அவர்கள் இருப்பது மூன்றாவது தளம். ஐந்து தளங்கள் கொண்ட சிறிய அடுக்குமாடி குடியிருப்பு அது. அவர்களது சொந்த வீடு.
பிரபஞ்சன் படிப்பு முடித்து வேலையில் சேர்ந்த முதலாம் ஆண்டு வாங்கியது.
முன்னர்ப் பிரியா இருந்த பகுதியில்தான் அவர்கள் வசித்தார்கள். அவள் கல்லூரி படிப்பிற்காகப் பெங்களூரு சென்ற போது மரகதவல்லி மிஸ் வீடு மாறியிருந்தார்கள்.
“படி ஏற முடியலையா?” என்று அவன் கேட்கவும், “என் காலு ஸ்ட்ராங்காதான் இருக்கு” என்று நொடித்தாள் அவள். சட்டெனத் திரும்பி, படக்கெனக் குனிந்து அவளைக் கையில் அள்ளினான்.
“ப்ச், கீழ விடுங்க பிரபா. நான் ஹெவியா இருப்பேன்” என்று பதறினாள்.
“டெய்லி என் வெயிட்டை நீ தாங்குற, ஒரே ஒரு நாள் உன்னைய தாங்க மாட்டேனா நான்?” நெஞ்சோடு சேர்த்தணைத்து கேட்டான்.
அவனது ஒற்றைக் கேள்வியில் முகம் சிவக்க, கூச்சத்தில் பதில் பேச வராமல் அவன் மார்பில் முட்டினாள்.
மாடிக் கதவை அடைந்தும்தான் அவளைக் கீழிறக்கி விட்டான்.
அவன் கையில் இருந்த சாவி கொண்டு கதவை திறந்து அவளை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றான்.
அவர்கள் தரையில் கால் வைத்ததும் சில்லென்று காற்று அவர்கள் மேனி தழுவி சென்றது.
வளர்பிறை நிலவு வானை நிறைத்துப் பிரகாசித்தது. இருளின் தடயமே இல்லாமல் நிலவொளி நீக்கமற நிறைந்திருந்தது.
மொட்டை மாடியின் கட்டைச் சுவரை ஒட்டிய தரை நெடுக பூப்பாதை போட்டு வைத்திருந்தார்கள் அபார்ட்மெண்ட் வாசிகள். அதற்கும் அங்கே ஆயிரத்தெட்டுக் கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால், அவ்விரவில் மலர்ந்து மணம் வீசிய மலர்களைக் காண்கையில் இதமாக இருந்தது.
நாளை நேர்காணல் இருக்கிறது, நன்றாகச் செய்ய வேண்டும். நாளை நிச்சயமாக வேலை கிடைக்க வேண்டும் என அத்தனை பதட்டத்துடன் இருந்தாள். இப்போது அவையெல்லாம் பின்னால் போய் விட, கணவனை நிமிர்ந்து பார்த்தாள்.
தண்ணீர் தொட்டி முன்னிருந்த மரப் பலகையில் அவளை அமர்த்தித் தானும் அமர்ந்தான் பிரபஞ்சன்.
“சில்ல்ல்லுன்னு இருக்கு” என்று உடல் சிலிர்த்தாள். அவன் கரம் அவள் பாதம் பற்றியது. உதட்டில் இளநகையுடன், அவள் முன் வலக்கரம் நீட்டினான்.
“சாக்லேட்டா?, குடுங்க. என் ஸ்ட்ரெஸ் குறையும்”
“சும்மா தேவையில்லாம ஸ்ட்ரெஸ், டிப்ரஷன் இந்த வார்த்தையெல்லாம் யூஸ் பண்ணாத. இதைச் சொல்றதே ஒரு ஃபேஷன் போல ஆகிடுச்சு இப்போ” என்று காட்டமாகச் சொன்னவனை முறைத்து வைத்தாள்.
அதற்காகச் சாக்லேட்டை உண்ணாமல் இருக்கவில்லை அவள். அவனுக்கும் கொடுத்தே உண்டாள்.
யாருமில்லா மொட்டை மாடி, தனிமை, இரவு, நிலவு, அது தந்த ஏகாந்தம், பூக்களின் வாசம், கணவனின் பெர்ஃப்யூம் வாசம், அவனின் பிரத்யேக வாசம், அவளது கால் பிடித்திருக்கும் அவன் கரத்தின் சூடு என உணர்வு குவியலாக வேறொரு உலகில் இருக்கும் உணர்வு அவளுக்கு.
