இளங்காலை பொழுது, சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்தான். காலை எட்டு மணி தான் ஆகிறதென்று சொன்னால் நம்புவது கடினம். அத்தனை கடுமையாக இருந்தது வெயில்.
அன்று விடுமுறை தினம் என்பதால் சாலையில் போக்குவரத்து நெரிசல் வழக்கத்தைக் காட்டிலும் சற்று குறைவாகவே இருந்தது. அவள் செல்ல வேண்டிய இடம் நெருங்கியதும் காரின் வேகத்தைக் குறைத்து, பார்க்கிங் தேடி நிறுத்தினாள். கார் கதவை திறந்து இறங்கும் போதே முகத்தில் வெயில் அனலென வீசியது.
அதைப் பொருட்படுத்தாமல் சூப்பர் மார்கெட்டின் வாயிலை நோக்கி வேக எட்டுக்களை வைத்து நடந்தாள். சரியாக அந்நேரம் பார்த்து அவளது மொபைல் ஒலிக்க, நடந்து கொண்டே மொபைலை கைப் பையினுள் இருந்து தேடி எடுத்தாள். வெயிலில் இருந்து தப்பித்து, சூப்பர் மார்க்கெட்டினுள் நுழைந்து விட வேண்டும் என்ற அவசரத்தில் யாரென்று கவனிக்காமலேயே போனை காதில் வைத்தாள்.
“ஹலோ” என்றாள், மூச்சு வாங்கியது.
“நல்லா இருக்கியா டா வசுமா?” எதிர்முனையில் பாசத்துடன் வினவியது அவளது அப்பாவின் குரல். சடுதியில் பதட்டத்தைத் தத்தெடுத்துக் கொண்டது அவள் உடல்.
குடும்பத்தைப் பிரிந்து வேலை நிமித்தம் வெளிநாட்டில் இருப்பதினால், இது போலத் திடீரென்று எதிர்பாரா நேரத்தில் வரும் வீட்டினரின் தொலைபேசி அழைப்புகள் அவளை எப்போதும் கலவரமடையச் செய்வதாகவே இருக்கும். இன்றும் அது போலவே உணர்ந்தாள். மேல நடக்க முடியாமல் அதே இடத்தில் நின்று விட்டாள். மூச்சினை ஆழ உள்ளிழுத்து, மெல்ல தனது மனப் பதறலை சீர் செய்ய முயன்றவாறே,
“நான், நல்லா இருக்கேன் பா. வீட்ல.. வீட்ல எல்லோரும் நல்லா இருக்காங்க தானே பா? அம்மா, நீங்க?” என்றவள்,
“என்ன திடீர்னு காலைலையே ஃபோன் பண்ணி இருக்கீங்க பா?” குரலில் வழியத் துடித்த பதட்டத்தைக் கட்டுப்படுத்தி, சாதாரணமாக விசாரித்தாள் வசுமதி.
“அடடே, பதறாத வசும்மா. அப்பா ரெண்டு நாளா உன்கிட்ட பேசணும்னு நினைச்சுக் கிட்டே இருந்தேன் மா, சரியான சந்தர்ப்பம் அமையலை. இப்போ தான் நேரம் கிடைச்சது, அதான் கால் பண்ணேன். அப்புறம் வீட்ல எல்லாரும் நல்லா இருக்கோம். இன்னைக்கு வெள்ளிக் கிழமை உனக்கு லீவ் தானே, ஃப்ரீயா இருப்ப, உன்கிட்ட பேசுவோம்னு கூப்ட்டேன் டா. நீ சாயங்காலம் கால் பண்ற வரைக்கும் அப்பாவால வெயிட் பண்ண முடியலை வசும்மா” லேசாகச் சிரித்துக் கொண்டே சொன்னார் அவர்.
அதில் அவளின் பதட்டம் சற்றே குறைய, “ஓ, சரிங்க பா. நீங்க போனை கட் பண்ணுங்க பா, நான் கால் பண்றேன். உங்களுக்குப் பில் அதிகமாகப் போகுது” என்றாள் பதிலுக்கு.
“ரெண்டு நிமிஷம் பேசுறதுல, என்ன பெருசா பில் வந்திடப் போகுது வசுக் குட்டி. சரி, அதை விடு டா. நீ சொல்லு. வெளில எங்கேயும் இருக்கியா? ஏன் இப்படி மூச்சு வாங்குது?” என்றார்.
