வானம் இருட்டத் தொடங்கி இருந்தது. நிலவுக்குத் தூது விட்டு, வானம் இரவுக்காகத் காத்திருந்தது.
பறவைகள் அவசர அவசரமாகக் கூடடைய விரைந்து கொண்டிருந்தன.
வாசுவின் கைகள் காரை லாவகமாகச் செலுத்திக் கொண்டிருந்தது. காற்று சிலுசிலுக்க, மழைத் துளிகள் தரைத் தொடும் முன்னே, மண் வாசனை மேலெழுந்து நாசியில் சுகமாய்ப் புகுந்தது. பூத்தூவலாய் மழைத்துளிகள் மண்ணில் விழ ஆரம்பித்தன.
சில்லென்று வீசிய காற்று, மெல்லிய சாரலாய் மழை, காரில் நிறைந்திருந்த மெல்லிசை, தன்னை உயிராய் நேசிக்கும் கணவனுடன் கார் பயணம் என அனைத்தையும் ரசித்து அனுபவித்தாள் வசுமதி.
அவளை அவ்வப்போது வருடிச் செல்லும் அவன் பார்வை, அவன் கண்களில் வழிந்த காதல்… வாழ்க்கை இதை விட அழகானதாக மாறி விட முடியாது என்றே அவளுக்குத் தோன்றியது. இதுவரை இல்லாத அளவிற்கு மனநிறைவை கொடுத்த நாளாக உணரத் துவங்கினாள்.
சென்னையின் போக்குவரத்து நெரிசலில் நீந்தி, அடுத்தப் பத்தாம் நிமிடம் வளசரவாக்கத்தில் இருந்த அவர்களின் வீட்டை அடைந்தனர்.
வசுமதி முகம் கழுவி, உடை மாற்றி மாமியாரை தேடிச் செல்ல, வாசு சற்றே அசதியாய் உணர்ந்ததால் உடைக் கூட மாற்றாமல் படுத்து விட்டான். வசுமதியும் அவனைத் தொந்தரவு செய்யாமல் தன் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள்.
“வசுமதி தான் வின் பண்ணுவா” என்று உறுதியாய் அடித்துச் சொல்லியது மாதவனின் குரல்,
“இல்ல, மாமா தான்.. பார்ப்போமா?” என்றது அவன் மனைவி ஷாலினியின் குரல்,
“பார்த்துடுவோம் அதையும்…” சவால் விட்டுக் கொண்டிருந்தான் மாதவன்.
ஷாலினி பொழுது போகாமல் குழந்தைகளுக்குச் செஸ் விளையாட கற்றுக் கொடுத்து கொண்டிருந்தாள். தாங்கள் கற்றுக் கொண்ட வித்தையைக் காட்ட தகுந்த ஆளை தேடிய வாண்டுகள் தாத்தாவை பிடித்துக் கொண்டனர். அவரும் அவர்களுக்கு ஈடு கொடுத்து காய் நகர்த்திக் கொண்டிருந்தார். நடுவில் வசுமதி வர, மாமனாருக்கு எதிராக அவளை அமர வைத்து விட்டனர் குழந்தைகள்.
“ஏங்க, மருமக ஜெயிக்கட்டும். விட்டுக் கொடுத்துடுங்க..” என்று கணவரிடம், மருமகளுக்காகச் சிபாரிசு செய்து கொண்டிருந்தார் வாசுவின் அம்மா. உடல் குலுங்க சிரித்துக் கொண்டே செஸ் போர்டில் பார்வையைப் பதித்திருந்தார் அவர்.
அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டே, தூக்கம் கலைந்து எழுந்த வாசு, அசதி நீங்க குளித்து உடை மாற்றி வெளியில் வந்தான்.
எப்போதும் போல மொத்தக் குடும்பமும் ஒன்றாக ஹாலில் அமர்ந்திருந்தனர். வசுமதியும், அவனின் தந்தை சரவணனும் செஸ் ஆடிக் கொண்டிருந்த காட்சி தான் அவனது கண்ணில் முதலில் பட்டது. ஏற்கனவே அவனின் அம்மாவும், அண்ணனும் வசுமதி பக்கம் அமர்ந்திருக்கத் தானும் அவர்களோடு போய் மனைவியை ஓட்டிக் கொண்டு அமர்ந்தான்.
