பிரிய பிரபஞ்சமே – 9 (2)

ஞாயிற்றுக் கிழமையில் வேலை இருக்காதுதான். ஆனால் விளையாட்டு இருந்தால்? என்ன செய்வாள் அவள்? கணவனைக் கேட்காமல் உத்திரவாதம் கொடுக்க விரும்பவில்லை அவள்.

“சரி, நீ மாப்ளகிட்ட பேசிட்டு சொல்லு. ஆனா கண்டிப்பா நாளைக்கு வீட்டுக்கு வர்றீங்க” என்று அழுத்தமாகச் சொல்லி அழைப்பை துண்டித்தார் ராதா.

இன்று கிரிக்கெட் விளையாட சென்றவன், கண்டிப்பாக நாளை வீட்டில் இருப்பான் என்றே நினைத்தாள் அவள்.

அப்படி இல்லையென்றாலும், அவளின் பெற்றோர் அழைத்த விஷயத்தைச் சொல்லி வீட்டில் இருக்க வைத்து விடலாம் என்ற சிறிய நம்பிக்கை அவளுக்குத் துளிர்த்திருந்தது.

அதே மனநிலையுடன் குளித்து, கிளம்பினாள். மாமியாரும், மருமகளும் பேசிக் கொண்டே மதிய உணவு உண்டார்கள்.

“அவர் எங்ககிட்ட மதியம் வீட்டுக்கு வந்துடுவேன்னு சொன்னார்த்தே.‌ நான் கால் பண்ணி பார்க்கவா?” வெளியே கிளம்பும் முன் அவள் கேட்க, மருமகளை ஆதூரமாகப் பார்த்தார் மரகதவல்லி.

“இத்தனை நாள்ல நீ ரஞ்சனை சரியா கவனிக்கலையா பிரியதர்ஷினி? அவன் விளையாட போனா வீட்டுக்கு வர ஈவ்னிங் ஆகிடும்” என்றார்.

அதைக் கேட்டு தொட்டால் சிணுங்கியாக அவள் முகம் சுருங்கவும், “நீங்க ரெண்டு பேரும் தனித்தனி மனுஷங்க. கல்யாணம் உங்க ரெண்டு பேரையும் இணைச்சிருக்கு. கல்யாணம் பண்ணிட்டதால உங்க ரெண்டு பேரோட விருப்பு வெறுப்பு ஒன்னாகிடாது, மாறவும் மாறாது. ஒருத்தர் இன்னொருத்தர் விருப்பத்துக்கு விட்டு கொடுத்து, வெறுப்புக்கு வளைஞ்சு கொடுத்துப் போனாதான் உங்க லைஃப் நல்லாருக்கும். உனக்குப் புரியும்னு நினைக்கிறேன்” என்றார்.

அவர் என்ன சொல்ல வருகிறார் என அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது.

“உனக்கு ஒரு விஷயம் பிடிக்கலன்னா, நேரா ரஞ்சன் கிட்ட சொல்லிடு. ரொம்பவும் விட்டு கொடுத்து போனாலும் வாழ்க்கை வெறுத்துடும்.” என்று அவளின் தோளில் தட்டினார். அவள் மெல்ல தலையசைத்தாள்.

“அவன் சின்ன வயசுல இருந்தே கிரிக்கெட் விளையாடுறான். புள்ளைக்குப் பிடிச்சத அவன் விருப்பம் போலச் செய்யட்டும்னு நான் அவனைத் தடுக்கல. இப்போ நீ தனியா உக்காந்திருக்கறத பார்க்கும் போது எனக்குச் சங்கடமா இருக்கு பிரியதர்ஷினி”

“அப்போ என்னைச் சமாதானப்படுத்ததான் ஷாப்பிங் கூட்டிட்டு போறீங்களா?” என்று கேட்டே விட்டாள் அவள்.

அவர் பதிலின்றி முறைக்கவும், “லேட்டாகுது வாங்க மிஸ், போவோம்” என்று உரிமையாக அவரின் கைப் பிடித்து அழைத்துச் சென்றாள். மாமியாரும், மருமகளுமாக ஜோடி போட்டு வண்டியில் கிளம்பி விட்டார்கள்.

