பிரிய பிரபஞ்சமே – 31 (3)

“பிளீஸ், பிரியா. சாரி, சாரி” என்று கெஞ்சினான்.

“இப்போல்லாம் நல்லா சரளமா சாரி சொல்றீங்க பிரபா” என்று அவள் முறைக்க, “பழகிடுச்சு பிரியா” என்றான் பாவமாக.

“பழகும், பழகும். அடி பிச்சா பழக்கமெல்லாம் மாறிடும்” என்று அவள் அடிக்கக் கையை ஓங்க, அவள் கையை மடக்கி அவளைத் தன்னோடு சேர்த்தணைத்தான்.

“பிரபா” என்று அவள் கோபமாகச் சிணுங்க, அவள் முகம் முழுக்க முத்தமிட்டு அவளின் கோபத்தைக் காணாமல் போகச் செய்திருந்தான். சிணுங்கல் மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தது.

இருவரும் லகுவான இரவு உடைக்கு மாறி கூடத்துக்குச் சென்றார்கள்.

பிரபஞ்சன் தொலைக்காட்சியைப் போட்டு அமர, “உங்க செல்ல புள்ளை தூங்கியிருப்பானா? நான் போய் அவனைத் தூக்கிட்டு வரவா?” என்று மாமியாரின் அறையைப் பார்த்துக் கொண்டே அவள் கேட்க, கிரிக்கெட் போட்டியில் கவனமாக இருந்தவன், “அவன் இந்நேரம் தூங்கியிருப்பான். அவன அம்மா பார்த்துப்பாங்க. நீ டிஸ்டர்ப் பண்ணாத, விடு” என்றான் அவன்.

“ம்ம்ம்” என்று அவன் பக்கத்தில் போய் அமர்ந்தாள். அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டான். அப்படியே அவள் கண் மூடி அமர்ந்திருக்க, அவன் இந்தியா – இங்கிலாந்து உலகக் கோப்பை போட்டியில் மூழ்கினான்.

திடீரென்று குழந்தையின் அழகை சத்தம் கேட்டது. பட்டென்று அவள் கண்களைத் திறக்க, மரகதவல்லி அறைக் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தார்.

அவர் கையில் கண்ணைக் கசக்கிக் கொண்டு, உதடு பிதுக்கி அழுது கொண்டிருந்தான் பிரவாகன்.

“செல்லமே, அப்பாகிட்ட வாங்க” என்று பிரபஞ்சன் கை நீட்ட, “ம்மா” என்று சிணுங்கி அம்மாவிடம் தாவினான் பிள்ளை.

“நல்லா தூங்கிட்டு இருந்தான் தர்ஷினி. திடீர்னு எழுந்து அழுதான், நான் சமாதானம் பண்ணாலும் அழுகை நிக்கல. அதான் தூக்கிட்டு வந்தேன்” என்றார். தாயின் கைகளுக்குள் சுருண்டு கதகதப்பாக அவள் மார்பில் புதைந்தான் பிள்ளை.

“சரிங்க அத்த. நான் பார்த்துக்கறேன். நீங்க போய்த் தூங்குங்க” என்று அவள் சொல்ல, “ம்ம்ம், ரொம்ப நேரம் கண்ணு முழிச்சுக் கிரிக்கெட் பார்க்காம நீங்களும் சீக்கிரமா போய்ப் படுங்க” என்று அவர்களுக்கு அறிவுறுத்தி பேரனின் கன்னம் வருடி படுக்கச் சென்றார் மரகதவல்லி.

மகனின் முதுகை மெதுவாகத் தட்டிக் கொடுத்தாள் பிரியதர்ஷினி.

அவள் தட்ட தட்ட, “ம்ம்ம்” என்று ராகம் போட்டுக் கொண்டிருந்தான் பிள்ளை.

“அப்பா தூங்க வைக்கவா? அப்பா கிட்ட வர்றீங்களா?” என்று பிரபஞ்சன் கேட்டுக் கை நீட்ட, கூடத்து மூலையில் இருந்த பிரபஞ்சனின் கிரிக்கெட் கிட்டை கைக் காட்டினான் குழந்தை. அம்மாவிடம் இருந்து சிணுங்கி கீழிறங்கி சென்று அப்பாவின் பேட்டை இழுத்தான்.

