அவன் கண்கள் அவளைக் கண்டனத்துடன் கூர்ந்தன.
அங்கே கட்டில் இருக்கப் போய்த் தப்பித்தான். இல்லையென்றால் கீழே விழுந்திருப்பான் கணவன் என்பதை உணர்ந்ததும், “சாரி” என்றாள் பிரியதர்ஷினி.
படக்கென்று அவளைப் பிடித்திழுத்தான் பிரபஞ்சன்.
“இதென்ன புதுசா கை நீட்டுற பழக்கம் பிரியா?”
“சாரி” என்றாள் மறுபடியும். சில நிமிடங்கள் அவளையே பார்த்தது பார்த்தபடி நின்றிருந்தான். அவளுக்குத்தான் பேரவஸ்தையாய் இருந்தது.
“பிரபா, நான் கோபத்துல தெரியாம..” என்று அவள் சொல்ல ஆரம்பிக்கும் போதே இறுக்கமான முகத்துடன் அவளை முறைத்தான். அவள் வார்த்தைகள் அப்படியே தடுமாறி பாதியில் நின்றன.
அவள் மனத்தில் இருந்த குமுறலை அப்படியே கொட்டி விட வேண்டும் போலிருந்தது அவளுக்கு. ஆனால், திருமணமாகி இத்தனை நாள்களில் அவனிடம் சண்டையிட்டதே கிடையாது. அதற்காகப் பிரச்சினைகள், வேறுபாடுகள், சச்சரவுகள், வாக்குவாதங்கள் வராமல் இல்லை. ஓரளவு அதைச் சுலபமாகக் கையாண்டு விட்டிருந்தாள். என்னவோ கண்ணாடி தரையில் நடப்பது போன்ற கவனம் அவளிடம். அதைக் கை விடுவதற்கும் தயக்கமாக இருந்தது.
அவன் கரம் அவள் மேலிருந்து விலகியது. அவனும் விலகி, பால்கனிக்குச் சென்றிருந்தான்.
இரவு முழுமையாய்க் கவிழுந்திருந்தது. பிரியதர்ஷினி படுக்கைக்குச் சென்ற பிறகும் அவன் அறைக்குள் வரவில்லை.
அவளின் கோபம் அவளை இறங்கி செல்ல விடவில்லை.
“பொண்டாட்டிய விடப் பால்கனி சில்ல்லுன்னு இருக்கும். அங்கேயே தூங்குங்க” என்று முணுமுணுத்துக் கண் மூடினாள். அவளுக்குத் தூக்கம் வந்தால்தானே? என்னவோ மனத்தில் ஒருவித அலைக்கழிப்பு.
திருமணமாகி இத்தனை நாள்களில் அவர்கள் இடையே இடைவெளியே இருந்தது கிடையாது.
இப்போது இந்த இடைவெளி இடைஞ்சலாக இருந்தது.
“தப்பு பண்ணது இவர், சாரி சொல்றது நானு. இதுல பேசாம போய்ப் பால்கனில உட்கார்ந்தா.. போய்யா..” என்று அவனைப் புறக்கணித்து விட்டு உறங்கி விட்டாள்.
நள்ளிரவில் அறையின் குளிர் கூட, உடலை குறுக்கி சுருண்டு படுத்தாள். பின்னிருந்து அவளைக் கதகதப்பாக அணைத்த கரம், அவளுக்குக் கம்பளியை போர்த்தி விட்டது.
அவன் புறமாகப் படக்கெனத் திரும்பியவள், “ப்ச்” என்றாள். அவள் விலக முயல்வாள் என்பதை உணர்ந்தது போல அவசரமாக அவளை இறுக்கி தன்னோடு சேர்த்தணைத்தான். மெல்ல அவன் கரம் அவள் முதுகை, “தூங்கு” என்பதாகத் தட்டி வருடியது. அவன் அணைப்பில் இருந்தவாறே ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்திருந்தாள் அவள்.
விடிந்ததும் அவன் முகம் பார்த்து பேசவில்லை அவள். அவனும் அலட்டிக் கொள்ளவில்லை. இருவரும் மற்றவருக்குத் தேவையானதை மறக்காமல் செய்தார்கள்.