“ஆமாப்பா, கொஞ்சம் வெளில வந்தேன். இங்க வீட்டுக்கு பக்கத்தில தான் இருக்கேன். அது அண்ணாவும், அண்ணியும் வாக்கிங் போனாங்க போல, அப்படியே பக்கத்தில சூப்பர் மார்கெட்டில் இந்த வாரத்திற்கான காய்கறி, பழங்கள் வாங்க வந்திருக்காங்க. இந்த வெயில்ல அத்தனையும் கையில தூக்கிட்டு அவங்க ரெண்டு பேரும் தனியே வரணும், கஷ்டம் ஆச்சேன்னு.. நான் தான் காரை எடுத்துட்டு வந்தேன் பா. இப்ப தான் உள்ள போகப் போனேன். அதுக்குள்ள நீங்க கால் பண்ணிட்டீங்க.” விளக்கமாகப் பதில் சொன்னாள் வசுமதி.
இது தான் அவளது வாராந்திர நடவடிக்கை என்று தெரிந்திருந்தாலும் கூடப் புதிதாகக் கேட்பது போலக் கேட்டுக் கொண்டார் மகேந்திரன்.
“சரிம்மா, சரிம்மா..” என்றவரை இடைமறித்து, “எதுவும் முக்கியமான விஷயமா பா? அரை மணி நேரத்தில் வீட்டுக்கு வந்திட்டு, நானே பேசட்டுமா பா?” என்றாள் கேள்வியாக,
“இல்ல வசுமா, அது வந்து… ஆமா முக்கியமான விஷயம் தான் டா. அதனால, சரி.. நீ வீட்டுக்கு வந்திட்டு பேசேன்” என்று சிறிது தயக்கத்துடன் சொல்லி, அவர் போனை வைக்கப் போக, இவளின் படபடப்பு அதிகமானது.
“அப்பா, என்ன விஷயம்? நான் ஃப்ரீயா தான் இருக்கேன், சொல்லுங்கப்பா…” என்றாள் அவள். இப்போது வெயிலை முற்றிலும் மறந்து போனவளாய், சுவரின் மேல் சாய்ந்து நின்று தந்தையின் பதிலுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள்.
“அது வந்து டா, நீ வெளில இருக்கியே. வீட்டுக்கு போயிட்டு கால் பண்ணு டா. அப்போ தான் சரியா இருக்கும்”
“அப்பா, அதுவரை எனக்குச் சஸ்பென்ஸ் தாங்காது. நீங்க இப்பவே சொல்லுங்க. நான் ஓரமா நின்னு தான் பேசிட்டு இருக்கேன்”
“நான் விஷயத்தைச் சொல்லிடுறேன் வசு மா. ஆனா, நீ வந்த வேலையை முடிச்சுட்டு, வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் பொறுமையா யோசிச்சுப் பதில் சொல்லு, போதும்” என்றார் பூடகமாக,
“என்னப்பா, என்ன?…” அவள் முடிக்கும் முன்பே மகேந்திரன் பேச ஆரம்பித்தார்.
“மதுரையில இருந்து உங்க மாமா கண்ணன் இல்ல? அவர் பேசி இருந்தார் டா.”
“ஓ, சரிங்கப்பா” என்றாள், என்ன சொல்ல வருகிறார் என்று புரியாமல்,
“உன்ன ரொம்ப விசாரிச்சார் வசும்மா.” என்று மெல்ல இழுத்தார்,
“என்னப்பா விஷயம்? ஏன் இப்படித் தயங்கறீங்க?” என்றாள் வசுமதி பதட்டத்துடன்.
“ஒன்னுமில்ல டா, உங்க மாமாக்கு தெரிஞ்ச குடும்பம் ஒருத்தங்க, அவங்க பையனுக்குப் பொண்ணு தேடுறாங்க போல, அப்போ கண்ணனுக்கு உன் நினைப்பு வந்திருக்கு. அதான்…” என்று நிறுத்தியவர், தொண்டையைச் செருமி சரி செய்து கொண்டு தொடர்ந்தார்.
“மாமா, உன் ஃபோட்டோ காட்டி இருப்பான் போல, பார்த்திருக்காங்க. உன்னை அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு டா, மாப்பிள்ளை விவரம் நமக்கும் அனுப்பி வெச்சாங்க. நம்ம வீட்லயும் அவரை எல்லோருக்கும் பிடிச்சிருக்கு. ரொம்ப நல்ல குடும்பம்னு கண்ணன் சொன்னான்.”
வசுமதி அன்றைக்குக் காலையில் கண் விழிக்கும் போது தனக்கு இப்படி ஒரு அதிர்ச்சி காத்திருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரு நொடி அதிர்ந்தவள்,
“அப்பா, என்னப்பா திடீர்னு… எனக்கென்ன வயசாகிடுச்சுன்னு இப்போ…” அவள் சொல்லி முடிக்கும் முன், அவர் பேசத் தொடங்கி இருந்தார்.
