அறையின் திரைச்சீலைகள் மூடப்பட்டிருக்க, பொழுது புலர்ந்ததே புலப்படவில்லை. அவளுக்குக் கணவனின் மேல் அப்படியொரு கோபம் வந்தது. அதைக் கோபம் என்று சொல்லிட முடியாது. அவளுக்கு அவனோடு இருக்க வேண்டும், அவனுடன் நேரம் செலவிட வேண்டும். அவனோடு பேசி, சிரித்து, ஒன்றாக உண்டு, ஊர் சுற்றி என இருவருக்குமான தனிமை தருணங்களை விடுமுறை தினத்தில்தானே எதிர்பார்க்க முடியும்?
அவனை, “போகாதே” எனத் தடுக்க முடியாத தன்னையே நொந்து கொண்டாள்.
தான் எத்தனை கெஞ்சினாலும் கண்டு கொள்ளாமல் செல்பவனை என்ன சொல்லி நிறுத்துவது எனச் சத்தியமாக அவளுக்குத் தெரியவில்லை.
திருமணமான புதிதில் மனைவி என்ன சொன்னாலும் மண்டையாட்டுவார்களாமே கணவர்கள்? அவள் அப்படித்தானே கேள்விப்பட்டிருந்தாள். அவளுக்கு மட்டும் எல்லாமே தலை கீழாகத்தான் நடக்கும் போலும்.
அவளை விட விளையாட்டு முக்கியம் அவனுக்கு. நண்பன் முக்கியம். நட்பு முக்கியம். அவன் வாழ்வின் முதலாம் இடத்துக்கு இன்னமும் அவள் பதவி உயர்வு பெறவில்லையோ?
ஒருவித விரக்தி மனநிலையில் மல்லாந்து விட்டம் பார்த்து படுத்திருந்தாள். இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே படுத்திருப்பது என்ற கேள்வியுடன் எழுந்து விட்டாள் பிரியதர்ஷினி.
அவள் குளித்துக் கூடத்திற்குள் நுழைய, மரகதவல்லி சமையல் அறையில் இருப்பது தெரிந்தது. மதிய உணவுக்கான ஆயத்தங்களில் இருந்தார் அவர்.
“அய்யோடா” என்று அவள் அவசரமாக உள்ளே நுழைய, சட்டெனத் திரும்பி பார்த்தார் மரகதவல்லி.
“காஃபி தரவா பிரியதர்ஷினி?” என்று கேட்டுக் கொண்டே அவளின் பதிலை எதிர்பாராமல் பாலை அடுப்பில் ஏற்றினார்.
“நானே கலந்துக்கறேன் மிஸ். நீங்க சாப்பிட்டீங்களா? உங்களுக்கும் காஃபி குடுக்கவா?” என்று படபடத்து கேட்டபடியே காஃபி கோப்பையை எடுத்தாள்.
அவளின் தோளில் தட்டி, “நான் காலையிலேயே ரஞ்சன் கூடக் காஃபி குடிச்சிட்டேன். ஒரு நாளைக்கு ஒரு காஃபிக்கு மேல எனக்கு இறங்காது. ஸ்கூல்ல டீ குடிச்சே பழகிருச்சா எப்போ டீ குடுத்தாலும் குடிப்பேன். ஆனா காஃபி, ம்ஹும்” என்றார்.
“இந்த ரஞ்சன்தான் காஃபி பைத்தியம். முன்னாடி அவனும் டீதான் குடிப்பான். உனக்குப் பிடிக்கும்னு…ம்க்கும்ம்..” என்று தொண்டையைச் செருமி பேச்சை நிறுத்தி விட்டார். அவர் பேச்சில் கவனம் வைக்காமல் காஃபி கோப்பையில் சக்கரையும், காஃபி தூளும் சேர்த்து கொண்டிருந்தவள், அவருக்குத் தண்ணீரை எடுத்து நீட்டி, “என்னங்கத்தே சொன்னீங்க?” என்று கேட்டாள்.
“எனக்குக் காஃபி வேணாம்னேன், வேற ஒன்னுமில்ல. ரஞ்சன் எட்டு மணிக்கே மீனு வாங்கிட்டு வந்துட்டான். உனக்குப் பிடிக்கும்னு.. பூரி, கிழங்கு செஞ்சேன். வா, சாப்பிடுவோம்” என்றார். விழிகள் வியப்பில் விரிய ஆச்சர்யமாய் அவரைப் பார்த்தாள் அவள். மகனுக்குப் பிடித்ததையே செய்ய மாட்டார் அவர். அப்படியிருக்கையில் தனக்காக மெனக்கெட்டு செய்தாரா? நிரம்ப அதிர்ச்சியாக இருந்தது அவளுக்கு.