மாதவனின் மனைவி ஷாலினியும், அவர்களின் இரு குழந்தைகளும் தாத்தாவின் பக்கமாக அமர்ந்திருந்தனர், ஆனால், குழந்தைகளின் கண்களோ வசுமதியின் மேல் இருந்தது.
அவன் அருகில் அமர்ந்த மறுநொடியே, “செக்” என்றாள் வசுமதி. தன் ராஜாவை எப்படிக் காப்பாற்றுவது என்று ஆராயத் தொடங்கினார் அந்த வீட்டின் ராஜாவான சரவணன்.
“ஹே, கேம் ஓவர், அப்பா அவுட்டு. ஆட்டையைக் களைங்க, எழுந்திருங்க, எழுந்திருங்க. உங்க ராஜாவுக்குச் செக் வச்சாச்சு.” என்ற மாதவன், “ஷாலு, போச்சா?” என்றான் மனைவியைப் பார்த்து கிண்டலாக, அவள் பதிலுக்கு அவனை முறைக்க, தப்பிக்கும் வழித் தேடி எழுந்து போய்ச் சோஃபாவில் அமர்ந்து கொண்டான் அவன்.
“ஹே, சித்தி வின் பண்ணிட்டாங்க.” மகிழ்ச்சியில் துள்ளி குதித்துக் கத்தினர் குழந்தைகள்.
“சித்தப்பா… சித்தி, தாத்தாவை ஜெயிச்சுட்டாங்க. நாம தான் வின் பண்ணோம்” சட்டென்று அவனையும் வெற்றிக் கூட்டணியில் சேர்த்துக் கொண்டனர் குழந்தைகள்.
“ஆமா டா, சித்தி ஜெயிச்சுட்டா. சூப்பர் இல்ல?. சித்தப்பா நாளைக்கு உங்களுக்கு ஐஸ் கிரீம் வாங்கித் தரேன், என்ன?” என்றான் வாசு, இருவரையும் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டு,
“ஐ ஜாலி..” சந்தோச மிகுதியில் அவனது கன்னத்தில் முத்தமிட்டனர் குழந்தைகள் இருவரும்.
“அம்மா, நாங்க ஐஸ் கிரீம் சாப்பிட போறோமே. சித்தப்பா வாங்கித் தாறாங்களே” என்றபடி அவர்கள் நகர, மகிழ்ச்சி பொங்கும் முகத்துடன் மனைவியை ஏறிட்டான் வாசுதேவன்.
“இந்தா வாசு…” அவன் முன் சூடான காஃபியை நீட்டினார் அவன் அம்மா. அதைக் கைகளில் வாங்கிக் கொண்டு, மாதவனின் அருகில் சென்று அமர்ந்தான் வாசுதேவன்.
அவன் வந்து அமர்ந்ததும், “ஐ லைக் ஹெர்” என்றான் மாதவன் பட்டென்று, புரிந்துக் கொண்டதற்கு அடையாளமாக லேசாகத் தலையசைத்துப் புன்னகைத்தான் வாசு.
ஐந்தே நாட்களில் தன் வீட்டினருடன் வசுமதி இத்தனை நெருக்கமாவாள் என்று வாசு எதிர்பார்க்கவில்லை. வெகு இயல்பாக அந்தக் குடும்பத்தில் ஒருத்தியாக மாறி இருந்தாள் அவள்.
இத்தனை புரிதலும், அன்பும், அனைவரிடமும் அவள் காட்டிய அக்கறையும் அவனை மிகவும் நெகிழ்த்தியது.
“என்னைக்கு ஊருக்கு கிளம்பற மாதவா?” காஃபியை குடித்தபடி அண்ணனிடம் கேட்டான் அவன்.
“உங்களை ஃப்ளைட் ஏத்தி விட்டுட்டு தான், நாங்க கிளம்பறதா இருக்கோம் வாசு. எனக்கும், உங்க அண்ணிக்கும் லீவ் இருக்கு. அது போக, பசங்களுக்கும் இப்போ ஹாஃப் யேர்லி லீவ் தானே. அதனால் அவசரம் இல்ல டா.” என்றான் மாதவன்.
