“தர்ஷி, வீட்ல இருந்து கிளம்பிட்டீங்களா?” ராதா மீண்டும் கேட்க, “இன்னும் இல்லம்மா” என்றாள்.
“சரிடா, சீக்கிரம் கிளம்பி வாங்க. நீங்க வந்ததும் சேர்ந்து சாப்பிடலாம்னு எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க”
“எங்களுக்காக வெயிட் பண்ணாம நீங்க சாப்பிடுங்கம்மா. இவர் ஒரு முக்கியமான வேலையா வெளில போய் இருக்கார், வந்ததும் நேரா அங்க வந்துடுறோம்மா” என்று உண்மையைச் சொல்லி விட்டாள்.
“அப்படியே சித்திகிட்ட சொல்லிடுங்கம்மா. அவங்க கோபிச்சுக்கப் போறாங்க.” என்றாள். சில நொடி அமைதிக்குப் பின், “ சரிடா, நான் சொல்லிடுறேன். நீங்க கிளம்பும் போது கால் பண்றியா?” என்று கேட்டிருந்தார் ராதா.
“பண்றேன்ம்மா. நாங்க எப்படியும் லஞ்சுக்குதான் வருவோம்”
“ஓ, அவ்ளோ லேட்டாகுமா?” என்றவர், “சரிடா, பார்த்து வாங்க” என்று வைத்து விட்டார். அவளுக்கு வெயிலில் நின்றது முகமெல்லாம் வியர்த்து விட்டது. உடலின் ஒவ்வொரு செல்லிலும் கோபம் கொப்பளித்துக் கொட்டியது.
கணவனின் காரில் மேல் சாய்ந்து நின்று அலைபேசியைப் பார்த்திருந்தாள்.
“மேட்ச் போறேன். நான் வர ஈவ்னிங் ஆகிடும்” என்று அவளுக்கு வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான் பிரபஞ்சன். காலை ஏழரை மணிக்கு அனுப்பியிருந்தான். இப்போதோ மணி ஒன்பதரை. மாலைதான் வருவேன் எனச் செய்தி அனுப்பி இருக்க, அவனுக்காகக் காத்திருப்பதா? இல்லை அத்தையை அழைத்துக் கொண்டு தான் மட்டும் கிளம்பி போவதா எனக் குழம்பி நின்றாள்.
புதுமணத் தம்பதிகளுக்குத் தரப்படும் விருந்துக்கு எப்படித் தனியாகச் செல்வது? அதிலும் அவளின் மொத்த குடும்பமும் அங்கிருக்கும் போது இவள் தனியாகச் சென்று நின்றால், அவ்வளவுதான். ஒரு பிரளயமே வெடித்து விடும். பிரபஞ்சனை கூண்டில் ஏற்றி விடுவார்கள்.
அவனது கிரிக்கெட் அகாடெமி எங்கிருக்கிறது? என்ற யோசனையுடன் வீடு திரும்பினாள். கோபத்தைக் கட்டுப்படுத்த கடகடவென்று தண்ணீரை குடித்தாள்.
மரகதவல்லி, “என்ன பிரியதர்ஷினி தனியா வர? ரஞ்சன் எங்க?” என்று கேட்டார்.
“தனியா வர்றேனா? முக்கால்வாசி நாள் உங்க புள்ள என்னைத் தனியாதான் விட்டு போறாரு” என்று வாய் வரை வந்த வார்த்தைகளை அப்படியே விழுங்கினாள்.
“அவர் மேட்ச் போய் இருக்காராம், வர ஈவ்னிங் ஆகும்னு மெசேஜ் பண்ணியிருக்கார் மிஸ்”
“அப்போ அவன் கீழ இல்லையா?”
“இல்ல மிஸ்”
“என்ன இல்ல மிஸ்? இன்னைக்கு உங்க சித்தி வீட்ல விருந்துன்னு அவனுக்குத் தெரியுமா தெரியாதா?”
“தெரியும் மிஸ்”
“அப்புறம் எப்படி விளையாட போவான்? உன்கிட்ட சொல்லிட்டு போனானா?”
“சொல்லல மிஸ். உங்ககிட்ட?”
“என்கிட்ட சொல்லிட்டு போய் இருந்தா, நான் ஏன் உன்னை இப்படி நிக்க வச்சுக் கேள்வி கேட்கப் போறேன்? ஹாங்? அந்தப் பார்த்திபன் பையன் வந்தப்போ வெளில அனுப்பியே இருக்க மாட்டேன்ல?” என்று அவளிடம் எகிறினார்.
