பிரிய பிரபஞ்சமே – 31 (2)

அன்றும், அவளுக்கு நாள் தள்ளிப் போனதை பிரபஞ்சன்தான் முதலில் கவனித்திருந்தான். அவள் சம்மந்தப்பட்ட எதுவும் மறக்காது அவனுக்கு. மனப்பாடம் என்பான்.

மறுநாளே மருத்துவமனை செல்ல வேண்டும் என்று பிரபஞ்சன் பரபரக்க, இரண்டு வாரங்கள் காத்திருந்து மருத்துவமனை சென்று உறுதி செய்திருந்தார்கள். அவனுக்கு அந்த இரண்டு வார காத்திருப்பு அத்தனை கடினமாக இருந்தது. அவள் விஷயம் என்று வந்து விட்டால் பிரபஞ்சனுக்கும் பொறுமைக்கும் வெகுதூரம் என்பதை அன்றுதான் கண் கூடாகக் கண்டாள் அவள்.

“எனக்காக இத்தனை வருஷம் எப்படிப் பிரபா பொறுமையா காத்திருந்தீங்க. அது போல இப்பவும்..” என்று அவள் சொல்லி முடிக்கவில்லை.

“போடிங்க” என்று கத்தி விட்டான். அவளின் கர்ப்பம் உறுதியானதும் கொண்டாடி தீர்த்தவனும் அவனே.

மருத்துவனையில் இருந்து நேராக வீடு வந்து மரகதவல்லியிடம் சந்தோஷ செய்தியை பகிர்ந்தார்கள். மருமகளின் கன்னம் வருடி, கண்கள் கலங்கினார்.

அத்துடன் பிடிவாதமாகப் பள்ளி வேலையை விட்டு விட்டார். அவர் இடத்திற்கு வேறொரு கணித ஆசிரியர் வந்து விடவும், அவருக்கும் நிம்மதியானது.

வீடு, மகன், மருமகள் என அவர்களைக் கவனிப்பதிலேயே அவரின் பொழுது கழிந்தது.

பிரியதர்ஷினி சிறுமியாக இருந்த போதில் இருந்தே அவரை ஆசிரியராகப் பார்த்திருக்கிறாள். இப்போது அவரின் ஓய்வு அவளை மனம் சுணங்க செய்தது.

வீட்டில் ஓய்வாகப் புத்தங்களோடு அமர்ந்து விடுவார் அவர். அவரை நெருங்கி, “உங்களுக்கு வீட்ல டைம் எப்பிடித்தே போகுது?” என்று கேட்டு அவள்தான் கவலைப்படுவாள்.

அதே யோசனையாகச் சுற்றியவள் விரைவில் அதற்கொரு தீர்வும் கண்டிருந்தாள்.

மரகதவல்லி பணிபுரிந்த பள்ளிக்கு நீட், ஜெஈஈ பயிற்சி வகுப்புகள் எடுக்கும் மையத்துடன் தொடர்பு இருந்தது. அவர்களிடம் பேசி அங்கே பணியில் அவரைச் சேர்த்து விட்டாள் அவள். அது அப்படியொன்றும் லகுவாக இல்லை. மிகவும் வற்புறுத்திதான் அவரைச் சம்மதிக்க வைத்தாள். அந்த வகுப்புகள் வார இறுதியில் மட்டுமே என்பதால் நீண்ட யோசனைக்குப் பின்னர்ச் சரியென்று விட்டார் மரகதவல்லி.

மருமகளின் பிரசவம், பிள்ளை வளர்ப்பு என அவ்வப்போது தேவையான விடுமுறைகள் எடுத்து கொண்டாலும், அந்த வேலையைத் தொடர்கிறார். அத்துடன் மாலையில் வீட்டில் டியூஷன் எடுப்பதும் தொடர்கிறது.

கணித பாடங்களை விடப் பேரன்தான் இப்போது அவருக்குப் பெரிதாகத் தெரிகிறான், மகிழ்ச்சியைத் தருகிறான். மகனுக்குக் கொடுக்க முடியாத அன்பை, நேரத்தை பேரனுக்குக் கொடுத்து ஈடு கட்டி விடுகிறார். அதில் அவர் மனம் நிறைந்தது.

பிரியதர்ஷினி நான்கு மாதங்கள் பேறுகால விடுமுறை காலம் முடிந்து வேலையில் சேர்ந்த நாளில் இருந்து பிரவாகன் அவர் பொறுப்பில்தான் இருக்கிறான்.

