பிரியதர்ஷினி அண்ணனை முறைத்து, “நீ ரொம்பப் பண்ற அண்ணா?” என்று கத்தினாள்.
“உனக்கு டைம் இல்லனா எதுக்கு எங்களை ஷாப்பிங் வரச் சொல்லி கூப்பிட்ட? அவருக்கு உன்னை விட வேலை முக்கியம். அது முடிச்சுட்டுதான் வருவார். என்ன இப்போ? நீங்க பில் போட்டுட்டு கிளம்புங்க. நான் அவர் வந்ததும் எங்களுக்கு ஷாப்பிங் முடிச்சுட்டு பொறுமையா அவரோட எங்க வீட்டுக்கு போய்க்கறேன்” என்று பொரிந்து தள்ளினாள்.
“ஹே தர்ஷி, நான் சும்மா சொன்னேன். நீ என்ன இவ்ளோ சீரியஸா எடுத்துக்கற?” என்று பிரகாஷ் தங்கையை மலை இறக்கும் வேலையில் இறங்க, “என்னது சும்மா சொன்னியா? இப்போ நீ சொல்றதுதான் சும்மா அண்ணா. அப்போத நீ சீரியஸாதான் பேசினன்னு எனக்கு நல்லாவே தெரியும்” என்றாள் நிதானமாக.
“உனக்கு எதாவது ஒரு விஷயத்தை அண்ணி கிட்ட சொல்லணும்னா, அவங்ககிட்ட நேரடியா சொல்லி பழகு. அதை விட்டுட்டு அவங்களை லைன்ல வச்சுட்டு என்னைக் குத்தி பேசாத. அதென்ன எப்போ பாரு டேடிஸ் லிட்டில் பிரின்சஸ்ன்னு சொல்லிட்டே இருக்க? அப்போ அப்பாக்கு உன் மேல் அன்பில்லன்னு சொல்றியா? இல்ல அப்பா உன்னைப் பாசமா பார்க்கலன்னு சொல்றியா?” என்று கோபமாகக் கேட்டாள்.
பிரகாஷின் கையில் இருந்த அலைபேசி அவனது உள்ளங்கை வியர்த்ததில் நழுவிடும் போலிருந்தது. அதை இறுக்கமாகப் பற்றினான் அவன்.
அவனோடு இணைப்பில் இருந்த பிரவீனா அவன் காதில் கத்தி கொண்டிருந்தாள்.
“அப்போ அப்பாக்கு உன் மேல் அன்பில்லன்னு சொல்றியா?” என்று மகள் கேட்டதும் மாணிக்கவேலும் அதிர்ந்து விட்டார்.
ஒரே நேரத்தில் இரண்டு வெடியின் திரியை பற்ற வைத்து விட்டிருந்தாள் அவள்.
தங்கையை அதிர்ச்சியுடன் ஏறிட்டு, “அடிப்பாவி. அண்ணன்னு கூடப் பார்க்காம என்னை எல்லாப் பக்கமும் அடி வாங்க விடுறியே, இது உனக்கே நல்லா இருக்கா?” என்று வாய் விட்டுப் புலம்பினான் பிரகாஷ்.
அவன் காதில் பிரவீனா கத்த, “அட இரும்மா, நான் திரும்பக் கால் பண்றேன்” என்று அவளிடம் அவசரமாகச் சொன்னவன் அழைப்பை துண்டித்து, தங்கையிடம் திரும்பி, “சாரி” என்றான்.
“உன் சாரி எனக்கொன்னும் வேணாம் போ” என்று கோபமாக முகத்தைத் திருப்பினாள் அவள்.
“அண்ணா லேட்டாகுதுன்னுதான் அப்படிச் சொன்னேன் தர்ஷி, பிளீஸ் சாரி”
“அப்படியென்ன லேட்டாகிடுச்சு இப்போ? மணி ஏழுதானே ஆகுது?”
என்று கேட்டாள்.
“நாம இங்க வந்து மூனு மணி நேரம் ஆச்சு தர்ஷி. அதான்..” என்று இழுத்தான்.
