பூமரப் பாவைகள் – 11 (1)

“அம்மா, பிளீஸ். கொஞ்ச நேரம் பேசாம இருங்களேன். இப்ப தான் ரெண்டு பேரும் ஆபீஸ்ல இருந்து வந்தோம். அதுக்குள்ள… இப்படி வந்ததும் வாராததுமா ஆரம்பிச்சா எப்படி மா?” கழுத்து டையின் இறுக்கத்தைக் குறைத்தவனின் வார்த்தைகள் இறுக்கமாக வந்து விழுந்தன.

அவன் குரலில் சோர்வு மிகுந்திருந்தது. வெகு தூரம் ஓடிக் களைத்தவனைப் போலச் சோஃபாவில் பொத்தென்று அமர்ந்தான். அவன் கையில் இருந்த லேப்டாப் பேக் அவனது காலுக்கடியில் சரிந்து விழுந்தது. நர்மதா அவனைப் போலக் கொந்தளிக்கவில்லை. மௌனமாய்ச் சிலையென நின்றாள்.

“ஆமா டா, என்னை ஒரு வார்த்தைக் கூடப் பேச விடாத. உன் பொண்டாட்டியை எதுவும் சொல்லிடக் கூடாது. உடனே வந்திடுவ” சமையலறை வாசலில் நின்றபடி சலித்துக் கொண்டார் நரேனின் அம்மா சரஸ்வதி.

“உனக்கு இப்ப என்ன தான் மா வேணும்?” நரேனின் குரலில் எரிச்சல் லேசாக எட்டிப் பார்த்தது.

“விடிய விடிய கதைக் கேட்டுட்டு… இப்போ சீதைக்கு ராமன்…”

அவரை மேலே பேச விடவில்லை நரேன்.

“அம்மா, பிளீஸ். சுத்தி வளைக்காம சொல்ல வந்ததை நேரா சொல்லுங்க”

“நேரா சொல்லாம, வேற எப்படிச் சொல்றேனாம்? மூனு வருஷமா கத்திக்கிட்டு இருக்கேன். இங்க யாரு என்னை மதிக்கறா? அங்க என்னடான்னா ஒருத்தன் கல்யாணம் ஆகி மூனே வருஷத்துல ரெண்டாவது புள்ளை பெத்துக்கப் போறான். அபுதாபி வாம்மா, என் பொண்டாட்டியை பார்த்துக்கோன்னு கூப்பிடுறான். ஆனா இங்க? அஞ்சு வருஷம் ஆகியும் ஒரு புழு, பூச்சி வர்ற வழியைக் காணோம்”

“சூர்யா கூப்பிட்டா போ மா. அதுக்கு ஏன் வீணா என் தலையை உருட்டுற? வேணும்னா சொல்லு நானே உன்னைக் கொண்டு போய் அவன் வீட்ல விட்டுட்டு வரேன். கார்ல போனா ரெண்டு மணி நேரம் தானே. நீ கிளம்பு” என்றான் நரேன்.

“ஆமா டா. நான் இப்போ அங்க போகத் தான் துடிச்சுட்டு இருக்கேன் பாரு.” என்று அவர் கோபமாகச் சொல்ல,

“அம்மா… தலை வலிக்குது மா” இரைஞ்சினான் நரேன்.

“நான் பேசினாலே உனக்கு அப்படித் தான் இருக்கும் டா. என்ன பண்ணுறது. எல்லாம் என் நேரம்” தலையில் அடித்துக் கொண்டார் சரஸ்வதி. நரேனுக்கு இந்த நாடகம் எப்போது முடியும் என்றிருந்தது.

ஒரு காபி குடித்தால் தேவலாம் போலிருந்தது. ஆனால் இப்போது அதை எதிர்ப்பார்க்க முடியாது. நிச்சயம் கிடைக்காது. நர்மதாவிடம் கேட்கலாம் என்றால், அவளோ ஆணியடித்த ஓவியம் போல் அசையாது நின்றிருந்தாள்.