அவன் அலுவலகம் தயாராக உதவினாள். அவனது உடை, உடைமைகள் என அனைத்தையும் எடுத்து வைத்தாள். மதிய உணவும் நீட்டினாள்.
அவன் காலை உணவுண்ணும் போதே அவளை வலுக்கட்டாயமாக அமர்த்தி அவனோடு உண்ண செய்திருந்தான்.
இவர்களுக்குள் இந்த நாடகம் ஓடிக் கொண்டிருக்க, மரகதவல்லி அவளிடம் பேசவேயில்லையே.
இரவு என்ன சமைக்க வேண்டும் என்ற பட்டியலை நீட்டவில்லை அவர். காலை, மதியத்திற்கு என்ன சமைக்கப் போகிறாள் எனக் கேட்கவும் இல்லை. அவள் சமைத்து வைத்ததைச் சாப்பிட்டார். மதிய உணவை கேள்வி கேளாமல் வாங்கிச் சென்றார்.
அவர்கள் இருவரும் சென்ற பிறகு அவளுக்கு வீடு வெறுமையாகக் காட்சி தந்தது. தனிமை மென்னியை நெரித்தது.
பிரபஞ்சன் அலுவலக நேரத்தில் அவ்வப்போது அவளை அழைத்துப் பேசுவான். இன்று வெறும் குறுஞ்செய்தி மட்டுமே வந்தது.
முதலில் கோபத்தில் பதில் அனுப்பாமல் இருந்தவள், பிறகு ஒற்றை வரியில் பதில் அனுப்பி வைத்திருந்தாள்.
அன்று மாலையும் மூவருக்கும் நடுவில் சீனப் பெருஞ்சுவராக மௌனம் நீண்டிருந்தது. மரகதவல்லி இருவரையும் ஆராய்ச்சியாகப் பார்த்தாலும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
அன்றிரவும் அவர்களின் ஊடல் தொடர்ந்தது.
மனைவி தன்னை மறுக்க மாட்டாள் என அவனுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் அவளை அணுகவில்லை அவன்.
“போய்யா” என்று ஓரமாகப் படுத்தவள், விடியலில் அவன் மார்பில் முகம் பதித்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
கணவனிடம் பேசாமல், சிரிக்காமல், வாக்குவாதம் செய்யாமல் இருப்பதே அவளுக்கு வெறுப்பாய், வெறுமையாய் இருந்தது.
முழுதாக இரண்டு நாள்களைக் கூட அவளால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
“என் மேல தப்புன்னதும் அவர்கிட்ட, நான் சாரி சொன்னேன் இல்ல? அவர் சொன்னாரா? அவர் சாரி சொன்னாதான் நான் பேசுவேன். அதுவரைக்கும் இப்படித்தான் மௌன விரதம் இருப்பேன்” என்று முடிவெடுத்து முகம் தூக்கி வைத்து திரிந்தாள்.
“பிரியா, உனக்குக் காஃபி போடவா?” அன்று மாலையே இயல்பாக அவளிடம் பேசி விட்டான் பிரபஞ்சன். அவளின் பதிலை எதிர்பாராமல் அவளுக்கும் சேர்த்து காஃபி கலந்து கொடுத்தான். எப்போதும் போல இயல்பாய் அவளை நெருங்கி அமர்ந்து அவள் பாதம் பிடித்து வருடினான்.
அவளின், “ப்ச்” என்ற சலிப்பு அவனுக்கு இப்போது சலிப்பூட்டவேயில்லை போலும்.
அவனிடம் பேசாமல் இருப்பது அவளுக்குப் பெரும் மன உளைச்சலை தந்தது.
“பேசி விடு, சிரித்திடு” என்று தூண்டிய மனத்தை அடக்கியே வைத்திருந்தாள்.
பிரபஞ்சனிடம் அவள் பாராமுகம் காண்பிக்க, அதையே அவளுக்குச் செய்தார் மரகதவல்லி. இரண்டு நாள்கள் பொறுத்தவள், மூன்றாம் நாள் காலையில் அவளே பேசி விட்டாள்.
“அத்த” என்றழைத்தாள்.
“என்ன பிரியதர்ஷினி?”
“என்கிட்ட பேசிட்டீங்க” என்று பல்லை காட்டினாள். அவரும் மெலிதாய் முறுவலித்தார்.