“எப்படி ண்ணா? உனக்கும், அண்ணிக்கும் அவ்வளவு லீவ் இருக்கா? அப்பா ஹாஸ்பிட்டல்ல இருக்கும் போது வேற லீவ் போட்டு வந்தியே. சாலரி கட் பண்ணிட மாட்டாங்களே?” என்று கவலையுடன் கேட்டான் வாசு.
“ஹ்ம்ம், அதெல்லாம் பண்ண மாட்டாங்க டா. முன்னாடி நாலு நாள் தானே டா லீவ் போட்டு வந்தேன். நீ தான் அப்பா கூடவே இருந்த, நான் ஆபரேஷன் டைம்ல தானே வந்தேன். வெளிநாட்டில் இருக்கற உனக்குக் கூட லீவ் ஈஸியா கிடைச்சுடுது. ஆனா இங்க.. ரொம்பக் கஷ்டம்..” கோபமாகச் சலித்துக் கொண்டான் அவன்.
“எங்களுக்கும் கடல் கடந்து இருக்கறதால தான் கருணை காட்டுறாங்கன்னு நினைக்கறேன். எமர்ஜென்சி லீவ்னால உடனே கிடைச்சது. மத்தபடி அங்கேயும் கறார் தான்” என்றான் வாசு.
“அக்கா எங்க? பசங்களைக் கூடக் கண்ணில் காணோம்?” என்று அவனின் அக்கா மகாவை வீட்டில் காணாது விசாரித்தான் வாசு.
“ஏதோ வேலையா வெளில போனா வாசு, வர்ற நேரம் தான். மாமா தான் கூட்டிட்டுப் போனார். காரில் ரவுண்ட் போறோம்னு, குட்டீஸ் அவங்க கூடவே போய்ட்டாங்க. நீ தூங்கிட்டு இருந்த, அதான் வசுமதி கிட்ட சொல்லிட்டு போனாங்க” என்றான் மாதவன்.
“ஓகே, ஓகே” என்று வாசு, குரலை மெல்ல குறைத்து, “அண்ணா, எனக்கு ஒரு டவுட், கொஞ்சம் கிளியர் பண்ணு பிளீஸ்” என்று கிசுகிசுப்பாகக் கேட்டான்.
“என்னனு சொல்லுடா..” என்ற மாதவனும் தம்பியை பின் பற்றி, குரலை குறைத்திருந்தான்.
“இந்த லவ்… காதலைப் பத்தி என்ன நினைக்கிற?” என்று வாசு தீவிரமாகக் கேட்டதும், மாதவனின் தலை தானாகத் திரும்பி வசுமதியை பார்த்தது.
“என்னடா வில்லங்கமா கேள்வி கேட்கிற?” என்றான் மாதவன் கலவரம் நிறைந்த குரலில்,
“நீயெல்லாம் என்ன பெரிய பேராசிரியர்? ஒரு சந்தேகம் கேட்டா பதில் சொல்ல முடியல. எதிர் கேள்வி கேட்கற. உன் ஸ்டூடண்ட் எல்லாம் ரொம்பப் பாவம்” என்றான் வாசு கடுப்புடன்,
“அடேய், உனக்கு என்னடா ஆச்சு? உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு டா, இனி காதல் எல்லாம் வரக் கூடாது தம்பி. வந்ததுன்னு வச்சுக்கோ, அப்புறம் கட்டி வச்சு தோலை உரிச்சுடுவாங்க. மத்தவங்களை விடு, நானே உதைப்பேன். இல்ல, இல்ல… தம்பின்னு கூடப் பார்க்காம கொன்னே போட்டுடுவேன்” தம்பிக்கு புரிய வைத்து விடும் நோக்கத்தில், பொறுமையாகச் சொல்லத் தொடங்கியவன், பிற்பகுதியை ஆவேசமாக முடித்தான்.
