பிரிய பிரபஞ்சமே -8 (1)

அன்றைய தினம் அவளுக்கு நேர்காணல் முடியவே மாலை ஐந்து மணிக்கு மேலாகி இருந்தது. கிட்டத்தட்ட நான்கு சுற்று நேர்காணல் தேர்வுகள். மிகவும் நன்றாகச் செய்திருந்தாள். நிச்சயமாக இந்த வேலை கிடைத்திடும் என்ற நம்பிக்கையும் அவளுக்கு நிறையவே இருந்தது.

அந்த அலுவலகக் கட்டிடத்தில் இருந்து வெளியேறும் போதே பிரபஞ்சன் அவளை அழைத்து விட்டான்.

“பிரபா, இன்டர்வியூ சூப்பரா..” என்று அவள் ஆரம்பிக்க, “பிரியா, சாப்பிட்டியா?” என்று முதலில் கேட்டிருந்தான் அவன்.

அவள் இதழ்கள் தாமாக விரிந்து புன்னகைத்தன.

“சாப்ட்டேன் பிரபா.”

“சரி, இன்டர்வியூ முடிஞ்சதுன்னா அங்கேயே, உள்ள லாபி ஏரியால வெயிட் பண்ணு. நான் ஃபிப்ட்டின் மினிட்ஸ்ல அங்கருப்பேன்” என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.

அடுத்தப் பத்தாம் நிமிடம் அங்கிருந்தான்.

“என்ன இவ்ளோ சீக்கிரம் வந்துட்டீங்க? நீங்க எப்படியும் ஆறு மணிக்கு மேலதான் வருவீங்கன்னு நான் அசால்ட்டா உட்கார்ந்துருந்தேன்” என்று அவள் நக்கலாகச் சொல்ல, அவளுக்காகக் கார் கதவை திறந்து விட்டு, அவள் ஏறியதும் கதவை மூடி, மறுபக்கம் சென்று ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான்.

“இன்டர்வியூல என்ன கேட்டாங்க தெரியுமா பிரபா” அவள் ஆர்வத்துடன் ஆரம்பிக்க, அவனோ, பின்னிருக்கையில் இருந்த பையை எட்டி எடுத்தான்.

அந்தப் பையைக் கவனமாகப் பிரித்து, “ஃபர்ஸ்ட் சாப்பிடு பிரியா” என்று அவளிடம் நீட்டினான்.

“நான் ஆல்ரெடி லஞ்ச் சாப்ட்டேன் பிரபா”

“இன்டர்வியூ டென்ஷன்ல ஒழுங்கா சாப்பிட்டு இருக்க மாட்ட, எனக்குத் தெரியாதா உன்னை? இந்தா சாப்பிடு இப்போ” என்று மிரட்டலாகச் சொன்னவன், அவனது கைக் குட்டையை உதறி அவளின் மடியில் விரித்தான்.

உணவை பிரித்துப் பிளாஸ்டிக் கரண்டி வைத்து, “ம்ம், சாப்பிடு” என்று நீட்டினான். அவள் எளிதாக உண்ணும் வகையில் அவளுக்கு மிகப் பிடித்த காய்கறி பிரியாணி வாங்கி வந்திருந்தான்.

அவளுக்கு அதுவொரு கெட்ட பழக்கம், பதட்டமானால் பசி மரத்து போகும். உணவு உள்ளுக்குள் இறங்கவே இறங்காது. அது தெரிந்த அவளின் அம்மா இது போன்ற சமயங்களில் அவளுக்கு வலுக்கட்டாயமாக உணவை ஊட்டி விடுவார்.

பிரியதர்ஷினி அவனையே பார்த்திருக்க, காரை இயக்கி அங்கிருந்து நகர்த்தி, சற்றே போக்குவரத்து நெரிசலற்ற பகுதியில் சென்று நிறுத்தினான்.

மெதுவாகத் திரும்பி, “உன்னைச் சாப்பிட சொன்னேன்” என்ற அதட்டலுடன் கரண்டியில் உணவை எடுத்து அவனே அவளுக்கு நீட்டினான். மறுப்பில்லாமல் வாங்கிக் கொண்டாள். கரண்டியை அவனிடம் இருந்து வாங்கி, அவளே உண்டாள்.

அதில் பாதிக்கு மேல் அவளால் உண்ண முடியவில்லை.

“போதும் பிரபா” என்று அவள் சொல்லவும், மறுகணம் மீதியை அவன் உண்டிருந்தான்.