ராதாவும் மகளுக்காக நான்கு மாதங்கள் விடுமுறை எடுத்து அவளுக்குப் பிரசவம் எல்லாம் அவர்தான் பார்த்தார்.

மனம் முழுக்க வீட்டினரை பற்றிய யோசனையில் ஆழ்ந்திருக்க, அவள் கைகள் பரபரவெனக் காலை சமையலை முடித்திருந்தது.

உணவை மேஜையில் எடுத்து வைத்தவள், “இவர் மேட்ச் போறார். நம்ம ரெண்டு பேருக்குதானே லஞ்ச். சோ மதியத்துக்குக் கீரை கடைஞ்சு சேனைக்கிழங்கு வறுவல் பண்ணிடுறேன் அத்த. நாம நைட் பர்த்டே பார்ட்டிக்கு வேற போகணும்” என்று அவள் சொல்ல, சரியெனத் தலையசைத்து பேரனுக்கு இட்லியை, பாசிப்பருப்புச் சாம்பாரில் பிசைந்து ஊட்டினார் மரகதவல்லி.

“உங்க பால்கனில சிட்டுக் குருவி இருக்கு இல்ல? அதுக்கு இட்லி ஊட்டுவோமா? எங்க ராஜா சாப்பிட்டாதான் குருவி குஞ்சும் இட்லி சாப்பிடுமாம். எங்க சமத்து ஆ வாங்கிக்கோங்க” என்று அவர் சொல்லவும், பேரனின் குட்டி வாய் ஆவெனத் திறந்தது.

தாடையில் கையூன்றி மகனை ரசித்துப் பார்த்திருந்தாள் பிரியதர்ஷினி.

அப்போது வெளியில் செல்ல தயாராகத் தன் கிரிக்கெட் ஜெர்சி அணிந்து அங்கு வந்தான் பிரபஞ்சன்.

“மிஸ்டர் பி” என்ற வாசகத்தைக் கண்டதும் தாமாக அவள் விழிகள் மலர்ந்து விரிய, இதழ்கள் புன்னகை சிந்தின.

“இதைப் பறிக்க மறந்துட்ட பிரியா” என்று அவளுக்காகச் சிவப்பு நிற ரோஜாவை கொடுத்தான். அவள் மனம் சட்டெனக் கடந்த காலத்துக்குப் பயணிக்கக் கண்ணில் நிறைந்த காதலுடன் கணவனைப் பார்த்தாள்.

அவனும் மனம் கனிய புன்னகைத்து, அவளுக்குப் பக்கத்து இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.

“பிரியா அவனுக்கு ஃபர்ஸ்ட் பரிமாறிட்டு நீ சாப்பிடு” என்ற பேச்செல்லாம் இப்போது இல்லை.

பிரபஞ்சன் மனைவிக்கும் சேர்த்தே தட்டு வைத்து உணவை பரிமாறினான்.

“நீங்களும் சாப்பிட வாங்கம்மா” என்று அம்மாவையும் அழைத்தான்.

“இந்தா குட்டி ராஜா சாப்பிட்டு முடிக்கப் போறார். நான் இவர் சாப்பிட்டு முடிச்சதும் சாப்பிடுறேன். நீங்க சாப்பிடுங்கப்பா” என்றார் அவர். இரண்டாம் நிமிடம் குழந்தை உண்டு முடித்திருக்க, அவனைக் கையில் வாங்கினாள் பிரியதர்ஷினி.

அவனுக்கும் மேஜையில் ஒரு தட்டு வைத்து, மேஜையின் ஓரம் அமரச் செய்து ஒற்றைக் கையால் மகனை அணைவாகப் பிடித்துக் கொண்டான் பிரபஞ்சன்.

பிரவாகன் தோசையில் ஓவியம் வரைந்து கொண்டிருந்தான்.

“ரஞ்சன்”

“சொல்லுங்கம்மா”

மரகதவல்லி அவர் பங்கிற்கு, “ஈவ்னிங் சீக்கிரமா வீட்டுக்கு வந்துடுப்பா” என்று அவனிடம் கெஞ்சலாக வற்புறுத்தினார்.

“சரிம்மா. நீங்க சொல்லணுமா? நான் வந்துடுவேன்” என்றான் நல்ல பிள்ளையாக. பிரியதர்ஷினி சிரிப்பை அடக்க, அவளை முறைத்து வைத்தான் அவன்.

