பூமரப் பாவைகள் – 12 (1)

அவளது கவலை அவசியமற்றது என்று நிரூபிக்கும் விதமாக, எதிரில் நின்ற உருவம் மெல்ல இதழ் பிரித்துச் சிரித்தது.

அவ்வளவுதான், அதுவரை சோக கீதம் வாசித்துக் கொண்டிருந்தவளின் மனது பட்டென்று காதலின் சங்கீதத்திற்குத் தாவ, “நரேன்..” கத்தியபடி எழுந்து கணவனிடம் ஓடினாள் நர்மதா.

அவன் கன்னத்தில் கை வைத்து, தான் காண்பது கனவல்ல என்று ஊர்ஜிதம் செய்ய விழைந்தாள் நர்மதா. அதில் அவனுக்குச் சிரிப்பு மூண்டு விட, சட்டென உரக்கச் சிரித்து விட்டான் நரேன்.

“நான் தான் நம்மு, நீ ஒன்னும் கனவு காணல..” என்றான் அவளின் நெற்றியில் லேசாக முட்டி,

“ஆஆஆ நரேன்” என்று போலியாக அலறியவள், “என் மேல இருந்த கோபம் போய்டுச்சா?” என்றாள் மெல்ல, அவளுக்குக் குரலே எழும்பவில்லை.

“கோபம் எல்லாம் இல்லடா நம்மு, வருத்தம் தான்… என்ன சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டீங்கறியேன்னு ஆதங்கம் தான் எனக்கு.. ஆனா, அது உனக்கு எங்க புரியுது?” அங்கலாய்த்தான் நரேன். எப்போதும் போல அவன் தனக்காக இறங்கி வந்தது அவளை நெகிழ்த்தியது.

அவள் மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது, ஆனால், அவை எல்லாவற்றையும் விட அவளுக்கு நரேன் முக்கியம், மூச்சுக் காற்றைப் போல அவளுக்கு அவன் அவசியம். அவனில்லாமல் அவளால் ஒரு நாளை கூடக் கடக்க முடியாது. இருவருக்கும் இடையில் இருந்த இடைவெளியை நொடியில் கடந்தாள் நர்மதா. இருபுறமும் கரம் கோர்த்து கணவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

“வெரி வெரி சாரி நரேன்” என்றவளின் குரலில் மெய்யான வருத்தம் இருந்தது. அவன் மனதை நோகடித்த வருத்தம், அவனை அலைக்களித்த வருத்தம். ஆனால், அவன் எதையும் பெரிது படுத்தவில்லை.

“உன் சாரியை செயல்ல காட்டு” என்றான் கண்ணடித்து, நொடி கூடத் தாமதிக்காமல், அவன் முகத்தைத் தன்னை நோக்கி இழுத்தாள். அவசரமாய், அழுத்தமாய் முத்தமிட்டாள் நர்மதா. வார்த்தைகளில் சொல்லிட முடியா உணர்வுகளை இதழ்களினால் கடத்த முயன்றாள். உணர்ச்சி மிகுதியில் அவளுக்குக் கண்கள் கலங்கியது, அவன் தோளை இறுக்கின அவள் விரல்கள்.

“ஷ்ஷ் நம்மு..” ஆதூரமாய் அவளின் முதுகை நீவியது அவன் கரம். நிதானமாக அவளைத் தன்னிடம் இருந்து விலக்கி, “பிராமிஸ் மீ நம்மு. இனி குழந்தைக்காக என்கிட்ட, இல்ல, குழந்தைக்காக நாம சண்டைப் போட மாட்டோம்னு… பிளீஸ்” ஒரு கரத்தில் அவளை இறுக்கி அணைத்தபடி, மறு கரத்தை நீட்டினான்.

தன் முன் நீண்டிருந்த அவன் கரத்தை பார்த்தது, பார்த்தபடி நின்றாள் அவள்.

