சில வருடங்கள் கழித்து…
இரவு முழுவதும் கொட்டித் தீர்த்திருந்த மழை, காலையில் தூறலாய் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது.
அது வார இறுதி என்பதால் காலைப் பொழுதுக்கே உரிய பரபரப்பு அன்றில்லை. பிரியத்தால் பூரணமாகியிருந்த பிரியக் கூடு ஓய்வில் இருந்தது.
அன்றாட வழக்கமாக அந்நேரம் பிரபஞ்சனின் உறக்கம் கலைய, மெதுவாகக் கண்களைப் பிரித்தான். மனைவியின் மதி முகத்தில் விழுந்தது அவன் பார்வை. மெலிதாக முறுவலித்தன அவன் உதடுகள்.
மெல்ல நகர்ந்து அவளைத் தொட்டான். அனிச்சை செயல் போல உருண்டு அவனை ஓட்டிப் படுத்தாள் பிரியதர்ஷினி.
உடனே, “ம்ம்ம்ம்ம்” என்று குட்டி உறுமலுடன் சிணுங்கியது சிறு குரல்.
“செல்லம் தூங்குங்க” என்று தன் மார்பில் உறங்கிக் கொண்டிருந்த மகனை மென்மையாகத் தட்டிக் கொடுத்தான். இப்போது சிணுங்கல் காணாமல் போய்த் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தான் குழந்தை.
எப்போதும் இந்நேரம் எழுந்திருப்பவர்களை இன்று காணாமே என்று பால்கனி பறவைகள் ஒலியெழுப்பின. பின்னே அவர்களுக்கு இரையும், நீரும் வேண்டுமே.
பறவைகளின் கீச்சிடலில் கண் விழித்தாள் பிரியதர்ஷினி.
மெல்ல சோம்பல் முறித்து எழுந்து ஓய்வறை சென்று தன்னைத் திருத்தி வந்தாள். பால்கனி சென்று பறவைகளுக்குத் திணையும், தண்ணீரும் வைத்து விட்டு, வீட்டு வேலைகளைக் கவனிக்கச் சென்றாள்.
இருபது நிமிடங்களில் வீடு முழுக்கப் பில்டர் காஃபி மணம் நிறைத்தது.
“தர்ஷினி, ஏன் இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்ட? இன்னைக்கு லீவ்தானே? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருக்கலாம் இல்ல?” என்று கேட்டபடி, கண்ணாடியை சரி செய்து கொண்டே சமையல் அறை வந்தார் மரகதவல்லி.
“எனக்கு முழிப்பு வந்திடுச்சுத்தே” என்று புன்னகையுடன் சொன்னவள், “உங்களுக்குக் காஃபி தரவா?” என்று கேட்டாள்.
“ம்ம், குடும்மா. குட்டியை எங்க? அவன் எந்திரிக்கலையா இன்னும்?”
“அவங்கப்பாவோட தூங்கறான்த்தே” என்றாள். மரகதவல்லி முகத்தில் புன்னகை, மருமகளை வாஞ்சையாகப் பார்த்தார்.
இருவரும் காஃபி கோப்பையுடன் கூடத்தில் வந்து அமர, அந்நேரமே லட்சுமி வந்து விட்டார். அவருக்கு இன்றைக்கு முக்கிய வேலையிருக்கிறது, அதனால் காலையில் சீக்கிரமே வேலைக்கு வந்து விடுகிறேன் என்று முன்தினமே அவளிடம் தகவல் தெரிவித்திருந்தார்.
அவருக்கும் காஃபி கொடுத்து வேலைகளைச் சொன்னவள், அவருக்குச் சிறிய சிறிய உதவிகளைச் செய்து கொண்டிருந்தாள்.
நேரம் விரைந்து ஓட, கணவன், குழந்தையை எழுப்ப அவள் படுக்கை அறையை நோக்கி நகர, “தர்ஷினி டிஃபன் என்னம்மா செய்ய? அப்படியே லஞ்ச் என்னன்னு சொன்னீன்னா நான் காய் கட் பண்ணி வைப்பேன்” என்று கேட்டு அவளை நிறுத்தினார் மரகதவல்லி.
