பிரிய பிரபஞ்சமே – 6 (1)

மரகதவல்லி, மருமகளை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தார். ஏனோ மகனின் பக்கமே போகவில்லை அவர் பார்வை.

பிரியதர்ஷினி விளக்கம் கொடுக்கவென நிமிர, “ம்ஹூம்” என்று அவளின் கைப் பிடித்து மறுப்பாகத் தலையசைத்தான் பிரபஞ்சன்.

“டிபிக்கல் மாமியார் மாதிரி அவளை முறைக்காதீங்கம்மா. நீங்க வேலையைப் பத்தி பேசினதும், என் மனசுல ரொம்ப நாளா இருந்ததை நான் சொல்லிட்டேன். அவ்ளோதான்” என்றான்.

மரகதவல்லி, “எனக்கு வேலைக்குப் போயே பழகிடுச்சு. இனிமே நான் வீட்ல இருந்து என்ன பண்ண போறேன்?” என்று உள்ளே போன குரலில் கேட்க, “நீங்க இனிமேதான் மா நல்லா ரெஸ்ட் எடுக்கணும். உங்களுக்குப் பிடிச்சத செய்ங்க, டிராவல் பண்ணுங்க, புக் படிங்க, டியூஷன் சென்டர் ஆரம்பிங்க. இப்படி நீங்க செய்ய எத்தனையோ இருக்கேம்மா” என்று எடுத்துச் சொன்னான்.

“இல்ல ரஞ்சன்..”

“நான் வேலைக்குப் போன இரண்டாம் மாசமே இதை உங்ககிட்ட சொல்லிட்டேன். அப்போ நீங்க எனக்குப் பதிலே சொல்லல. இப்போவாவது நான் சொல்றதை கன்சிடர் பண்ணலாம் இல்லையாம்மா?” என்று எழுந்து நின்று கேட்டான்.

“இன்னும் ரெண்டு வருஷம் போனா நானே..” என்று அவர் சொல்லி முடிக்கும் முன் இடையிட்டு, “அதெப்படிம்மா உங்களுக்கு ஒரு ரூல், எங்களுக்கு ஒரு ரூல்ன்னு மாத்தி மாத்தி பேசுறீங்க?” என்று கோபமாகக் கேட்டிருந்தான்.

“ரஞ்சன், இல்லப்பா” பரிதவிப்புடன் அவர் பேச, “நீங்க எதுவும் சொல்ல வேணாம்மா. வேலைக்குப் போறது உங்க விருப்பம்தான். நீங்க வீட்ல இருந்து ரெஸ்ட் எடுத்தா நான் ரொம்பச் சந்தோஷப்படுவேங்கறத சொல்ல நினைச்சேன், சொல்லிட்டேன். இத்தோட இத விடுங்கம்மா, பிளீஸ்” என்றான் அழுத்தமாக. முற்றுப் புள்ளி வைக்கும் அவன் வார்த்தைகளின் முன் எப்படிக் காற்புள்ளி வைப்பார் அவர்? எதுவும் பேசாமல் இருக்கையில் அமர்ந்து விட்டார்.

பத்து நிமிடங்கள் கழிந்திருக்க, “சாப்பிடலாம் மிஸ்” என்று இரவு உணவை எடுத்து வைத்தாள் பிரியதர்ஷினி.

உணவு மேஜையில் இருந்த வினாத்தாள் கட்டை அவரே ஓரமாக ஒதுக்கி வைத்தார். ஆனாலும் எழுந்திருக்கவில்லை அவர்.

“அத்த” என்று அவள் அழைத்ததும் சொடக்கிட்டது போல நிமிர்ந்து நோக்கினார்.

“சாப்பிடலாம்த்த” என்றாள். உடனே எழுந்து கை கழுவி வந்தார். அமைதியாக உண்டு எழுந்துச் சென்றார். மறுநாளுக்கான உணவு பட்டியலை அவளிடம் நீட்டவும் மறந்திருந்தார்.

பிரியதர்ஷினி, குளிர்சாதன பெட்டியை சோதித்து, அவளே முடிவு செய்து கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி போட்டு புலாவும், காலிஃப்ளவர் வறுவலும் செய்திருந்தாள். காலை உணவாகக் கத்திரிக்காய் கொத்சு, தேங்காய் சட்னி, வெண் பொங்கல்.

