பிரிய பிரபஞ்சமே – 8 (2)

அவர்களின் வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த பிள்ளையார் கோவில் சென்று வண்டிக்கு பூஜை போட்டு, சாமி தரிசனம் செய்து வீடு திரும்பினார்கள்.

“அய்யோடா அத்த கிட்ட எதையுமே சொல்லவே இல்ல‌ நாம” என்று அவள் சங்கடமும், பதற்றமுமாக நாக்கை கடிக்க, “சில்ல்ல்ல் பிரியா, வண்டி விஷயம் நாலு நாளைக்கு முன்னாடியே அம்மாவுக்கு நான் சொல்லிட்டேன். உனக்கு ஜாப் மெயில் மதியம்தானே வந்தது? சோ அவங்ககிட்ட இப்போ போய்ச் சொல்லு, தப்பில்ல. அம்மா ஒன்னும் நினைக்க மாட்டாங்க” என்று சொல்லி, அவள் தோளில் கைப் போட்டு உள்ளே அழைத்துச் சென்றான்.

அவளே அதிர்ச்சியடையும் விதமாக மரகவதல்லி அத்தனை மகிழ்ச்சியாக அந்தச் செய்தியை உள்வாங்கினார். அவளுக்கு வேலை கிடைத்ததற்காக வாழ்த்தவும் செய்தார்.

அவர்களுடன் கீழிறங்கி புது வண்டியை பார்த்தார்.

“நல்லாருக்கு ரஞ்சன்” என்றார்.

“வாங்க மிஸ், ஒரு ரவுண்டு போகலாம்” அவள் ஆர்வத்துடன் அழைக்க, “டியூஷன் இருக்கே?” என்று அவர் சொன்னதும் அவள் முகம் வாடி விட்டது.

“நாளைக்கு லீவ்தானே? அப்போ நாம கோவிலுக்குப் போகலாம். நீ கூட்டிட்டு போ என்னை. சரியா?” என்று அவர் கேட்கவும் மலர்ந்து புன்னகைத்து, “ஓகே மிஸ்” என்றாள்.

பிரியதர்ஷினி மாலை தேநீருடன் கடையில் வாங்கி வந்திருந்த இனிப்பு, காரத்தை வைத்து அவருக்குக் கொடுத்தாள்.

மரகதவல்லி அவரிடம் டியூஷன் பயிலும் பிள்ளைகளுக்கு இனிப்பு கொடுத்து மருமகளுக்கு வேலை கிடைத்து விட்டது எனும் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டார். அவர் முகத்தில் அப்படியொரு பூரிப்பு.

“உங்கம்மாவ என்னால புரிஞ்சிக்கவே முடியல பிரபா” என்று சிறு குரலில் கணவனிடம் புலம்பினாள் அவள்.

“முதல்ல என்னைப் புரிஞ்சுக்க டிரை பண்ணு பிரியா” என்று முணுமுணுத்தான் அவன்.

“என்னது? உங்களை என்ன புரிஞ்சுக்கல நான்?” என்று அவள் எகிற, “ம்மா, நாங்க பிரியா வீடு வரைக்கும் போயிட்டு வர்றோம்மா” என்று அம்மாவிடம் தகவல் சொல்லியிருந்தான் அவன்.

“போயிட்டு வாங்கப்பா.” என்றார் அவர்.

அவ்வளவுதான், பிரியதர்ஷினியை கையில் பிடிக்க முடியவில்லை.

“வாங்க போகலாம்” என்று கணவனின் கைப் பிடித்து இழுத்தாள்.

“நீ டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா, போகலாம்” என்றான் அவன்.

“பிரபா, இப்ப வெளில போகப் போட்ட டிரஸ்தானே இது?” தன்னையே குனிந்து பார்த்துக் கேள்வி கேட்டாள்.

“அம்மா வீட்டுக்கு போக வேற ட்ரெஸ் போடு” என்றிருந்தான். அவன் நீட்டிய புடைவையை அவள் நேர்த்தியாக உடுத்தி வந்ததும் அவளின் வீடு சென்றார்கள்.

கிளிப் பச்சை நிற சில்க் காட்டன் சேலையில் பசுமையாய் இருந்தாள் பிரியதர்ஷினி. அவளின் கைப் பிடித்து அவளை நிதானமாக ரசித்து அவளோடு நடந்தான் பிரபஞ்சன். வீட்டில் இருந்து கிளம்பும் போதே பெற்றோருக்கு அழைத்து வீடு வருவதாகத் தகவல் சொல்லியிருந்தாள்.

அவள் சென்னையில் இருந்தாலும் அடிக்கடி அம்மா வீடு சென்றது கிடையாது. ஆகையால் அவளின் பெற்றோர் அவளுக்காக விரைவாக வீடு வந்திருந்தார்கள்.