அவர் உரித்துக் கொண்டிருந்த சின்ன வெங்காயத்தை அள்ளி கிண்ணத்தில் வைத்தார்.
“இவ்வளவு நேரமும் நீங்க சாப்பிடாமயா இருந்தீங்க?”
“ம்ம், ரஞ்சன் சாப்பிடும் போதே என்னையும் சாப்பிட சொன்னான், எனக்கு அந்நேரம் பசிக்கல. இப்போ சாப்பிடுவோம், நீ வா” என்றார்.
மகன் சாப்பிட்டுதான் சென்றான் என்று தன்னிடம் தகவல் சொல்கிறாரா? சரிதான் என்று கேட்டு கொண்டாள்.
அவளுக்கு மிகப் பிடித்த காலை உணவு. ஆனால் இரண்டு பூரியை மென்று முழுங்குவதே பெரும்பாடாக இருந்தது.
அவள் தட்டில் மேலும் ஒரு பூரியை வைத்தார் மரகதவல்லி.
“அய்யோடா, என்னால இதுக்கு மேல சாப்பிட முடியாது மிஸ். பிளீஸ் எடுத்துடுங்க”
“தட்டுல வச்சாச்சு, சாப்பிடு” என்று கண்டிப்புடன் சொன்னார்.
“நேத்து என்னைக் கோவிலுக்குக் கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு இவ்வளோ ஸ்லோவா சாப்பிடுற?” மரகதவல்லி கேட்கவும், சடாரென்று நிமிர்ந்தாள்.
“ஆமால்ல? கோவிலுக்குப் போகலாம்னு சொன்னேன்ல? மறந்துட்டேன். சாரி அத்த” என்றாள் கெஞ்சலாக. அவரோ புன்னகையுடன், “பொறுமையா சாப்பிட்டு முடி, ஒன்னும் அவசரம் இல்ல. சாமி நமக்காக வெயிட் பண்ணுவார்” என்றார்.
“வீட்ல மீன் சமைச்சுட்டு எப்படி மிஸ் கோவிலுக்குப் போறது? நீங்க சனிக்கிழமை சாப்பிட மாட்டீங்களே? அப்புறம் ஏன் இன்னைக்கு மீன் எடுத்தீங்க?”
“நீ சாப்பிடுவ இல்ல?”
“ஆமா, மிஸ். எங்க வீட்ல இதெல்லாம் பெருசா ஃபாலோ பண்ண மாட்டோம்.”
“ரஞ்சன் காலையிலேயே வாங்கிட்டு வந்து குடுத்துட்டான்.” என்றவர், அவள் முகத்தைக் கூர்ந்து கவனிக்க,
அவரின் பார்வையைக் கவனித்தாலும் அலட்டிக் கொள்ளாமல், “ம்ம், அப்போ நாம செவ்வாய் கிழமை ஈவ்னிங் கோவிலுக்குப் போகலாம். இன்னைக்கு வேற எங்கயாவது போவோமா மிஸ்? எங்க போகலாம், நீங்களே சொல்லுங்க?” என்று கேட்டாள்.
“எனக்குக் கொஞ்சம் புக்ஸ் வாங்கணும். உங்க கல்யாண டைம்ல வாங்கின புடைவைங்களுக்கு ஜாக்கெட் தைக்காம இருக்கு. அது தைக்கக் குடுக்கணும். அப்படியே எனக்கொரு ஹேன்ட்பேக் வாங்கணும், அப்புறம்..” என்று நீண்ட பட்டியலை அடுக்கினார்.
அவர் கண்ணாடியை கீழிறக்கி, “ஆமா, என் கூட வர உனக்கு டைம் இருக்கா?” என்று சந்தேகமாகக் கேட்கவும்,
“என்ன மிஸ் இப்படிக் கேட்டுட்டீங்க? இன்னைக்கு நாள் முழுக்க நான் ப்ரீதான். நாம ஜாலியா ஷாப்பிங் போகலாம். நான் கூட்டிட்டு போறேன் உங்கள.. எப்படியும் உங்க பையன் இப்போதைக்கு வர போறதில்ல..” என்று பேச்சு வாக்கில் சொன்னவள், மாமியாரின் முகம் போன போக்கில் நாக்கை கடித்துப் பேச்சை நிறுத்தினாள்.
“சரி, அப்போ நாம லஞ்ச் சாப்பிட்டுட்டு வெயில் தாழ வெளில போவோம். என்ன?” என்று இயல்பாகப் பேசினார் மரகதவல்லி.
“சரிங்கத்தே” என்று அவள் வேகமாகச் சொல்லவும், சிரித்தார் அவர்.
காலை உணவு முடித்ததும் மதிய சமையலை கவனிக்கச் சென்றாள்.