“சத்தியமா சீக்கிரமா வந்துடுவேன் பிரியா” அவள் நெற்றியில் முத்தமிட்டு உறுதியாகச் சொல்லி கையசைத்துச் சென்றான்.

மரகதவல்லியும் பயிற்சி வகுப்புகள் எடுக்க மையத்துக்குக் கிளம்பி விட்டார்.

அதன் பின்னே அவள் சிறிது நேரம் மகனுடன் ஆடி, ஓடி, விளையாடி அவன் ஓய்ந்து உறங்கவும் சமையல் அறைக்குச் சென்றாள். மதிய சமையலை முடிக்கும் நேரம் அவளுக்கு மாணிக்கவேலிடம் இருந்து அழைப்பு வந்தது.

“அப்பா சொல்லுங்கப்பா”

“குட்டிம்மா, வீடியோ கால் வாடா. பிரவா குட்டியை பார்ப்போம்” என்று ஆசையாகக் கேட்டார்.

“அவன் இப்போதான்ப்பா தூங்கினான். அவன் எழுந்ததும் வீடியோ கால் பண்ணவா?”

“சரி குட்டிம்மா. மாப்ள எங்க கிரிக்கெட் விளையாட போயிட்டாரா?”

“ஆமாப்பா.”

“உங்க அத்தையும் வேலைக்குப் போய் இருப்பாங்க இல்ல? நீயும் குட்டியும் மட்டும் தனியா இருக்கீங்களா? நீங்க பேசாம நம்ம வீட்டுக்கு வந்திருக்கலாம் இல்லடா?” என்று ஆதங்கத்துடன் சொன்னவர், “இப்ப என்ன, இப்பவே கிளம்பி வாடா. லஞ்ச் இங்க சாப்பிடுற மாதிரி. பிரவா குட்டிய பார்க்கணும்னு உங்கம்மா வேற சொல்லிட்டு இருந்தா” என்று மனைவியையும் தன் துணைக்குச் சேர்த்தார்.

“பொண்ணையும் பேரனையும் பார்க்காம இருக்க முடியாது ப்ரோபசருக்கு. இதுல என்னைய காரணம் சாட்டுறத பாருங்க” என்று பக்கத்தில் இருந்து அம்மா சடைப்பது அவளுக்குத் துல்லியமாகக் கேட்க, சத்தமாகச் சிரித்தாள் பிரியதர்ஷினி.

“அத்த இப்போ வீட்டுக்கு வந்துடுவாங்கப்பா” என்றாள் அவள்.

“அப்பா கூப்பிடுறாங்க இல்ல. வாயேன் தர்ஷி” என்று ராதாவும் அழைக்க, “ம்மா, நாம ஈவ்னிங் பங்சன்ல எப்படியும் பார்ப்போம் இல்லம்மா” என்றாள்.

“நீங்க இங்க வந்துடுங்கடா. இங்கருந்து எல்லாரும் சேர்ந்து போவோம்” என்று அப்பா சொல்லவும், நொடி நேர யோசனைக்குப் பிறகு சரியென்று விட்டாள்.

மரகதவல்லி வந்ததும் மதிய உணவை முடித்து ஒரு மணி நேரத்தில் அப்பா வீடு கிளம்பி விட்டாள்.

அன்று காலையே அவளுக்குத் தேவையான அனைத்தும் எடுத்து வைத்திருக்க, அவளின் புடைவையை நேர்த்தியாகத் தேய்த்து வைத்திருந்தான் பிரபஞ்சன்.

இப்போது அவனது உடையை மட்டும் எடுத்து வைத்து விட்டு அவள் தயாராகி மகன், மாமியாருடன் அப்பா வீடு சென்றிருந்தாள்.

அங்கே செல்வதில் அலாதி ஆனந்தம் பிரவாகனுக்கு. பின்னே மாமன் மகளைக் காணப் போகும் ஆவலில் குதித்துக் கொண்டு வந்தான்.

“தாத்தா” என்று தாவி கொண்டு மாணிக்கவேலிடம் சென்றான். பேரனை வாரி அணைத்துக் கொண்டார் அவர்.

“எங்க ராஜா எங்க வந்தீங்க? தாத்தா பார்க்க வந்தீங்களா?” என்று அவர் கேட்க, அழகாகத் தலையாட்டி கொண்டிருந்தான் குழந்தை.

“வாம்மா பிரின்சஸ்” வேறு யார்? பிரகாஷ்தான்.