“என்னலாம் பேசுற அண்ணா நீ?” என்ற வாசு, “நான் மட்டும் என்ன, எனக்குக் கல்யாணம் ஆகலைன்னா சொன்னேன்? கண்டதையும் பேசாம ஒழுங்கா கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு. காதலை பத்தி என்ன நினைக்கிற?” குரலில் சுருதி ஏற, படபடப்புடன் கேட்டான் வாசு.
“அதை ஏன்டா என்கிட்ட கேட்கற?” என்று மாதவன் பல்லைக் கடிக்க,
“பேராசிரியர் தானே டா நீ? உனக்குத் தான் எல்லாத்துக்கும் பதில் தெரிஞ்சு இருக்குமே? என்ன, உன் ஸ்டூடண்ட்ஸ் கேட்டா மட்டும் தான் டவுட்ஸ் கிளியர் பண்ணுவியா? உன் சொந்த தம்பி நான் கேட்டா பதில் சொல்ல மாட்டியா?” என்று வாசு மூச்சு விடாமல் பேச, மிரண்டு விழித்தான் மாதவன்.
“டேய், இல்ல தெரியாம தான் கேட்கறேன், என்ன வச்சு காமெடி பண்றியா நீ?” என்று அவன் அப்பாவியாகக் கேட்க, சட்டெனச் சிரித்து விட்டான் வாசு.
“அட இல்லண்ணா, நிஜமா, சத்தியமா, சந்தேகம் தான் கேட்கறேன். பதில் சொல்லு, பிளீஸ்” என்றான் வாசு தீவிரமான குரலில்,
“காதல் எல்லாம் இனி வரக் கூடாது டா தம்பி. தப்பு டா. அதோ இருக்காப் பாரு, அந்தப் பொண்ணு…” என்று மாதவன் சொல்லிக் கொண்டே போக, அவன் பேசாதது போலப் பாவித்து, தன் போக்கில் பதில் சொல்ல ஆரம்பித்தான் வாசு.
“இஸ் இட்? தப்பா? ஆனா நான் காதலில் விழுந்துட்டே இருக்கேன் அண்ணா.. ஐ லவ் திஸ் ஃபீலிங். மழை விழுறது போல, இந்தக் காதலில் விழறது கூடச் சிலீர்னு இருக்கு ண்ணா.” என்றான் கண்களில் கனவும், காதலும் மிதக்க,
“அடேய், வயித்துல புளியை கரைக்காத டா பாவி. கடவுளே என்னை ஏன் இவனுக்கு அண்ணனா பொறக்க வச்ச…” என்று அங்கலாய்த்த மாதவன்,
“சரி, யாருடா அது? அதையாவது சொல்லித் தொலை.” என்றான் குரலில் பீதியுடன்,
“அதோ, அங்க இருக்காப் பாரு. ரெண்டு தேவதைகளுக்கு நடுவுல உட்கார்ந்திருக்கா பாரு என் தேவதை. என் அம்மா, என் அண்ணா பொண்ணுக்கு நடுவுல… சிரிக்கறா பாரு ண்ணா. கொள்ளை அழகு இல்ல? என் பொண்டாட்டி. என் வசுமதி, என்..”
“டேய், டேய் நிறுத்து, நிறுத்து… என்ன அண்ணா பொண்ணு? என் பொண்ணு டா அது..” என்றான் மாதவன் கடுப்புடன், “என்ன பார்த்தா உனக்கு எப்படிடா தெரியுது?” பொய்யான கோபத்துடன் அவன் பல்லைக் கடிக்க,
“உன்னைப் பார்த்தா, என் கண்ணுக்கு என் அண்ணன், மாதவன் மாதிரி தான் தெரியுது. வேற எப்படித் தெரியும்?” என்று சீரியஸாகச் சொல்லி விட்டுச் சத்தமாகச் சிரித்தான் வாசு. அதற்கு மேல் போலியாகக் கூடக் கோபத்தை இழுத்து பிடிக்க முடியாமல் மாதவனும் அவனுடன் சிரிப்பில் இணைந்து கொண்டான்.