“கால இங்க வச்சுக்கோங்க மிஸ். என் தோளை பிடிச்சுக்கோங்க” அதெல்லாம் பிரியதர்ஷினி பொறுப்புதான்.

முதலில் புத்தகக் கடை சென்று புத்தகம் வாங்கினார்கள். பின்னர்த் துணி தைக்கக் கொடுத்து விட்டு, கைப்பை வாங்கச் சென்றார்கள்.

எல்லா இடத்திலும் பிரியதர்ஷினியே பணம் கொடுத்தாள்.

“என் மருமக” என்று புன்னகையுடன் அவளை அறிமுகப்படுத்தினார் அவர்.

அவள் மிஸ் என்றழைத்ததை அவர்கள் விசித்திரமாகப் பார்த்தாலும் அவள் பொருட்படுத்தவில்லை.

“நான் வர லேட்டாகும்” என்ற குறுஞ்செய்தி பிரபஞ்சனிடம் இருந்து வந்திருந்தது. அவளும் ஓகே என ஒற்றை வார்த்தையில் பதில் அனுப்பினாள்.

அவள் மாமியாருக்குக் கைப்பை வாங்கும் போது அவளுக்குச் சிறிய பர்ஸ் ஒன்றை வாங்கிக் கொடுத்தார் மரகதவல்லி.

“தேங்க்ஸ் அத்த” என்றவளின் கன்னம் தட்டினார்.

இருவரும் வீடு வர எட்டு மணிக்கு மேலாகியிருந்தது.

பிரபஞ்சன் இன்னமும் வீடு வந்திருக்கவில்லை.

“எனக்குக் கொஞ்சம் நோட்ஸ் எடுக்கணும்” என்று புத்தகத்தைப் பிரித்து, பேப்பர், பேனாவுடன் அமர்ந்து விட்டார் மரகதவல்லி.

தொலைக்காட்சியைப் போட்டுச் சோஃபாவில் சரிந்து விட்டாள் அவள்.

“ஓ பிரியா பிரியா என் பிரியா பிரியா” இசை இதயத்தை உருக்கி கொண்டிருந்தது. அந்தப் பாடலை கேட்டதும் பிரபஞ்சன்தான் அவளின் மனக்கண்ணில் வந்து நின்றான்.

அவன் அடிக்கடி, அவளை அணைத்தபடி முணுமுணுக்கும் பாடல் அது.

பள்ளி, கல்லூரி காலங்களில் அவளைச் சீண்டவும், வெறுப்பெற்றவும், வேண்டுமென்றே சிலர் இந்தப் பாடலை பாடுவார்கள். அதனாலேயே இந்தப் பாடலை கேட்க பிடிக்காது அவளுக்கு. ஆனால் இப்போது அவன் பாட கேட்கப் பிடிக்கிறது. அவனால் அப்பாடலும், அதன் வரிகளும், அழகும் அர்த்தமும் உள்ளதாக மாறியிருந்தன.

பிரியமும், பிடித்தமும் இணைகையில் மாற்றங்கள் இயல்புதானே?

“ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி..” இசை வீட்டை நிறைத்திருக்க, பாடலின் நடுவில் பிசிர் தட்ட செய்தது வீட்டின் கதவு திறக்கும் சத்தம்.

பிரியதர்ஷினி படக்கென எழுந்தமர்ந்து வாசலை நோக்கினாள்.

நெற்றியில் கூட்டல் குறியீடும், இடது கை விரலில் கட்டுடனும் கலைந்து, களைத்து, சோர்ந்த தோற்றத்துடன் உள்ளே நுழைந்தான் பிரபஞ்சன்.

“பிரபா, என்னாச்சு? நெத்தி, கையில என்ன கட்டு? எப்படி அடிபட்டுச்சு? ஏன் எனக்குப் போன் பண்ணல?” பதறியடித்து எழுந்து அவனிடம் ஓடினாள். அவளின் கோபம் போன இடத்தை இப்போது தேட வேண்டியதாக இருந்தது.

error: Content is protected !!
Scroll to Top