பிரிய பிரபஞ்சமே – 7

பிரியதர்ஷினி அலைபேசியில் ஆட்டோ பதிவு செய்யும் செயலியை திறந்து விட்டாள். அதற்கு மேல் அவள் விரல்கள் நகர மறுத்துச் சண்டித்தனம் செய்தன. கணவனுக்காகக் காத்திருக்கச் சொன்னது அவள் மனம். அதே கணம் கடந்த முறை போல வராமல் போய் விடுவானே என்று பதறவும் செய்தது.

சிறகொடிந்த பட்டாம்பூச்சி போல அவள் மனம் ஒரு நிலையில் இல்லாமல் படபடவெனத் துடித்துக் கொண்டிருந்தது. சட்டெனப் பெருமூச்சுடன் சோஃபாவில் இருந்து எழுந்து விட்டாள்.

கணவனை அழைத்து, “வருவாயா இல்லையா?” என்று கேட்டு விடுவோமா என்ற எண்ணத்துடன் அலைபேசியை எடுத்தாள். அதன் திரையில் ஒளிர்ந்த நேரத்தை கண்டதும் அவன் சென்று ஐந்து நிமிடங்கள்தான் கடந்திருந்ததை உணர்ந்தாள்.

“இன்னும் ஃபைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணி பார்ப்பேன். அதுக்குள்ள இவர் வரலன்னா ஆட்டோ புக் பண்ணி கிளம்பிடணும்” எனத் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

அவள் கையில் இருந்த கோப்பில் நேர்காணலுக்குத் தேவையான அனைத்தும் இருக்கிறதா என மீண்டும் ஒரு முறை சரி பார்த்துக் கொண்டாள். கைப்பையைத் திறந்து காரணமின்றி ஆராய்ந்தாள். அப்போதும் அவளின் பதற்றம் குறையவில்லை.

அவள் விரல் நகங்கள் அனிச்சையாகப் பற்களிடம் தங்களைக் கடிக்கக் கொடுத்தன. கூடத்தின் காற்றாடி அணைந்திருக்க அவள் முகம் முழுக்க முத்து முத்தாக வியர்வை பூத்திருந்தது.

கோபம், பதற்றம், எரிச்சல் போன்ற உணர்வுகளுடன் போராடி கொண்டிருந்தவளுக்குக் கணவனின் மேலான ஏமாற்றம்தான் மற்ற எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி முன்னே நின்றது.

“அப்போ இவருக்கு நான் முக்கியம் இல்லையா? என் விஷயம் முக்கியம் இல்லையா?” என்று யோசித்து யோசித்து மனம் சோர்ந்து போனாள். அவர்களுக்குத் திருமணமாகி முழுதாக மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை. இப்போதே அவளுக்கு முதலிடம் தராத கணவனைக் கத்தி தீர்க்கும் அளவுக்கு ஆத்திரம் மிகுந்தது.

கண்ணை மூடி, ஆழ மூச்செடுத்து, ஒரு முடிவுடன் எழுந்து நின்றாள் அவள்.

அப்பொழுது, “பிரியா” என்றழைத்தபடி சாவகாசமாக வீட்டினுள் நுழைந்தான் பிரபஞ்சன்.

நொடி பொழுதில், தன்னிச்சையாக, “அப்பாடா, வந்து விட்டான்” என்ற ஆசுவாசம் அவளுள் நிறைந்தது.

“போலாமா..” என அவன் கேட்க, பதிலே சொல்லாமல் மூச்சு வாங்க அவனை முறைத்து நின்றாள்.

“சில்ல்ல்ல் பிரியா. நான்தான் பத்து நிமிஷத்துல வந்துடுவேன்னு சொல்லிட்டுதானே போனேன்? எதுக்கு இப்படி முறைச்சுட்டு நிக்கற? வா, போலாம்” என்று அவளின் கை பிடிக்கப் போனான். அவன், “சில்ல்ல்” என்று சொன்னதும், அவன் மார்பில் சுளீரென்று அறைந்திருந்தாள்.

அவனுக்குச் சுள்ளென்று கோபம் வர, “பிரியா” என்று கடுமையாக அழைத்தான்.