“பிரியாணியா செஞ்ச? சாம்பார், பொரியல்ன்னு செஞ்சிருக்கலாம் இல்ல? ஃபிரிட்ஜ்ல காய் இல்லையா என்ன?” என்று பாத்திரத்தை திறந்து பார்த்ததும் கேள்வி கேட்டிருந்தார் மரகதம்.

“இது புலாவ் மிஸ், உங்க பிள்ளைக்கு ரொம்பப் பிடிக்கும். நிறையக் காய்ப் போட்டிருக்கேன், அதுல நீங்க சொல்ற ஹெல்தியும் வந்துருச்சு”

“இல்ல பிரியதர்ஷினி, இதுல மசாலா அதிகமா இருக்கும், அவனுக்குச் செமிக்காது..” என்று அவர் சொல்லவும் அவளுக்குச் சிரிப்பு வந்தது.

உதட்டில் உறைந்த மென்னகையுடன், “அவரென்ன குழந்தையா அத்த? அதெல்லாம் நல்லாவே செமிக்கும். பிரியாணி மாதிரி நிறைய மசாலா போடாம மைல்டாதான் செஞ்சிருக்கேன்” என்றாள். அவர் முகம் தெளியவேயில்லை.

“அவருக்குப் பிரியாணி, புலாவ், தக்காளி சாதம்னு ஒன் பாட் மீல் ரொம்பப் பிடிக்கும்த்த. ஆஃபீஸ்ல சாப்பிட அதுதான் ஈசின்னும் சொன்னார். அதான் அதையே செஞ்சிட்டேன்” என்றாள்.

மகனுக்கு ஆரோக்கியமான உணவு கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே அவர் மனத்தில் எப்போதும் இருந்திருக்கிறது. அவராய் வகுத்த ஒரு வரையறைக்குள் நின்றே, அவனுக்கான உணவை கூட முடிவு செய்திடுவார்.

கீரையா? கூட்டு, பொரியல், கடையல் இவ்வளவுதான் அவர் யோசிப்பது.

ஆனால், பிரியதர்ஷினி பாலக் பன்னீர், வெந்தயக்கீரை புலாவ், வெந்தயக்கீரை உருளை வறுவல், வெந்தயக்கீரை சேர்த்த சப்பாத்தி, பாலக் கீரை சேர்த்த பராத்தா எனக் கீரையிலேயே பலவிதமாகச் செய்திடுவாள்.

இப்பொழுது, “மகனுக்குப் பிடித்தது” என்ற சொல்லின் முன் மற்றவை எல்லாமே மறைந்து போயின.

“சரி, நீ தள்ளு. நான் டிஃபன் கட்டுறேன்” என்று அவரே இறங்கி வந்தார்.

இதுதான் சமயம் என்று மனத்தைத் திறந்து பேசி விடும் முடிவில் இருந்தாள் பிரியா.

“டெய்லி என்ன சமைக்கணும்னு யோசிக்கிறதே பெரிய டென்ஷன் அத்த. இல்லையா?”

“உண்மதான்”

“வீட்ல என்ன இருக்குன்னு பார்த்து, முடிவு பண்ணி டெய்லி நானே சமைச்சுடுறேன்த்த. நீங்க இந்த டென்ஷனையும் சேர்த்து எடுக்க வேணாம். நான் வீட்ல சும்மாதானே இருக்கேன்? இந்த வேலையெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீங்க ஃப்ரீயா இருங்க” என்றாள்.

சட்டெனத் திரும்பி அவளையே கூர்ந்து பார்த்தார். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. அவளுக்கு என்னவோ பெரிய பிரச்சனையைப் பேசி தீர்த்து விட்ட நிம்மதி மனத்தில் அலை மோதியது.

சமையல் வேலை அவளுக்குச் சங்கடமாகவே இருந்தது கிடையாது. ஆனால், இதுதான் சமைக்க வேண்டும். இப்படித்தான் சமைக்க வேண்டும் என்று ஒருவர் சொல்லிக் கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் எரிச்சலாக அல்லவா இருக்கிறது.