“எங்க உன் பிரின்ஸை காணோம்”

“கிரிக்கெட் விளையாட போய் இருக்கார்”

“மாப்ளைக்குப் பெரிய தோனின்னு நினைப்பு” என்று அவன் கிண்டலாகச் சொல்ல, நறுக்கென்று அவன் கையைக் கிள்ளி விட்டாள் அவள்.

“இரு, உன் மாமனாருக்கு போன் பண்றேன்” என்று அவள் அலைபேசியை எடுக்க, “அய்யய்யோ பிரியா. பிளீஸ்.. வேணாம். அண்ணா சாரி, பிளீஸ் சாரி” என்று அலறி அடித்துப் பதறி, அவளின் அலைப்பேசியை அவளிடம் இருந்து பிடுங்கி தன் சட்டைப் பையில் போட்டான்.

“எங்க இப்போ என் பிரபாவை பேசு பார்ப்போம்” என்று அவள் கெத்தாகச் சொல்ல, “நான் இன்னைக்கு மௌன விரதம் தங்கச்சி” என்றானே பார்க்கலாம். அங்கிருந்த அனைவரும் பக்கென்று சிரித்து விட்டனர்.

பிரகாஷ்க்கு இன்னமும் மாமனார் என்றால் பயம்தான்.

அவர்களின் சத்தத்தில் பிரவீனா வெளியே வந்து, “வா பிரியா, வாங்க பெரியம்மா” என்று அவர்களை வரவேற்க, அண்ணியின் கையில் இருந்த ஆறு மாத பெண் குழந்தையை ஆசையாக வாங்கிக் கொண்டாள் அவள்.

“பூஜா குட்டி. உங்களைப் பார்க்க அத்தையும், பிரவா அத்தானும் வந்திருக்கோம். உங்களுக்குத் தூக்கம் வருதாக்கும்” என்று அண்ணன் மகளைச் செல்லம் கொஞ்சினாள்.

தங்கையையும் அவள் கையிலிருந்த தன் மகளையும் ஆதூரமாகப் பார்த்து நின்றான் பிரகாஷ்.

அவனின் பாசக்கார மாமனார் ஐந்தாம் மாதமே மகளுக்கு வளைகாப்பு முடித்து அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தவர், அவன் மகள் பிறந்து ஐந்து மாதம் ஆன பிறகும் கூடத் தன் மகளைப் புகுந்த வீட்டிற்கு அனுப்பத் தயாராக இல்லை.

அவனும் எவ்வளவோ கெஞ்சி பார்த்து விட்டான். அவரோ, “பேத்தி கொஞ்சம் பெருசாகட்டும். அப்போதான் என் பொண்ணு அங்க தனியா சமாளிப்பா” என்று காரணங்கள் சொல்லி தன் மகளை, அவனோடு அனுப்ப மறுத்து விட்டார்.

அவன் முழி பிதுங்கி நிற்கையில் ராதா தலையிட்டு பேசி, பத்து நாள்களுக்கு முன்னர்தான் மருமகளைத் தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார்.

“நீ மாமா கிட்ட வாடா மருமகனே” எனத் தங்கை மகனை கையில் அள்ளிக் கொண்டு மொட்டை மாடி ஏறினான் பிரகாஷ். பூஜாவுடன் மாடி ஏறிய பிரியதர்ஷினியின் கண்கள் தாமாகப் பிரபஞ்சனின் பழைய வீடிருந்த திசையை நோக்கின. பிரியம் மிகப் புன்னகைத்தாள் அவள்.

ராதா அனைவருக்கும் தேநீர், சிற்றுண்டி பரிமாறினார். மாலை பொழுது அழகாகக் கழிந்திருக்க, விழாவிற்குச் செல்லத் தயாரானார்கள்.

அவள் குடும்பத்தினர் தயாராகும் நேரம், அவள் கணவனை அழைத்தாள்.

மூன்று முறை அழைத்தும் பதிலில்லை. இப்போது பார்த்திபனை அழைத்தாள்.

இரண்டாம் அழைப்பை ஏற்றான் அவன்.

“பிரபா பேட்டிங் பண்ணிட்டு இருக்கான்மா. இன்னும் அஞ்சே ஓவர்தான். மழைனால மேட்ச் லேட்டாதான் ஸ்டார்ட் பண்ணோம். இப்போ முடிஞ்சுடும். பிரபா லேட்டானாலும் வந்துடுவான்” என்று அவன் நண்பனுக்கு உத்திரவாதம் அளிக்க, “ஓகே அண்ணா” என்றாள். அவள் மாமியாரிடம் தகவல் சொல்ல, உம்மென்று முகத்தை வைத்து, சரியெனத் தலையசைத்தார் அவர்.