“இருடா, அப்பா சொல்லி முடிச்சுடுறேன். மாப்பிள்ளை ஃபோட்டோ, அப்புறம் அவரைப் பத்தின மத்த விவரம் எல்லாம் அண்ணனை உனக்கு நேத்து நைட்டே மெயில் பண்ண சொன்னேன். இந்நேரம் அனுப்பி இருப்பான். எல்லாத்தையும் பார்த்திட்டு அப்புறம் முடிவு பண்ணு டா.” என்றார்.
“இல்லப்பா, இப்போ என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்?” தயக்கமாக வந்து விழுந்தன வார்த்தைகள்.
“நீ கேட்கறது சரி தான் வசு மா, இப்போ கல்யாணத்துக்கு ஒன்னும் அவசரம் இல்லை தான். ஆனா, நல்ல வரன் வரும் போது வேணாம்னு தள்ளி விடக் கூடாது, இல்லடா?” என்று அவர் சொல்ல, வசுமதி மறுத்து பேசத் தான் நினைத்தாள். ஆனால், ஒரு நொடி அம்மாவின் முகம் கண் முன் வந்து சென்றது. கூடவே, “வெள்ளிக் கிழமை அதுவுமா அபசகுணமா பேசாத வசு குட்டி, அதுவும் நல்ல காரியம் பேசும் போது…” என்று கண்டிப்புடன் ஒலித்தது அவர் குரல். அதற்கு மேல் மறுக்க அவள் துணியவில்லை.
வேறு வழியின்றி, “ம்ம், சரிங்கப்பா ” என்றாள்.
“சந்தோஷம் டா. முதல்ல அண்ணன் அனுப்பி இருக்க மெயிலை பாரு டா. மத்ததெல்லாம் அப்புறம் பேசலாம்” என்றவர் தொடர்ந்து,
“அப்புறம் முக்கியமான விஷயத்தைச் சொல்ல மறந்துட்டேன் பாரு வசும்மா. மாப்பிள்ள தம்பியும் துபாயில் தான் வேலை பார்க்கறார். அதான், அவங்க குடும்பம் யாராவது தெரிஞ்ச பொண்ணு இருக்காங்களான்னு கேட்டதும், கண்ணன் உன்னைப் பத்தி சொல்லி இருக்கான். அதனால நீயும் குழப்பிக்காம, நிதானமா யோசிச்சு உன் விருப்பத்தைச் சொல்லு. அப்பாக்குச் சாதகமாகத் தான், உன் முடிவு இருக்கணும்னு அவசியம் இல்லடா. அதை மட்டும் மனசில வச்சுக்கோ” என்றவரின் குரலில் கனிவு மிகுந்திருந்தது.
“சரிங்கப்பா” என்று மட்டுமே அவளால் சொல்ல முடிந்தது. மேலும் சில நிமிடங்கள் திருமணம் குறித்தும், பொதுவாகவும் பேசி விட்டு, “சரிம்மா, நீ சாயந்திரம் கால் பண்ணு” என்று அவர் போனை வைக்க, வசுமதி ஆழ்ந்த மூச்சொன்றை வெளியிட்டு தன் உள்ளத்துப் படபடப்பை குறைக்க முயன்றாள்.
அப்பாவுடன் போன் பேசும் மும்முரத்தில் சூப்பர் மார்க்கெட்டின் நுழைவாயிலிலேயே அவள் நின்று விட, வெயிலின் தாக்கத்தால் வியர்வையில் குளித்திருந்தாள். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகத் துபாயில் தான் வசிக்கிறாள், ஆனாலும் கூட அவளால் அவ்வூரின் வெயிலை பொறுத்துக் கொள்ளவே முடிவதில்லை. அதற்கு அவள் உடல் இன்னமும் பழகவும் இல்லை.
அலுவலகம், வீடு, கடைகள் என்று பெரும்பாலும் எல்லா இடங்களிலும் குளிர்சாதன வசதி செய்யப்படிருக்கும். அதனால் தான் இன்று வரை வெயிலில் இருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறாள் அவள்.
கடுமையான வெயிலின் தாக்கத்தினால் வரும் சன் ஸ்ட்ரோக், சன் பர்ன், டிஹைட்ரேஷன் எல்லாம் சாதாரணம் அங்கு. அதிர்ஷ்டவசமாக வசுமதிக்கு அப்படி எதுவும் இதுவரை நிகழ்ந்தது இல்லை.
துபாயின் வெயிலை தவிர மற்ற அனைத்துமே அவளை அதிகம் கவரவே செய்தது.
இத்தனைக்கும் அவள் வளர்ந்த மதுரையும், சென்னையும் வெயிலுக்குப் பெயர் போன ஊர்கள் தான். ஆனாலும், தோலில் தீ பற்றியது போல நமது ஊரின் வெப்பம் இருக்காது. இல்லையா? சொந்த ஊர் என்று வரும் போது மட்டும், எப்படி எல்லாம் சாதகமாக வாதாடுகிறது இந்த மனது என்று எண்ணி சிரித்துக் கொண்டாள் வசுமதி.