“பிரபா, உங்களுக்குத் தெரியுமா எனக்கு நைட் டைம் மொட்டை மாடி வர ரொம்பப் பிடிக்கும்”
“அப்படியா?” என ஆச்சரியத்துடன் வினவினான். பின்னே அவர்களுக்குத் திருமணமான இத்தனை நாள்களில் அவள் மாடிக்கு வந்து அவன் பார்த்ததே கிடையாதே. துணிகளைப் பால்கனியில்தான் காயப் போடுவாள்.
இரண்டு வகை ரோஜா, சாமந்தி, அடுக்கு மல்லி, பட்டன் ரோஜா, மல்லி, புதினா என அவளுக்குச் செடி வளர்ப்பும் பால்கனியில்தானே.
“ம்ம், ஸ்கூல் படிக்கும் போது டியூஷன் முடிஞ்சு வீட்டுக்குப் போனதும் நேரா மொட்ட மாடிக்குப் போய்ப் படிக்க உக்காந்துடுவேன்”
“ம்ம். அப்போ டியூஷன்ல என்ன பண்ணுவ?”
“வேடிக்கை பார்ப்பேன்.” என்று உதடு சுழித்தவள், “எட்டு மணி வரைக்கும்தானே டியூஷன்? அப்புறம் படிக்க எவ்வளவோ இருக்கும் தெரியுமா?” என்று அவள் கேட்க, மெலிதாய் புன்னகைத்தான்.
“மிஸ், அதான் உங்கம்மா.. சாரி, அத்த எப்பவாவது டியூஷன் இல்லன்னு சொல்லிட்டு வெளில போய்ட்டாங்கன்னா கூட உங்க வீட்டு மொட்டை மாடில உக்கார்ந்து படிச்சுருக்கேன்”
“அவ்ளோ பிடிக்கும்னா இப்போ ஏன் மாடிக்கே வர்றதில்ல நீ?”
“அதுவா.. அது.. வந்து..”
“வந்துட்ட, அப்புறம் சொல்லு”
“நான் அப்போ டுவல்த் படிச்சுட்டு இருந்தேனா.. உங்க வீட்டு மொட்டை மாடில..” என்று அவள் தயங்க, “எங்க வீட்டு மொட்டை மாடில?” என்று ஆர்வமானான்.
“ஈவ்னிங் நானும் பார்கவியும் உக்காந்து படிச்சுட்டு இருந்தோமா? அப்போ… தொட்டிக்கு பின்னாடி இருந்து ஒருத்தன் வந்து தொப்புன்னு எங்க முன்னாடி வந்து குதிச்சான்” என்று விழி விரித்தாள். அவள் பாதத்தை அழுந்த பற்றியது அவன் கரம்.
“அய்யோடான்னு அலறிட்டோம். மாடி கதவு மூடியிருந்ததா.. அவன் எங்கள போக விடாம வழி மறிச்சு நின்னான். ஆள் பார்க்க வேற பெரியாளா இருந்தான். ஒரு மாதிரி பார்த்துட்டே பக்கத்துல வந்து பேசினானா. சத்தியமா பயந்துட்டோம்”
“ஏன் பயப்படணும்? கத்தியிருக்க வேண்டியதுதானே?”
“அப்போ மிஸ் கூட அதான் சொன்னாங்க. நிறைய டைம் சொல்லி இருக்காங்க. பயப்படாம கத்தி ஹெல்ப்க்கு ஆள் கூப்பிடணும்னு..”
“சரி, அந்தப் பக்கத்து வீட்டு நாய் என்ன பண்ணான் அதைச் சொல்லு?”
“அவன் பக்கத்து வீடுன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“ஏய் அறிவாளி. அன்னைக்கு நீ இருந்தது எங்க வீட்டு மொட்டை மாடிதானே?”
“அய்யோடா, ஆமால்ல. அன்னைக்கு நாங்க சத்தம் போட்டு, எங்க குரல் கேட்டு ஹெல்ப் பண்ண ஆள் வருவாங்களான்னு எனக்குச் சந்தேகமா இருந்ததா, அதுனால என்ன பண்ணேன்னா.. ப்ளூன்னு ஒரு சவுண்டு விட்டேன் பாருங்க” என்றதும் அவன் சிரித்து விட்டான்.
“எங்க ஓனர் வீட்டு நாய்” என்றான் சிரித்துக் கொண்டே.
