அவளின் அம்மா ராதா வேலைக்குச் சென்றாலும், அவர்களுக்குப் பாசத்தில் குறை வைத்ததில்லை. அவரின் கவனிப்பு எப்போதும் அவர்கள் மேலிருக்கும். அன்றாடம் பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கேட்டறிந்து கொள்வார். விடுமுறை நாள்களில் குடும்பமாக, பூங்கா, கடற்கரை, கோவில், உறவினர் வீடு என வெளியே செல்வார்கள்.
சற்றே நீண்ட விடுமுறை என்றால் திட்டமிட்டு வெளியூர் சுற்றுலா செல்வார்கள். அம்மா எப்போதும் அவர்களுக்காக இருந்திருக்கிறார். இன்றைக்கும் இருக்கிறார்.
ஏனோ அவளால் மாமியாரின் வாதத்தை ஏற்க முடியவில்லை. அதிலும் அவர் ஆசிரியர். அவரின் தற்போதைய நடவடிக்கை அவளுக்கு மிகுந்த ஏமாற்றம், வருத்தம் அளித்தது.
அவர், “எனக்கு ஸ்கூலுக்கு டைமாச்சு” என்று சொல்லி வெளியேறினார்.
இன்றும் இவருக்கு வேலை முக்கியம். ஆனால், மருமகள் மட்டும் வேலைக்குச் செல்ல கூடாது.
“உங்களுக்கு அவ்ளோ அக்கறையும் கில்ட்டும் இருந்தா, இப்போ வேலையை விட்டுட்டு வீட்ல இருந்து உங்க பிள்ளையைப் பார்க்க வேண்டியதுதானே மிஸ்” என்று தன் போக்கில் புலம்பிக் கொண்டே சமையலை முடித்தாள்.
காலை உணவின் போது மரகதவல்லி அவளிடம் பேசவேயில்லை. அவளும் அப்படியே இருந்து கொண்டாள்.
அன்று மாலை அவருக்கு டியூஷன் வகுப்பு முடிய எட்டு மணியாகி இருந்தது.
உடனே அறைக்குள் சென்று முடங்கி விட்டார் அவர்.
இரவு சமையலை முடித்தவள் சோர்வுடன் சோஃபாவில் சரிந்து தொலைக்காட்சியை உயிர்பித்தாள்.
படுக்கை அறையில் கிடந்த துவைத்த துணி மூட்டையை அள்ளி கொணர்ந்து கூடத்து நாற்காலியில் போட்டு, அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்து துணிகளை மடிக்கத் தொடங்கினான் பிரபஞ்சன்.
அந்நேரம் வெளியே வந்தவர், அவளை முறைத்துக் கொண்டே தண்ணீர் குடித்தார்.
“நீங்க துணி மடிச்சா, என் பிள்ளை எப்படிப் பொறுப்பா பொண்டாட்டிக்கு ஹெல்ப் பண்றான்னு உங்கம்மா பெருமையா ஃபீல் பண்ணணும். அதை விட்டுட்டு என்னை முறைக்கறாங்க” என்று கணவனிடம் முணுமுணுத்தாள். சோஃபாவில் சரிந்து கால் நீட்டி வசதியாகப் படுத்திருந்தாள். அவள் பாதங்கள் பிரபஞ்சனின் தொடையில் ஓய்வெடுத்து கொண்டிருந்தன.
அவன் கண்கள் குறும்பு சிரிப்பில் பளபளத்தன. சிரிப்பை அடக்கியதில் மீசை துடிக்க, கன்னங்கள் உப்பியிருக்க, “என் மேல கோபமா இருக்க நீ” என்று அவளுக்கு நினைவுப்படுத்தினான்.
“ஆமால்ல?” என்று சொல்லி வேகமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவன் சத்தமாகச் சிரிக்கவும், “ப்ச்” என்றாள் கோபமாக. ஆனால், எங்கே? செல்லச் சலிப்புதான் வெளிப்பட்டது.
“அந்த ப்ச் சொல்றதுக்கே அந்த லிப்ஸ் என்கிட்ட பெருசா பனிஷ்மென்ட் வாங்க போகுது” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாகக் கிசுகிசுத்தான்.
“டீச்சர் புள்ளைன்னு ப்ரூஃப் பண்ணாதீங்க” என்றாள் கிண்டலாக. அதற்கும் சிரித்தான்.
பள்ளி வேலையை உணவு மேஜையில் அமர்ந்து பார்க்க தொடங்கினார் மரகதவல்லி.