“இப்போ அவசரமா ஷாப்பிங் முடிச்சுட்டு நீ எங்க அண்ணா போகப் போற? அடுத்து டின்னர் பிளான்தானே? அது முடிச்சுட்டு வீட்டுக்குதானே போகப் போற? என்னவோ உனக்காக வேலை வரிசை கட்டி நிக்கறது போல ரொம்பப் பண்ற நீ” என்று வருத்தத்துடன் சொல்லி விலகி நடந்தாள்.
“தர்ஷி சாரி” என்று அவளின் கைப் பிடித்தான்.
“என் கைய விடுண்ணா” என்று அவன் கையை உதறி, “இந்தாங்கப்பா, அம்மா எனக்குச் செலக்ட் பண்ண சாரி. இதுல அவருக்கு எடுத்த ஷர்ட் இருக்கு. இது ரெண்டையும் பில் போடுங்க” என்று தன் கையில் இருந்த துணியை அப்பாவிடம் கொடுத்தாள்.
“தர்ஷி, நாம எடுத்த மத்த சேலையெல்லாம் பில் போட வேணாமாடா? நீ மாப்ளைக்கு நிறைய ஷர்ட் எடுத்தியே, இப்போ ஒன்னு மட்டும் பில் பண்ண குடுக்கற? எல்லாத்தையும் எடு, பில் போட்டுடலாம்” என்றார் ராதா.
“அண்ணா நிச்சயத்துக்குதானேம்மா ட்ரெஸ் எடுக்க வந்தோம்? அதுக்கு ஒரு செட் எங்க ரெண்டு பேருக்கும் எடுத்தாச்சு. நீங்க அது மட்டும் பில் போடுங்க போதும். மத்தது நான் அவர் வந்ததும் பில் பண்ணிக்கறேன்” என்று அழுத்தமாகச் சொன்னாள்.
“தர்ஷி, என்ன நீ? இதுக்குப் போய்க் கோபிச்சுட்டு.. அண்ணா விளையாட்டுக்கு சொன்னேன்” என்று பிரகாஷ் அவள் முன் வந்து சொல்ல, “நீ விளையாட்டுக்கு சொன்னதாவே இருக்கட்டும். ஆனா நான் சீரியஸா எடுத்துக்கிட்டேன் போ” என்று முகம் திருப்பினாள்.
“உனக்கு லேட்டாகுதுன்னா என்னைப் பேசு, அதை விட்டுட்டு பிரபாவை எப்படிப் பேசுவ நீ? நான் பிரவீனா அண்ணிய இப்படிப் பேசினா நீ சும்மா இருப்பியா அண்ணா?” என்று அவனிடம் எகிறிக் கொண்டு போனாள். தங்கையின் கோபத்திற்கான காரணமே அப்போதுதான் அண்ணனுக்கு விளங்கியது.
“அண்ணியை டைரக்ட்டா பேசுறதை விட்டுட்டு என்னையும், அப்பாவையும் வச்சு அவங்களைப் பேசுற நீ. அது கரெக்ட்டா அண்ணா? நாளைக்கு உன் நிச்சயத்துல உன் மாமனார் இருப்பார் இல்ல? நீ சொன்னதை அவர்கிட்ட நான் சொல்லவா?”
“தர்ஷி” தங்கையின் காலுக்குப் பதிலாகக் கையைப் பிடித்து விட்டான் பிரகாஷ்.
“அண்ணியை எங்கயும் விட்டு கொடுக்காதண்ணா. எனக்கும் பிரபாவுக்கும் எவ்வளவோ சண்டை வந்திருக்கு. ஆனா, அதையெல்லாம் நான் உன்கிட்டயோ இல்ல அப்பாகிட்டயோ சொன்னேனா? இல்ல, நீ இப்போ பண்ண மாதிரி இன்டைரக்ட்டா குத்தி காட்டி அவரைப் பேசினேனா?” என்று அவள் பொரிய, “அண்ணா பேசினது தப்புதான் தர்ஷி. சாரி, சாரி. இனிமே இப்படிப் பேச மாட்டேன்” என்று அவளின் கையை அழுத்தி கெஞ்சினான்.
