பூமரப் பாவைகள் – 11 (2)

அவள் விளையாடவில்லை, மிகத் தீவிரமாகத் தான் கேட்கிறாள் என்று அவள் கண்களைப் பார்த்தே புரிந்து கொண்டான் அவன். பட்டென்று அவளைத் தன்னிடம் இருந்து விலக்கி, எழுந்து அமர்ந்தான் நரேன். அவன் தள்ளியதில் தூர விழுந்தவள், அவனைப் போலவே எரிச்சலுடன் எழுந்து அமர்ந்தாள். சட்டென மூண்ட கோபத்தில் அவள் கண்கள் அவனை எரித்து விடுவதைப் போலப் பார்த்தது.

“சீரியஸ்லி நர்மதா? எத்தனை முறை எடுத்துச் சொன்னேன். அப்போ சரி, சரின்னு மண்டையை மண்டையை ஆட்டிட்டு, இப்போ மறுபடியும் முதல்ல இருந்து தொடங்கற?” கிட்டத்தட்ட கத்தினான் அவன்.

“நரேன் பிளீஸ், இந்த ஒரே ஒரு தடவை… எனக்காக..” கெஞ்சினாள் அவள்.

“முடியாது நர்மதா. முடியவே முடியாது. இதுக்கு மேல உன் உடம்பை புண்ணாக்க நான் அனுமதிக்க மாட்டேன். மாத்திரை, மருந்து, இன்ஜெக்சன்ஸ், ஃப்ளட் டெஸ்ட்ஸ், ஸ்கேன்ஸ்… எவ்வளவு நர்மதா? அதென்ன உடம்பா, வேற என்னமுமா? உன் உடம்பு ஒன்னும் உன்னோட விளையாட்டுப் பொம்மை இல்ல நர்மதா” கோபத்தில் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.

“உங்களுக்கு என்ன தெரியும்? பெருசா சொல்ல வந்துட்டீங்க. டாக்டர்ஸ் சொன்னா சரியா தான் இருக்கும். அவங்க சொல்ற படி…” அவளது முகத்திற்கு நேராகக் கை நீட்டி, “போதும்” என்று மேலே பேச விடாமல் அவளைத் தடுத்தான் நரேன்.

“டெஸ்ட்ஸ், ரிப்போர்ட்ஸ் எல்லாம் நார்மல்னு தான் சொல்லுது, டாக்டர்ஸும் அதையே தான் கன்பார்ம் பண்ணாங்க. குழந்தை தானா வரும், கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்கன்னு தான் சொன்னாங்க. நீ தான்… நீயே தான்… குழந்தை ஆசைப் பிடிச்சு ட்ரீட்மெண்ட் மேல ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு இருக்க. வேணாம் நர்மதா. பிளீஸ், நாம வெயிட் பண்ணலாம்” இந்த முறை கெஞ்சினான் அவன்.

“ஆல்ரெடி அஞ்சு வருஷம் ஆச்சு நரேன். இன்னும் எவ்வளவு நாள் வெயிட் பண்ண சொல்றீங்க?” பல்லைக் கடித்துக் கொண்டு பதிலுக்குக் கத்தினாள்.

“அஞ்சு வருஷம் இல்ல, மூனு வருஷமா தான் குழந்தைக்கு டிரை பண்றோம். சோ…” அவனை மேலே பேச விடவில்லை அவள்.

“பிளீஸ், நரேன் நான் இதைப் பத்தி பேச ஆரம்பிக்கும் போதெல்லாம் தடுத்து, தடுத்து பேசாதீங்க. எனக்குக் கஷ்டமா இருக்கு. பிளீஸ், இந்த ஒரு முறை மட்டும்…எனக்காக… பிளீஸ்” அவனை நெருங்கி அவன் கன்னம் பற்றினாள். அவளின் வார்த்தைகள் மட்டும் அல்ல, கண்களும் கெஞ்சியது.