அதைக் கேட்டுச் சத்தமாகச் சிரித்து விட்டார் லட்சுமி. சில விஷயங்கள் எல்லாம் அந்தந்த வீடுகளில் அன்றாடக் காட்சிகள்தானே!
“நீங்க உக்காருங்கத்தே. நான் வந்து பார்க்கறேன்” என்று அவரிடம் சொல்லி விட்டு, படுக்கை அறைக்குச் சென்றாள்.
“பிரபா” மெல்ல கணவனின் தோள் தொட்டு எழுப்பினாள்.
ஒரே இழுப்பில் அவளைத் தன்னிடம் இழுத்துக் கொண்டான் பிரபஞ்சன்.
“அச்சோ, உங்க செல்லம் எழுந்துக்கப் போறான்” என்று அவள் பதற, அவளை வாகாய் தன் கை வளைவில் பொருத்திக் கொண்டான்.
“என் செல்லத்தைப் பத்தி நீ கவலைப்படாத செல்லம்” என்று மனைவியை வாசம் பிடித்து அவள் கன்னத்தில் ஈரமாய் முத்தமிட்டான்.
அவளை அணைத்தபடியே அப்படியே அசைந்து எழுந்து படுக்கையில் சாய்ந்து அமர்ந்தான். குழந்தையின் உறக்கம் கலையாத வண்ணம் ஒற்றைக் கரத்தால் அவனை அணைத்துப் பிடித்துக் கொண்டான்.
பிரியதர்ஷினி லேசாக நகர்ந்து நிமிர்ந்து அமர்ந்தாள்.
“ப்ச், எதுக்குப் பிரியா தள்ளி போற?” என்று அவன் கோபிக்க, “எந்திரிங்க பிரபா, நான் போய் உங்களுக்குக் காஃபி எடுத்துட்டு வர்றேன். அப்படியே உங்க பையனை கீழ இறக்கி விடுங்க” என்று அவள் சொல்லவும் மெலிதாகப் பிரிந்து புன்னகைத்தன அவன் உதடுகள்.
“பிரபா..” என்று அவள் அழுத்தமாக உச்சரிக்க, “ம்ம்மா” என்று உறக்க கலக்கத்துடன் உச்சரித்தன குட்டி இதழ்கள், கோலி குண்டு கண்கள் மெல்ல பிரிந்து விரிய, “ம்ம்மா..” எனச் சிப்பி வாய் திறக்க, பால் பற்கள் மொத்தமும் தெரிய அம்மாவை பார்த்துப் புன்னகைத்தான் குழந்தை.
“பிரவா, செல்லம்” அம்மா அழைக்கவும் அப்பாவின் மார்பில் இருந்து தாவி அம்மாவிடம் சென்றான். அவள் மார்பில் முட்டி மோதி கழுத்தை வளைத்து, செல்லம் கொஞ்சி சிணுங்கி, அவள் கரத்தில் இருந்தவாரே அப்பாவை பார்த்துப் பற்களைக் காண்பித்து மயக்கும் சிரிப்பொன்றை உதிர்த்தான்.
“என் குட்டி செல்லம்” எட்டி மகனின் பட்டுக் கன்னத்தில் மெத்தென்று முத்தம் வைத்தான் பிரபஞ்சன்.
பிரபஞ்சன் பிரியதர்ஷினியின் மகனுக்கு இப்போது ஒன்றரை வயதாகிறது.
பிரவாகன்.
அவர்கள் வாழ்வில் பிரியம், காதல், புரிதல் என அனைத்தையும் பிரவாகமாய்ப் பொங்கி பெருக செய்திருந்தவனுக்கு அதுதானே பொருத்தமான பெயராக இருக்கும்.
“செல்லக் குட்டி, பிரஷ் பண்ணுங்க வாங்க. பிரஷ் பண்ணிட்டு பால் குடிக்கலாம். ஓகே?” என்று மகனிடம் பேசியபடியே எழுந்துக் கொண்டாள்.