“ஒரு நிமிஷம் கலவரப் படுத்திட்டடா வாசு, பயந்துட்டேன் தெரியுமா?” என்ற மாதவனின் குரலில், லேசாகப் பயம் எட்டிப் பார்க்கவே செய்தது. பதில் ஏதும் சொல்லாமல் வெறுமே சிரிக்க மட்டும் செய்தான் வாசுதேவன்.
“என் ஊமைக் கோட்டான், சிடுமூஞ்சி தம்பிக்கு இத்தனை வருஷமா வராத காதல், இனியா வரப் போகுதுன்னு நான் யோசிச்சிருக்கனும் டா. என் தப்பு தான்” என்றவன் தொடர்ந்து, “உன்னை இப்படிப் பார்க்க நல்லா இருக்கு டா வாசு. இப்படியே சந்தோசமா இரு. எப்பவும்” என்றான் முழு மனதாக, உள்ளார்ந்த அன்புடன், முகம் மலர பெரிதாகப் புன்னகைத்தான் வாசு.
“தாங்க்ஸ் ண்ணா. ஸ்கூல், காலேஜ், வேலைனு எங்கேயும், எப்பவும், எந்தப் பொண்ணும் இதுவரை என்னைப் பெருசா பாதிச்சதே இல்ல ண்ணா. வசுவை தவிர. ஒருவேளை கல்யாணம் பேசுறதுக்கு முன்னாடி, இவளை சந்திச்சுருந்தா எப்படி அவக்கிட்ட பேசி இருப்பேன்னு எனக்குத் தெரியல…” என்றவன் நிறுத்தி நிதானமாக,
“ஆனா, இப்போ கல்யாணதுக்கு அப்புறம்… சின்னப் புள்ளைங்க மாதிரி பயந்து பயந்து லவ் பண்ணாம, இப்படி அதிகாரமாக, உரிமையா, முழுமையா அவளை லவ் பண்றது ரொம்ப நல்லா இருக்கு டா அண்ணா.” என்று உணர்ச்சி மிகுந்த குரலில் சொன்னான் வாசு.
அவன் சொல்லி முடித்ததும், எவ்வளவு முயன்றும் கட்டுப்படுத்த முடியாமல், சட்டென்று சத்தமாகச் சிரித்து விட்டான் மாதவன். கொஞ்சம் தள்ளி அமர்ந்திருந்த குடும்பத்தினர் அனைவரும் திரும்பி அவர்களைப் பார்க்க, மறுப்பாகத் தலையசைத்து “ஒன்றுமில்லை” என்றான் மாதவன்.
வசுமதி என்னவென்பது போலப் புருவம் சுருக்கி வாசுவை பார்க்க, தன் மனதில் இருந்த ஒட்டு மொத்த காதலையும் கண்களில் தேக்கி அவளைப் பார்த்தான் அவன். அந்தப் பார்வையில் அவள் இதழ்கள் தாமாக விரிய, மலர்ந்த முகத்துடன், புருவம் உயர்த்தி, “என்ன?” என்றாள் அவள். உதடு குவித்துக் காற்றில் அவளுக்கு முத்தத்தைக் கடத்தினான் அவன்.
கன்னச் சதை கடித்துப் புன்னகையை விழுங்கியவள், கண்களை உருட்டி அவனை மிரட்டினாள். அவனாவது அசருவதாவது, அவனின் புன்னகை மேலும் விரிய மனைவியைக் கண்ணெடுக்காது பார்த்தபடி இருந்தான் அவன். அந்தப் பார்வையைச் சந்திக்க முடியாமல், அவள் தான் அவனிடம் இருந்து தன் விழிகளை விலக்கி, தன்னைச் சகஜமாகக் காட்டிக் கொள்வதற்காக, அருகில் அமர்ந்திருந்த குழந்தையுடன் விட்ட இடத்திலிருந்து பேச்சைத் தொடர்ந்தாள்.
ஆனால், வாசுவின் பார்வை அவளைத் தொடர்ந்து கொண்டேயிருந்தது. மெல்ல அவனிடம் இருந்து தப்பிக்க, அங்கிருந்து நழுவி கிட்சனிற்குள் புகுந்து கொண்டாள் அவள். மாமியார் மற்றும் ஷாலினி இரவு உணவை சமைத்துக் கொண்டிருக்க, அவர்களுக்கு உதவத் தொடங்கினாள் வசுமதி.
