பிரிய பிரபஞ்சமே – 30 (2)

பிரகாஷ் திருமணத்துக்கு அத்தனை விடுமுறைகள் எடுத்திருந்தார்கள் அனைவரும். இப்போது அந்தப் பரபரப்பு நீங்கி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார்கள்.

நாள்கள் வாரங்களை விரட்ட மாதங்கள் கடந்திருந்தன.

மரகவதல்லி அவர் சொன்னபடியே ஆசிரியர் பணியை ராஜினாமா செய்து விட்டார். அதில் மருமகளுக்கு மிகுந்த வருத்தம்.

“அத்த, பிளீஸ். இப்போ வீட்ல இருந்து நீங்க என்ன பண்ண போறீங்க? உங்களுக்கு வீட்ல டைம் போகாது அத்த, ரொம்பப் போரடிக்கும். உங்க ஸ்கூல் பசங்க நல்ல மேத்ஸ் மிஸ்ஸ மிஸ் பண்ணுவாங்க. என்னை மாதிரி எத்தனை சுமார் ஸ்டூடண்ட்டுக்கு உங்க ஹெல்ப் தேவைப்படும்னு உங்களுக்குத் தெரியாதா? பிளீஸ், திரும்ப வேலைக்குப் போங்க அத்த” என்று அவள் எத்தனை விதமாகக் கெஞ்சினாலும் அவர் மனம் மாறுவதாக இல்லை. அவர் முடிவில் உறுதியாக இருந்தார்.

“பிரபா..” என்று கணவனைத் தன் பக்கம் பேச அழைத்தாள்.

அவனோ, “அது அம்மா முடிவு. அதுல நான் தலையிட மாட்டேன் பிரியா” என்று ஒரே வரியில் முடித்து விட்டான்.

“பிரபா” என்று அவள் சிணுங்க, அவளின் பாதத்தை மென்மையாக பற்றி வருடியவன், “நோ” என்றான் அழுத்தமாக. மனைவி கேட்டு எதையும் மறுத்ததில்லை அவன். ஆனால், இந்த விஷயத்தில் அம்மாவின் மனத்தை மதித்து, ஒதுங்கி நின்றான்.

“ப்ச்” எனச் சலித்து, வெடுக்கெனத் தன் காலை கணவனிடம் இருந்து உருவினாள் அவள்.

“ஏய், அது என் பிராப்பர்ட்டி பிரியா” என்று அழுத்தமாக அவள் பாதம் பற்றி, தன் தொடையில் வைத்தான்.

அவன் மேலேயே சாய்ந்து கண் மூடினாள் அவள்.

மரகதவல்லி வேலையை விட்டது அவளுக்குப் பெரும் குற்ற உணர்வை ஏற்படுத்தியது. அவர் மனத்தை எப்படியாவது மாற்றி விட வேண்டும் என உறுதியாக இருந்தாள்.

“அத்த..” என்று மீண்டும் அவரிடம் போய் நின்றாள்.

“நாளைக்கு என்ன சமைக்கப் போற?” வேதாளம் போல விடாமல் அதே கேள்வியை அவளிடம் கேட்டார் அவர்.

அதனால் துளிர்த்த சிரிப்புடன், “மெனு சார்ட் பார்க்கணும் அத்த.” என்றாள். மரகவதல்லி வேலையை விட்டிருந்தாலும் இன்னமும் பள்ளிக்கு சென்று கொண்டுதான் இருக்கிறார்.

கணித பாடம் எடுக்கப் புதிய ஆசிரியர் அமர்த்தும் வரை அவரைப் பள்ளிக்கு வரச் சொல்லியிருந்தது பள்ளி நிர்வாகம். ஆகையால் எப்போதும் போலப் பணிக்கு சென்று கொண்டிருந்தார் அவர்.