“கை நீட்டாதன்னு அன்னைக்கே சொன்னேனா, இல்லையா? அதென்ன அடிக்கற பழக்கம்? ம்ம்?” அவளை நெருங்கி முகத்துக்கு நேராக ஆழ்ந்த அமைதியுடன் நிதானமாகக் கேட்டான். அந்த அமைதி அவளை அச்சுறுத்தினாலும்,

“அதென்ன என்னை எப்போ பாரு தனியா விட்டு போற பழக்கம் உங்களுக்கு?” என்று அவளும் நிதானமாகப் பதில் கேள்வி கேட்டாள்.

“இப்போ நான் உன்னை எங்க தனியா விட்டுட்டு போனேன்? பத்து நிமிஷம்னு தெளிவா சொல்லிட்டுதானே போனேன்? அதுவும் கீழ போனதுக்கு, ஏன் இவ்வளவு பெரிய சீன் கிரியேட் பண்ற பிரியா?”

“ப்ச்” என்றாள். அவன் உடலே இறுகியது. அவன் கண்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தி அவளைக் கூர்ந்தன.

“ப்ச், சாரி” என அவன் மார்பில் முட்டி, தலை சாய்த்தாள்.

ஒரே ஒரு நொடி தயங்கினான். மறுகணம் இயல்பாக அவளைத் தழுவி அணைத்து, ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தது அவன் கரம்.

“என்னைய நம்பவே மாட்டியா நீ?” கரகரத்த குரலில் கேட்டான். அவன் குரலில் கோபத்தை மீறிய ஏமாற்றம் அப்பட்டமாக வெளிப்பட்டது.

“உங்கள நம்புனதாலதான் ஆட்டோ புக் பண்ணி போகாம இங்கேயே உக்கார்ந்திருக்கேன்..”

“அப்போ ஆட்டோ புக் பண்ற ஐடியா இருந்திருக்கு உனக்கு, இல்ல?. நான் என்ன அப்படி வீட்டுக்கு வராமயே இருந்துடுவேன்னா நினைச்ச?” அவள் முகத்தை நிமிர்த்திக் கோபமாகக் கேட்டான்.

“ப்ச், உங்க ஃப்ரெண்ட்ட பார்த்தாலே என்னை மறந்துடுவீங்களே, எனக்கு முன் அனுபவம் அப்படி, என்னை என்ன பண்ண சொல்றீங்க? லாஸ்ட் டைம் உங்க பிரெண்ட்ட பார்க்க ஏன் போனீங்கன்னு ரீசன் கூட நீங்க என்கிட்ட சொல்லல. கிரிக்கெட் விளையாட போயிட்டு லேட்டா வந்ததுக்குச் சாரியும் சொல்லல. சமாதானமும் பண்ணல” என்று எதிர்பார்ப்பு தந்த ஏமாற்றத்துடன் சொன்னாள்.

ஒரு நொடி மெளனமாய் நின்றவன், “சமாதானம்தானே சிறப்பா செஞ்சுடலாம். இப்போ உனக்கு இன்டர்வியூக்கு டைமாகுது போலாம், வா” என்றான்.

அவள் கையில் இருந்த கைப்பை, ஃபைல் இரண்டையும் வாங்கிக் கொண்டு, அவள் கைப் பிடித்து முன்னே நடந்தான். அவளோ கோபத்தையும் சேர்த்திழுத்துக் கொண்டு அவனைப் பின் தொடர்ந்தாள்.

காரில் ஏறியதும் திரும்பி அவளைப் பார்த்து, சீட் பெல்ட் போட்டு விட்டான். வெடுக்கென்று வெளிப்புறமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

அவன் உதட்டில் உதித்த புன்னகையுடன் காரை இயக்கி, நகர்த்தினான்.

இரண்டாம் நிமிடம் கார் மிதமான வேகத்தில் போக்குவரத்தில் இணையவும், “சேலையூர்ல வீடு ஒன்னு விலைக்கு வந்திருக்கு, வீட்டு ஓனர் கனடால இருக்காங்களாம். பார்த்தித் தங்கச்சிக்கு அந்த வீடு ரொம்பப் பிடிச்சுருந்திருக்கு. சோ அதை வாங்குற ஐடியால அட்வான்ஸ் அமௌன்ட் கொடுத்து புக் பண்ணியிருக்கா” என்று சில லட்சங்களைக் குறிப்பிட்டான்.

அவளிடம் அதிசயமாக விளக்கம் கொடுக்கும் அவனை ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்தாள் அவள்.

