பிரிய பிரபஞ்சமே – 4 (2)

பிரியதர்ஷினி, அவனிடம் பேசவேயில்லை.

அவன் மின்னல் வேகத்தில் உடை மாற்ற, அவளும் தலையைச் சீவி, முக அலங்காரம் முடித்து வெளியேறினாள்.

அவள் பின்னேயே வந்து பூ எடுத்து நீட்டினான்.

“ப்ச்” என்றாள். ஓவ்வொரு சலிப்புக்கும் வெவ்வேறு அர்த்தம், அவன்தான் அர்த்தத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்.

சட்டென அவளின் தோளை பற்றி நிறுத்தினான். பூவை அவனே வைத்து விட்டான்.

“ம்மா, போகலாம்” என்று மரகதவல்லிக்கும் குரல் கொடுத்தான். அவர்கள் மூவரும் காரில் ஏறும் வரை அப்படியொரு அமைதி.

பிரபஞ்சன் காரை நகர்த்தவும், “ம்மா, கிளம்பிட்டோம்.‌ அரை மணி நேரத்துல அங்க வந்துடுவோம்” என்று ராதாவை அழைத்துத் தகவல் சொன்னாள் அவள்.

அவள் பேசி முடிக்கக் காத்திருந்த மரகதவல்லி மகனை பிடித்துக் கொண்டார்.

“உனக்குக் கல்யாணமாகிடுச்சு ரஞ்சன் ஞாபகம் இருக்கா இல்லையா?”

“விளையாட போனா வீட்ல சொல்லிட்டுப் போறது இல்லையா நீ? லைஃப் விளையாட்டா போச்சா உனக்கு?”

“இவ்ளோ பொறுப்பில்லாம நீ இருப்பேன்னு நான் நினைக்கவேயில்ல”

“இன்னைக்கு உங்க அத்தை வீட்ல விருந்துன்னு உனக்குத் தெரியுமா தெரியாதா? அப்புறம் எப்படி வெளில போவ நீ?”

“போன் பண்ணா எடுக்க மாட்டியா?”

“ஒரு தடவ ரெண்டு தடவயா? பத்து பதினைஞ்சு தரம் போன் பண்ணியும் நீ எடுக்கலன்னா என்ன அர்த்தம்? வீடும், வீட்ல உள்ளவங்களும் உனக்கு முக்கியம் இல்லன்னு அர்த்தம்” என்று படபடத்தார்.

“ம்மா, இன்னைக்கு விருந்துன்னு எனக்கு ஞாபகம் இல்ல.”

“அதெப்படி ஞாபகம் இல்லாம போகும்னு கேட்கறேன்? பிரியதர்ஷினி உன்கிட்ட சொல்லலையா? உன் சின்ன மாமியார் வீடு உனக்குப் போன் பண்ணி கூப்பிடலையா? கூப்பிட்டாங்கதானே? இதுவே ஆபீஸ் ஒர்க்னா இப்படி அலட்சியமா இருப்பியா?”

“மறந்துட்டேன் மா”

“பொறுப்பில்லாம பதில் சொல்லாத ரஞ்சன். இப்போ உன் மாமனார் வீட்ல போய் என்ன காரணம் சொல்லுவ? நீங்க கூப்பிட்டத மறந்துட்டுக் கிரிக்கெட் விளையாட போய்ட்டேன்னா? உன்னய அப்படியே மெச்சிப்பாங்க” என்றார் கோபமாக. “மிஸ், மிஸ்” என்று அவர் பேச்சை எவ்வளவு முயன்றும் பிரியதர்ஷினியால் தடுக்க முடியவில்லை.

“அத்த” என்றழைத்தாள். அமைதியாகி விட்டார்.

“சத்தியமா மறந்துட்டேன் பிரியா” என்றான் சாலையில் கவனமாக.

“ப்ச்” என்றாள். ஸ்டியரிங்கை ஓங்கி குத்தினான் அவன்.

அவர்களின் கார் தெருவுக்குள் நுழைந்ததும் மாணிக்கவேலின் தலை தெரிந்தது. அவர்களுக்காக ஓடி சென்று கேட்டை திறந்து விட்டார்.

அவர்களுக்கு வீட்டினரின் வரவேற்பு பலமாக இருந்தது, கவனிப்பு அதைவிடக் கனகச்சிதம்.

ஏன் தாமதம் என யாரும் அவர்களைக் கேட்கவில்லை.

பிரபஞ்சன் இயல்பாக அவளை நெருங்கி அமர்ந்தான். அவளும் இயல்பாகச் சிரித்துப் பேசினாள். மரகதவல்லி முகத்தில் மெச்சுதலான முறுவலை கண்டும் காணாதது போல இருந்து கொண்டாள்.