“டேய் குட்டி, அது வெயிட்டா இருக்கும். நீ தூக்க மாட்ட” என்று பிரபஞ்சன் மகனை எச்சரிக்க, “நானும்” என்று கண்ணைக் கசக்கினான் பிள்ளை.

“பேட்ஸ்மேன் மகன் பவுலரா வராம பிரதமராவா வருவான்?” என்று பிரியதர்ஷினி நக்கலாகச் சொல்ல, சிரிப்புடன் அவளைத் திரும்பி முறைத்தான் பிரபஞ்சன்.

அவன் முறைப்பை அசட்டை செய்து எழுந்து சென்று குழந்தைக்கான குட்டி கிரிக்கெட் பந்து மட்டையை எடுத்து வந்து கணவனிடம் நீட்டினாள் அவள்.

“பிரவா குட்டிக்கு அவங்க பார்த்தி மாமா வாங்கிட்டு வந்த பேட், பால். இந்தாங்க” என்று அவள் நீட்ட, முயல் குட்டி பல்லைக் காட்டி சிரித்து அவளிடம் இருந்து வேகமாக வாங்கிக் கொண்டான் குழந்தை.

பிரபஞ்சன் தன் கையில் இருந்த மகனை கீழிறக்கி விட்டு, அவனிடம் இருந்து தள்ளி மண்டியிட்டு அமர்ந்தான்.

பிரவாகன் அவன் உயரத்தில் முக்கால்வாசி இருந்த கிரிக்கெட் மட்டையைக் கையில் பிடித்துக் கொண்டு நிற்பதை கண்டவளுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ஏய், சிரிக்காத பிரியா” என்று மனைவியைச் செல்லமாக மிரட்டிய பிரபஞ்சன், “செல்லம் ரெடியா?” என்று மகனிடம் கேட்டான்.

குழந்தை எல்லாப் பக்கமும் தலையை அசைக்க, மகனுக்குப் பந்து வீசினான் அவன்.

அவன் வீசிய பந்து மட்டையைத் தொடவே இல்லை.

ஆனால் மகன் என்னவோ சிக்ஸ் அடித்தது போலக் கை தட்டி குதூகலித்தான் பிரபஞ்சன்.

அடுத்தடுத்த பந்துகளும் அப்படித்தான் விலகி சென்றன.

“ஷ்ஷப்பா இவங்களோட முடியல” என்ற பிரியதர்ஷினி மகனின் பின்னே மண்டியிட்டு அவன் கைப் பிடித்துப் பந்தை அடிக்கவும் பந்து பிரபஞ்சன் முகத்துக்கு நேராகப் பறந்தது.

உடனே பிரவாகனுக்குச் சிரிப்புப் பிரவாகமாய்ப் பொங்கி பெருகியது.

“ஊரே அடங்கின அர்த்த ராத்திரியில நாம மட்டும் கிரிக்கெட் ஆடிட்டு இருக்கோம் பாருங்க” என்று அவள் சலிக்க, “என் செல்ல பையன் பேட் பண்றான், சலிக்காம அவனுக்குப் பேட்டை பிடி பிரியா” என்று மனைவியிடம் கண்டிப்புடன் அவன் சொல்ல, அலுப்புடன் கண்ணை உருட்டினாள் அவள்.

பத்தே நிமிடத்தில் பிள்ளை அசந்து விட்டான். அவனைக் கையில் தூக்கி கொண்டு சோஃபாவில் சரிந்தார்கள்.

மீண்டும் தொலைக்காட்சியில் நேரடி ஒலிபரப்பாகி கொண்டிருந்த கிரிக்கெட் போட்டியில் மூழ்கினார்கள்.

பிரபஞ்சன் ஓரமாக அமர்ந்து மனைவிக்குப் போதிய இடம் கொடுத்தான். அவள் கால் நீட்டி அமர, அவள் பாதத்தை மடி தாங்கிக் கொண்டான். அவன் கண்கள் கிரிக்கெட்டில் மூழ்கியிருக்க, அவன் கரம் மனைவியின் பாதம் பற்றி இதமாய் அழுத்தி, வருடி கொடுத்தது.