“ஆனா, அந்த ஓனர் இப்போ வீட்டை அவங்க சொந்தக்காரனுக்குக் கொடுக்கப் போறதா சொல்றானாம். சரின்னு அட்வான்ஸ் பணத்தைத் திருப்பிக் கேட்டா இன்னைக்கு, நாளைக்குன்னு இழுத்து அடிக்கிறானாம். இதுனால பார்த்தித் தங்கச்சி வீட்ல பெரிய பிரச்சினையாகியிருக்கு. அவ ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகுற அளவுக்கு..” என்றான்.

“அய்யோடா.. ஏன்? அவங்களுக்கு என்னாச்சு?”

“அவதான் நெட்ல ஆட் பார்த்து அந்த வீடு விலைக்கு வருதுன்னு வீட்ல சொல்லியிருக்கா. வீடு வாங்கணுங்கற ஆசையில அவதான் எல்லா வேலையும் பார்த்திருக்கா. அதுனால இப்போ அவ புருஷன், மாமியார்னு எல்லாரும் அவளைத்தான் ப்ளேம் பண்றாங்க போல.”

“அய்யோடா, இது நல்லாருக்கே.‌ வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்க முன்னாடி அவங்களும் நல்லா விசாரிச்சுருக்கணும்ல? அவங்களுக்கு எங்க போச்சாம் புத்தி?”

“அதெல்லாம் விசாரிக்காம இருப்பாங்களா? ஓனர் சொதப்பிட்டார்.”

“இப்போ அந்தப் பணத்தை எப்படித் திருப்பி வாங்கப் போறாங்க?” மெய்யான அக்கறையுடன் அவள் கேட்க,

“எங்க ஃப்ரெண்ட் ஒருத்தன் லாயர். அவனை வச்சு ஓனர் கிட்ட பேசி பணத்தை வாங்க டிரை பண்ணிட்டு இருக்கான் பார்த்தி.” என்று அவன் சொல்லவும் தலையசைத்தாள்.

“ஆமா, இதெல்லாம் இருக்கட்டும். இப்போ எதுக்காகக் காலையிலேயே அவ்வளவு அவசரமா உங்களைப் பார்க்க வந்தார் உங்க ஃப்ரெண்ட்?” என்று கிடுக்குப்பிடி போட்டு அவள் கேள்வி கேட்கவும் தொண்டையைச் செருமினான்.

“அவர் நேரா நம்ம வீட்டுக்கு வரலாம்ல? எதுக்குக் கீழ நின்னுட்டு கால் பண்றார்? நீங்களும் ஏன் அவரை வீட்டுக்கு கூப்பிடாம கீழ போய்ப் பார்த்திட்டு வர்றீங்க?”

“எதுக்கு வீட்டுக்கு கூப்பிடணும்? அவன் வீட்டுக்கு வந்து உன்கிட்ட திட்டு வாங்கவா?” என்று கிண்டலாகக் கேட்டான்.

“அய்யோடா, நான் ஏங்க அவரைத் திட்ட போறேன்?” என்று அப்பாவியாக அவள் கேட்க அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. காரை நிறைத்தது அவனது கம்பீர சிரிப்பொலி.

அவளும் கீழுதடு கடித்துப் புன்னகைத்து, “அவர் மேல செம்ம கோபத்துல இருக்கேன்தான். அதுக்காக அவர திட்டலாம்‌ மாட்டேன். அதுவும் உங்க முன்னாடி..” என்று பவ்யமாகச் சொல்லி, தோள் குலுக்கினாள்.

“அப்போ திட்டுற பிளான்லதான் இருக்க?” என்று கேட்டுச் சிரித்தான்.

“சரி, அவர் எதுக்கு வந்தார்னு சொல்லுங்க?”

“அந்த அட்வான்ஸ் அமௌன்ட், அவன் தங்கச்சிக்கு அவன் ரெடி பண்ணி குடுத்துட்டான்”

“ஓ, சூப்பர்” என்றவள் சட்டெனச் சுதாரித்து, அவனை ஆச்சரியத்துடன் விழி விரித்துப் பார்த்தாள். அவளுக்கு அப்போதுதான் விஷயமே விளங்கியது.

“நீங்க அவருக்குப் பணம் குடுத்துருக்கீங்க” என்றாள்.

“திருப்பிக் குடுத்துடுவான் பிரியா”

“நீங்க இதைப் பத்தி ஒரு வார்த்தை கூட எங்கிட்ட சொல்லவே இல்லையே பிரபா”

“அதான் இப்போ..”