பிரபஞ்சன் அவளிடம் இருந்து மகனை வாங்கி, அவனை ஓய்வறை உபயோகிக்கச் செய்து, அவனுக்கு முகம் கழுவி, பல் துலக்கி விட்டு, மனைவியிடம் நீட்டினான்.
“ம்மா.. புவா” என்று பால்கனியை கைக் காட்டினான் குழந்தை.
“புறா பார்க்கணுமா செல்லத்துக்கு? வாங்க போவோம்” என்று மகனை கீழிறக்கி விட்டு பால்கனி கதவை திறந்து விட்டாள். பிஞ்சு பாதங்கள் பால்கனிக்கு விரைந்தன. அங்கு நுழைந்ததும் சட்டென்று நின்று விட்டான். மெல்ல திரும்பி அம்மாவை பார்த்துப் பற்களைக் காட்டி புன்னகைத்தான்.
“பால்கனில நின்னு சத்தம் போட கூடாது செல்லம். நீங்க சத்தம் போட்டா பேர்ட்ஸ் எல்லாம் பயந்து பறந்து போய்டும்.” என்று பெற்றோர் சொல்லியிருக்க, சமத்தாக அவர்கள் சொன்னதைச் செய்கிறான் குழந்தை.
“குட் பாய்” என்று மகனை மெச்சினாள்.
“யாரு குட் பாய்?” என்று கேட்டபடி பிரபஞ்சன் வர, “நானு ப்பா” என்று ஆர்ப்பரித்தான் குழந்தை.
மனைவியின் இடையில் கைப் போட்டு அணைத்து நின்று, மகனை பார்த்து முறுவலித்தான்.
“ஆமா, எங்க செல்லம் சமத்து சக்கரைக் கட்டிதான்” என்று அவன் மகனை கொஞ்சியதும் அவனை ஓரக்கண்ணால் முறைத்தாள் மனைவி.
“நீதான் பிரியா என் ஆதி அந்தம் எல்லாமே” என்று முத்தமிட்டு முணுமுணுத்தான்.
பேர்ட் பீடரில் இரையெடுக்கத் தேன் சிட்டுகள் வர, மகனின் கவனம் அங்கே தாவியிருந்தது. அவர்களின் பால்கனி தோட்டத்தில் இருந்த பூக்களைச் சுற்றி வந்து தேனை உறிஞ்சி, மீண்டும் செயற்கை மரக் கிளையில் அமர்ந்து இரையைக் கொத்தின.
அவைகளைப் போலத் தத்தி தத்தி நடந்து பிரவாகன் முன்னேற, ஒரே எட்டில் மகனை பிடித்துக் கைகளில் அள்ளிக் கொண்டான் பிரபஞ்சன்.
“செல்லம் பக்கத்துல போனீங்கன்னா பேர்ட்ஸ் பறந்துடும். அப்பா கையில இருந்து பாருங்க” என்று ஓரமாக நின்று மகனுக்கு வேடிக்கை காண்பித்தான்.
பிரியதர்ஷினி சென்று மூவருக்கும் குடிக்கப் பானம் கொண்டு வந்தாள்.
மழை நனைத்த பிரபஞ்சம் பளிச்சென்று அழகாகியது போலவே அவர்களின் சிறிய உலகமும் அந்தக் காலை வேளையில் அழகை ரசித்து நின்றதில் நிறைந்து அழகாகி இருந்தது.
அவர்களின் பால்கனி சுவரில் அட்டைப் பெட்டி கொண்டு சிறிய மர வீடு செய்து வைத்திருந்தாள். அதனுள் குருவி கூடு கட்டியிருந்தது. இப்போது கீச் கீச் என்று ஒரே சத்தமாக இருந்தது.
“அப்பா.. அப்பா குயுவி” என்று பிரவாகன் கை நீட்டி ஆசையாகக் காண்பிக்க, மகனை தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்துக் குருவி கூட்டை காண்பித்தான் பிரபஞ்சன்.
குட்டி கண்களில் குருவி குஞ்சு தென்படவும் ஆர்வ மிகுதியில், “ம்மா..” என்று ஆர்ப்பரித்து விட்டான் குழந்தை. அவ்வளவுதான். பறவைகள் அனைத்தும் அலர்ட்டாகி பறந்து விட்டன. கூட்டில் இருந்த பறவைகள் மட்டுமிருக்க, அவைகளை ஆர்வமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான் குழந்தை.