அவனுக்கு வாக்குக் கொடுக்க அவளுக்குத் துளி கூட விருப்பமில்லை.

சத்தம் போட்டு கத்தி அழ வேண்டும் போலிருந்தது அவளுக்கு, உணர்ச்சிகளின் வேகத்தில் கண்கள் கலங்கி, தொண்டையடைத்தது.

“எதற்காகச் சத்தியம் கேட்கிறாய் நரேன்? என்ன மாதிரி சத்தியம் கேட்கிறாய்? எப்படி முடியும் என்னால்?” என்று பெருங்குரலெடுத்து அவனது முகத்திற்கு முன்னே கத்த வேண்டும் போலிருந்தது அவளுக்கு,

“எப்போதிருந்து இத்தனை கொடூரமானவனாய் மாறினாய் நீ” கதறியது அவள் மனம். ஆனால் நரேனை மேலும், மேலும் காயப்படுத்திப் பார்க்க அவள் துளியும் விரும்பவில்லை.

அவனைப் பாலையின் வெயிலாய் எரித்தது போதும், சில காலம் மழையாய் மாறி அன்பை பொழிந்து குளிரச் செய்வோம் என்று மனதில் உறுதி பூண்டவள், தன் கரத்தை அவன் கரத்துடன் பிணைத்து அழுத்திக் கொடுத்தாள்.

சட்டென அலாதியான மகிழ்ச்சி அவன் முகத்தில், கண்களின் ஒளி சட்டென மீண்டிருந்தது. அவன் மனம் முழுவதும் வார்த்தைகளில் வடிக்க முடியாததொரு இதம் பரவ, “தாங்க்ஸ் நம்மு” என்றான் ஆத்மார்த்தமாக.

அவனது வெளிப்படையான மகிழ்ச்சி அவளுக்கு ஆறுதல் அளித்தாலும் கூட, அவளால் இயல்பாக இருக்க இயலவில்லை.

மனதில் இனம் புரியாத வலி. பல வருடங்களாக அவள் ஏங்கி தவித்துக் கொண்டிருக்கும் குழந்தை கனவு, கனவாகவே போய் விடுமோ என்ற பயம் எட்டி அவளின் கழுத்தை நெரித்தது. இதயம் கனத்து, கண்ணீரை கரைய விடத் தயாராக, அதைத் தடுக்கக் கணவனிடம் இருந்து விலகி படுக்கையில் அமர்ந்தாள் அவள்.

“நாளைக்கு நைட் ஃப்ளைட் நம்மு. உனக்கும் சேர்த்து டிக்கெட் போட்டுட்டேன். இப்பவே எல்லாத்தையும் எடுத்து வை மா. அப்போ தான் சரியா இருக்கும்” என்றான் நரேன், அணிந்திருந்த சட்டையைக் கழற்றி எறிந்து விட்டுப் படுக்கையில் விழுந்து கண்களை மூடினான் அவன்.

அன்றைய இரவை கண்ணீரில் கரைத்தாள் நர்மதா.

மறுநாள் இரவு அவர்கள் துபாய் பறந்திருந்தனர். நர்மதா யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை. யாரின் நினைவும் அவளுக்கு வரவில்லை. நெஞ்சம் முழுதும் குழந்தை ஆசையே நிறைந்திருந்தது. அதை மீறி எதையும் யோசிக்கும் நிலையில் அவளில்லை.

துபாய்ச் சென்றதும் நரேன் அவன் வேலையில் மூழ்கி விட, மோட்டு வளையை வெறித்தபடி, தனிமையை விழுங்கியபடி அமர்ந்திருந்தாள் நர்மதா.

எத்தனை முயன்றும் அவளால் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியவில்லை.

ஏனோ அவள் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது. அதில் இருந்து தப்பிக்க மீண்டும் வேலைக்குச் செல்ல முடிவெடுத்து, வேலை தேடும் வேட்டையில் இறங்கினாள் அவள்.

error: Content is protected !!
Scroll to Top