“ஆமா, பேசிட்டேன். நீ வேலையைப் பாரு” என்று சமையலில் அவளுக்கு உதவினார்.
“பாவக்காயா செய்யுற? எப்போ வாங்கிட்டு வந்த? பிரபஞ்சனுக்குப் பிடிக்கவே பிடிக்காதே” என்று அவர் சொல்லவும், “நீங்கதான் எதையும் ஒதுக்காம சாப்பிடணும்னு சொல்லி இருக்கீங்களே மிஸ்” என்று அவரின் பாடத்தை அவருக்கே திருப்பிப் படித்தாள். ஆனால், அவர் திருப்பி அடித்ததாக எடுத்துக் கொண்டார் போலும்.
“வர வர நீ என் பேச்சையே கேட்கிறது இல்ல” என்று குற்றம் சாட்டினார்.
“நான் எப்போ மிஸ்..”
“எப்போவா? வேலைக்குப் போகாத, வீட்ல இருன்னு படிச்சு படிச்சு சொல்றேன். நீ மண்டையிலயே ஏத்திக்க மாட்டேங்குற”
அவரின் அந்தத் தொனியே மிரட்டுவதாக இருந்தது.
“இல்ல மிஸ். உங்க பேச்சை கேட்க கூடாதுன்னு இல்ல. எனக்கு வேலைக்குப் போகப் பிடிச்சிருக்கு. எங்கம்மாவை பார்த்து வளர்ந்தவ நானு. எனக்கும் அவங்களைப் போல, உங்களைப் போல வேலைக்குப் போகணும்னு ஆசை இருக்காதா மிஸ்? நான் உங்ககிட்ட படிக்கும் போது நீங்களே என்னை வேலைக்குக் கட்டாயமா போகணும்னு சொல்லி இருக்கீங்க. ஒரு பொண்ணுக்கு வேலை, சொந்த கால்ல நிக்கிறது எவ்வளவு முக்கியம்னு சொல்லி தந்திருக்கீங்க..”
“நான் சொன்னேன்தான், ஆனா அப்போ நீ என் ஸ்டூடண்ட் மட்டும்தான். என் மருமக இல்ல”
“மருமகள்ன்னா ரூல்ஸ் மாறிடுமா என்ன மிஸ்?” தைரியமாகக் கேட்டு விட்டாள். அப்படியே சமையல் மேடையில் சாய்ந்து நின்று அவளைப் பார்த்தார். அவளும் அடுப்பை குறைத்து வைத்தாள்.
“உங்கம்மா பத்தி எனக்குத் தெரியாது. ஆனா நான் வேலைக்குப் போக ஒரு காரணம் இருந்தது. கட்டாயமா வேலைக்குப் போக வேண்டிய நிர்பந்தம் எனக்கு இருந்தது, வேலையும் அதன் மூலமா வர்ற வருமானமும் எனக்கு அவசியமா இருந்தது. உனக்கு அப்படி எதுவும் இருக்கா என்ன?”
“மிஸ் அதுக்காக நான் வீட்ல இருக்கணும்னு சொல்றது எப்படி நியாயம்..”
“பிரியதர்ஷினி புரியாம பேசக் கூடாது. நியாயம், அநியாயம்னு பெரிய வார்த்தையெல்லாம் ரூல்ஸ் பண்ண வேணாம். சரியா?”
“…..”
“நான் வேலைக்குப் போகலைன்னா பிரபஞ்சனை வளர்த்துருக்கவே முடியாது. பிரபஞ்சனுக்கு ரெண்டு வயசா இருக்கும் போதே அவங்கப்பா தவறிட்டார்.” என்று அவர் சொல்ல, “சாரி அத்த” என்றாள். அவரின் இழப்புக்காக இப்போது வருந்தினாள். மெல்லிய புன்னகையுடன் அவளின் தலை கோதி கொடுத்தார்.