மகளை வாழ்த்து மழையிலும், பாச மழையிலும் நனைத்து விட்டார்கள்.

“எப்போடா ஜாயின் பண்ணணும்?” மரகதவல்லி கேட்ட அதே கேள்வியை அவர்களும் கேட்டார்கள்.

“டாகுமெண்ட்ஸ் வெரிபிகேஷன் முடிஞ்சதும்ப்பா.”

“அதுவொரு ஒன் வீக் ஆகிடும்ல?”

“ஆமாப்பா” என்றாள்.

சற்று நேரத்தில் அவளின் அண்ணனும் வீடு வர, அவனுக்கும் இனிப்பு கொடுத்தாள். ராதா அவர்களுக்காக அவசரமாக விருந்து சமைத்துப் பரிமாறினார்.

அங்குக் குறைந்த நேரமே என்றாலும் அத்தனை நிறைவாகச் செலவழித்திருந்தார்கள். அவளுக்கு அங்கிருந்து கிளம்பவே மனம் வரவில்லை.

அவளின் பெற்றோரும், “நாளைக்கு வீக் எண்ட்தானே மாப்ள? ரெண்டு நாள் இங்கேயே இருந்துட்டு சண்டே நைட் வீட்டுக்கு போங்களேன்” என்று வற்புறுத்தினார்கள்.

“இல்ல மாமா, இன்னொரு நாள் பிளான் பண்ணி வர்றோம்” என்று தவிர்த்து விட்டான் அவன்.

கணவன் மறுக்கவும் அவனைக் கெஞ்சலாகப் பார்த்தாள் பிரியா. அவனது பார்வை கடத்திய செய்தியில் அவளும் அவனை வற்புறுத்தவில்லை.

“கவனமா வண்டியோட்டு குட்டிம்மா” ஆயிரம் பத்திரம் சொல்லி, ஆசீர்வதித்து அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

இரவு முழுதாகக் கவிழ்ந்திருந்தது. வானில் நிலவு முழுமையடைந்திருந்தது. இரவுக்கே உரிய குளிர் காற்று இருவரின் மேனியை தழுவி செல்ல ஏகாந்தமாய் ஒரு பயணத்தை மேற்கொண்டார்கள். இப்போதும் அவள்தான் வண்டியை செலுத்தினாள். பிரபஞ்சன் புன்னகையுடன் அவள் பின்னே அமர்ந்திருந்தான்.

“நான் வண்டியோட்ட எப்படிக் கத்துக்கிட்டேன் தெரியுமா பிரபா”

“ம்ஹும்” என்று உதடு பிதுக்கியவன் கண்களில் கள்ளச் சிரிப்பு.

“வீட்டுக்குப் போனதும் பொறுமையா கதை கேட்கறேன். இப்போ சொல்லாத” என்றான். வீடு சென்ற பிறகு அந்தக் கதையைச் சொல்ல மறந்து போனாள் அவள். அவனும் அவளுக்கு நினைவுப்படுத்தவில்லை.

அறைக்குள் நுழைந்ததும் அவன் கழுத்தில் கரம் கோர்த்து, “தேங்க்ஸ் பிரபா” என்று கத்தி குதூகளித்தாள்.

அவளின் நெற்றி முட்டி, மூச்சு காற்று முகத்தில் மோத, “இப்போ சொல்லு பிரியா” என்று கரகரத்த குரலில் கிசுகிசுத்தான்.

“என்ன சொல்ல?” என்று குழம்பினாள்.

அறையில் ஏசியின் மெல்லிய ஒலி துல்லியமாகக் கேட்டது. அவன் கண்களில் தொக்கி நின்ற எதிர்பார்ப்பை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவளின் புடைவை அவன் கரத்தில் சுற்றியிருக்க உன்மத்தத்துடன் அவள் கழுத்தில் முகம் புதைத்தான். அவன் உதடு ஈரமாய்க் கழுத்தில் புதைந்து, “பிரியா” என்று பிதற்றியது. அவன் கைகளுக்குள் திரும்பி அவனை அணைத்துக் கொண்டாள்.

அவள் முகத்தை ஒற்றை விரலால் நிமிர்த்தினான். இருவரின் விழிகளும் உறவாடின.

“லவ் யூ பிரபா” மென்மையாய் உச்சரித்தாள். மறுகணம் அவளை மூச்சு முட்டும் அளவுக்குத் தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான். அவள் உச்சரித்த வார்த்தைகள் அவன் முத்தத்தில் கரைந்திருந்தன.‌

அவள் அவனுள் கரைந்த பொழுதிலும், எதிர்பார்ப்புடன் அவள் முகம் பார்த்திருந்தான். தலையை எக்கி அவன் தாடையில் முத்தமிட்டு, “லவ் யூ பிரபா” என்றாள் ஒவ்வொரு வார்த்தையாக. அவளின் தலைக்கடியில் கை கோர்த்து இறுக அணைத்தவன், அவளில் இணைந்து, கரைந்து, தொலைந்து போனான்.