“புது டீச்சர் அப்பாயிண்ட் பண்ற வரைக்கும் நான் ஸ்கூலுக்குப் போகத்தான் போறேன் தர்ஷினி. அதுக்கு அப்புறம் என்னன்னு நாம அப்போ முடிவு பண்ணிக்கலாம். ஓகே? நான் ரொம்ப யோசிச்சு, மனசாரதான் இந்த முடிவை எடுத்தேன். நீயா எதையாவது யோசிச்சு உன் மனசை போட்டு தேவையில்லாம குழப்பிக்காத. சரியா?” என்று கண்டிப்புடன் அவளுடன் பேசினார். அவளுக்கும் தற்போதைக்கு அதுவே போதுமானதாக இருக்க, அமைதியானாள்.

வீடு, வேலை, கணவனுடன் நேரம் செலவிடுவது, வெளியே செல்வது என அவளின் வாழ்க்கை மிக அழகாக நகரத் தொடங்கியது. அடிக்கடி அம்மா வீடு சென்றாள். அண்ணி பிரவீனாவுடன் நட்பானாள்.

ஒரு பக்கம் பார்த்திபன், மறுபக்கம் பார்கவி என அவர்கள் இருவரின் நண்பர்களுக்கும் தனித்தனியே திருமணம் முடிவாக, அவர்களுடன் வெளியே செல்வது, கல்யாணம் குறித்த கேலி, கிண்டல் என விடுமுறை பொழுதுகள் அழகாகக் கழிந்தன.

அன்று திங்கள்கிழமை மரகதவல்லி முதலில் பள்ளி கிளம்பிட, ஒரு மணி நேரத்தில் பிரியதர்ஷினியும் பிரபஞ்சனும் அலுவலகம் செல்ல தயாராகிக் கீழிறங்கினார்கள்.

அவர்களின் நேரம் மின்தூக்கி வெகு நேரமாக முதல் தளத்திலேயே நின்று கொண்டிருந்தது. இருவரும் இன்னமும் அலுவலகப் பேருந்தில்தான் அலுவலகம் செல்கிறார்கள். அதற்கு நேரமாகவும், “ஸ்டெப்ஸ்ல போயிடலாம் பிரியா” என்றான் பிரபஞ்சன்.

“உங்களால முடியுமா? உங்களுக்குக் கால் வலிக்காதே?” என்று அவள் கரிசனத்துடன் கேட்க, “ஒய் என் கால் சரியாகி ரொம்ப நாள் ஆச்சு பிரியா” என்றான்.

“ம்ஹும், போன வாரம் கூடக் காலைப் பிடிச்சுட்டு நீங்க உக்கார்ந்தத நான் பார்த்தேன்” என்று அவள் சொல்லவும், “உன் முன்னாடி கண்ணைக் கூட அசைக்க முடியல பிரியா” என்று அவளின் கை பிடித்து இழுத்து, “டைமாகுது வா, போகலாம்” என்று பக்கவாட்டில் இருந்த கதவைத் திறந்து படிகளில் இறங்கத் தொடங்கினான்.

சட்டென்று அவனுக்கு முன்னே சென்று அவனைத் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தவளின் பாதம் படியில் புரண்டு விட, நிலைத் தடுமாறினாள் அவள்.

“பிரியா” என்று பதறி, இரண்டிரண்டு படிகளாகத் தாவி அவளைத் தாங்கிப் பிடித்தான் அவன்.

“பிரபா, உங்க கால் சரியாகிடுச்சு” வியப்பில் விழிகள் விரிய மனம் நிறைத்த மகிழ்வுடன் சொன்னாள் அவள்.

“அதானே செல்லம், நானும் சொன்னேன்”

“உங்களுக்குக் கால் சரியாகிடுச்சு பிரபா” மீண்டும் மீண்டும் அதையே சொல்லி அவனை அணைத்து கொண்டாள்.

“ஹே பிரியா. ஸ்டெப்ஸ்ல நிக்கறோம், யாராவது வரப் போறாங்க” என்று அவன், அவளை விலக்க முயல, எக்கி அவன் கன்னத்தில் ஈரமாய் இதழ் பதித்து விலகினாள்.