சில தினங்கள் அவளுக்குத் தயிர் சாதம் போதும் என்றிருக்கும். திடீரென்று ஒருநாள் பருப்பு ரசம், துவையல் கேட்கும் நாக்கு. கடுப்பான மனநிலையில் இருந்தால் பிரியாணி கேட்கும், அப்போதெல்லாம் அனுமதி கேட்டு நிற்க முடியுமா என்ன? இல்லை, ஏன் சமைத்தேன், எதற்காகச் சமைத்தேன் என்று காரணங்கள் சொல்லிக் கொண்டே இருக்க முடியுமா என்ன?

எப்படியோ இதற்கு ஒரு தீர்வு கண்டாகி விட்டது என நிம்மதியுற்றாள் அவள்.

“பிரியா” பிரபஞ்சன் அழைக்கவும் அவனிடம் சென்றாள்.

அறை வாசலில் நின்று, “சொல்லுங்க, என்ன வேணும்?” என்று கேட்டாள்.

“கேட்டா குடுத்துடுவியா?”

“குடுக்க முடிஞ்சா..” என்று ராகம் இழுத்தாள். ‌அவன் கண்ணசைவில் அறைக்குள் நுழைந்து கதவடைத்தாள்.

“லேட்டாகலையா உங்களுக்கு? சாப்பிட வாங்க”

“சாப்பிடலாமே” என்று அவளைப் போலவே ராகம் போட்டு அவள் இடையில் கைப் போட்டு அவனுக்கு நெருக்கமாக இழுத்தான்.

“வெண்பொங்கல் செஞ்சிருக்கேன்”

“அதெல்லாம் வேணாம்”

“ப்ச், வேறென்ன வேணுமாம்?”

“நீ..” என்றான் ஒற்றை வார்த்தையில்.

“ப்ச்” என்றாள். அவள் உதடுகள் தானாகப் புன்னகையில் பிரிய, அதைத் தன் உதட்டால் இணைத்திருந்தான் அவன்.

“ப்ச், சொல்லாத” வன்மையாய் முத்தம் பகிர்ந்து அவளை விடுவித்தான்.

“ஆஆ” என அவள் உதடு சுழிக்க, அவன் விரல் மென்மையாக அவள் உதட்டை வருடி கொடுத்தது.

“பரணி கிட்ட இன்டர்வியூ பத்தி சொல்லணும்னு சொன்னியே, சொல்லிட்டியா?” என்று நேற்றிரவு அவர்கள் பேசியதை நினைவுப்படுத்தி அவன் கேட்க, “ம்ம், சொல்லணும். பத்து மணிக்கு மேல சொல்லிக்கலாம்னு இருந்தேன்..” என்று இழுத்தாள்.

“உங்கண்ணா ஆஃபீஸ் போறதுக்கு முன்னாடி நீ சொல்லிடுறது பெட்டர்”

“ஓகே. அண்ணாகிட்ட மட்டும் சொன்னா போதும்தானே? அம்மாப்பாகிட்டலாம் சொல்லணுமா?”

“அவங்க கிட்ட சொல்ல ஏன் இவ்வளவு யோசிக்கிற?”

“இல்ல, திரும்ப வேலை கிடைக்கலன்னா”

“ப்ச், நெகடிவ்வா யோசிக்காத பிரியா.”

“இப்போ நீங்க மட்டும் ப்ச் சொல்றீங்க? தப்பில்லையா?”

“எல்லாம் உன்கிட்டயிருந்து ஒட்டினதுதான். உனக்கே சொல்றதுல தப்பில்ல” என்றான்.

“உனக்கு நாளைக்கு இன்டர்வியூனு உங்கண்ணா பரணி மூலமா உங்கம்மாப்பாக்கு தெரிஞ்சா நல்லா இருக்காது இல்ல? அதுனால நீயே சொல்லிடு.” என்றான், அவள் முகத்தை நிமிர்த்தி. சரியெனத் தலையசைத்து அப்போதே அண்ணனை அழைத்து விவரம் சொன்னாள். அத்துடன் பெற்றோருக்கு தெரியப்படுத்தினாள்.

இம்முறை தோழி பார்கவிக்குத் தகவல் தெரிவிக்கவில்லை அவள். வேலைக் கிடைத்தால் பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் இருந்தாள்.

பிரபஞ்சன் அன்று மாலை வீடு வந்ததும், “நாளைக்கு இன்டர்வியூக்கு ரெடியா பிரியா?” என்று கேட்டு, படுக்கையைப் புன்னகையுடன் பார்த்தான். மறுநாள் எதை உடுத்துவது என்ற குழப்பத்தில் ஐந்தாறு உடைகளை அங்கே பரப்பி வைத்திருந்தாள் அவன் மனைவி.