அப்போது இந்திய அணியின் பேட்ஸ்மேன் அடித்த பந்தை எதிரணி வீரன் பவுண்டரி லைனில் நின்று பிடித்து விட்டான்.

“அச்சோ விக்கெட்” என்று பிரபஞ்சன் சத்தமாகப் புலம்ப, “ஷ்ஷ்ஷ் பிரபா” என்று அவனை முறைத்து மகனை தட்டிக் கொடுத்தவள், “தட்ஸ் அ சிக்ஸ்” என்றாள்.

“அடிங்க. நான் அவுட்ன்னு புலம்பறேன். நீ என்னன்னா சிக்ஸ்னு சொல்ற? எனக்குத் தெரியாதாக்கும்? இவனுங்க இந்த டைமும் கப்பை கோட்டை விடப் போறானுங்க. லாஸ்ட் டைம் தலய ரன் அவுட் பண்ணி அழ வச்சு அவருக்கு ஒழுங்கா ஃபேர்வெல் கூடப் பண்ணாம வீட்டுக்கு அனுப்புனவனுங்கதானே இவனுங்க. ஒழுங்கா ஆட தெரியாம இவனுங்கலாம் எதுக்குக் கிரவுண்ட்டுக்கு வர்றானுங்கன்னு தெரியலையே..” என்று அவன் பொரிந்து தள்ள, “சில்ல்ல் பிரபா, அது கேட்ச் இல்ல சிக்ஸ்” என்றாள் அவள் உறுதியாக.

“ஏய்..”

“அங்க நீங்களே ரீப்ளே பாருங்க. நான் சொல்றது உண்மையா இல்லையான்னு தெரியும்” என்று உதடு சுழித்துத் தோள் குலுக்கினாள்.

“இங்க்லாண்ட் பிளேயர் பவுண்டரி லைன்ல நின்னுதானே பாலை பிடிச்சார்? நல்லா பாருங்க அவரோட லெப்ட் ஃபுட் பவுண்டரி லைனை தொட்டுருச்சு. அப்போ எப்படி அதுக்கு அவுட் கொடுப்பாங்க? அது சிக்ஸ் தானே பிரபா?” என்று அவனுக்குத் தெளிவாக விளக்கி அவள் சொல்ல, தொலைக்காட்சியிலும் அதுவே ஒளிபரப்பட்டது.

“சிக்ஸ்” என்று திரையில் ஒளிர, தொலைக்காட்சியில் ஆரவாரித்தார்கள் ரசிகர்கள்.

“வாவ், பிரியா” கண்கள் ஒளிர, மீசை சிரிப்பில் துடிக்க, பிரபஞ்சன் தன் பிரியத்தைப் பிரமிப்புடன் பார்த்தான்.

“பூவோட சேர்ந்த நாரும்..” என்று சொல்லி அவள் கிளுக்கி சிரிக்க, காற்றில் காதலுடன் மனைவிக்கு முத்தத்தைப் பறக்க விட்டான்.

“அதைப் போய் அவுட்னு என்னமா புலம்பறீங்க மிஸ்டர் பி” என்று அவள் கேலி செய்ய, “தேறிட்டீங்க மிஸஸ் பிரபஞ்சன்” என்று கண் சிமிட்டினான் அவன்.

இருவரின் சத்தமான சிரிப்பும் அவர்கள் வீட்டை நிறைத்தது.

பிரியதர்ஷினியின் கால்களில் நிம்மதியாய் நித்திரை கொண்டிருந்தான் அவர்களின் புதல்வன். பிரவாகன் ஆழ்ந்த உறக்கத்திலும் உதடு பிரித்துப் புன்னகைத்தான்.

அதைப் பார்த்த பெற்றோரின் சிரிப்பு இன்னுமே பெரிதானது.

பிரியத்தின் பிரவாகத்தில் அக்கணம் அவர்களின் பிரபஞ்சமும் பூரணமாகியது.

பிரிய பிரபஞ்சமே பூர்த்தியடைந்தது!

சுபம்!

error: Content is protected !!
Scroll to Top