கணவன் மேலிருக்கும் கோபத்தில் அவள் முறுக்கி கொண்டு திரிந்தால், அவள் வீட்டினர் அல்லவா வருந்துவார்கள்? அதனால் முயன்று வருவித்த பொறுமையுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

“முதல்ல சூப் குடிங்க” என அனைவருக்கும் சூடாகச் சூப் கொடுத்தார் சித்தி மாலதி.

இளையவர்கள் கூட்டம் அவர்களைச் சுற்றி வட்டமடித்து விட்டார்கள்.

மாலதியின் மகள் லாவண்யா, “அப்புறம், ஏதாவது குட் நியூஸ் உண்டா?” என்று அவளிடம் ரகசியமாக வினவினாள்.

“குட் நியூஸா? எங்க? போன வாரம் ஒரு இன்டர்வியூ போனேன்ல? வேலை தர முடியாதுன்னுட்டான். இதுல எங்க குட் நியூஸ் சொல்ல?” என்று அவள் அலுப்பும், சலிப்புமாகச் சொல்ல, “நான் என்ன கேட்டா? நீ என்ன சொல்ற லூசு” என்று அவளின் தோளில் இடித்தாள்.

“என்ன கேட்ட நீ?”

“ம்ம், இந்தப் பச்ச பாப்பாக்கு எப்போ பாப்பா வருதுன்னு?”

“கிழவி மாதிரி பேசாத லாவண்” என்று முறைத்தவள், “இன்டர்வியூ போனேன்ல அவன் கூட இதைத்தான் கேட்டான், கல்யாணமாகி ரெண்டே மாசத்துல பிள்ளை பெத்துக்கணும்னா எப்படி முடியும்?” என்றாள் கடுப்புடன்.

“ஹேய் சில்ல்ல் பிரியா” என்று பிரபஞ்சனை போலச் சொல்லி கண் சிமிட்டினாள்.

“சில்ல்லுன்னு சொன்னீன்னா பல்ல உடைச்சுடுவேன்”

“விருந்து சாப்பிட வந்துட்டு பல்ல உடைப்பேன்னு சொல்றியே நியாயமா?”

“நானே வேலை கிடைக்காத சோகத்தில் இருக்கேன். நீ வேற..” என்று அவள் அலுத்துக் கொள்ளவும்,

“உன்னை யாரு பார்த்துட்டு இருந்த வேலையை விடச் சொன்னது?” என்று கேட்ட அவளின் அண்ணன் பரணி, சித்தி மகன், பிரபஞ்சனை பார்த்து, “சாரி பாஸ்” என்றான்.

“பிரியாவை நான் வேலையை விடச் சொல்லல” என்றான் பிரபஞ்சன்.

“ஓகே.” என்று புன்னகைத்த பரணி, அவனுக்குத் தெரிந்த நிறுவனத்தில், வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள் என்றான். அவனே பரிந்துரை செய்வதாகவும் சொல்ல, பிரியாவின் முகத்தில் புன்னகை மின்னியது.

அவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டிருந்த மரகதவல்லி முகம் கடினமாக, பிரியதர்ஷினி பார்வையில் இருந்து அது தப்பவில்லை.

அவளுக்கு அவரை நிரம்பப் பிடிக்கும்தான். மரியாதை மானாவாரியாக இருக்கிறதுதான். அதற்காக அவர் சொல்வதற்கெல்லாம் அவள் தலையாட்ட வேண்டும் என்பது இல்லையே? அவளுக்கென விருப்பங்கள், ஆசைகள், கனவுகள், லட்சியங்கள் இருப்பதில் தவறேதும் இல்லையே? வேலை, சுய சம்பாத்தியம், தன் காலில் தானே நிற்க வேண்டும் என அவளின் ஆசைக்கு அவர் எப்படி முட்டுக்கட்டை போடலாம்? மற்ற நேரமாக இருந்திருந்தால் தயங்கி இருந்திருப்பாள்.

இன்றைய மனநிலையில் தைரியமாக, “நீ ஜாப் டீட்டெயில் எனக்கு அனுப்புண்ணா. நான் நாளைக்கே அப்ளை பண்ணிடுறேன்” என்று பரணியிடம் சொல்லி விட்டாள்.

மரகவதல்லி முகம் கடுமையானது.

இருவரும் அருகருகே சம்மணமிட்டு அமர்ந்திருக்கப் பிரபஞ்சனின் இடக்கரம், அவள் காலை மென்மையாக பற்றி அனிச்சை செயல் போல வருடிக் கொண்டிருந்தது.

“ப்ச்” என அவள் தட்டி விட்டாலும், திரும்பக் காலை பிடித்திடும் அவன் கை. அதனால், அப்படியே விட்டு விட்டாள் அவளும்.

“வேற ஓப்பனிங் இருந்தாலும் சொல்லுங்க பரணி ப்ரோ” என்றான் பிரபஞ்சன்.

