ட் பண்ணவா டா, உனக்கு இன்னும் பத்து நாள் லீவ் இருக்கு தானே?, இரு நானும் பத்து நாள் லீவ் கேட்டுப் பார்க்கறேன். வெளியூர் எங்கேயாவது போகலாம்” என்று வேகமாகப் பாக்கெட்டில் கை நுழைத்து தனது மொபைலை எடுத்தான் அவன். அதே வேகத்தோடு தொடர்பு எண்ணைத் தேடி அழுத்தப் போனான், மின்னலென விரைந்து அவனைத் தடுத்தாள் அவள்.

அவளுக்குத் தெரியும், அவனுக்குக் கூடுதலாக ஒரு நாள் கூட விடுமுறை கிடைக்காது என்று… ஆனாலும் அவளுக்காக முயற்சிக்கிறேன் என்கிறான், மனம் நெகிழ்ந்து போனாள் வசுமதி.

வாசுக்கு அவளது மனநிலை புரியவில்லை. என்ன செய்து அவளைச் சரி செய்வது என்று தெரியாமல், கவலையுடன் அவளது கண்களை நோக்கினான்.

அவன் கண்களில் தெரிந்த கலக்கத்தைக் கண்டவள், எச்சில் கூட்டி விழுங்கி, தொண்டையைச் சரி செய்தாள். “ஒன்னுமில்ல வாசு, எப்பவும் ஊருக்கு வந்திட்டு கிளம்பும் போது இப்படித் தான் இருக்கும். ஒரு மாதிரி… எல்லோரையும் விட்டுட்டுப் போக மனசு வராம…” எதையோ சொல்லி, சமாளிக்க முயன்றாள். சரியான காரணம் அவளுக்கே தெரியாத போது, அவனுக்கு என்னவென்று விளக்குவாள் அவள்.

“அவ்வளவு தானா டா வசும்மா. ஒரு நிமிஷம் நான் ரொம்பப் பயந்துட்டேன். என் ஹார்ட் பீட் ஏகிறிடுச்சு, பாரு” என்றவன் அவள் கைப் பிடித்து, அவனது இதயத் துடிப்பை உணரச் செய்தான். தாறுமாறாய் துடித்துக்

கொண்டிருந்தது அவன் இதயம்.

அவனையும் தேவையில்லாமல் பதட்டப்படுத்தி விட்டோம் என்று மிகவும் சங்கடமாகி விட்டது அவளுக்கு. மெல்ல அவன் மார்பில் முகம் பதித்து, இரு கரங்களையும் அவனைச் சுற்றி கோர்த்து கொண்டாள் வசுமதி. கணவனை மேலும், மேலும் கவலையுற செய்கிறோம் என்பதை உணரவே இல்லை அவள்.

ஏதோ ஒன்று அவளைக் கலக்கமுற செய்கிறது என்பதை மட்டும் புரிந்து கொண்ட வாசு, அவளை ஆறுதலாக இறுக அணைத்துக் கொண்டான்.

“இனி நீ உலகத்தின் எந்த மூலைக்குப் போனாலும், உன் கூடவே நான் இருப்பேன் வசும்மா. இனி, நீ தனி இல்ல… அதனால் தனியா இருக்க ஃபீல் எல்லாம் இனி எப்பவுமே உனக்கு வராது டா. ஒரு ஆறு மாசம் பொறுத்துக்கோ. ஒன் வீக் லீவ் போட்டுட்டு ஊருக்கு வரலாம்” என்றான் அவளைச் சமாதானப் படுத்தும் நோக்கில், ‘இனி, எப்போதும் நான் உன் கூடவே இருப்பேன்’ என்று அவன் சொன்னதே அவளுக்குப் போதுமானதாக இருக்க, மெல்ல தெளிந்தது அவள் முகம்.

“எழுந்திருங்க வாசு, போகலாம். ஃப்ளைட்க்கு நேரமாச்சு” என்றாள் அவன் முகம் பார்த்து புன்னகைத்து,

“ஓகே வசும்மா, உங்க வீட்டுக்கு போயிட்டு, அப்புறம் தான் ஏர்போர்ட் போறோம்” என்றவன், அவள் கரம் பற்றி எழுப்பி விட்டான், நடக்க முற்பட்டவளை இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

ஒரு நிமிடம் அவளை அப்படியே அணைத்தபடி அசையாமல் நின்றான். அவளின் அலைப்புற்ற மனதுக்கு அது தேவையாக இருந்தது. அந்த இதத்தில் தொலைந்து, மௌனமாய் நின்றாள் அவள். மெல்ல அவளைத் தன்னிடம் இருந்து பிரித்தான், அவள் நெற்றியில் அழுத்தமாய் இதழ் ஒற்றினான். கண்களை மூடி அனைத்தையும் மறந்து அவனது அன்பில் கரைந்து போனாள் வசுமதி.

விமானம் நடுவானில் நன்கு பழக்கப்பட்ட பறவையைப் போலத் தனது இலக்கை நோக்கி பறந்து கொண்டிருந்தது.

“உண்மையாவே உனக்கு 23 வயசா? இல்ல என்கிட்ட பொய் சொல்லி, மைனர் பொண்ணை எனக்குக் கல்யாணம் பண்ணி வச்சுடாங்களா?” வசுமதியின் புறமாகச் சாய்ந்து, சந்தேகமாகக் கேட்டான் வாசு. பதிலுக்கு அவனைக் கடுப்புடன் முறைத்து வைத்தாள் வசுமதி.