“ஆமா, உசுர குடுத்து குரைச்சு ஊரையே கூட்டிருச்சு. உங்க ஓனர் அங்கிள் வந்து அவனைத் திட்டி துரத்தி விட்டு எங்களைக் கீழ கூட்டிட்டுப் போனார். அதுல இருந்து மாடிக்கு போகவே பயம் எனக்கு” என்றாள் உடலை சிலிர்த்து.
“டெய்லி நாம போற ரோட்ல கூடத்தான் எவ்வளவோ அசம்பாவிதங்கள் நடக்குது. அதுக்காக வெளில போகாமயே இருப்பியா நீ?”
“மிஸ், உங்கம்மா கூட அப்படித்தான் சொன்னாங்க. ஆனா, நான் அவாய்ட் பண்ணிடுறது” என்றாள்.
“உங்க மிஸ் அந்த நாயை ஒன்னும் பண்ணலயா?” என்று அவன் கேட்க, “அய்யோடா, பெரிய பிரச்னை ஆச்சே? உங்களுக்குத் தெரியாதா என்ன? நீங்களும்தானே இருந்தீங்க? பார்கவி தோள்ல கை போட்டான்னு மிஸ்கிட்ட போட்டுக் கொடுத்துட்டேன். எங்கப்பாட்ட கூடச் சொன்னேன். ஆனா, மிஸ் அவனை அடி வெளுத்துட்டாங்க போல. மறுநாள் அந்த ஆள் கால நொண்டி நொண்டிதான் நடந்து வந்தான். அவங்க வீட்டாளுங்க மிஸ்கிட்ட சண்டைக்கு வந்தாங்க.” என்று கண்ணை விரித்துக் கடந்த காலக் கதைச் சொன்னாள்.
“அப்புறம்?”
“ப்ச், தெரியாத மாதிரியே கேட்கிறீங்க. நம்ம ஏரியால ஒரு போலீஸ் இருந்தார் இல்ல. அத்த அவரை வச்சு மிரட்டி அனுப்பினாங்க.” என்றாள் பெருமையாக.
“அப்புறம் நான் அந்த ஆளை பார்க்கவே இல்ல”
“அவன் சொந்தக்கார வீட்டுக்கு வந்தவன், திருட்டுத் தண்ணியடிக்கப் பக்கத்து மாடில இருந்து நம்ம மாடிக்கு குதிச்சுருக்கான். அதுக்கு அப்புறம் உங்க மிஸ் மிரட்டலுக்குப் பயந்து இந்தப் பக்கமே வரல போல” என்று அவன் சொல்ல, “என் மாமியார் கெத்துதான் இல்ல?” என்று சிரிப்பில் பளபளத்த விழிகளுடன் வினவினாள்.
“ம்ம்ம், இனிமே அடிக்கடி மொட்டை மாடிக்கு வர்ற சரியா?”
“நீங்க வருவீங்களா?”
“ஏன் எனக்கென்ன பயம்?”
“ப்ச், என் கூட வருவீங்களான்னு கேட்டேன் மக்கே”
“வருவேன். ஆனா நான் இல்லாமலும் நீ வரணும். புரிஞ்சுதா?”
“ஓகே. டிரை பண்றேன்” என்று சொன்னவள் கையில் இருந்த சாக்லேட்டை வாயில் இட்டாள். ஒற்றைக் கரத்தால் அவள் முகம் நிமிர்த்தி நிலவொளியில் பளிச்சிட்ட அவள் கண்களில் தொலைந்தவன், அவள் இதழ்களில் புதைந்தான். இனிப்பு அவன் தொண்டையில் இதமாய் இடம் மாறியது.
“நான் மக்கா உனக்கு? இருக்கட்டும். வா, கீழ போவோம்” என்று அவளைத் தூக்கி நிறுத்தினான்.
அவளது மனநிலையும் காலநிலை போல இதமாய் மாறியிருக்க, கணவனுடன் கைக் கோர்த்தபடி கீழிறங்கினாள்.
மறுநாள் காலையில் சீக்கிரமே எழுந்து சமையல் அறையில் இருந்தார் மரகதவல்லி.
மருமகளைக் கண்டதும் காஃபி கலந்து கொடுத்தார்.
“இந்தா ரஞ்சனுக்குக் காஃபி, சமையல் நான் பார்த்துக்கறேன். நீ போய் இன்டர்வியூக்குக் கிளம்பு” என்று அவளை விரட்டினார்.