மரகதவல்லியும் அவளின் பின்னேயே வர, “நான் சமைக்கறேன் மிஸ். பிளீஸ் நீங்க போய் ரெஸ்ட் எடுங்க. வெளி வேலைங்க என்னென்ன பெண்டிங் இருக்குன்னு பார்த்து லிஸ்ட் போட்டு வைங்க. ஈவினிங் எல்லாத்தையும் வரிசைப்படி முடிச்சுடுவோம்” என்றாள். அவளுக்குச் சமையலில் சின்னச் சின்ன உதவிகள் செய்து விட்டே அங்கிருந்து வெளியேறினார் அவர்.
காரப் பொடி போட்டு மீன் குழம்பு வைத்து, கண்ணாடி பாறை மீனை வறுவலுக்கு மசாலாவும் தடவி குளிர்சாதனப் பெட்டியில் வைத்தாள். அத்துடன் சோறு வடித்து, தக்காளி ரசம் வைத்து வைத்தாள்.
அடுப்பின் சூடும், கசகசப்பும் அவளை மீண்டும் குளிக்கச் சொன்னது.
அறைக்குள் நுழைய அங்கே அவளின் அலைபேசி அனாமத்தாகக் கிடந்தது. பிரபஞ்சனிடம் இருந்து அழைப்பு, குறுஞ்செய்தி ஒன்றுமில்லை.
பார்கவி, ராதா அழைத்திருந்தார்கள்.
முதலில் அம்மாவை அழைத்தாள் அவள்.
“நான் கிச்சன்ல இருந்தேன்ம்மா. போன் அடிச்ச சவுண்ட் கேட்கல எனக்கு. சாரிம்மா, சொல்லுங்க” என்றாள்.
“லஞ் சமைச்சுட்டியா தர்ஷி? நீங்க ஃப்ரீயான்னு கேட்டு அப்பா உங்களை லஞ்ச்க்கு கூப்பிட சொன்னார்”
“ம்மா, நேத்து நைட்தானே நாங்க வீட்டுக்கு வந்தோம்?”
“ஆமா, எவ்ளோ நாள் கழிச்சு வந்த? மறுவீட்டுக்கு வந்ததோட சரி. நேத்து வந்தவங்க எவ்வளவு நேரம் இங்க இருந்தீங்க? ஒரு ரெண்டு மணி நேரம் கூட இருந்திருக்க மாட்டீங்க. உடனே ஓடிட்டீங்க” என்று சடைத்துக் கொண்டார்.
“ம்மா, அவர்தான் சொன்னார்லம்மா, நாங்க இன்னொரு நாள் பிளான் பண்ணி வர்றோம்மா”
“இந்தா இருக்க நம்ம வீட்டுக்கு பிளான் பண்ணி வருவீங்களாக்கும் நீங்க. நல்லா இருக்கு கதை போ”
“ம்மா, அவரு பிஸிம்மா”
“எப்போ கேட்டாலும் நீ இதைத்தான் சொல்ற” என்றார் கோபமாக.
“என்னம்மா நீ இதுக்குப் போய்க் கோபிச்சுக்கற?” அவள் சலுகையாகச் செல்லம் கொஞ்சி கேட்க, “இல்ல தர்ஷி, அப்பா உங்களை லஞ்ச்சுக்கு கூப்பிட்டு அப்படியே ஈவ்னிங் போல உங்களை ஷாப்பிங் கூட்டிட்டு போகலாம்னு பிளான் பண்ணார். அம்மா அதுக்குதான் கால் பண்ணேன். அண்ணா கூட நம்மளோட வர்றேன்னு சொன்னான். என்ன நீயும், மாப்ளயும் ஈவ்னிங்கா கிளம்பி இங்க வர்றீங்களா? பொறுமையா லஞ்ச் முடிச்சுட்டு கூட வாங்க” என்றார்.
“ம்மா..”
“என்னடா வர்றீங்களா?”
“அவரு பிஸியா இருக்கார்ம்மா”
“ஓ, அவருக்கு ஆஃபீஸ் வேலை என்ன ஈவ்னிங் வரைக்குமா இருக்கப் போகுது? அவர் ஒர்க் முடிஞ்சதும் சொல்லு தர்ஷி. நாங்க கிளம்பி வர்றோம். இல்லன்னா நீங்க நேரா கடைக்கு வந்துடுங்க. நாம அங்க மீட் பண்ணிக்கலாம்” என்று வேகமாகத் திட்டம் தீட்ட தொடங்கினார் ராதா.
அவளின் தொண்டைக் குழி அவஸ்தையாய் ஏறியிறங்கியது.
அம்மாவிடம் பொய் பேச அவளுக்குப் பிரியமில்லை. உண்மையைச் சொன்னால் என்ன சொல்வாரோ என்ற தயக்கம் அவளைத் தடுமாறச் செய்தது.