திடீரென்று மனம் மாறியதை போல அவனருகில் வந்து அமர்ந்தார் சரஸ்வதி. “இங்க பாரு டா, நரேன். உங்க பெரியத்தை மருமக மதுரையில பார்த்தாளாம். நல்ல கை ராசியான டாக்டர். இப்போ அவ குழந்தைக்கு மூனு மாசம் ஆகுது. ரெண்டு நாள்ல வசுமதி கல்யாணத்துக்கு ஊருக்கு போற இல்ல, அப்போ ஒரு எட்டு மதுரைக்குப் போய்ட்டு வாடா. அப்படியே பக்கத்தில இருக்க நம்ம கோவிலுக்கும்….” அவரை மேல பேச விடாமல் இடைமறித்தான் அவன்.

“சரிம்மா, கண்டிப்பா போய்ட்டு வர்றோம்.” என்று அவருக்குப் பிடித்தமான பதிலை அளித்து அவரைச் சடுதியில் சமாதானப்படுத்தி இருந்தான் நரேன்.

“எனக்கு என்ன பெரிய ஆசை.. என் மூத்தவன் புள்ளையைப் பார்த்துட்டா போதும்.. அப்புறம் இந்தக் கட்டை நிம்மதியா…” அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே நர்மதா நகர்ந்து, அறைக்குள் சென்று மறைந்தாள். அவளைப் பின் தொடர்ந்து உள்ளே போனான் நரேன்.

நர்மதாவின் அருகில் சென்று அவள் தோளை பற்றினான். “ஐ அம் ஓகே நரேன். என்னைக் கொஞ்சம் தனியா விடுங்க, பிளீஸ்” என்றாள் அவள். சட்டென்று அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் நரேன்.

“அம்மா பேசுறதை எல்லாம் பெருசா எடுத்துக்காத நம்மு.” என்றவன், அவள் முகம் தெளியாததைப் பார்த்து,

“இதை மட்டும் எப்பவும் ஞாபகத்தில் வச்சுக்கோ நம்மு. ஐ லவ் யூ அண்ட் ஐ வில் லவ் யூ… ஆல்வேஸ். என்ன ஆனாலும் சரி. நீ எனக்கு முக்கியம். நீ தான் எனக்கு எல்லாம்” ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தம் கொடுத்து உச்சரித்தான், உணர்ச்சி மிகுதியில் அவன் குரல் நடுங்கியது.

கண்களை இறுக மூடிக் கொண்டாள் நர்மதா. அக்கணம் விழி உயர்த்தி அவனைப் பார்க்கும் துணிவு அவளுக்கில்லை.

“நமக்கு ஒரு பிரச்சனையும் இல்லடா நம்மு. எல்லாமே நார்மலா தானே இருக்கு? குழந்தை பொறுமையா வரட்டும், அது வரை நாம, நமக்காக வாழ்வோம் டா” என்றான் அவள் முகத்தை ஒற்றை விரலால் நிமிர்த்தி,

“ஆனா, ஆனா நரேன். எனக்குக் குழந்தை வேணும். அத்தைக்காக இல்ல, உங்க வீடு, எங்க வீடுன்னு யாருக்காகவும் இல்ல. எனக்காக… எனக்கு நம்ம குழந்தை வேணும் நரேன். நம்மை நான் சுமக்கனும்னு ஆசைப் படுறேன். அது தப்பா நரேன்?” என்றாள் குரல் தழுதழுக்க, அவளுக்குப் பதிலளிக்க அவனுக்குத் தெரிந்த ஐந்து மொழிகளில் ஒன்று கூட அப்போது அவனுக்குக் கைக் கொடுக்கவில்லை.