“இல்ல மிஸ், எனக்குப் பத்தரை மணிக்குதான் இன்டர்வியூ. நீங்க போய் ஸ்கூல் கிளம்புங்க. நான் சமைக்கறேன்” என்று கரண்டியை எடுத்தாள்.
“ஒரு தடவ சொன்னா கேட்க மாட்டியா நீ? போ, போய்க் கிளம்பு போ” என்று துரத்தி விட்டார்.
காலை உணவின் போது, “இன்னைக்கு நீ ஆஃபீஸ் லேட்டா போனா போதும்தானே ரஞ்சன்?” என்று மகனிடம் கேட்டார். சிரித்து விட்டான் அவன்.
“என் ஆஃபீஸ் போற வழியில தான்மா பிரியாக்கு இன்டர்வியூ. சோ, நான் அவளை ட்ராப் பண்ணிட்டு ஆஃபீஸ் போய்டுவேன்” என்றான்.
“ம்ம், சரி.” என்றார்.
அவருக்கு எட்டு முப்பதுக்குப் பள்ளி பேருந்து வந்து விடும். அதற்கு முன், “பிரியதர்ஷினி” எனச் சாமி அறை முன் நின்று மருமகளை அழைத்தார்.
“என்னங்க மிஸ்” என்று வந்தவளை, “ரஞ்சன், நீயும் வா” என்று இருவரையும் சேர்த்து நிற்க வைத்து, இருவருக்கும் திருநீறு, குங்குமம் பூசி விட்டார்.
“வேலைக்குப் போறதுதான் உன் முடிவுன்னா.. ஆல் த பெஸ்ட். இன்டர்வியூ நல்லா பண்ணு” என்றார். இப்போது அவளால்தான் அவரைப் புரிந்து கொள்ள முடியவில்லை. பிரபஞ்சன் அம்மாவை பார்த்துப் புன்னகைத்தான்.
“உங்கள ஸ்கூல்ல நான் ட்ராப் பண்றேன், வாங்கம்மா” என்று அவனே அவரை அழைத்துச் சென்று பள்ளியில் விட்டு வந்தான்.
ஒன்பது மணிக்கெல்லாம் பிரியதர்ஷினி நேர்காணல் செல்ல தயாராகி நின்றிருந்தாள்.
“போலாம் பிரியா” என்ற பிரஞ்சன், “பதட்டமாகாம ரிலாக்ஸா இன்டர்வியூ அட்டென்ட் பண்ணு” என்று அவளை இறுக அணைத்து, நெற்றியில் முத்தமிட்டு விடுவித்தான்.
அவள் கைப்பையை எடுக்க, அவன் வீட்டு சாவியை எடுத்தான். அந்நேரம் அவனது அலைபேசி ஒலியெழுப்பியது.
“சொல்லுடா பார்த்தி” என்று அவன் சொன்னதும், “அய்யோடா” என்று நெஞ்சில் கை வைத்து விட்டாள் பிரியதர்ஷினி.
“ஒரு பத்து நிமிஷம் குடு. பார்த்திக் கீழ வெயிட் பண்றான். பார்த்திட்டு வந்துடுறேன்” என்றான் அவளிடம்.
“பிரபா, பிளீஸ், பிளீஸ். நமக்கு லேட்டாகிடும்”
“ஹேய் இன்னும் நேரம் இருக்கு பிரியா. பொறுமையா போகலாம், இரு வர்றேன்”
“ப்ச், பிரபா. உங்க ஃப்ரெண்ட்ட மேல வர சொல்லுங்க பிளீஸ்”
“நான் போயிட்டு வந்துடுறேன் பிரியா. ஃபைவ் மினிட்ஸ்” என்று வெளியேறினான்.
“பிரபா பிளீஸ். திரும்பவும் அன்னைக்கு மாதிரி பண்ணிடாதீங்க” என்று அவள் கத்தியது, அவன் முதுகில் மோதியது. மின் தூக்கியில் ஏறி விட்டான் அவன்.
பிரியதர்ஷினி பதற்றத்துடன் பல்லை கடித்துப் பொத்தென்று சோஃபாவில் தலையைத் தாங்கியபடி அமர்ந்தாள். அலைபேசியை எடுத்து ஆட்டோ முன்பதிவு செய்யவா வேண்டாமா என யோசித்துக் கொண்டிருந்தாள்.