அவன் கால்கள் அதன் வலுவை திரும்பப் பெற்றதில் அவளுக்கு அப்படியொரு மகிழ்ச்சி. மாலையே விருந்து சமைத்து கொண்டாடி விட்டாள். பெற்றோருக்கும், மாமியாருக்கும் அழைத்துச் சந்தோஷ செய்தி பகிர்ந்தாள்.

பார்த்திபனுக்கும் அழைத்துச் சொன்னாள்.

“அவரைக் கிரிக்கெட் விளையாட கூட்டிட்டு போங்கண்ணா” என்றாள். அவனும் சரியென்றான். ஆனால் பிரபஞ்சன்தான், “இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்” என்று விட்டான்.

அந்த வார இறுதியில் மருத்துவரை சந்தித்துப் பரிசோதனைகள் செய்தார்கள். எல்லாம் நலமே என்றார் அவர்.

உடற்பயிற்சி, பிசியோதெரபி தொடர்ந்து செய்ததால் அவனது காலில் நல்ல முன்னேற்றம் இருந்தது. விபத்துக்கு முன்னிருந்தது போல இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தான். ஆனாலும், கிரிக்கெட் விளையாட மட்டும் செல்வதாக இல்லை அவன்.

அவனுக்கு அவனே தடைப் போட்டுக் கொண்டது போலிருந்தது அவன் செயல்.

இத்தனைக்கும் இப்போது கார் ஓட்டுகிறான். மனைவியையும் அவன்தான் அலுவகத்தில் விடுகிறான். ஆனாலும் கிரிக்கெட் என்றால் இறுக்கமாகி விடுகிறான் என்பதில் கவலையுற்றாள் பிரியதர்ஷினி.

அவர்களின் அபார்ட்மெண்ட் வளாகத்தில் மாலை வேளையில், விடுமுறை தினங்களில் சிறுபிள்ளைகள் கிரிக்கெட் ஆடுவார்கள். அதை அடிக்கடி பால்கனியில் நின்று ரசித்துப் பார்ப்பான் பிரபஞ்சன். அவர்கள் கீழே நடைப் பயிற்சிக்குச் செல்லும் நேரம் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தால் அவர்களுக்குப் பந்து வீசுவான் அவன். அத்தோடு அவனது ஆட்டம் நின்று விடும். அவளுக்குத்தான் அதைக் காண காண மனம் தவியாய்த் தவித்தது.

“பிரபா, உங்க கிரிக்கெட் அகாடெமி..” என்று அவள் ஆரம்பித்தாலே, அவசர வேலையென்று சொல்லி நழுவுபவனை அவளாலும் இறுக்கி பிடிக்க முடியவில்லை.

“அத்த” என்று அவர்களுக்கு நடுவராக மரகதவல்லியை அவள் நிறுத்த போராட, அவரோ மகனுக்கு மேலாக அவளிடம் சிக்காமல் தப்பித்தார்.

“அய்யோடா” என்று தலையில் கை வைத்து அமர்ந்து, “ப்ச்” என வெறுப்புடன் சலித்துக் கொண்டாள்.

“உன்னை ப்ச் சொல்லாதன்னு சொல்லி இருக்கேனா இல்லையா?” என்று அவளை முறைத்த பிரபஞ்சன், அதற்கு நேர்மாறாக அவளைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினான்.

அவனது பிரியமும் பிடித்தமும் அவளுக்கு அத்துப்படி. ஆனால் அவனது இந்தப் பிடிவாதம்தான் அவளுக்குப் பிடிக்கவேயில்லை.

அவனிடம் தெரிந்த மாற்றங்கள் அவளைக் கவலைக்குள்ளாக்கியது.

பார்த்திபன் பேசி கூடப் பிரபஞ்சன் பிடிவாதத்தை விடவில்லை என்றதும் அவன் போக்கில் விட்டு விட்டாள் அவள்.

error: Content is protected !!
Scroll to Top