அதிகாலையில் பால்கனியில் கீச்சுக் கீச்செனக் குருவிகளின் சத்தம் அவளை எழுப்பி விட்டது.

மெதுவாகப் புரண்டு படுத்தாள். பக்கத்தில் படுக்கை காலியாக இருக்கவும், கையால் துழாவி, “பிரபா” என்று உறக்க கலக்கத்துடன் அழைத்தான்.

மறுகணம் படுக்கையில் அவள் பக்கம் சரிந்தவன், “தூங்கு” என்றான் அவளின் தலை கோதி.

“ம்ம், எழுந்துட்டீங்களா? டைம் என்ன? இன்னைக்கு உங்களுக்கு லீவ்தானே?” அவளின் அத்தனை கேள்விக்கும், “ம்ம்” என்ற ஒற்றைப் பதிலில் முடித்து விட்டான்.

“பேர்ட்ஸ்க்கு திணை எடுத்து போட்டுட்டு, தண்ணி வச்சுட்டு வந்து படுங்களேன்” என்று சொல்லி கண்ணைத் திறக்காமலே, கையை நீட்டி அவனைத் தேடினாள். அவன் முகத்தில் கைப்பட்டதும் புன்னகைத்தவள் மெல்ல கண் திறந்து, “சில்லுன்னு இருக்கீங்க, குளிச்சுட்டீங்களா?” என்று கேட்டாள்.

அவன் குளித்து உடை மாற்றி அமர்ந்திருப்பதைக் கண்டதும் அவளின் உறக்கம் விலகி ஓடியது. கண்ணைச் சிமிட்டி சிமிட்டி அவனைப் பார்த்து, “என்ன பிரபா?” என்றாள்.

அவளின் முகத்தை வருடி, “இன்னைக்கு மேட்ச் இருக்கு. அதான் கிளம்பிட்டேன். பார்த்திக் கீழ வெயிட் பண்றான்” என்றான்.

பட்டென அவன் கரத்தை தட்டி விட்டிருந்தாள். அதே வேகத்துடன் படக்கென எழுந்து அமர்ந்தாள், “படு பிரியா” அவளின் தோளை பிடித்து அழுத்தி படுக்க வைத்தான்.

“ப்ச்” என்றாள் வெறுப்பும், சலிப்புமாக.

“பிரியா..”

“என்ன மிரட்டுறீங்க? காலையில எழுந்ததும் கிரிக்கெட் விளையாட போகணுமா உங்களுக்கு?”

“மணி ஒன்பதாகப் போகுது பிரியா”

“இருக்கட்டும். அதுக்காக.. இதுக்கு எதுக்கு என்னை இங்க வம்படியா கூட்டிட்டு வந்தீங்க? என்னை எங்கம்மா வீட்லயே விட்டுட்டு வந்திருக்கலாம் இல்ல?”

“ஏன்னா எனக்கு நீ வேணுமே” என்று அவளின் கன்னத்தில் மீசையை உரசினான்.

“எனக்கும் நீங்க வேணும். அதுனால இன்னைக்கு வீட்ல இருங்க” என்று அவள் சொல்லவும் சிரித்து விட்டான்.

கோபத்தில் மூச்சு வாங்க அவனை முறைத்தாள்.

“பார்த்திக் கீழ வெயிட் பண்றான். அண்ணா நகர் டீம் கூட எங்களுக்கு முக்கியமான மேட்ச் இன்னைக்கு. நான் போயே ஆகணும் பிரியா. ஓகே?” என்று அவன் எழுந்து கொள்ள, “என்னமோ பண்ணுங்க போங்க” என்று கத்தினாள்.

“சில்ல்ல் பிரியா, மதியம் வந்துடுவேன்”

“நீங்க ஒன்னும் வர வேணாம். அந்தக் கிரிக்கெட்டையே கட்டிட்டு அழுங்க” என்று கத்தினாள்.

“தூங்கு” அவள் நெற்றியில் முத்தமிட்டு அறையை விட்டு வெளியேறினான்.

“பார்த்தி வந்துட்டேன் டா” என்ற அவன் குரல் கேட்க, “இந்தப் பார்த்திக்கு பொண்டாட்டி வருவா இல்ல? அப்போ இருக்கு அவனுக்குக் கச்சேரி” என்று கருவினாள்.

அவளுக்கு முந்தைய தினத்தின் மகிழ்ச்சி இன்றில்லை. மனம் சோர்வுற சுருண்டு படுத்து விட்டாள்.

error: Content is protected !!
Scroll to Top