“அப்போ எனக்கு வேலைக்குப் போயாக வேண்டிய கட்டாயம். என் கையில படிப்பு மட்டும்தான் இருந்தது. அதுனால பிள்ளைகளுக்குப் படிப்பு சொல்லி கொடுக்கப் போனேன். ஸ்கூல், டியூஷன்னு அத்தனை பிள்ளைங்க என்கிட்ட படிச்சாங்க, வளர்ந்தாங்க. ஆனா, என் பையன்? அவனைக் கவனிக்க எனக்கு நேரமே கிடைச்சதில்ல. காலையில வேலைக்குப் போற அவசரத்துல எதையாவது சமைச்சு வச்சுட்டு போவேன். வாரத்துல ஆறு நாளும் வேலை வேலைன்னு ஓடி.. என் பையனை நான் கவனிக்கவேயில்ல. அவனோட நான் டைம் ஸ்பெண்ட் பண்ணதேயில்ல. ஆரம்பத்துல உங்க வீட்டு பக்கத்துல இருக்கும் போது, என் மாமியார் அவனைப் பார்த்துக்கிட்டாங்க. அப்புறம் பார்த்திபன் வீட்லதான் எப்பவும் இருப்பான். எத்தனையோ பிள்ளைங்க மிஸ் மிஸ்னு என்கிட்ட செல்லம் கொஞ்சுங்க. ஆனா என் பையன்? ம்ஹும் எனக்கு நேரம் இல்ல. நான் அவனுக்காக நேரத்தை ஒதுக்கல. அவனும், அவன் ஃப்ரெண்ட் பார்த்திபன், கிரிக்கெட்னு ஒதுங்கிட்டான். நாளைக்கு நீயும் அதே தப்பை பண்ணாத பிரியதர்ஷினி”
“அவருக்கு உங்க மேல பாசம் அதிகம் அத்த. உங்களுக்குத் தெரியாதா என்ன? அவரு உங்களை ஒதுக்கவெல்லாம் இல்ல”
“தெரியும். ஆனா நான் என் பாசத்தைக் காட்டினதேயில்லயே. நீ சொல்லு உங்கம்மா..”
“எங்கம்மா என்னை நல்லாவே கொஞ்சுவாங்க மிஸ்” என்றாள் சிரித்துக் கொண்டே.
“ம்ம், ஆனா உன்னை வீட்ல தனியா விடப் பயந்துதானே நீ ஃபிப்த் ஸ்டாண்டர்ட் படிக்கும் போதே உன்னை டியூஷன் போட்டாங்க? எங்க வீட்டுக்கு அனுப்பினாங்க? ஹ்ம்ம், உங்க வீட்ல பேச ஆள் இருந்தா நீயேன் நாய்க்குட்டி கூடச் சுத்திட்டு இருந்த? சொல்லு?”
“அண்ணா எப்பவும் என் கூட இருந்தான் மிஸ்”
“அம்மாவ பத்தி பேசினா அண்ணனை பத்தி பேசுற நீ.” என்றார் கோபமாக. “பிரியதர்ஷினி, நீ இப்போ வேலைக்குப் போய் என்ன சாதிக்கப் போற, நீயே சொல்லு?”
“வீட்ல இருந்து மட்டும் என்ன மிஸ் சாதிக்கப் போறேன்”
“உன் குடும்பத்தைப் பார்க்கலாம் நீ”
“தினமும் பிரபஞ்சன் வேலைக்குப் போய்டுவார். அப்புறம் நான் மட்டும் வீட்ல தனியா உட்கார்ந்து என்ன மிஸ் செய்யப் போறேன்?”
“அவனும் வேலைக்குப் போறான். நாளைக்கு நீயும் வேலைக்குப் போ. அப்படியே ஆளுக்கொரு பக்கம் ஓடிட்டே இருங்க. நீ நாளைக்கு வேலைக்குப் போனதும், வேலை முக்கியமா போய்டும். அதுக்காக முதல் வேலையா, இப்பவே பிள்ளையான்னு அதைத் தள்ளி போடுவீங்க. அப்புறம் நீங்களே ஆசைப்பட்டாலும்..”
“என்னங்க மிஸ் இப்படிப் பேசுறீங்க..” சட்டென யோசியாமல் எதிர்மறையாகப் பேச போனாரே. அவளுக்கு வருத்தமாகப் போனது.
“இல்ல, நான் ஒரு பேச்சுக்கு சொன்னேன். மனசுல வச்சுக்காத” என்றார், அவள் தோளில் தட்டி.