அந்தக் கண்களை நேராகப் பார்த்து தனது மறுப்பைச் சொல்ல முடியவில்லை அவனால், தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வர, பல்லைக் கடித்துக் கண்களை இறுக மூடினான் நரேன்.

கண்களை மீண்டும் திறக்கும் போது, நர்மதாவின் முறையைப் பின் பற்றினான், அவனது கன்னத்தைத் தாங்கி இருந்த அவளது உள்ளங்கையில் அழுந்த முத்தமிட்டான்.

“இதுவரை எனக்காக உன்கிட்ட நான் எதுவுமே கேட்டது இல்ல நம்மு. எனக்காக இதைச் செய்ய மாட்டியா? இந்த ஒரு தடவை மட்டும் என் பேச்சைக் கேளேன், பிளீஸ்” கண்களும், குரலும் போட்டிப் போட்டு கெஞ்சியது. ஆனால், நர்மதா மனம் இறங்கவில்லை.

“நீங்க எனக்காக விட்டு கொடுங்க நரேன்” என்றாள் குரலில் அழுத்தத்துடன், கோபத்தைக் கட்டுப்படுத்த கைகளை இறுக மூடித் திறந்தான் நரேன்.

“முடியாது நர்மதா, எல்லா நேரமும் நானே, விட்டுக் கொடுத்துட்டு இருக்க முடியாது” என்றவன்,

“நல்லா கேட்டுக்கோ நர்மதா, இன்னொரு முறை நான் இதைச் சொல்றதா இல்ல. நோ மோர் ட்ரீட்மெண்ட்ஸ். பணம் பெரிய விஷயம் இல்ல, ஒவ்வொரு முறையும் ட்ரீட்மெண்ட் சக்சஸ் ஆகாம நீ உடைஞ்சு போறதை என்னால பார்க்க முடியல. எனக்கு ஒரே குற்ற உணர்ச்சியா இருக்கு. ஐ காண்ட் டூ திஸ் எனிமோர்.

இன்னொரு முறை, இன்னும் ஒரே ஒரு முறை உன்னை ரத்த வெள்ளத்தில் நம்ம பாத்ரூம்ல பார்த்தா, சத்தியமா நான் என்னாவேன்னு எனக்கே தெரியாது. என்ன முடிவெடுப்பேன்னும் எனக்குத் தெரியாது.

இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் சரி தான், நீ நார்மலா குழந்தை உண்டாகற வரைக்கும் நான் காத்திருக்கத் தயார். அப்படிக் குழந்தை வரும் போது, உன்னையும், குழந்தையையும் பொத்தி பாதுகாக்க நான் காத்துட்டு இருக்கேன். ஆனா, இன்னைக்கு, இப்போ, உனக்கு என்ன வேணும்னு, இனி நீ தான் முடிவு பண்ணனும் நர்மதா. எனக்கு நீ போதும். நீ மட்டும் போதும். ஆனா உனக்கு? நீயே முடிவு பண்ணிக்கோ.” அவன் குரலில் சட்டென அதிகமான பொறுமையும், நிதானமும் குடியேறி இருந்தது.

அவள் முகம் பார்த்து, கண்களை நேராக நோக்கி ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தமாக உச்சரித்துச் சொன்னான் நரேன். ஆனால், நர்மதாவை அவை சற்றும் பாதிக்கவில்லை. தன் முடிவில் அவள் உறுதியாக இருந்தாள். அதிலிருந்து மாறும் எண்ணம் அவளுக்குச் சிறிதும் இல்லை.

“ஒரே ஒரு முறை நரேன். பிளீஸ், இந்த முறை ஐவிஎப் கண்டிப்பா சக்சஸ் ஆகும் நரேன். நீங்க வேணா பாருங்க, அடுத்த வருஷமே நாம…”

அதற்கு மேல் அவனால் அவளது பேச்சை கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை. எத்தனை பொறுமையாகக் கிளிப் பிள்ளைக்குச் சொல்வது போல, சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இவள்… கோபத்தை, ஏமாற்றத்தை தாங்க முடியாமல் அவனது கைகள் நடுங்கியது.