“அவன என்கிட்ட குடுத்துட்டு நீங்க சூடா காஃபியை குடிங்க பிரபா” என்று சொல்லி மகனை வாங்கிக் கொண்டாள் அவள்.
இப்போது அம்மாவுடன் சேர்ந்து பூப்பறிக்கத் தொடங்கினான் பிள்ளை.
பிஞ்சு விரல்கள் அங்கிருந்த பட்டன் ரோஜா, பன்னீர் ரோஜா பூக்களைப் பறிக்கக் கை நீட்ட, “அதுல முள் இருக்கும் குட்டி. நீங்க மல்லிப்பூ பறிங்க” என்று அவனை அடுக்கு மல்லிச் செடியின் முன் நிறுத்தினாள்.
பிரபஞ்சன் வந்து மகனின் கைப் பற்றி ஒவ்வொரு பூவாகப் பறித்து மனைவியிடம் நீட்டினான். பொறுப்பாகப் பூவை பறித்து விட்ட பூரிப்புடன் அம்மாவைப் பார்த்துப் புன்னகைத்தான் குழந்தை. மகனை நெருங்கி அவன் கன்னத்தில் முத்தமிட்டவள், அவளின் உதட்டுக்கு வாகாக உயர்ந்த கணவனின் கன்னத்திலும் அழுந்த முத்தமிட்டாள். மழை நாளின் இதம் போல, மலர்களின் மணம் போல அவர்களின் மகிழ்ச்சியும் அந்த வீட்டை நிறைத்தது.
அந்நேரம் பிரபஞ்சனின் அலைபேசி பொருந்தாமல் ஒலியெழுப்பவும், “ப்ச்” என்று சலித்துக் கண்ணை உருட்டினாள் பிரியதர்ஷினி.
“ஏய்..” என்று எச்சரித்தவன், அழைப்பை ஏற்று, “சொல்லு பார்த்தி” என்றான்.
“ம்ம், என்னடா? பத்து மணிக்கு மேலதானே? வந்துடுறேன்” என்றான்.
“என்ன இன்னைக்கும் மேட்ச்சா?” என்று கேட்டு அவனை முறைக்க முயன்று முடியாமல் சிரித்து விட்டாள் அவள்.
“ப்ராஜெக்ட் டெலிவரி” என்று முன்தினம் இரவு மிகவும் தாமதமாகத்தான் வீடு வந்திருந்தான் பிரபஞ்சன். இப்போது காலையில் எழுந்து கிரிக்கெட் என்று ஓடினால் அவளுக்குக் கோபம் வராமல் என்ன செய்யும்.
“இந்தப் பார்த்தி அண்ணாவும் கல்யாணமான பின்னாடி கூடத் திருந்தல பாருங்களேன்”
“அவன் வைஃப் உன்னை மாதிரியே சமத்துச் செல்லம்” என்று பிரபஞ்சன் அவளைக் கொஞ்ச, “ம்க்கும்.” என்று பதிலுக்கு அவள் சலிக்க, அவன் சத்தமாகச் சிரித்திருந்தான். பிரபஞ்சன் சிரிக்கவும் காரணம் புரியாமலே பிரவாகனும் சிரித்தான்.
அவனிடம் இருந்து மகனை வாங்கிக் கொண்டு, “நீங்க கிளம்புங்க” என்றாள்.
அப்போது, “தர்ஷினி” என்று மரகதவல்லி அழைக்க, அவள் கையில் இருந்து நழுவி கீழிறங்கி வேகமாக ஓடினான் குழந்தை.
அப்பத்தா என்றால் கொள்ளை பிரியம் பிரவாகனுக்கு. பின்னே அவர்தானே அவனை வளர்த்தார், வளர்க்கிறார்.