அவர்கள் இரவு உணவை முடித்து, சாப்பாட்டு கடையை ஏறக் கட்டி விட்டு, படுக்கப் போகையில் மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது.
அறையின் கதவை திறந்து உள்ளே நுழைந்தாள், விடி விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருக்க, அறையைக் கண்களால் சுழல விட்டாள், வாசுவை காணவில்லை. பால்கனியில் நிழலாடியது.
பால்கனி கிரிலில் சாய்ந்து, வானத்தை வெறித்தபடி நின்றிருந்தான் அவன். மெல்ல சத்தம் எழுப்பாமல், பூனை நடை நடந்து அவனை நெருங்கியவள், கைகளை அவனை நோக்கி உயர்த்தியது மறுநொடி, அவனது இறுகிய அணைப்பில் இருந்தாள்.
மெல்ல உயர்ந்த அவளது கைகளைப் பற்றி, சுழற்றி நொடியில் தன் முன் அவளை நிறுத்தியவன் நொடியும் தாமதிக்காது, அவனைத் தன்னோடு இறுக்கி இருந்தான்.
“ம்ம்ம், மூச்சு முட்டுது வாசு, விடுங்க” சிணுங்கினாள்.
“என் மூச்சே நீ தான் வசும்மா” உருகினான். ஆனாலும் இறுக்கத்தைக் குறைக்கவில்லை.
“பேசி பேசியே என்னை…” அவள் சொல்லி முடிக்கும் முன்பே, “பேச்சு என்ன பெரிய பிரமாதம், சின்னப் பார்வை போதும். நீ அப்படியே என்னை மயக்கிடுற” இரு கரங்களிலும் அவள் முகம் பற்றி, இரு கண்களிலும் மென்மையாய் முத்தமிட்டான் வாசு.
“என்ன வாசம் இது?” என்றாள் மூச்சை ஆழ உள்ளிழுத்து,
“உன் கூந்தலில் சட்டமா உட்கார்ந்து இருக்க மல்லிப்பூ வாசம் தான்” என்றான் அவளை வாசம் பிடித்துக் கொண்டே,
லேசாகச் சிரித்தவள்,
“ம்ப்ச், மல்லி வாசம் எனக்குத் தெரியாதா? இது வேற ஏதோ பூ” என்றாள் மூக்கை சுருக்கி, மீண்டும் வாசம் பிடித்தவாறே,
“நைட் ஜாஸ்மின்” என்று அவள் காதில் கிசுகிசுத்தான் அவன்.
“என்ன? நைட் ஜாஸ்மினா? அதென்ன பூ? அதெப்படி இந்த மழையில் கூடப் பூக்குமா?” என்று கேள்வி மேல் கேள்விகளை அடுக்கிக் கொண்டிருந்தாள் அவள்.
“பாரிஜாதம் வசும்மா. பார்த்ததில்லை?”
“ம்ஹூம் இல்ல?”
“அதோ, கீழ பார்” அவர்களின் அறையை ஒட்டி, பால்கனிக்கு கீழே இருந்த பூக்களைச் சுட்டிக் காட்டினான் வாசு. மழையில் நனைந்திருந்த பூக்கள் இருளிலும் பளிச்சிட்டது.
“இந்த அடைமழையிலும் பூ பூத்திருக்கே” என்று அவள் ஆச்சரியத்துடன் வினவ,
“இந்த மழையில் நீயே மலரும் போது, பூ மலராதா வசும்மா” அவள் பூவின் மணத்தில் மயங்க, அவனோ அவளிடம் மயங்கிக் கொண்டிருந்தான்.
“வாசு…” என்று தொடங்கியவளை முடிக்க விடவில்லை அவன். அவளை இரு கைகளிலும் அள்ளிக் கொண்டு, காலால் பால்கனி கதவை தள்ளி மூடினான்.
அவளோடு கட்டிலில் விழுந்தவன், தன் காதலை அவளுக்கு மொத்தமாகக் கடத்தத் தொடங்கினான்.