“வர வர உங்க ரெண்டு பேருக்கும் பொறுப்பே இல்ல. உங்க வீட்ல என்ன நினைப்பாங்க? நான் வேற உங்களோட வர்றேன்னு சொல்லிட்டேன். இப்போ போகாம இருந்தா எவ்ளோ தப்பா போகும். அவங்களும் நமக்காக ஸ்பெசலா செஞ்சு சாப்பிடாம காத்துட்டு இருக்கணுமா?” என்று குரல் உயர்த்தாமல் கத்தியவர், “அவனுக்குப் போன் போடு” என்றார்.
“போன் பண்ணேன். அவர் எடுக்கல மிஸ்”
“மிஸ் பண்ணியிருப்பான். திரும்ப அடி” என்றார் கோபமாக. அவர் முன்னேயே அவனுக்கு அழைத்தாள். அழைப்பு முழுதாகச் சென்று நின்றது, அவன் அழைப்பை ஏற்பதாக இல்லை.
“பார்த்திபன் போனுக்கு அடி”
“அவர் நம்பர் என்கிட்ட இல்ல மிஸ்”
“என்னது? அவன் போன் நம்பர் இல்லையா? என்ன பொண்ணு நீ? ரஞ்சன் வீட்ல இல்லன்னா பார்த்திபன் கூடத்தான் இருப்பான். அவன் நம்பர் உன்கிட்ட இல்லைன்னு அசால்ட்டா சொல்ற? ஹ்ம்ம், இந்தா அவன் நம்பர்” என்று அவரின் அலைபேசியில் அவன் எண்ணை தேடி எடுத்து அவளிடம் நீட்டினார். அவரின் அலைபேசியில் இருந்தே அவனுக்கு அழைத்தாள். அவனும் அழைப்பை ஏற்கவில்லை.
“பொறுப்பில்லாத பசங்களுக்குப் போன் எதுக்கு? நான் இங்கதான் இருந்தேன். என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போனானா?” என்று அவர் தனக்குள் புலம்ப, “என்கிட்ட மட்டும் சொல்லிட்டா போனார்?” என்று மனத்தில் சொல்லிக் கொண்டாள் அவள்.
“அம்மா போன் பண்ணாங்க, நாம லஞ்ச்சுக்கு வர்றதா அவங்ககிட்ட சொல்லிட்டேன்” என்றாள்.
“எதுக்கு அப்படிச் சொன்ன? ரஞ்சன் வீட்டுக்கு வர ஈவ்னிங் ஆகிடும்னுதானே உனக்கு மெசேஜ் அனுப்பியிருக்கான்?”
“ம்ம்ம்”
“அவன் ஈவ்னிங் வந்தா நாம எப்படி லஞ்ச் போக முடியும்? புத்தி இல்லையா உனக்கு?” அத்தனை கடுமையாகக் கேட்டார். அவளுக்கு மளுக்கென்று கண்கள் குளம் கட்டின. கண்ணைச் சிமிட்டி கண்ணீரை உள்ளிழுத்தாள். அவரிடம் தன் பலவீனத்தைக் காட்ட விரும்பவில்லை அவள். இப்படியெல்லாம் யாரும் அவளிடம் கடுமையாகப் பேசியதில்லை. பேச வாய்ப்புக் கொடுத்ததும் இல்லை. எல்லாவற்றுக்கும் முதல் என்று ஒன்று இருக்க வேண்டும் அல்லவா?
“ஈவ்னிங் வரை போன் பார்க்காம இருக்க மாட்டார் இல்ல மிஸ். மேட்ச் பிரேக்ல போன் எடுத்தா மிஸ்டு கால் பார்த்து வீட்டுக்கு வந்துடுவார்னு நினைச்சேன்”
“ஓ, சரி. சரி” என்றார் உடனே குரலை தழைத்து.
“அவனுக்கு நேத்தே ஞாபகப்படுத்தியிருக்கணும் நீ, நைட்டு சொன்னியா?” என்று கேட்டார். அவன் வந்தாலும் இதையே சொல்லி தன்னைக் குற்றவாளியாக்கப் போகிறான் என்று நினைக்கவே அவளுக்கு அயர்ச்சியாக இருந்தது.
அவள் முகம் பார்த்து என்ன நினைத்தாரோ, “சரி, வா. இட்லி, இல்லன்னா தோசை ஊத்தி சாப்பிடலாம்” என்றார்.
மரகதவல்லி சன்னக் கரை வைத்த மைசூர் பட்டு அணிந்து தயாராகி இருந்தார். அவர் சமையல் அறைக்குள் செல்ல, விரைந்து அவருக்கு முன்னே சென்றாள் அவள்.