அவை எல்லாவற்றையும் அள்ளியெடுத்து, மடித்து, அலமாரியில் அடுக்கினான்.

“என்ன பண்றீங்க பிரபா?”

“வெயிட் பண்ணு” என்றவன், அவளுக்கான உடையை அவனே தேடி எடுத்துத் தந்தான்.

“நீங்க எடுத்து கொடுத்த டிரஸ்”

“ம்ம், வியர் இட் வித் கான்பிடன்ஸ்” என்று கண் சிமிட்டினான்.‌

“குடு, நான் ஐயர்ன் பண்ணித் தர்றேன்” என்று அதையும் அவனே செய்து கொடுத்தான்.

“அப்பப்போ ரொம்பப் பொறுப்பான புருஷனா நடந்துக்கறீங்களே பிரபா?”

“ஓஹோ? பிரபா, எப்போ பொறுப்பா இல்லையாம்?”

“ம்ம்ம், அதிருக்கு பெரிய லிஸ்ட். என்னை ஹோட்டல்ல தனியா விட்டுட்டு ஃப்ரெண்ட் பார்க்க போறது. ஒரு வாரத்துக்கு முன்னாடியே விருந்துக்குப் போகணும்னு சொல்லியிருந்தா, சரியா அன்னைக்குன்னு பார்த்துக் கிரிக்கெட் ஆட போறது. இதெல்லாம் எதுல சேர்த்தி மிஸ்டர் பிரபஞ்சன்? இதுக்கெல்லாம் இன்னும் நீங்க சாரி சொல்லல வேற. நான் கோபமாதான் இருக்கேன், ஞாபகத்துல வச்சுக்கோங்க” என்று மார்பில் கைக் கட்டி அவள் சொல்ல, “ஞாபகத்துல வச்சுக்கவா? எதையும் மறக்கற பழக்கமே கிடையாதா உனக்கு?” என்று காட்டமாகக் கேட்டான்.

“ம்ஹும், அவ்வளவு ஈசியா எதையும் மறக்க மாட்டேன்” என்றாள் திமிரும், தெனாவெட்டுமாக.

“யாரு நீயி? மறக்க மாட்ட?” என்று கேட்டு நக்கலாகச் சிரித்தவன், “எதையும் மறக்க மாட்ட, ஆனா என்னை மறந்துடுவ” என்று முணுமுணுத்தான்.

“என்ன சொன்னீங்க, கேட்கல?”

“இல்ல, எட்டு வருஷமா தினமும் பார்த்த என்னையவே மறந்துட்டு.. பேன்னு முழிச்சுட்டு நின்னவதானே நீ” என்றிருந்தான். அவள் முகம் மாலை நேர ரோஜாவாக வாடியது.

அவன் குரலில் என்ன இருந்தது? கோபமா, வருத்தமா? ஏமாற்றமா? இல்லை வேறெதுவுமா? அவளால் துல்லியமாகப் பிரித்தறிய முடியவில்லை. ஆனால், அதை அவன் நக்கலாக மட்டுமே சொல்லவில்லை என்பது நிச்சயம்.

கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து அவனைப் பார்க்கையில், அவளுக்குச் சட்டென அடையாளம் தெரியாமல் போனதில் தவறேதும் இல்லையே.

“அது.. உங்கள அப்பாவோட பார்க்கவும்.. குழம்பிட்டேன். அன்னைக்கு மழையில் தொப்பலா நனைஞ்சு வேற வந்திருந்தீங்களா, அதான் உங்க முகத்தை சரியா கவனிக்கல” என்றாள் தடுமாற்றத்துடன்.

பல வருடங்கள் கழித்து அவர்களின் சந்திப்பு நிகழ்ந்த நாள் அது. அதைத் தொட்டுதான் அவர்களின் திருமணமும் முடிவானது. ஆனால், ஏனோ இன்று வரை அதைப் பற்றி அவர்கள் பேசிக் கொள்ள நேர்ந்ததேயில்லை. அவளே ஆரம்பித்தாலும் அவன் தவிர்த்து விடுவான்.

இப்போதும், அவனிடமிருந்து பதிலே வரவில்லை.