அவள் கேள்வி மனதை அழுத்தமாய்த் தாக்க, அதன் தாக்கத்தினால் கண்கள் கலங்கியது அவனுக்கு, கால்கள் நிற்க முடியாமல் மடிய, தளர்ந்து படுக்கை நுனியில் அமர்ந்தான். மனைவியை இழுத்து, மடியில் அமர்த்திக் கொண்டான். அழுகையில் குலுங்கிய அவளது முதுகை மெல்ல நீவி விட்டான்.

“பிளீஸ் நம்மு, அழாத டா. உன்னோட கண்ணீரை பார்க்கும் போதெல்லாம், இதயத்தை யாரோ கையில் எடுத்து கசக்கி பிழியற மாதிரி வலிக்குது டா. உன்னோட இந்த நிலைமைக்கு நான் தானே காரணம்..” என்றவனின் குரல் நடுங்கியது.

“இல்ல, உங்களால இல்ல. எல்லாம் என்னால தான் நரேன். என்னால ஒரு குழந்தைக்கு அம்மாவா ஆக முடியலை..”

“ஷ்ஷ்.. பாரு, திரும்பவும் அதே மாதிரி பேசற… பிளீஸ் டா, நாம கொஞ்ச நாளைக்கு இதை எல்லாத்தையும் மறந்துட்டு இயல்பா இருப்போம் நம்மு.” பதிலுக்கு நர்மதா ஏதோ சொல்ல வந்தாள், ஆனால் நரேன் அவளைப் பேச விடவில்லை. மடியில் இருந்தவளை மூச்சு முட்டும் அளவு இறுக அணைத்துக் கொண்டு கண்களை மூடினான்.

நர்மதாவிற்கு அந்த நொடியில் நரேனும், அவனது அன்பும் மட்டும் போதும் என்று தோன்றியது. எந்நேரமும் கவலையிலும், சிந்தனையிலும் மூழ்கி இருந்த மனதிற்குச் சற்றே ஓய்வு கொடுக்க விரும்பினாள் அவள். நரேனின் கழுத்து வளைவில் வாகாகத் தன் தலையைப் பொருத்தி கண் மூடினாள் அவள்.

மறுநாள் நரேனின் பெற்றோர் அபுதாபியில் இருக்கும் அவனது தம்பியின் வீட்டிற்குச் சென்று விட்டனர். போகும் முன் மீண்டும் ஒரு முறை, மதுரை செல்ல வேண்டும், கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி விட்டே கிளம்பிப் போனார் சரஸ்வதி. எப்போதும் போல எதிலும் தலையிட்டுக் கொள்ளாமல் அமைதியாக ஒதுங்கி நின்றார் நரேனின் அப்பா.

அவர்கள் கிளம்பிச் சென்ற மறுநாளே நர்மதாவும், நரேனும் இந்தியா வந்து சேர்ந்தனர். கடைசி நிமிடம் வரை போவதா, வேண்டாமா என்ற குழப்பமான மன நிலையில் தான் இருவருமே இருந்தார்கள். ஆனால், நர்மதா தான் வேலையை விட்டு விட்டேன். கண்டிப்பாக வசுமதியின் திருமணத்திற்குச் சென்றே ஆக வேண்டும் என்று அடம்பிடித்தாள்.

அவள் பரிசு பொருட்கள் முதற்கொண்டு அனைத்தையும் வாங்கியும் வைத்திருந்தாள். அதற்கு மேல் நரேன் யோசிக்கவில்லை. ஏற்கனவே டிக்கெட் புக் செய்து, விடுமுறைக்கு விண்ணப்பித்து அனுமதியும் பெற்றிருக்க, அதற்கு மேல் யோசிக்காமல் அவளுடன் கிளம்பி விட்டான். வெள்ளி மற்றும் சனி கிழமைகள் பொதுவாகவே அவனுக்கு விடுமுறை தினங்கள் தான், கூடுதலாக ஞாயிறு ஒரு நாள் மட்டும் விடுப்பு எடுத்திருந்தான்.