“என் மாமனாரே இப்போதான் மனசு இறங்கி வந்திருக்கிறார். அவரை வச்சு என்னை மிரட்டுறியே. நியாயமா?” என்று அவன் பாவமாகக் கேட்க, அந்தப் பாவத்தில் அவளுக்குச் சிரிப்பு வந்தது.
“என்ன வேடிக்கை பார்த்திட்டு இருக்கீங்க. உங்க பொண்ணைப் போய்ச் சமாதானம் பண்ணுங்க” என்று ராதா கணவரின் காதை கடிக்க, மாணிக்கவேல் அப்போதுதான் மெதுவாக மகளிடம் சென்றார்.
“என்ன கடையில வச்சு ரெண்டு பேரும் ஆர்கியூ பண்ணிட்டு இருக்கீங்க? வாங்க பில் போடலாம்” என்று மகனிடம் சொல்லி, மகளின் கைப் பிடித்து, “குட்டிம்மா கோபப்படக் கூடாதுடா” என்றார்.
“பிரபா வந்துடுவேன்னு சொன்னார்ப்பா. அதான் அண்ணா அவரைப் பேசவும் எனக்குக் கோபம் வந்துடுச்சு” என்றவள், “நாம பில் பண்ணிட்டு கிளம்பலாம்ப்பா. அவருக்கு நான் மெசேஜ் பண்ணி சொல்லிடுறேன்” என்றாள்.
“இல்லடா மாப்ள வரட்டும். நாம வெயிட் பண்ணுவோம்”
“வேணாம்ப்பா, உங்களுக்கு லேட்டாகுது. நாம வந்து ரொம்ப நேரமாச்சு இல்ல? பில் பண்ணுங்கப்பா பிளீஸ்” என்று முடிவாக அவள் சொல்லவும், மறுக்க முடியாமல் அங்கிருந்து நகர்ந்தார் அவர்.
“இன்னைக்கு எடுத்தது எல்லாம் மொத்தமா பில் பண்ணிடலாம் தர்ஷிம்மா” ராதா, பிரகாஷ் இருவரும் எவ்வளவு வற்புறுத்தியும் அவள் நின்ற நிலையில் இருந்து இறங்கி வருவதாக இல்லை.
“அப்பா பே பண்றேன் குட்டிம்மா” என்று மாணிக்கவேலும் சொல்ல, “அப்பா பிளீஸ். சத்தியமா இன்னைக்கு நான் ஷாப் பண்றதுக்கு நான்தான் பணம் கொடுக்கணும்னு இருந்தேன். எனக்கு அண்ணா மேல கோபம்லாம் இல்லப்பா. புரிஞ்சுக்கோங்க” என்றாள் அவரின் கைப் பிடித்து.
“சரிடா. அப்போ அப்பா மாப்ளைக்கு ரெண்டு ஷர்ட் வாங்கித் தருவேன். நீ வாங்கிக்கணும்.” என்றவர், அவள் மறுக்க இடம் தராமல் ஆண்கள் ஆடை பக்கம் அவளை அழைத்துச் சென்றார்.
அவர் தேர்ந்தெடுத்த உடைகளைக் கையால் ஒதுக்கி, “அவருக்கு ரெட் கலர் பிடிக்காதுப்பா. இந்தக் காலர் இல்லாத மாடல் ஷர்ட் அவர் கம்பர்ட்டபிளா ஃபீல் பண்ண மாட்டார்ப்பா, இதுவும் வேணாம்” என்று அவள் கணவனின் விருப்பம் அறிந்து சொல்ல, மாணிக்கவேல் மகளின் முகம் பார்த்து முறுவலித்தார்.
“சரி, குட்டிம்மா. நீ எடுத்த வரைக்கும் பில் போடலாம் வா” என்று அவளை அழைத்துச் சென்றார்.
“நான் பே பண்றேன் தர்ஷி பிளீஸ்” என்று பிரகாஷ் தங்கையிடம் கெஞ்ச, வேகமாகத் தன் வங்கி கணக்கு அட்டையை எடுத்துக் கடை பணியாளரிடம் நீட்டினாள் அவள்.