தான் செய்து கொண்டிருந்த வேலையை முடித்தவன், “வா, வெளில போயிட்டு வரலாம்” என்றான்.

“இப்பவா?”

“அப்புறம் நாளைக்குப் போகவா இப்போ கூப்பிடுவேன்?”

“ப்ச், இல்ல பிரபா. அத்தைக்கு டின்னர் குடுக்கணும்” என்றாள்.

“உங்க அத்த என்ன குழந்தையா? அவங்களே போட்டு சாப்பிட்டுப்பாங்க. வா போலாம்” என்றழைத்தான்.

“இருங்க, அத்தைக்கிட்ட சொல்லிட்டு வர்றேன்”

“நான் சொல்லிக்கறேன். நீ வா” என்று அவளின் கைப் பிடித்து இழுத்தான்.

“இருங்க பிரபா. இப்படியேவா? ட்ரெஸ் சேஞ்ச் பண்ண வேணாமா?”

“வேணாம்”

“ஓ, நைட் ட்ரஸ்ல வெளில போனா அத்த திட்ட போறாங்க”

“அவங்க திட்டுறதுக்கு முன்னாடியே நீ பில்ட் அப் குடுக்காம வா தாயே” என்று அவளின் இடையில் கை கோர்த்து இழுத்துச் சென்றான்.

இருவரையும் ஒன்றாகப் பார்த்த மரகதவல்லி கேள்வியாகப் புருவம் உயர்த்தினார். அவர் முன் மாணவர்கள் அமர்ந்திருக்க, வேகமாகக் கணவனின் கையை விலக்கினாள்.

“நாங்க ஒரு டிரைவ் போயிட்டு வர்றோம்மா” அவளை முந்திக் கொண்டு அவன் சொல்லி விட்டான்.

“நாங்க வர லேட்டானா, எங்களுக்காக வெயிட் பண்ணாம நீங்க சாப்பிட்ருங்கம்மா”

“சரிப்பா” என்றார் அவர்.

“சப்பாத்தி ஹாட் பாக்ஸ்ல இருக்கு மிஸ்” என்றவள், நாக்கை கடித்து, “பருப்பும், தக்காளி தொக்கும் செஞ்சிருக்கேன்த்த. எங்களுக்காக வெயிட் பண்ணாம நீங்க சாப்பிடுங்க” என்றிருந்தாள்.

“சரி, நான் சாப்பிட்டுக்கறேன். எனக்காக யோசிச்சு அரக்க பரக்க வராம பொறுமையா வாங்க” என்றார் புன்னகையுடன்.

சரியெனத் தலையசைத்து கணவனுடன் நடந்தாள்.

“இந்நேரத்துக்கு எங்க போறீங்கன்னு கேட்பாங்கன்னு நினைச்சேன்..” என்று அவள் கணவனின் முகம் பார்க்க, “எங்கம்மா டீச்சர்தான். அதுக்காகக் கேள்வி கேட்டுட்டே இருப்பாங்களா உனக்கு?” என்று எகிறினான்.

“அய்யோடா, அம்மாவ சொன்னதும் கோபம் வருதா உங்களுக்கு?”

“இதுக்குப் பேர் கோபமா உன் அகராதியில? சிறப்புப் பிரியா” என்று கேலியாகச் சிரித்தான்.

அவள் மின் தூக்கியை நோக்கி நடக்க, “இப்படி” என்று படிக்கட்டுப் பக்கம் அழைத்துச் சென்றான்.

“லிப்ட்ல போலாம் பிரபா”

“மாடிக்கா?” என்று புருவம் உயர்த்தினான்.

“மாடிக்கா போறோம்? வெளில போறோம்னு சொன்னீங்க?” ஏமாற்றத்துடன் கேட்டாள்.

“வீட்ட விட்டு வெளில வந்துட்டோம்ல?”

“அய்யோடா, முடியல. ப்ச்” என்றாள். சட்டெனத் திரும்பி அவளை முறைத்தவன் கண்கள், லேசர் பார்வையுடன் அவள் உதட்டில் பதிந்தன.

“சாரி, ப்ச் சொல்லல இனிமே” என்று கண்ணைச் சுருக்கி கெஞ்சலாக அவள் சொல்ல, “ம்ம்ம்ம்” என இறங்கி வந்தான்.

error: Content is protected !!
Scroll to Top