“ம்ம்ம், வேலைக்குப் போனாலும் லைஃப் நார்மலா லீட் பண்ண முடியும் மிஸ். உங்களுக்குத் தெரியாததா? இப்போல்லாம் மெட்டர்னிட்டி லீவே ஆறு மாசத்துக்குத் தர்றாங்க. அதுக்கு மேலயும் தேவைப்பட்டா வேலையில ஒரு பிரேக் எடுத்துப்பேன்” இதையெல்லாம் அவரிடம் மனம் திறந்து பேசவே அவளுக்குத் தயக்கமாக இருந்தது. பல வருட பழக்கம் மட்டுமே அவரிடம் இது குறித்து வெளிப்படையாகப் பேசும் மனநிலையைத் தந்திருந்தது.
“அப்படியென்ன உன் பிள்ளையை விட அந்த வேலை முக்கியம் உனக்குன்னு சொல்லு முதல்ல? பச்சை பிள்ளையைத் தனியா விட்டுட்டு எதுக்காக வேலைக்குப் போகணும் நீ? எனக்கு வேலை அவசியமா இருந்தது, அதுனால என் பிள்ளையைத் தவிக்க விட்டுட்டு போனேன். உனக்கென்ன? வேலை ஆடம்பரத்துக்குச் செய்யணுமா?”
“நீங்க சொல்லிக் கொடுத்த எல்லா விஷயங்களையும் நீங்களே முக்கியமில்லைன்னு இப்போ பேசுறீங்க மிஸ்” அவரை நிமிர்ந்து நோக்கி சொல்லி விட்டாள்.
“அன்னைக்கு நீ என் மருமக கிடையாது” என்று அவரும் குரல் உயர்த்தினார்.
“உங்க மகனை..”
“பார்த்துக்கறது உன் கடமை, பொறுப்புக் கிடையாது. நான் ஒத்துக்கறேன். ஆனா உன் குழந்தைங்க? அவங்களை விட்டுட்டு வேலைதான் முக்கியம்னு போகப் போறியா நீ?”
“உங்க கில்ட்ட நீங்க என் மேல திருப்பி விடுறீங்க மிஸ். பெற்றோர் கனவை பிள்ளைங்க நிறைவேத்தணும்னு கட்டாயமில்ல, உங்களுக்குப் பிடிச்சத நீங்க படிக்கணும். உங்களுக்குப் பிடிச்ச கேரியர் நீங்க சூஸ் பண்ணணும்னு சொல்லி தந்த நீங்களே இப்போ மாத்தி பேசினா எப்படி மிஸ்?”
“நான் எவ்வளவு எடுத்து சொன்னாலும் உனக்குப் புரியல இல்ல? என்னைப் போல நீயும் பிள்ளையைத் தவிக்க விட்டுட்டு..”
“அத்த, பிளீஸ். எங்களுக்குப் பிள்ளை வரும் போது அதைப் பார்த்துக்கலாம் இல்லையா? அப்போ சிட்டுவேஷன் என்னவோ அதுக்கேத்த போலப் பிளான் பண்ணிக்க எங்களுக்குத் தெரியாதா? நான் தேவைன்னா ரெண்டு மூனு வருஷம் பிரேக் கூட எடுத்துப்பேன். உங்ககிட்ட அட்வைஸ் கேட்டுப்பேன். நீங்க…”
“யாரு? நீயா? என் பேச்சை கேட்கிற ஆளா நீ? நான் இவ்வளவு சொல்லியும் கேட்காம வேலைக்குப் போயே ஆவேன்னு பிடிவாதமா நிக்கறியே. ரஞ்சனுக்கு அம்மாவா நான் ஒன்னுமே செய்யல. அவன் பொண்டாட்டி, பிள்ளைங்கன்னு சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கறேன். அது தப்பா? நாளைக்கு உன் பிள்ளைங்களும் என் பிள்ளைய போலத் தனியா தவிச்சு, அன்புக்கும், பாசத்துக்கும் ஏங்கி போக வேணாமேன்னுதான் உன்கிட்ட இவ்வளவு போராடுறேன். அதுக்கு மேல உன் விருப்பம்” என்று முடித்து விட்டார்.
ஊரில் வேலைக்குச் செல்பவர்கள் எல்லாம் பிள்ளை வளர்க்கவில்லையா என்ன?