பிரகாஷ், “தர்ஷி” என்று அதட்டி அவளை முறைக்க, பதிலுக்கு அவளும் முறைத்தாள்.
“உங்க சண்டையை வீட்ல போய் வச்சுக்கோங்க ரெண்டு பேரும்.” பிள்ளைகள் இருவரையும் ராதா அதட்டினார்.
“நான் காலேஜ்ல அவ்ளோ பிள்ளைங்களைச் சமாளிக்கறேன். ஆனா இங்க என் பிள்ளைங்க ரெண்டு பேரை என்னால சமாளிக்க முடியல” என்று மாணிக்கவேல் புலம்ப, “அப்பா” என்று கோபித்தாள் மகள்.
“அப்பா சொல்றேன், அண்ணா மேலதான்டா தப்பு. அவன் சாரி சொன்னான் இல்ல. நீ மன்னிச்சு அவன்கிட்ட பேசிடு பிளீஸ்” என்று அவர் சொல்ல, அண்ணனை திரும்பி முறைத்தாள் அவள்.
அந்தத் துணிக் கடை கூட்டத்தில் மனைவியைக் கண்களால் தேடி தொட்டு வேகமாக அவளை நெருங்கி அவள் தோளில் கைப் போட்டு, “சில்ல்ல்ல் பிரியா” என்றான் பிரபஞ்சன்.
பட்டென்று அவனைத் திரும்பிப் பார்த்து பளிச்சென்று புன்னகைத்தாள் பிரியதர்ஷினி.
மறுகணம் காட்சிகள் அப்படியே மாறி போயின.
“மாப்ள” என்று அவனை வரவேற்றுச் சிரித்துப் பேசத் தொடங்கினார்கள். ஆனால், பிரியதர்ஷினி அவர்களின் ஆடைகளுக்கான பணத்தை அவள்தான் செலுத்தினாள். அதில் பிரகாஷுக்கு நிரம்ப வருத்தம்.
பிரியதர்ஷினி கணவனுக்கு எடுத்த சட்டைகளை அவனிடம் காண்பித்தாள். எல்லாமே அவனுக்குப் பிடித்த நிறங்களில் இருக்க, புன்னகைத்தான் அவன்.
மனைவிக்கும் அவனைப் புரிய ஆரம்பித்திருக்கிறது. அவனது பிடித்தங்களைத் தெரிந்து வைத்திருக்கிறாள் அவள். அவனது விருப்பங்களுக்கு மதிப்பு கொடுக்கிறாள். அதை விட என்ன வேண்டும் அவனுக்கு?
பிரபஞ்சனின் பிரபஞ்சம் பிரியத்தால் பூரணமானது.
அவர்கள் ஜவுளி கடையில் இருந்து வெளியே வந்து இரவு உணவு உண்ண அருகில் இருந்த கடைக்குச் சென்றார்கள்.
“என்ன ஆர்டர் பண்ணட்டும்?” என்று பிரகாஷ் அவர்களிடம் கேட்கையில் பிரபஞ்சனின் அலைபேசி சத்தமாக ஒலியெழுப்பியது. திரையில் பார்த்திபன் பெயர் ஒளிரவும், அழைப்பை ஏற்காமல் அணைத்தான் அவன்.
“ரொட்டி, நாண், பட்டர் சிக்கன் மசாலா சொல்லவா மாப்ள?” தங்கையை விட்டுவிட்டுப் பிரபஞ்சனிடம் கேட்டான்.
அதற்குள் மீண்டும் அவன் அலைபேசியில் அழைப்பு வரவும், “எடுத்து பேசுங்க பிரபா” என்றாள் பிரியதர்ஷினி. உடனே அழைப்பை ஏற்றான் அவன்.
“பார்த்தி ஃபேமிலி கூட வெளில இருக்கேன்” என்றவன், “ஓ, ஓகே. கிவ் மீ அ மினிட்” என்று சொல்லி, மனைவியிடம் திரும்பினான்.