மரகதவல்லியின் குரலில் எப்போதும் ஆளுமை இருக்கும். சமயங்களில் கடினமாகவே ஒலிக்கும். அது அவர் ஆசிரியராகப் பணி புரிந்ததால் நிகழ்ந்தது. ஆனால் அவரின் குரலும் மிகவும் மென்மையாக ஒலிக்கும் என்பதை அவர் பேரனோடு இருக்கும் பொழுதுகளில் மட்டுமே கேட்க முடியும்.
“ராஜா குட்டி” இப்போதும் கனிந்து ஒலித்தது அவர் குரல்.
பிள்ளையும் ஓடி போய் அவர் காலைக் கட்டி கொண்டான்.
அவனைத் தூக்கி கைகளில் வைத்துக் கொண்டு, கதை பேசிக் கொண்டு கூடத்தை வலம் வந்தார் அவர்.
“பிரபா” என்றுழைத்தபடி மீண்டும் படுக்கை அறைக்குள் வந்தாள் பிரியதர்ஷினி. அதற்காகவே காத்திருந்தது போல அவளை வளைத்து அணைத்துக் கொண்டன பிரபஞ்சனின் கரங்கள்.
அவனோடு இழைந்து நின்றவள், “ஈவ்னிங் சீக்கிரம் வந்துடுங்க பிரபா, பிளீஸ்” என்றாள் கெஞ்சலாக.
அவள் கழுத்தில் முகம் புதைத்து, “ம்ம்ம், சுயர்” என்றான்.
“உங்க அத்தை பையனோட பொண்ணுக்கு இன்னைக்கு ஃபர்ஸ்ட் பேர்த்டே. நாம கட்டாயம் போயே ஆகணும். நீங்க அவங்க கல்யாணத்துக்கு வரலன்னு அவங்க ஆல்ரெடி உங்க மேல கோபமாக இருக்காங்க. இப்போ பர்த்டேக்கு கூப்பிட வந்தப்போ கூடச் சொல்லி காட்டினாங்க பிரபா. சோ..”
“நீங்க கிளம்பி ரெடியா இருங்க. நான் கரெக்ட் டைமுக்கு வந்துடுவேன்”
“யாரு நீங்க? கரெக்ட் டைமுக்கு வந்துடுவீங்க? இதையெல்லாம் உங்க கிரிக்கெட் பிட்ச்லதான் (Pitch) எழுதி ஒட்டணும். நீங்க மிதிச்சு ஓடியே அதை அழிச்சி விட்ருவீங்க” என்று அவள் நக்கலாகச் சொல்லவும் உடல் குலுங்க சிரித்தான் அவன்.
“அழகே அழகே..” வீட்டுக் கூடத்தில் ஒலித்துக் கொண்டிருந்த பாடலை கேட்டு மனைவியின் முகம் பார்த்து அவ்வரிகளை முணுமுணுத்தான்.
“மழை மட்டுமா அழகு? மன்னிக்கச் சொல்லிடும் பொய்களும் அழகு” என்று அவன் பாடவும் சத்தமாகச் சிரித்து விட்டாள் அவள்.
“மன்னிக்கச் சொல்லிடும் பொய்களும் அழகா? பிராடு பிரபா நீங்க?” என்று கேலி செய்து சிரித்தாள்.
அவளின் சிரிப்பை முத்தத்தால் களவாடிக் கொண்டான் அவளின் பிரிய பிரபஞ்சன்.
“போதும் பிரபா. போய்க் குளிங்க” என்று அவனைப் பிடித்துக் குளியலறை நோக்கி நகர்த்தினாள்.
“போதவில்லையே” என்று அதற்கும் ஒரு பாடலை எடுத்து விட்டான்.
பிரபஞ்சனுக்குப் பிரியத்தின் நெருக்கம் எத்தனை கிடைத்தாலும் போதாததுதான். பிரியம் பித்தேறிய நிலை அவனது. பிரியதர்ஷினியின் புரிதல் அவளுக்குக் கணவனின் மீதான பிரியத்தைப் பூரணமாக்கி இருந்தது. அவனை அவனாகவே ஏற்றுக் கொண்டாள் அவள். இருவரும் அவரவர் இயல்பை தொலைக்காமல் பிரியத்துடன் பிரியாதிருக்க அந்தப் புரிந்துணர்வு உதவியது.