“இப்போ சொல்லு, இன்டர்வியூ எப்படிப் போச்சு? என்ன சொன்னானுங்க?” என்று விசாரித்தான்.

ஆப்பிள், கொய்யா, மாதுளை, பப்பாளி பொடியாக நறுக்கி அடைக்கப்பட்டிருந்த பழக்கலவையை அவளிடம் நீட்டினான். அதைக் கொறித்துக் கொண்டே அவனிடம் நேர்காணல் விவரம் பகிர்ந்தாள்.

“ஒன் வீக்ல ரிசல்ட் மெயில் பண்றேன்னு சொல்லியிருக்காங்க”

அவளுக்குக் குடிக்கத் தண்ணீர் எடுத்து நீட்டியபடி, “குட்” என்றான். மாலை காற்றுத் திறந்திருந்த காரின் ஜன்னலின் வழியே அவளின் தலைக் கலைத்துச் சென்றது. அவன் கரம் இயல்பாக நீண்டு அவளின் முகத்தில் விழுந்த முடிக்கற்றையைக் காதுக்குப் பின்னால் ஒதுக்கி விட்டது.

இருவரும் இதமான மனநிலையுடன் வீடு திரும்பினார்கள்.

“பிரியதர்ஷினி இன்டர்வியூ எப்படிப் பண்ண?” என்று மரகதவல்லி ஆர்வமாகக் கேட்டது கூட அவளுக்கு ஆச்சரியமே.

“நல்லா பண்ணேன் மிஸ். கண்டிப்பா வேலை கிடைச்சுடும்” என்று கண்கள் மின்ன பதிலளித்தாள்.

ஆனால், முழுதாக ஒரு வாரம் கடந்த பின்னரும் அந்த நிறுவனத்தில் இருந்து ஒரு பதிலும் வரவில்லை அவளுக்கு. தினமும் இமெயில் வந்திருக்கிறதா என்று பார்த்து பார்த்தே அவள் கண்கள் பூத்துப் போனது.

அவள் மனம் ஒருவித சோர்வில் சுணங்கியிருந்தது.

வீடும், தனிமையும் மூச்சு முட்டுவதாக இருக்க அந்தப் பின்காலை பொழுதில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பால்கனி பீன் பேக்கில் கால் நீட்டி, கண் மூடி அமர்ந்து விட்டாள்.

அப்படியே லேசாகக் கண்ணயர்ந்து விட்டாள் போலும். அவளின் அலைபேசி அவளை அடித்து எழுப்பியது.

“சொல்லு பார்கவி”

“நான் நல்லா இருக்கேன். நீ எப்படியிருக்க?” என்று அவள் கேட்கவும் சிரித்து விட்டாள்.

“நீ என்ன தெரியாத ஆளா பாரு? ஹாய், ஹவ் ஆர் யூன்னு ஆரம்பிக்கறதுக்கு? ம்ம்?”

“நீ பார்கவின்னு இழுக்கும் போதே மூட் அவுட்னு தெரியுது. சொல்லு என்ன விஷயம்?”

“வேலை விஷயம்தான் பாரு. அவனுங்க இன்னும் பதிலே அனுப்பல. இதுக்கு மேல பதில் வராதா? பேசாம வேற வேலை தேடவா?”

“அய்யோடா..” என்று அவளைப் போலவே சொல்லி, “புதுப் பொண்ணே, இப்போ என்ன அவசரம் உனக்கு? பொறுமையா வேலைக்குப் போகலாம். அது வரைக்கும் வாழ்க்கையை என்ஜாய் பண்ணு” என்றிருந்தாள்.

“ப்ச்”

“ரொம்பச் சலிச்சுக்காத ப்ரியூ. உனக்கென்ன குறை இப்போ சொல்லு? உனக்கு ரொம்பப் பிடிச்ச மிஸ் வீட்டுக்கே மருமகளா போயிட்ட. என்னைப் பாரு. ஹ்ம்ம் பார்கவிய இன்னும் பொண்ணு பார்க்க கூட ஒருத்தனும் வரல” என்று புலம்பினாள் அவள். பேச்சு எங்கெங்கோ சென்று பிரபஞ்சனை தொட்டுப் பார்த்திபனிடம் வந்து நின்றது.

“அப்போவே அந்தப் பார்த்திபனை கண்டாலே உனக்குப் பிடிக்காதுதானே ப்ரியூ? இப்போ எப்படிச் சமாளிக்கற?”

“ஹேய் பாரு, அதெல்லாம் சின்னப் புள்ளையா இருக்கும் போதுப்பா. அதுக்காக இப்பவும் அப்படியேவா இருப்போம்?”