“ஃபைவ் மினிட்ஸ் குடு பிரியா, போன் பேசிட்டு வந்துடறேன்” என்று கெஞ்சலாகச் சொன்னான். அவள் சரியெனத் தலையசைக்கவும், எழுந்து வெளியே சென்றான். பிரியதர்ஷினிக்கு அந்நிகழ்வு பழைய நினைவுகளை எல்லாம் கிளறி விட்டது.
திருமணமான புதிதில் இப்படித்தானே அவளை உணவகத்தில் தனியாக விட்டுச் சென்றான் அவன். அன்றைக்கு அவளுடன் யாரும் இல்லை. ஆனால், இன்று? யாரும் இல்லை என்றாலும் அவள் பதற மாட்டாள்.
எங்கிருந்து எங்கு வந்து விட்டார்கள் என்பதை நினைக்க அவள் உதடுகள் அழகாகப் புன்னகை புரிந்தன.
பிரியம், பிரபஞ்சத்தின் அளவுக்கு அவர்களிடம் இருந்தாலும் புரிதல் அல்லவா வாழ்க்கையை அழகாக அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது.
அவர்களின் வாழ்க்கையை அழகாக்கியது அவர்களுக்கு இடையே வந்திருந்த புரிதல்.
“உனக்குச் சைனீஸ் காம்போ ஓகே தானே தர்ஷி. மாப்ளைக்கு நாண் அண்ட் பட்டர் சிக்கன் சொல்றேன்” என்று பிரகாஷ் சொல்ல, “இல்லண்ணா. அவருக்கு இடியாப்பம், பாயா இல்லன்னா சிக்கன் குருமா சொல்லு.” என்றாள் அவள்.
அவர்களுக்கான உணவு வந்த மறுநிமிடம் பிரபஞ்சன் வந்து விட்டான். மற்றவை மறந்து உணவு நேரம் கலகலப்பாகக் கழிந்தது.
தங்கையைத் தானே வீட்டில் கொண்டு விடுவதாகப் பிரகாஷ் முன் வர, “அப்புறம் அம்மாப்பா எப்படி வீட்டுக்கு போவாங்க? நீங்க உன் கார்ல கிளம்புங்க அண்ணா. நாங்க ஆட்டோ எடுத்துப்போம்” என்று விட்டாள் பிரியதர்ஷினி.
“உங்களை வீட்ல விட்டுட்டு அப்படியே நாங்க வீட்டுக்கு போய்க்கறோம்” என்று பிரகாஷ் சொல்ல, “அது வீண் அலைச்சல்ண்ணா” என்று மறுத்து விட்டாள் அவள். பிரகாஷ் வேறு வழியின்றிச் சரியென்று விட்டான்.
அவனது திருமண நாள் வரையிலும் கூட அவனை அப்படித்தான் போட்டு பாடாய்ப்படுத்தினாள் பிரியதர்ஷினி.
தங்கையைச் சமாளிக்கப் பிரகாஷ் தலையால் தண்ணி குடிக்க வேண்டியிருந்தது. பிரவீனாவின் அப்பாவிற்கு வேறு அவளைப் பிடித்து விட, “சிக்கினேன் நான்” என்று இன்னமுமே தங்கையைச் சமாதானம் செய்யும் படலத்தில் மூழ்கினான்.
“எனக்குக் கோபம் வந்தா நான் ரொம்பப் பண்றேன் இல்ல பிரபா?” என்று கணவனிடம் கண்ணைச் சுருக்கி குற்ற உணர்ச்சியுடன் சொன்னவள், அன்றே அண்ணனை அடித்தது போதும் என்று அவனுடன் ராசியாகி விட்டாள்.
பிரகாஷ் பெருமூச்சு விட, மாணிக்கவேல் மகனின் நிலைக் கண்டு சத்தமாகச் சிரித்தார். ராதா மகளைப் போலவே வருங்கால மருமகளையும் அன்பாக அரவணைத்துக் கொண்டார்.
பிரகாஷின் திருமணம் வெகு விமர்சையாகச் சிறப்பாக நடந்தேறியது.