“நாம நெக்ஸ்ட் வீக் போகலாமாம்மா?”
“நெக்ஸ்ட் வீக் நீ ஆஃபீஸ் போற பரபரப்புல இருப்பியே குட்டிமா. நீ ஆஃபீஸ்க்கு போட்டு போக ட்ரெஸ் எடுத்து குடுக்கணும்னு நேத்துல இருந்து உங்கப்பா பத்து தடவைக்கு மேல சொல்லிட்டார். அவசரமா ஆன்லைன்ல ஆர்டர் பண்றேன்னார். உங்கண்ணா வேணாம்னுட்டான்.”
“ஆன்லைன்ல ஆர்டர் பண்ணா எனக்கு எப்பவும் பிட்டிங் சரியா இருக்காதும்மா”
“அதான் அண்ணனும் சொன்னான். சரி, விடு. நாளைக்குப் போவோமா? உனக்குப் பிடிச்ச எஸ்டில் ஜூவல்லரி வாங்கிட்டு அப்படியே ட்ரெஸ் ஷாப்பிங் பண்ணிட்டு வருவோம். உன் பேரை சொல்லி, அம்மாவும் பேங்க்குக்குக் கட்ட பத்து சேலை எடுத்துப்பேன்” என்றார் தீவிரமாக.
“பத்து சேலை போதுமாம்மா?”
“என் பொண்ணுக்கு இருபது எடுக்கும் போது எனக்குப் பத்தாவது எடுக்கணும் இல்ல தர்ஷி?”
“ஹாஹாஹா, சரிம்மா. அப்பாவ உங்க பேங்க்ல லோன் போட சொல்லுங்க முதல்ல. நாம கண்டிப்பா ஷாப்பிங் போறோம்” என்றாள் சத்தமாகச் சிரித்து.
“எப்ப குட்டிம்மா போறோம்?”
“அய்யோடா, அம்மா இன்னைக்கு அவர் பிஸிம்மா, வெளில போய் இருக்கார். மதியத்துக்கு மேலதான் வீட்டுக்கு வருவார்” ஒருவாறாக உண்மையைச் சொல்லி விட்டாள்.
“ஓ? அப்போ மதியம் வந்துடுவார் இல்ல? நாம ஈவ்னிங் போலாமா?”
“ஈவ்னிங் நானும், அத்தையும் ஷாப்பிங் போறோம்மா”
“ஓஹோ, அப்படிச் சொல்லு. நீ ஏற்கனவே பிளான் வச்சுட்டு அம்மா கேட்கவும் முடியாதுங்கற..” என்று குற்றம் சாட்டினார்.
“அட, இல்லம்மா..”
“ம்ம், சரி அப்போ இன்னைக்கு உன் மாமியார் கூட ஷாப்பிங் போயிட்டு, நாளைக்கு அம்மா கூட ஷாப்பிங் வர்ற சரியா?”
“அவர் வந்ததும் கேட்டுட்டு..”
“என்னடா தர்ஷினி? அப்பா ஆசையா கூப்பிட்டா இப்படியா பிகு பண்ணுவ? நம்ம வீட்ல எல்லாரும் வேலைக்குப் போறோம். நாளைக்கு நீயும் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டா உன்னைப் பிடிக்க முடியாதேன்னு கூப்பிட்டா..”
“ம்மா, நான் வேலைக்குப் போனாலும் வீக் எண்ட் ஃப்ரீயாதானேம்மா இருப்பேன்? அப்போ நாம நல்லா ஊர் சுத்தலாம், ஷாப்பிங் போகலாம்”
“ஃபர்ஸ்ட் நம்ம வீட்டுக்கு வர உனக்கு நேரமிருக்கான்னு பாரு. அப்புறம் ஊர் சுத்துறதை பத்தி பேசுவோம்” என்று விட்டார் ராதா. அவரின் குரலில் இருந்த வருத்தம் அவளை வாட்டியது.
“என்னம்மா நீங்க இப்படிப் பேசுறீங்க? நாளைக்கே நான் வீட்டுக்கு வர்றேன். நாம ஷாப்பிங் போறோம்” என்றாள், முயன்று வருவித்த உற்சாகக் குரலில்.
“சரிடா, அப்போ நீயும் மாப்ளயும் நாளைக்கு லஞ்ச்க்கு இங்க வந்துடுறீங்களா?”
“அது.. அவர்கிட்ட கேட்டுட்டு சொல்லவாம்மா? அவருக்கு ஏதாவது வேலை இருக்கும்” என்று தயங்கினாள்.
“சண்டே அதுவுமா என்ன வேலை இருக்கப் போகுது மாப்ளக்கு?” என்று கேட்டார்.