“போ ப்ரியூ, என்னா திட்டு திட்டின அவனை? உன் தற்போதைய மாமியார் மிஸ் கிட்ட கூட அப்போ போட்டு கொடுத்தியே..”

“ஹாஹா, அது..” என்று சிரித்துக் கொண்டிருந்தவள், “அய்யோடா” என்று கத்தி நெஞ்சில் கை வைத்தாள்.

அலைபேசி பேச்சை மறந்து, “பிரபா, என்ன இந்நேரம் வந்திருக்கீங்க?” என்று ஆச்சரியத்துடன் கத்தினாள்.

அந்தப் பக்கம், “நான் அப்புறமா கால் பண்றேன் ப்ரியூ, பை” என்று சொல்லி அழைப்பை துண்டித்திருந்தாள் பார்கவி.

“பயந்துட்டியா பிரியா?” பால்கனி நிலையில் சாய்ந்து நின்று அவன் கேட்க, “பின்ன? இப்படியா திருடன் போலச் சத்தமில்லாம வந்து நிப்பீங்க?” என்று விழிகளை விரித்தாள்.

“அப்புறம் நம்ம வீட்டுக்குள்ள வர்றதுக்கு நானென்ன கத்திக்கிட்டேவா வர முடியும்?”

“பிரியான்னு கூப்பிட்டுட்டு வந்தா என்ன?” என்று அவள் முறைக்க, திரும்பி நடந்து விட்டான் அவன்.

“பிரபா, பிரபா, என்ன இந்நேரம் வீட்டுக்கு வந்திருக்கீங்க?” பட்டென எழுந்து ஓடி அவனைப் பின் தொடர்ந்தாள்.

சாவகாசமாகச் சட்டையைக் கழற்றிபடி, “ஒர்க் ஃப்ரம் ஹோம் வாங்கிட்டு வந்துட்டேன்” என்றான்.

“அப்படியா?” என்று ஆச்சரியமும், மகிழ்ச்சியுமாக விழி விரித்தவள், “ஏன்?” என்று கேட்டாள்.

மெல்லிய முறுவல் அவனிடம். அப்படியே ஓய்வறைக்குள் நுழைந்திருந்தான்.

திரும்பி வந்தவனிடம், “பிரபா பதில் சொல்லுங்க” என்று மார்பில் கைக் கட்டி நின்றாள்.

“வீட்டுக்கு வரணும்னு தோனுச்சு, வந்துட்டேன்” என்றான். அலட்டிக் கொள்ளாமல்.

அன்று முழுக்க அவன் அலுவலக வேலையில் மூழ்கியிருந்தாலும், மனைவியுடன் நேரம் செலவிட மறக்கவில்லை அவன்.

கணினியில் கண் பதித்து, “அப்புறம் பிரியா, உங்க மிஸ் கதை ஒன்னு எடுத்து விடுறது?” என்று தீவிரமாகக் கேட்டான்.

“கிண்டலா கேட்கறீங்களா?”

“ச்சே, ச்சே, இல்ல பிரியா. நீ சொல்லு” என்றான் அவள் கண் பார்த்து. பிரியதர்ஷினி பெருமையாக மாமியார் மரகதவல்லி மிஸ் பற்றிய பெருமை கதை ஒன்றை எடுத்து விட்டாள். அதைக் கேட்டவன் வெடி சிரிப்புச் சிரித்தான்.

“போங்க இனிமே உங்ககிட்ட எதுவும் சொல்றதா இல்ல நான்” என்று முறுக்கி கொண்டாள் அவள். அதற்கும் சத்தமாகச் சிரித்திருந்தான்.

“அதெல்லாம் நீ சொல்லிடுவ” என்றான்.

மாலை வீடு திரும்பிய மரகதவல்லியின் சோர்ந்த முகம் மகனின் சிரித்த முகத்தைக் கண்டதும் சந்தோஷத்தை பூசிக் கொண்டது.

மறுநாள் வெள்ளிக்கிழமை பிரபஞ்சன் அலுவலகமே செல்லவில்லை. வீட்டில் இருந்துதான் வேலைப் பார்த்தான்.

மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி கொண்டிருந்தான்.

“வீட்டு வேலைக்கு ஆள் வைப்போமா பிரியா? முன்னாடி வேலைக்கு ஆள் வச்சுருந்தோம், அம்மாவோட டைமிங்க்கு செட்டாகலன்னு நிறுத்திட்டோம்” என்றான்.