அதைக் கண்டு அவள் வேகமாக எழவும், “ம்ம், படு” என்று அவளின் தோளில் கை வைத்து அழுத்தினான்.
துணிகளை மடித்து முடித்திருந்தான்.
“ஒரு கணம் ஆகிலும் உனதருள் பார்வை கிடைத்திட வேண்டி நின்றேன்..” என்று தொலைக்காட்சியில் இளையராஜா இசைத்துக் கொண்டிருந்தார்.
“ஊன் மெழுகாயினும் உள்ளம் உருகாதோ, உனதடி நான் பணிந்தேன் தேவி..” பாடலை முணுமுணுத்தவாறே அவள் பாதம் பற்றினான். இசையிலும், அவனது வசீகரிக்கும் குரலிலும் லயித்திருந்தவள், “ப்ச், கைய எடுங்க” என்றாள்.
“எடுக்க முடியாது. உனக்கென்ன பிரச்சனை?”
“அது என் காலு”
“இப்போ என் ப்ராப்பர்ட்டி. தாலி கட்டி பட்டா போட்டிருக்கேன். பாதத்துல படுத்து கூடத் தூங்குவேன். நீ கேள்வி கேட்க முடியாது” என்று கிசுகிசுத்தான். அவளோ தலையைத் திருப்பி மரகதவல்லியை பார்த்தாள்.
“அம்மா பேப்பர் கரெக்க்ஷன் பண்ணும் போது பேயே வந்தாலும் கவனிக்க மாட்டாங்க” என்றான் நமுட்டு சிரிப்புடன்.
“ப்ச்”
“ப்ச், சொல்லாத” என்று எரிச்சலுடன் சொல்லி அவள் பாதத்தை அழுந்த பற்றினான்.
“ஆ, பிரபா” என்று காலை உதறி சிணுங்கினாள்.
“கிஸ் பண்ணா மட்டும் கம்முன்னு இருக்க?” என்று கண் சிமிட்டி கேட்டு, அவன் முத்தமிடுவது போல உதடு குவிக்க, வெடுக்கென்று காலை உருவி கொண்டாள்.
“எப்போ பாரு என் காலை பிடிச்சுட்டு ஃபர்ஸ்ட் போய்க் கையைக் கழுவுங்க.”
“நீ வந்து ஹெல்ப் பண்றது?”
“உங்களால எப்போ பாரு நான் காலை தேய்ச்சு தேய்ச்சு கழுவ வேண்டியதா இருக்கு. மாஸ்ட்டுரைசர் போட கூட மறந்துடுறேன். ஆனா மறக்காம நாள் பூரா காலுக்குச் சானிடைசர் போட்டுட்டு சுத்துறேன்” என்று புலம்பினாள்.
“அப்போ எப்பவும் ரெடியா இருக்கன்னு சொல்லு”
அவள் அதிர்ந்து தலையை நிமிர்த்தி, “என்னது?” என விழிகளை விரித்தாள்.
அவளின் எதிர்வினை கண்டு பக்கெனச் சிரித்து விட்டான்.
மரகதவல்லியின் தலை லேசாக உயர்ந்தது. கண்ணாடியை இறக்கி ஒரு கணம் மகனை பார்த்து, புன்னகையின் சாயலே இல்லாத புன்னகையுடன் மீண்டும் பேப்பரில் மூழ்கினார்.
“ப்ச், பிரபா”
“நான் பாதம் பிடிக்கறதுக்குச் சொன்னேன். உன் கற்பனை கண்டமேனிக்கு போகுது போலயே” குறுநகையுடன் அவன் வினவ, சோஃபாவில் தலையை அழுத்தி, அலைபேசி கொண்டு முகத்தை மூடி கொண்டாள். அவனோ நிறுத்தாமல் சிரித்துக் கொண்டிருந்தான். அப்போதும் அவன் கரம் அவள் பாதத்தில்தான் பதிந்திருந்தது.
பிரியதர்ஷினி தீவிரமாக அலைபேசியைப் பார்த்திருக்க, “பிரியா போனை சரியா பிடி” என்று வேண்டுமென்றே கேலி செய்தான். நேராகப் பிடித்திருந்த அலைபேசியைத் தவற விட்டுத் தவறுதலாக மாற்றிப் பிடித்து அவனை முறைத்தாள்.
அவனோ உல்லாச மனநிலையில் இருந்தான் போலும். அப்படியொரு சிரிப்பு அவனுக்கு.