அவள் கையில் இருந்த அலைபேசியைக் காண்பித்து, “அப்பா, அப்பா” என்று கத்தினான் பிரவாகன்.

“அப்பா இல்ல தங்கம். பார்த்தி மாமா பேசினாங்க. அப்பா இப்போ வந்துடுவாங்க” என்று மகனிடம் சொன்னாள்.

“அப்ப்ப்பா” என்று அப்பாவை தேடி அழ தொடங்கினான் பிள்ளை.

“அய்யோடா அப்பாவோட செல்லம் அழ கூடாது. அப்பா இப்போ வந்துடுவாங்க” என்று மகனை அணைத்துச் சமாதானம் செய்து, “இங்க பாருங்க செல்லம், பார்கவி அத்த வாங்கி வந்த பால், விளையாடுங்க. கார் இந்தாங்க” என்று விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து அவனைச் சமாதானம் செய்திருந்தாள்.

அரை மணி நேரத்தில் அவளின் குடும்பத்தினர் தயாராகி வெளியே வர, அலைபேசியைப் பார்த்து உதட்டை பிதுக்கியவளுக்குக் கணவன் நேரத்துக்கு வர மாட்டான் என்பது உறுதியானது.

“நாம போகலாம்ப்பா. அவர் நேரா பங்சன் ஹாலுக்கு வந்துடுவார்” என்றாள். அவள் பேச்சை மரகதவல்லியும் ஆமோதிக்க, பிரபஞ்சனுக்குக் காத்திருக்காமல் அவர்கள் மட்டும் விழாவிற்குச் சென்றார்கள்.

பிரபஞ்சனின் அப்பாவின் தங்கை மகன் வீட்டு விசேஷம். சும்மாவே இவர்கள் ஒதுங்கி நிற்கிறார்கள் என்ற கோபம் அவர்களுக்கு இருக்க, இப்போது பிரபஞ்சனை காணாமல் அனைவரும் அவளையே விசாரிக்க, மாமியார், மருமகள் இருவரும் சேர்ந்து பேசி, சிரித்துச் சமாளித்து இருந்தார்கள்.

குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் முடித்து, விருந்தும் ஆரம்பமாகி இருந்தது.

“சரிம்மா நேரமாகுது, நாம சாப்பிட்டுக் கிளம்பலாம். குழந்தை தூங்கி விழுறான் பார்” என்று மரகதவல்லி சொல்ல, “சரிங்கத்த” என்று அவருடன் நடந்தாள். அவள் முகம் சோர்ந்து வாடித் தெரிய, “சில்ல்ல்ல் பிரியா” என்ற பிரபஞ்சனின் குரல் அவள் காதோரம் கிசுகிசுத்தது. அவளை லேசாகத் தோளோடு சேர்த்தணைத்து அவள் முகம் பார்த்து முறுவலித்தான்.

“அப்பா” என்று அவனைக் கண்டு ஆர்ப்பரித்த மகனை கையில் அள்ளி தோளில் போட்டுக் கொண்டான். அவன் கரம் அனிச்சையாக மனைவியின் புடைவையைச் சரி செய்தது.

“பிரபா” என்று முணுமுணுத்து அவள் கண்ணை உருட்டி கூட்டத்தைக் காண்பிக்க, “ப்ச்” என்றான் அலட்டிக் கொள்ளாமல். அதுவரை அவனைத் தேடியவர்களிடம் சென்று பேசி, சிரித்து, வாழ்த்தி நல்லுறவை வளர்த்துக் கொண்டான்.

பிறந்தநாள் குழந்தைக்கு அவனோடு சேர்ந்து பரிசு கொடுத்து, விருந்து முடித்து விடைபெற்றார்கள்.

மாணிக்கவேல் மகளின் தலை கோதி கொடுத்து, பேரனின் கன்னம் வருடி உச்சி முகர்ந்து அவர்களுக்கு விடை கொடுத்தார். அவள் குடும்பத்தினரிடம் விடை பெற்றுக் காரில் ஏறினார்கள்.

பிரபஞ்சன் வீடு வந்ததும், “சாரி பிரியா” என்று அவளைச் சரணடைந்து விட்டான்.

மரகதவல்லி சிரிப்புடன் பேரனை தூக்கிக் கொண்டு தன் அறைக்குச் சென்றார்.

error: Content is protected !!
Scroll to Top