“என்ன செய்யப் போற?” என்று கேட்டு, “உனக்குப் பிடிச்சத செய்” என்று விட்டார். மகனால் மனம் வருந்தி நிற்கிறாள் என்ற சலுகை போலும். அவள் என்ன சாப்பிடும் மனநிலையிலா இருக்கிறாள்?.
அவள், ஞாயிற்றுக் கிழமையில் சைவம் சாப்பிட்ட சரித்திரமே கிடையாது.
அப்பா மாணிக்கவேல் காலையில் எழுந்து மார்கெட் சென்று கறி, மீன் என வகையாக வாங்கி வந்து விடுவார். காலை உணவே மணக்க மணக்க கறி குழம்பு, இட்லி எனதான் இருக்கும்.
ஆட்டுக்கறி தண்ணி குழம்பு, மேல கொழுப்பு மிதக்க மிதிக்க, மெத்தென்ற இட்லியோடு சாப்பிடுவது ஒரு சுவையென்றால், முறுகலான தோசைக்குத் தனிச் சுவை சேர்க்கும். அப்பா துண்டை தலையில் கட்டிக் கொண்டு, முறுகலாகத் தோசை வார்த்து தருவார்.
அவள் தட்டிலிருந்து திருடி தின்று திட்டு வாங்குவான் பிரகாஷ்.
இங்கே மாமியார் வீட்டில் மதியத்திற்குதான் கறியோ, மீனோ எடுப்பார்கள். பெரும்பான்மையான வாரங்களில் பிரபஞ்சன் பார்த்திபனுடன் வெளியே சென்றிடுவான். மரகதவல்லி சொல்வதைச் செய்து இருவரும் சாப்பிட்டு விடுவார்கள். இரவு உணவுக்குதான் பிரபஞ்சன் வருவான்.
தன் வீட்டு நிகழ்வுகளை நினைக்க, என்னவோ முன் ஜென்மம் போலிருந்தது.
இப்போது பெருமூச்சுடன் இட்லி அவித்து, தக்காளி சட்னிக்கு வதக்கி வைத்தாள்.
அந்நேரம் அவளின் அலைபேசி ஒளிர அவசரமாய்க் கணவனோ என்று அதைக் கைப்பற்றினாள்.
பிரபஞ்சன் இல்லை, பிரகாஷ் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.
“யூ மிஸ்டு இட்” எனக் காலை உணவை புகைப்படமாக அனுப்பியிருந்தான். இட்லி, கல் தோசை, குடல் குழம்பு, ஆட்டுக்கால் பாயா, மட்டன் எலும்பு குழம்பு என வகையாகச் சமைத்து வரிசையாக வைத்திருந்தார்கள்.
“டேய் அண்ணா, நான் மதியம் வந்து சாப்பிடுவேன்” என்று நாக்கை துருத்தி காண்பிக்கும் ஸ்மைலியை அனுப்பி வைத்தாள்.
“ஓகே, மறக்காம மிச்சம் மீதிய உனக்காக எடுத்து வைக்கச் சொல்றேன்” என்று வாய் விட்டு சிரிக்கும் ஸ்மைலியை அனுப்பி வைத்திருந்தான்.
அவளுக்குக் கோபமும் சிரிப்பும் சேர்ந்தே வந்தது. அப்போது அங்கு வந்த மரகதவல்லி, சட்னியை அரைத்து தாளித்து, உணவு மேஜைக்கு எடுத்துச் சென்றார்.
“சாப்பிட வா, பிரியதர்ஷினி” என்றார்.
அவள் இரண்டு இட்லிகளை மெனக்கெட்டு முழுங்க, மூன்றாவது இட்லியை வைத்து, “ரஞ்சன் வந்துடுவான். நீ சாப்பிடு” என்று அவளைக் கவனித்தார்.
சாப்பிட்டு முடித்து அவர் பள்ளி வேலையைப் பார்க்கத் தொடங்கினார். அவளும் அலைபேசி, தொலைக்காட்சி, அம்மா, சித்தியுடன் பேச்சு என நேரத்தை கடத்தி கொண்டிருந்தாள். என்ன செய்தாலும் அவள் கண்கள் நொடிக்கொரு முறை, அலைபேசியையும் வாசலையும் மாறி மாறிப் பார்த்தன.
பிரபஞ்சன் விரைவாக வந்து விட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்தாள்.
பதினொன்று, பனிரெண்டு என நேரம் கடக்க, அவளின் கோபமும் எல்லை கடந்து கொண்டிருந்தது.