படுக்கையில் இருந்து பட்டென்று எழுந்து தன் உடைகளைத் தேடி எடுத்துக் கொண்டு, பாத்ரூம் சென்று கதவடைத்துக் கொண்டான் அவன். தன்னைச் சீர்ப் படுத்திக் கொண்டு, அவன் வெளியில் வருவதற்காகக் காத்திருந்தாள் நர்மதா.

ஐந்தே நிமிடத்தில் அவன் குளித்து, இடுப்பில் டவலைக் கட்டிக்கொண்டு வெளியில் வர, அவன் பின்னால் போனாள் நர்மதா. அவன், அவளைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. மடமடவென உடை மாற்றி, தன் உடைமைகளை அள்ளி எடுத்து தனது சூட்கேஸில் திணித்தான்.

அவனைத் தடுத்து நிறுத்தும் வழி தெரியாமல், “நரேன் பிளீஸ்..” என்று அவன் கரம் பற்றி இழுத்தாள் நர்மதா.

அவள் கையைத் தன் மேலிருந்து மெதுவாகப் பிரித்து விலக்கி விட்டு,

“நான் சொல்ல வேண்டியதை ஏற்கனவே சொல்லிட்டேன் நர்மதா. இனி நீ தான் முடிவெடுக்கனும்…” என்றவன் நிறுத்தி, நேராக அவள் முகம் பார்த்து, “ஆனா, நீ எப்பவோ முடிவெடுத்துட்ட போலயே? வேலையை விட்டாச்சு. ஊர்ல அம்மா கூடக் கொஞ்ச நாள் இருந்துட்டு வரேன்னு என்கிட்ட சொன்னது எல்லாம் பொய். நீ முன்னாடியே எல்லாத்தையும் பிளான் பண்ணி தான் ஊருக்கு கிளம்பி வந்திருக்க. வசுமதி கல்யாணம் வெறும் சாக்கு தான் உனக்கு” என்றான் கசந்த குரலில்,

“ரொம்பப் பேசாதீங்க நரேன். ஆமா, நான் பிளான் பண்ணேன் தான். என்ன அதுக்கு? கொள்ளை அடிக்கவா பிளான் பண்ணேன். குழந்தை பெத்துக்கத் தானே? பெரிய உலக மகா குத்தம் போலச் சொல்ல வந்துட்டார். எனக்குத் தெரிஞ்சு தன்னோட குழந்தையைப் பார்க்க ஆசைப்படாத முதல் அப்பா, நீங்களா தான் இருப்பீங்க” என்றாள் அவளும் பதிலுக்குக் கோபத்துடன், அவன் முகம் வலியில் கசங்கி போனது.

அவளது வார்த்தைகள் குறித் தவறாமல் அவனைத் தாக்கி இருந்தது. என்ன சொன்னாலும், தற்போது அவளிருக்கும் மனநிலையில், அவள் எதையும் புரிந்து கொள்ளப் போவதில்லை எனும் போது, அவன் விளக்கி தான் என்ன ஆகப் போகிறது. தனது நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்வதை உணர்ந்தான் நரேன். ஆனாலும் அவள் முன் அதைக் காட்டிக் கொள்ளாமல் மறைத்து,

“ஓ, இருக்கட்டும் நர்மதா. நான் அப்படியே இருந்துட்டு போறேன். குழந்தைக்கு ஆசைப்படாத அப்பாவா… எனக்கு, என் பொண்டாட்டி தான் முக்கியம். குழந்தை எல்லாம் எனக்கு ரெண்டாம் பட்சம் தான்…” என்றவனின் தொண்டைக் குழி உணர்ச்சிகளை அடக்கியதில் ஏறி இறங்கியது.