“உனதடி நான் பணிந்தேன் தேவி” என்று அவளைச் சீண்டவெனவே பாடினான்.
அந்நேரம் அவளது அலைபேசியில் அறிவிப்பொலி வரவும், வேகமாக அதைத் திறந்து நோக்கினாள். அன்று மாலையில் இருந்து வந்த குறுஞ்செய்திகள், சமூக வலைதளச் செய்திகளை நோட்டமிட்டாள்.
அவள் கண்கள் சட்டெனத் தீவிரமாகின.
இரண்டு மணி நேரத்திற்கு முன்பு வந்திருந்த இமெயிலை ஆவலாகத் திறந்தாள். அதை வாசித்ததும் ஆச்சரிய அதிர்ச்சி அடைந்தாள்.
“பரணி அண்ணா ரெபர் பண்ண கம்பெனியில இருந்து இன்டர்வியூ கால் வந்திருக்கு பிரபா” மகிழ்ச்சியில் அவள் குரல் உயர்ந்து விட்டது.
அவள் பாதத்தில் மென்மையாய் அழுத்தம் கொடுத்து, “அப்படியா? சூப்பர்ப்ப்” என்றான்.
“ரெண்டே நாள்ல இன்டர்வியூ பிரபா”
“போகலாம், போகலாம்” என்றான்.
“ஆனா, இந்த வேலைக்கு நான் அப்ளை பண்ணவே இல்லையே? அப்புறம் எப்படி எனக்கு இன்டர்வியூ கால் வந்திருக்கு?” என்ற கேள்வியுடன் புருவம் சுருக்கினாள். மரகதவல்லி அவளுக்குக் கொடுத்த மண்டை குடைச்சலில் அவளுக்கெங்கே வேலைக்கு விண்ணப்பிக்க நேரமும், மனமும் வாய்த்தது?
“நான் பரணி அண்ணாகிட்ட என்னன்னு கேட்கறேன்” அவசரமாக எழுந்து அமர்ந்து அண்ணனை அழைக்கப் போனாள்.
“பிரியா, நான்தான் அப்ளை பண்ணேன். அவர்கிட்ட கேட்காத” என்றான் பிரபஞ்சன்.
உணவு மேஜையில் இருந்து தண்ணீர் குவளை சத்தமாகக் கீழே உருண்டது. இருவரும் பட்டென்று திரும்பி பார்க்க, மரகதவல்லி மருமகளைப் பார்வையால் கூறு போட்டுக் கொண்டிருந்தார்.
“நீ இன்டர்வியூ மெயிலுக்கு ரிப்ளை போடு பிரியா” என்று தீவிரமாக அவளிடம் சொன்னான் அவன்.
“என் வார்த்தைக்கு இந்த வீட்ல மதிப்பே இல்லாம போச்சு” என்று மரகதவல்லி சொல்ல, “ம்மா, இந்த வயசுல நீங்க ஏன் தொண்டை வலிக்கப் பாடம் எடுக்கிறீங்க? எதுக்காக நாள் முழுக்கக் கால் வலிக்க ஸ்கூல்ல நிக்கறீங்க? நான் உங்களைப் பார்த்துக்க மாட்டேனா? இனி மேலாவது உங்களுக்கு ரெஸ்ட் வேணாமா?” என்று அம்மாவிடம் கேட்டிருந்தான் அவன்.
“இப்போ நீ என்ன சொல்ல வர்ற ரஞ்சன்?”
“உங்களை ரெஸ்ட் எடுக்கச் சொல்றேன்ம்மா. அவ்ளோதான். எனக்காக நீங்க ஓடினது போதும். இனிமே நான் உங்களைப் பார்த்துப்பேன்னு நம்பினா, அதுக்கேத்த முடிவெடுங்க” என்று முடிவாகச் சொல்லி விட்டான்.
மரகதவல்லியின் முகம் நவரசத்தையும் காட்டியது. வேகமாக எழுந்து மேஜையைப் பற்றி நின்றார் அவர்.
‘இதெல்லாம் உன் வேலை தானே?’ என்று அவர் கண்கள் மருமகளைக் குற்றம் சாட்டின.
“நாலு நாள் கழிச்சு இன்னைக்குதான் உங்க பிள்ளைக்கிட்ட நான் பேசியிருக்கேன். என்னைப் போய் நீங்க சந்தேகப்படலாமா?” என்று பாவமாகப் பார்த்திருந்தாள் பிரியதர்ஷினி.