இப்போது அவள் மனம் வெயிலில் இருந்து விடுபட்டு அப்பாவின் பேச்சை அசை போட்டது. அவர் போனில் சொன்னதைச் செய்ய மூளையும், மனதும் பரபரக்க, மெல்ல மொபைலை கையில் எடுத்து மெயிலை திறக்கப் போனவளை, கலைத்தது பின்னிருந்து வந்த குரல்.
அப்போது தான், அங்கே எதற்காக வந்தோம் என்பதையே தான் மறந்து விட்டதை எண்ணி நாக்கை கடித்துக் கொண்டாள் அவள்.
“இருக்கு, இன்னைக்கு உங்களுக்கு இருக்கு. இந்த வீக்கெண்ட் முழுக்க நான் வசு கூடத் தான் இருக்கப் போறேன். நீங்க பட்டினி கிடங்க. அப்பத் தான் என் அருமை தெரியும் உங்களுக்கு. எப்பப் பாரு அம்மா, அம்மான்னு.. ஹ்ம்ம்” அந்தக் கோபக் குரலைக் கேட்டதும் விரிந்த புன்னகையுடன் மெல்லத் திரும்பினாள் வசுமதி.
எப்போதும் போல அண்ணாவை தாளித்துக் கொண்டே, தன் நடையிலும் கூடக் கோபத்தை வெளிப்படுத்திய படி வந்து கொண்டிருந்தார் அண்ணி நர்மதா.
“உனக்கு என்ன சிரிப்பு வசு? ஆமா, ஏன் இங்க நின்னுட்டு இருக்க? உள்ள வர வேண்டியது தானே? எவ்ளோ நேரமா நாங்க வெயிட் பண்றோம், தெரியுமா?” இப்போது நர்மதாவின் கோபம் இவளின் பக்கமாகத் திரும்ப, தனது புன்னகையை மேலும் பெரிதாக்கி அவளைச் சமாதானப்படுத்த முயன்றாள் வசுமதி.
“இல்ல, அப்பா கால் பண்ணாங்க அண்ணி. இவ்வளவு நேரம் அவங்ககிட்ட தான் பேசிட்டு இருந்தேன். அதான் உள்ள வரல, இப்பத் தான் போனை வச்சுட்டு, உள்ள வரலாம்னு திரும்பினேன். அதுக்குள்ள நீங்களே வெளில வந்துட்டீங்க.” என்றாள் மெல்ல,
“ஓ, அப்பா கால் பண்ணாங்களா? என்ன காலையிலேயே கால் பண்ணி இருக்காங்க? இஸ் எவ்ரித்திங் ஓகே அட் ஹோம்? என்ன விஷயம் டா?” என்று அவளின் தோளில் கைப் போட்டு, உண்மையான அக்கறையுடன் கேட்டாள் நர்மதா.
“அது வந்து அண்ணி.. வீட்ல எல்லோரும் நல்லா இருக்காங்க. அப்பா, சும்மா தான் பேசினாங்க.” விஷயத்தைச் சொல்வதா, வேண்டாமா என்ற குழப்பத்துடன் தயக்கமாக இழுத்தவள், “ஆமா, அண்ணாக்கும் உங்களுக்கும் என்ன சண்டை?” என்று மெதுவாகப் பேச்சை மாற்றினாள் அவள்.
அது வேலையும் செய்தது. சட்டெனச் சத்தமாகச் சிரித்தாள் நர்மதா. அதில் அவளது கணவனின் முகம் சுருங்க, இவளது சிரிப்பு மேலும் விரிந்தது. ஒன்றும் புரியாமல் இருவரையும் மாறி, மாறி பார்த்தாள் வசுமதி.
அவளின் பார்வையைக் கவனித்த நர்மதாவின் கணவன் நரேன், முன்னே வந்து அவளின் கையில் இருந்த கார் சாவியைக் கிட்டத்தட்ட பிடுங்கிக் கொண்டு, இரு கைகளிலும் பொருட்கள் நிறைந்த பையுடன் கார் நிறுத்துமிடத்தை நோக்கி நகர்ந்தான்.
“அண்ணா…” என்று சத்தமாக அழைத்தாள் வசுமதி. ஆனால் அவள் அழைத்தது காதில் விழாதது போல நடந்து போனான் நரேன். புருவங்கள் முடிச்சிட திரும்பி நர்மதாவைப் பார்த்தாள், அவளோ இன்னும் சிரித்துக் கொண்டு தானிருந்தாள்.