ராதா பத்தாவது முறையாக அழைத்து விட்டார்.
“இந்தா கிளம்பிட்டோம்மா. ஒரு மணிக்குள்ள வந்துடுவோம்” என்று வைத்து விட்டாள். அவள் பேசியதை கேட்டிருந்த மரகதவல்லி, “ரஞ்சன் இன்னும் வரலையே பிரியதர்ஷினி?” என்று பதற்றமாகக் கேட்டார்.
“அவர் நேரா சித்தி வீட்டுக்கு வரட்டும் மிஸ். அம்மாப்பா, சித்தி ஃபேமிலி எல்லாரும் நமக்காகதான் வெயிட்டிங். இதுக்கு மேல நாம போகாம இருந்தா நல்லாருக்காது”
“நீ தனியா போனாலும் முறையா இருக்காது” என்றவரின் முகமே மாறி விட்டது. மகன் மேல் அத்தனை வருத்தம் அவருக்கு.
அவர், பிரபஞ்சனை கடிந்து பேசி அவள் பார்த்ததேயில்லை. எட்டு ஆண்டுகள் அவரிடம் டியூஷன் பயன்றிருக்கிறாள். ஒருநாளும் அவர்களோடு அமர்ந்து பிரபஞ்சன் படித்ததில்லை. அவரும், மகனுக்குப் பாடம் சொல்லி கொடுத்து அவள் பார்த்ததுமில்லை.
சைக்கிள், கிரிக்கெட், நண்பர்களுடன் அரட்டை, விளையாட்டு என எப்போதும் தெருவில்தான் இருப்பான் அவன்.
மரகதவல்லி, அவனைக் கொஞ்சியோ, கண்டித்தோ அவள் பார்த்ததேயில்லை. மகன்தான் அவர் உலகம் எனத் திருமணத்துக்குப் பின்தான் தெரிந்து கொண்டாள்.
“எங்க வீட்ல தப்பா எடுத்துக்க மாட்டாங்க மிஸ்”
“புரியாம பேச கூடாது பிரியதர்ஷினி” என்று விழிகளை விரித்தார்.
“இப்போ வேற என்னதான் மிஸ் பண்றது? நாம வரலைன்னு சொல்லிடவா?” என்று அவள் கடுப்புடன் கேட்கவும், அவரிடம் பதிலின்றிப் போனது.
அவரின் பதிலை எதிர்பாராமல் எழுந்து உடை மாற்றச் சென்றாள்.
ஏனோ மனம் உந்த அலைபேசியை எடுத்து பார்க்க, ம்ம் அதில் எந்தப் புதிய தகவலும் வந்திருக்கவில்லை.
முன்னரே தீர்மானித்து எடுத்து வைத்திருந்த கத்திரி பூ நிற பட்டை கட்டினாள். புதுப் புடைவை என்பதால் கொசுவத்தின் மடிப்பு சீராக விழ மாட்டேன் என அழிச்சாட்டியம் செய்தது.
மூன்றாவது முறையாக அவள் அவிழ்த்து மீண்டும் கட்ட, அறைக் கதவு வேகமாகத் திறந்தது.
அதே வேகத்தில் கதவை மூடி அவளின் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தான் பிரபஞ்சன்.
வீட்டுக்கு வந்ததும் கூடத்து ஓய்வறையில் குளித்திருப்பான் போலும். அவள் குனிந்து ஈரம் சொட்டிய அவன் தலையை வெறித்தாள். அவனோ காரியத்தில் கண்ணாக அவளின் புடைவை மடிப்பை சீராக்கினான்.
ஒவ்வொரு மடிப்பாக நீவி, மொத்தத்தையும் சேர்த்து பிடித்து, வயிற்றில் இருந்து கால் வரை நேராக நேர்த்தியாக உருவி விட்டான். மடிப்பு அழகாகக் கலையாமல் வந்திருந்தது.
அவனையே இமைக்காமல் அவள் பார்த்திருக்க, “ஃபைவ் மினிட்ஸ் டைம் குடு, ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடுறேன்” என்றான் கண்ணைச் சுருக்கி.
“ப்ச்” அவ்வளவுதான், அவளின் எதிர்வினை. பிரபஞ்சனுக்கு இம்முறை கோபம் வரவில்லையே. அப்படியே கோபம் வந்தாலும் வெளிப்படுத்த முடியாதே, வெளுத்து வாங்கிடும் மனநிலையில் அவள் இருக்க, சிக்காமல் நழுவினான் அவன்.