“வேலைக்கு ஆளா? இப்போ வேணாம். பின்னால தேவைப்பட்டா வச்சுப்போம்” என்றாள்.

“நான் எதுக்கும் ஏஜென்சில சொல்லி வைக்கிறேன்” என்று அவனது அலைபேசியை எடுக்கப் போனவன் தவறுதலாக மனைவியின் அலைபேசியை எடுத்திருந்தான். அவளது அலைபேசி திறந்தேயிருக்க, முதலாவதாகத் திரையில் ஒளிர்ந்த செய்தி அவன் பார்வையில் பட்டிருந்தது. அதை வாசித்ததும், “வாவ்” என்று விசிலடித்தான்.

“என்ன பிரபா?”

“கங்கிராட்ஸ் கன்டென்ட் ரைட்டர் பிரியதர்ஷினி” என்று ஆர்ப்பரித்து அவளை இழுத்தணைத்துக் கொண்டான்.

“எதுக்குப் பிரபா விஷ் பண்றீங்க?” என்று குழப்பத்துடன் கேட்டவள் கவனத்தில் தாமதமாகத்தான் அவன் சொன்னது தெளிவாகப் பதிந்தது. அவன் மார்பில் இருந்து தலையை நிமிர்த்திச் சந்தேகமாகப் புருவங்களை உயர்த்தினாள்.

அவள் விழிகளில் தொக்கி நின்ற வினாவை படித்தவன், அவளைத் தன் கையணைப்பில் வைத்துக் கொண்டே, அவளின் அலைபேசியை நீட்டி, “மெயில் வந்திருக்கு பார்” என்றான்.

அதை முழுதாகப் படித்து முடிக்கும் முன் அவள் முகம் முழுமையாக மலர்ந்திருந்தது‌‌.‌

பிரபஞ்சன் ஒரு மணி நேரத்தில் அலுவலக வேலையை முடித்து அவளை வெளியில் அழைத்துச் சென்றான்.

“கார் எடுக்கல பிரபா?”

“இல்ல, ஆட்டோல போறோம்”

“ஆட்டோவா?” அவள் புரியாமல் புதிராகக் கேட்க, “அங்க போனா உனக்கே புரியும்” என்று சொல்லி அழைத்துச் சென்றான்.

அங்குச் சென்றதும், “வாவ், வண்டி வாங்க வந்திருக்கோமா?” என்று இரு சக்கர வாகனங்கள் விற்கும் கடையை வியப்புடன் ஏறிட்டு கேட்டாள்.

அவளை அமைதியாய் உள்ளே அழைத்துச் சென்று, “மேனேஜர் இல்லையா?” என்று விசாரித்தான். அவர் வந்ததும் தன்னை அறிமுகப்படுத்தினான்.

“வாங்க சார். உங்க வண்டி ரெடியா இருக்கு” என்றார் அவர்.

“எப்டி பிரபா, நாம வந்ததும் வண்டி ரெடின்னு சொல்றாங்க?” அவள் ஆச்சர்யத்துடன் வினவ, “சார், நாலு நாளைக்கு முன்னாடியே புக் பண்ணிட்டார் மேடம்” என்றார் மேலாளர்.

அவள் பார்வை கணவனின் மேல் பதிய, புன்னகைத்தான் பிரபஞ்சன்.

ஒற்றை நாளில் அனைத்தும் அவளுக்குப் பிடித்த விதமாக வேகமாக மாறிய நெகிழ்வில் கணவனை ஏறிட்டு, “தேங்க்ஸ் பிரபா, லவ் யூ. எனக்கு இன்னைக்கு எல்லாமே நல்லதா நடக்குது” என்றாள் கண்ணில் மின்னலுடன். அவன் கோர்த்திருந்த அவள் கரத்தில் கூடுதல் அழுத்தம் கொடுத்தான் பிரபஞ்சன்.

உதட்டில் வசீகரப் புன்னகை வசீகரித்தது.‌

சரியாக ஒரு மணி நேரம் கழித்து, நடைமுறைகள் எல்லாம் முடித்து, பிரியதர்ஷினிக்கான புது வண்டியுடன் சாலையில் விரைந்தார்கள்.

அவள்தான் வண்டியோட்டி கொண்டிருந்தாள். “தேங்க்யூ பிரபா” என்று கத்தினாள். அவளின் இடையில் கைப் போட்டு, “கோவிலுக்குப் போயிட்டு வீட்டுக்குப் போகலாம்” என்றான்.

error: Content is protected !!
Scroll to Top