மிக மகிழ்ச்சியாக இந்தியா வந்தனர், பல நாட்கள் கழித்து ஊருக்கு வரும் குதுகலம் அவர்களிடம் நிரம்பி வழிந்தது.

அதே மகிழ்வுடனேயே சென்று வசுமதியை வாழ்த்தி விட்டு வந்தனர். ஆனால் அதற்குப் பின் நடந்தவை தான் அவர்கள் எதிர்பாராதது.

ஊருக்கு வந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தது, அவர்களைப் பொறுத்த வரை இரண்டு நிமிடங்கள் என ஓடி மறைந்திருந்தது. மூன்றாம் நாள் மதிய உணவுக்குப் பின், குட்டித் தூக்கம் போட முயற்சித்துக் கொண்டிருந்தான் நரேன். உண்ட மயக்கத்தில், அவன் கண்கள் தாமாகச் சொருகியது.

அவனை ஒட்டியபடி, ஒருக்களித்துப் படுத்திருந்தாள் நர்மதா. அவளது விரல்கள் அவனது தலை முடியை கலைத்து விளையாடியது.

“நரேன்…” என்றாள், குனிந்து அவன் காதில்,

“ம்ம்ம், சொல்லு நம்மு” என்றான் அவன்.

“நரேன்…” என்றாள் மீண்டும், குரலில் அழுத்தம் கொடுத்து. கைகள் அவன் தலைக் கோதுவதை நிறுத்தவில்லை.

“தூக்கம் வருது நம்மு” என்றான் அவன், இப்போது அவள் விரல்கள் அவனது புருவங்களை நீவியது.

“ம்ம், என்ன நம்மு?” தூக்கமும், கிறக்கமுமாக அவன் கரங்கள் அவளைத் தன்னோடு இணைக்க முற்பட்டது.

“ம்ப்ச், நரேன். சும்மா இருங்க” அத்துமீற துடித்த அவன் கரங்களைப் பட்டென்று தட்டி விட்டாள்.

“சும்மா இருந்தவனைச் சீண்டி விட்டுட்டு… இப்போ தப்பிக்கப் பாக்கறியா?” என்றவன் அவளை இழுத்து, இரு கரங்களிலும் அவள் முகம் பற்றி, இதழோடு இதழ் பொருத்தினான். மெல்ல அவனோடு ஒன்றிப் போனாள் நர்மதா.

அவர்களின் உலகம் சில நிமிடங்கள் தன் இயக்கத்தை நிறுத்தி விட, ஒருவருக்கொருவர் உலகமாகிப் போனார்கள் இருவரும். உலகம் மறந்து ஒருவருள் ஒருவர் மூழ்கிப் போயினர்.

“நரேன்…” அவன் மார்பில் தலைச் சாய்த்து படுத்திருந்தாள் நர்மதா. மெல்லிய குரலில் அவனை அழைத்தாள்.

“ம்ம்ம் சொல்லு நம்மு” என்றான், அவனுக்கு மீண்டும் கண்கள் சொருகியது. அவளது இடுப்பில் கரம் கோர்த்து உறக்கத்தில் மெல்ல அமிழ்ந்து கொண்டிருந்தான்.

“நாம மதுரை போகலாமா? அத்தை சொன்ன ஹாஸ்பிட்டலுக்கு ஒரு செக் அப் போய்ப் பார்த்திட்டு வரலாமா?? லீவ் எக்ஸ்டேண்ட் பண்ணுங்களேன் பிளீஸ்” அவன் முகத்தில் கரம் பதித்து மெல்லிய குரலில் சொன்னாள் நர்மதா. அதில் தூக்கம் கலைந்து, கண்களை மெதுவாகத் திறந்து நர்மதாவை கூர்ந்து பார்த்தான் அவன்.

error: Content is protected !!
Scroll to Top