“ஐய்யோ, அப்படியே….என் மேல இப்ப தான் பாசம் பொங்கிட்டு வருமே. பொண்டாட்டி முக்கியம், பொண்டாட்டி மேல அவ்வளவு அன்பு பெருகி வழியுது. ஆனா, அவ கேட்டதை மட்டும் செய்ய மாட்டாரு… பெரிய…” அவள் பேசிக் கொண்டே போனாள். அதுவரை நரேன் பெரும்பாடு பட்டு இழுத்து பிடித்து வைத்திருந்த பொறுமை அனைத்தும் காற்றில் கரைந்து போக,

“நீ ஒரு முட்டாள் நர்மதா. உனக்கு, உன் கையில இருக்கச் சொர்க்கம் கண்ணுக்கு தெரியல. அவ்வளவு தான். நீ ஒரு முட்டாள், உன் கால்ல விழுந்து கிடக்கற நான், உன்னை விடப் பெரிய முட்டாள்.” கோபத்தில் வார்த்தைகளை அள்ளி வீசி விட்டு, இரண்டெட்டு பின்னோக்கி வைத்தான். படாரென்று சத்தத்துடன் அறைக் கதவை திறந்து, தன் பெட்டியை ஆவேசமாக இழுத்தபடி, அவளைத் திரும்பியும் பாராமல் வீட்டை விட்டு வெளியேறி இருந்தான் நரேன்.

அவனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் இதயத்தில் அறைய, அதிர்ச்சியில் உறைந்து போனாள் நர்மதா. அப்படியே சுவரில் சாய்ந்து, சரிந்து அமர்ந்தாள். கண்கள் அவன் போன பாதையையே வெறித்தபடி இருந்தது.

அன்றிரவே துபாய் பறந்து விட்டான் நரேன். அவள் தான் எங்கும் செல்ல முடியாமல், எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தாள். இனி தன் வாழ்க்கை, தன் கணவன், குழந்தை, மாமியார் எனக் கலவையான உணர்வுகள் அவளுக்குள்ளேயே பறவையாய் சடசடத்துக் கொண்டிருந்தன.

வானில் வட்டமிடும் ஒற்றைப் பருந்தென அவளது நினைவுகள் நரேனை சுற்றியே வட்டமிட்டு கொண்டிருந்தன.

அவனை எளிதாகத் தவிர்க்க முடிந்த அவளால், அவனது நினைவுகளிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை. நதியின் சுழலில் மாட்டிய இலையைப் போல், நினைவுகளில் சிக்கிக் சுழன்று கொண்டிருந்தாள் அவள்.

நரேன் துபாய் சென்று மூன்று நாட்கள் தான் ஆகியிருந்தன. ஆனால் மூன்று மாதங்கள் ஆனதைப் போல உணர்ந்தாள் நர்மதா. இருவருக்கும் இடையில் தேவையில்லாத இடைவெளி உண்டாகி இருந்தது. போனில் வெறும் சம்பிரதாயப் பேச்சுக்கள் மட்டுமே பேசிக் கொண்டனர்.

பேச்சில் தானாகவே ஒரு விலகல் விழுந்திருந்தது. அதை விலக்க இருவருமே முற்படவில்லை. நர்மதா இன்னமும் ஒரு தெளிவான முடிவிற்கு வந்திருக்கவில்லை. அதனால் அவள் தன் பிடியில் உறுதியாக நின்றாள்.

கட்டிலில் சாய்ந்து, கண்களை மூடி அமர்ந்திருந்தவளின் மனம் முழுவதும் கணவனே நிறைந்திருந்தான்.

ஒரு பெருமூச்சுடன் மெல்ல கண்களைத் திறந்தாள் நர்மதா, அவளின் எண்ணங்களின் நாயகன் எதிரில் நிற்பது போல இருக்க, வேகமாய்க் கண்களைத் தேய்த்து விட்டாள் அவள். ஆனாலும் காட்சி மாறாமல் நரேன் அங்கே நிற்பது போல் தெரிய, தனக்குத் தான் மாயத் தோற்றங்கள் தெரிய ஆரம்பித்து விட்டது போல என்று அவள் மனம் கவலைக் கொள்ள ஆரம்பித்தது.

error: Content is protected !!
Scroll to Top