“ஃபர்ஸ்ட் டே ஸ்கூலுக்குப் போற மாதிரி, எவ்வளவு கலாட்டா… இப்படியா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவ?” என்று செல்லமாக அலுத்துக் கொண்டான் அவன்.

“நான் எங்க அழுதேன்? சும்மா கேலி பண்ணாதீங்க. நான் ஒன்னும் அழலை” உதட்டை பிதுக்கி, கண்களைச் சுருக்கி, கோபமாய்ச் சொல்ல முயன்று சிணுங்கலாய் முடித்தாள் அவள்.

“அப்படியே காலை மட்டும் உதைச்சன்னு வச்சுக்கோ வசும்மா, குட்டி பொண்ணே தான்” குழந்தை என்று விட்டு, கண்ணடித்தான் அவன். உதடு கடித்துச் சிரிப்பை விழுங்க முயன்றாள் அவள், ஆனால் முடியாமல் பக்கென்று சிரித்து விட்டாள்.

“அப்பாடா என் பொண்டாட்டி சிரிச்சுட்டா, உன்னை இப்படிப் பார்க்க தான் பிடிக்குது வசும்மா.” என்றான் அவள் கண்களைப் பார்த்து, தன் சிரிப்பை பெரிதாக்கினாள் வசுமதி.

அவன் தோள் சாய்ந்து உறங்க முயற்சித்தாள், அவளது உச்சியில் தலைப் பதித்துக் கண் மூடினான் வாசு.

கணவனின் வார்த்தைகள் மனதில் ஓட, சிறுபிள்ளை போலத் தான் நடந்து கொண்டோமோ என்ற யோசனையில் மூழ்கினாள் அவள்.

வீட்டில் இருந்து கிளம்பியவர்கள் ஏர்போர்ட் செல்லும் வழியில் வசுமதியின் வீட்டிற்குச் சென்று அவளின் பெற்றோரிடமும், அண்ணன் குடும்பத்தினரிடமும் விடை பெற்று கொண்டனர். ஆனால், அவளின் மொத்த குடும்பமும் அவர்களுடன் ஏர்போர்ட் வந்து அவர்களை வழியனுப்ப தாயாராக நின்றது.

வாசு, வசுமதி, மாதவன் குடும்பம் ஒரு காரிலும், அவனின் பெற்றோர் மற்றும் அக்கா குடும்பத்தினர் இன்னொரு காரிலும் வந்தனர். இப்போது வசுமதியின் குடும்பமும் தங்களின் காரில் அவர்களைப் பின் தொடர்ந்தது.

மூன்று மணி நேரத்திற்கு முன்னரே விமான நிலையம் வந்து விட்டனர். சிறிது நேரம் இரு குடும்பத்துடனும் பேசிக் கொண்டிருந்தனர் தம்பதிகள்.

வாசுவின் தந்தை சரவணனின் முகத்தில் மகிழ்வும், நிம்மதியும் அப்பட்டமாகத் தெரிந்தது. மகனை இப்படித் தானே காண விரும்பினார் அவர். கடந்த ஒரு மாத ஓய்வில் நன்றாக உடல் தேறி இருந்தார் அவர்.

வசுமதியின் பெற்றோரும் மிகுந்த மகிழ்வுடன் மகளையும், மருமகனையும் துபாய்க்கு வழியனுப்பி வைத்தனர். திடீரென்று முடிவான திருமணம் என்றாலும் கூடச் சிறப்பாக நடத்தி முடித்து மகளைக் கணவனுடன் ஊருக்கு அனுப்புவதில் ஒரு வித சந்தோஷம் என்றால், வாசுதேவன் போல ஒருவன் மகளுக்குக் கணவனாக அமைந்ததிலும், அவனது குடும்பத்தையும் காண்கையில் மகளது எதிர்காலம் குறித்த கவலை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் இருந்தது அவர்களுக்கு.

வருண் இம்முறை எவ்வித சந்தேகமும், சண்டையும் இன்றி, தங்கைக்குக் கலங்கிய கண்களுடன் விடைக் கொடுத்தான். சிறிதே மன சுணக்கம் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் தங்கையின் பிரிவை தாங்கிக் கொண்டு நின்றிருந்தான்.

ஆனால், இதை எல்லாம் ஒதுக்கி விட்டு தங்களது உலகில் சஞ்சரித்தனர் குழந்தைகள். மாதவனின் மூன்று வயது மகள் ஆராதனாவும், வருணின் ஒன்றரை வயது மகன் விஷ்வாவும், வசுமதியின் காலைக் கட்டிக் கொண்டு அழுதனர். அவளை விமான நிலையத்திற்குள் செல்லவே அனுமதிக்கவில்லை அவர்கள்.

அவள் கையில் இருந்து இறங்காமல் அழுது ஆர்ப்பாட்டம் செய்தனர். வசுமதிக்கும் அவர்களைப் பிரியவே மனமில்லை. இருவரையும் மாற்றி மாற்றித் தூக்கி வைத்துக் கொண்டாள். அள்ளி அணைத்து, பட்டுக் கன்னங்களில் முத்தமிட்டுக் கொண்டே இருந்தாள்.

அவர்களை அவளிடம் இருந்து பிரிக்க முயன்ற வாசுவை குழந்தைகள் வில்லனைப் போலப் பார்த்தனர். விஷ்வா உதடு பிதுக்கி முதலில் அழத் தொடங்க, அவனைப் பார்த்து தானும் அழ ஆரம்பித்தாள் ஆராதனா. வசுமதியின் கண்களும் தானாகக் கலங்கின. வாசு, என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்தவாறு முழித்துக் கொண்டு நின்றான்.

error: Content is protected !!
Scroll to Top