“கண்டிப்பா மாப்ள” என்றான் அவன்.

அவர்கள் அதிக நேரம் காத்திருக்க நேராமல், அனைவரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவை உண்டார்கள்.

ஆடு, கோழி, மீன், இறால், நண்டு என வகைத் தொகையாகச் சமைத்திருந்தார்கள். கலகலவெனப் பேசி சிரித்து அவர்களை வயிறார சாப்பிட வைத்திருந்தார்கள் குடும்பத்தினர்.

காலை தாமதத்திற்கு மாலையை அங்கேயே செலவழித்து ஈடு கட்டி விட்டார்கள். இரவு உணவையும் அங்கேயே முடித்து வீடு திரும்பினார்கள்.

“அப்போ நீ வேலைக்குப் போகத்தான் போற இல்லையா? என் பேச்சுக்கு மதிப்பே இல்ல? உன்கிட்ட நான் இத எதிர்பார்க்கல பிரியதர்ஷினி” காரில் ஏறியதும் கத்தி விட்டார் மரகதவல்லி.

“ம்மா, வேலைக்குப் போறது அவ விருப்பம். அதுல நீங்க தலையிடாதீங்கன்னு நான் ஆல்ரெடி உங்களுக்குக் கிளியரா சொல்லிட்டேன். திரும்பத் திரும்ப அதையே பேசிட்டு இருந்தா என்ன அர்த்தம்?”

“எனக்குப் பிடிக்கலன்னு அர்த்தம்” என்றார். அவர் வார்த்தைகள் காரில் மோதி காதில் அறைய, அவரைத் திரும்பிப் பார்த்து, “எனக்கு வேலைக்குப் போகப் பிடிச்சுருக்கு மிஸ்” என்றாள் பிரியதர்ஷினி.

“என்ன பிடிச்சிருக்கு? நீ வேலைக்குப் போகணும்னு என்ன அவசியம்?” என்று அவர் இரைய, “நீங்க வேலைக்குப் போகணும்னு என்னம்மா அவசியம்? நீங்க எதுக்காக வேலைக்குப் போறீங்க?” என்று கேட்டிருந்தான் பிரபஞ்சன்.

“நான் வேலைக்குப் போகச் சரியான பர்பஸ் இருந்தது ரஞ்சன். உன் பொண்டாட்டி போலப் போர் அடிக்குதுன்னு வேலைக்குப் போகல நான்” ஆசிரியருக்கே உரிய அழுத்தமான குரலில் அவர் சொல்ல, ஆழ்ந்த மூச்செடுத்தாள் பிரியா.

“படிச்சு நல்ல வேலைக்குப் போன்னு அவளுக்குப் போதனை பண்ணதே நீங்கதான். இப்போ என்னமோ போர் அது இதுன்னு அவளை டீமோட்டிவேட் பண்றீங்க நீங்க” பதிலுக்கு அவன் கத்த, கண்ணை மூடி இருக்கையில் சாய்ந்து விட்டாள் பிரியா.

சட்டென வாரி இறைத்தது போலக் காரை நிறைத்தது அமைதி. ஆனால், அது அவளின் மனத்தில் துளி கூட இல்லை.

நீர் வற்றிய குளம் போலக் குழம்பி கிடந்தது அவள் மனம்.

“பிரியா..” வீடு வந்து அறைக்குள் நுழைந்ததும் பிரபஞ்சன் அவள் கைப் பிடித்து நிறுத்த, “ப்ச்” என்றாள் வாழ்க்கையே சலித்து விட்ட வெறுப்பில்.

அவன் கண்ணை மூடித் திறந்து, “சண்டே ஞாபகப்படுத்துன்னு உன்கிட்ட சொன்னேன்ல?” என்று கேட்டான்.

“அய்யோடா, செய்யறது எல்லாம் செஞ்சிட்டு என் மேலதான் ஏறுவீங்கன்னு எனக்குத் தெரியும். வாங்க சார். இப்போ என்ன? என் மேலதான் தப்பு, அதானே?” என்று பல்லைக் கடித்துக் கோபமாகக் கேட்டாள்.

“அது பிரியா, நீ சொல்லியிருந்தா..” என்றவனை, உறுத்து விழித்து, தன் பலத்தைத் திரட்டி அவனைத் தள்ளி விட்டிருந்தாள்.

அவள் முன் நின்றிருந்த பிரபஞ்சன் அதை எதிர்பார்த்திராததால் நிலைகுலைந்து தடுமாறி கட்டிலில் இடித்து, விழுந்து விடாமல் சமாளித்து நின்றிருந்தான். அவன் தாடை இறுக, கைகள் கடினமுற, கண்கள் கோபத்தில் சிவந்து அவள் மேல் அழுத்தமாகப் பதிந்திருந்தன.

error: Content is protected !!
Scroll to Top