“ப்ச், இப்போவும் நீங்க சொல்லல, நானே கெஸ் பண்ணேன். அதுனால ரொம்பச் சமாளிக்காதீங்க” என்றவள், அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை.

அவளது பத்தாம் வயதில் இருந்தே அவர்களைப் பார்த்திருக்கிறாள். பிரபஞ்சன், பார்த்திபன் இருவரும் இரட்டையர்கள் போல எப்போதும் ஒட்டிக் கொண்டே திரிவார்கள். அவர்களின் நட்பு அவள் அறிந்ததே. அதனால் அதில் தலையிட விரும்பாமல் மௌனமாகி விட்டாள்.

அப்படி அவளை மௌனமாக இருக்க விடவில்லை அவன்.

“பிரியா..” என்றழைத்தான்.

அவன் மேலே விளக்கம் ஏதும் கொடுக்கும் முன், “பார்த்திபன் உங்களோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ன்னு எனக்கு ரொம்ப நல்லா தெரியும் பிரபா. அது நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தே எனக்குத் தெரியும். அதுனால அவர்கிட்ட பேசாதீங்க, அவரோட வெளில போகாதீங்க, அவருக்காக எதுவும் செய்யாதீங்கன்னு நான் உங்களுக்குக் கண்டிஷன் போட போறதில்ல. போடவும் மாட்டேன். ஆனா, அவருக்காக என்ன செஞ்சாலும் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்ங்க. என்னை அம்போன்னு விட்டுட்டு அவருக்கு இம்பார்ட்டென்ஸ் குடுத்து அவர் பின்னாடி ஓடாதீங்க. அவ்ளோதான் சொல்லுவேன்.” என்றாள் நிறுத்தி நிதானமாக.

“ஓகே, பிரியா. அம்மாக்கிட்ட எப்பவும் ஜஸ்ட் இன்ஃபார்ம் பண்ணுவேன். அப்படியே பழகிருச்சு. அந்தப் பழக்கத்துல…”

“நான் உங்கம்மா இல்ல பிரபா. வைஃப்” என்றாள் அழுத்தமாக. கண்ணைச் சுருக்கி அவனை முறைத்து, உதட்டை சுழித்தாள்.

“பொண்டாட்டியின் பத்து குணங்களும் பக்காவா பொருந்தி இருக்கு பிரியா உனக்கு” என்றான் சிரிப்புடன்.

“நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன். நீங்க சிரிக்கறீங்களா?” என்று அவள் முறைக்க, “சில்ல்ல் பிரியா” என்று அவளின் தோளில் தட்டினான்.

அப்பொழுது அவள் நேர்காணலுக்குச் செல்ல வேண்டிய அலுவலகக் கட்டிடத்தை நெருங்கிருந்தார்கள்.

உடனே அவள் இறங்க எத்தனிக்கவும் அவள் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தினான். அவளின் கையைத் தன் உள்ளங்கைகளுக்குள் பொத்தி கொண்டான்.

“ஆல் த பெஸ்ட், இன்டர்வியூ நல்லா பண்ணு, வேற எதையும் யோசிக்காத.” என்று அவள் கையை அழுத்திக் கொடுத்தான்.

“இன்டர்வியூ முடிஞ்சதும் எனக்குக் கால் பண்ணு. நான் வந்து உன்னைப் பிக் அப் பண்ணிக்கறேன்” என்று அவன் சொல்லவும், அவள் உதட்டில் கிண்டலான இளமுறுவல் தோன்றி மறைந்தது.

அவள் கைப்பை, அலைபேசி என அனைத்தையும் சரி பார்த்து எடுக்கவும், சத்தமாகச் சிரித்து விட்டான் அவன்.

“என்னை நம்ப மாட்டல்ல நீ?” அவன் கேள்விக்கு, அவளின் புன்னகைதான் பதிலானது.

காரில் இருந்து இறங்கி அவனுக்குக் கையசைத்து விடை கொடுத்து அலுவலகத்தினுள் நுழைந்தாள். அவனைத் திரும்பியும் பார்க்கவில்லை அவள்.

மனைவி அவன் பார்வை வட்டத்தில் இருந்து மறைந்ததும்தான் அங்கிருந்து காரை நகர்த்தினான் பிரபஞ்சன்.

error: Content is protected !!
Scroll to Top