அப்படியே கையைக் கூடக் கழுவாமல் உணவு மேஜையில் அமர்ந்திருந்தாள்.
“டோண்ட் ஓவர் திங்க் பிரியா. சில்ல்ல்” என்று அவளின் தோளில் தட்டிய பிரபஞ்சன், “அம்மா சொல்ற எல்லாத்துக்கும் ஆமா சாமி போடாத” என்றான்.
“ம்ம், நீங்கதான் அத்தை கிட்ட சொல்ல வேணாம்னு சொன்னீங்க. நான் அவங்ககிட்ட சொல்லாம இன்டர்வியூ போனதுதான் இப்போ அவங்களுக்குக் கோபம்”
“காலையில சரியாகிடுவாங்க, ஃப்ரீயா விடு பிரியா” என்றான்.
“அவங்க கோபமா இருக்காங்க பிரபா..”
“நீ இப்போ என்னைக் கோபப்படுத்துற” என்றான் கோபம் துளிர்த்த குரலில்.
“நியாயமா பார்த்தா இந்தச் சிட்டுவேஷன்ல, இந்த வீட்ல நான்தான் கோபப்படணும்” என்று அவள் சொல்லவும் அவன் முகத்தில் புன்னகையின் சாயல் வந்து போனது.
“ப்ச்” என்றாள். பிரபஞ்சன் பட்டென்று இருக்கையைச் சத்தமாகப் பின்னுக்குத் தள்ளி எழுந்திருந்தான்.
“இந்தச் சலிச்சுக்கற சவுண்ட் கேட்டாலே கடுப்பாகுது” என்று கடுப்புடன் முணுமுணுத்துச் சென்றான்.
அதற்கும், “ப்ச்” என்றாள் அவள். வேறென்ன சொல்லவெனத் தெரியவில்லை.
ஐந்து நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தவள், ஒரு பெருமூச்சுடன் எழுந்து மிச்ச சொச்ச வேலைகளைச் செய்து முடித்தாள். மிச்சமான உணவை குளிர்சாதன பெட்டியில் வைத்து, பாத்திரங்களைத் துலக்கி வைத்து, பாலை காய்ச்சினாள்.
“மிஸ்” மெல்ல மாமியாரின் அறைக்குள் தலையை மட்டும் நீட்டி அழைத்தாள்.
படிக்கும் கண்ணாடியை அணிந்து எதையோ கவனமாக வாசித்துக் கொண்டிருந்தவர், “ம்ம்” என்றார்.
“பால்”
“இப்படி வச்சுட்டு போ” என்று அங்கிருந்த சிறிய மேஜையைக் கண் காட்டினார். ஆனால் உள்ளே சென்று பால் டம்ளரை அவர் கையில் கொடுத்தாள். பால் மிதமான சூட்டில் இருந்தது. மரகதவல்லி மெளனமாய் வாங்கி அருந்தினார்.
அவர் ஏதேனும் பேசுவார் என அவள் காத்திருக்க, மௌனம் மட்டுமே பதிலாக வரவும், அவளும் மௌனமாய் வெளியேறினாள்.
பால்கனி பீன் பேக்கில் கால் நீட்டி அமர்ந்து பாட்டு கேட்டுக் கொண்டிருந்தான் பிரபஞ்சன்.
இரவும் நிலவும் மேனியை தழுவிய தென்றலும் ஏகாந்த உணர்வை தந்திருந்தது.
அறையில் நிறைந்திருந்த நிசப்தத்தை நீக்கியது மெல்லிய கொலுசு சத்தம்.
அவன் மனைவியின் வருகையை அறிவிக்கும் அறிவிப்பொலி.
அவன் மீசைக்கடியில் கீற்றாய் புன்னகையில் பிரிந்தன உதடுகள்.
அவனுக்கான பால் கோப்பையைப் படுக்கையை ஒட்டிய மேஜையில் வைத்து விட்டு பொத்தென்று படுக்கையில் விழுந்தாள் அவள்.
அன்றைய நாளின் நிகழ்வுகள் எல்லாம் மனக்கண்ணில் மறுபடியும் படமாக ஓடி மறைந்தன.
நேர்காணல் சென்றது, கணவன் அவளை உணவகத்தில் தனியாகத் தவிக்க விட்டுவிட்டுச் சென்றது, மாமியாரின் கோபம் என அனைத்தும் சேர்ந்து அவளை அழுத்தத்தில் ஆழ்த்தியது. அப்படியே மூச்சை பிடித்துக் கோபமாகக் கத்தி தீர்த்திட வேண்டும் போலிருந்தது. ஆனால், அவளுக்கு அதெல்லாம் செய்ய வராதே.
“ஷ், ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு. கத்த கூடாது. சரியா? உனக்கு என்ன சொல்லணுமோ அதை நிறுத்தி நிதானமா சொல்லு பார்ப்போம்” சாட்சாத் மரகவதல்லி மாமியாரின் அறிவுரைதான். இன்றில்லை, அன்றே கற்றுத் தந்திருந்தார். அதை அவரிடம் அதிகம் பின்பற்ற நேர்ந்ததுதான் காலத்தின் கட்டாயம், அவளுக்குக் கொடுமை.
அறையில் மெல்லிய வெளிச்சம் நீல நிறத்தில் நிறைந்திருந்தது. அந்த நிறமே அந்த அறைக்கு ஒரு தனிக் கவர்ச்சியைத் தந்திருந்தது.
ஊதா நிற பைஜாமா அணிந்திருந்தாள். அதன் காற்சட்டை அவளது கணுக்காலுக்கு மேலேறியிருந்தது. பாதங்கள் இரண்டும் பளிச்சென்று விளக்கொளியில் பளிச்சிட்டன. அவள் பாதங்களில் படர்ந்திருந்த கொலுசு அத்தனை அழகாக இருந்தது.
துருவிய இஞ்சி நிற தோலில் வெள்ளி வெளிச்சத்தை வாரி இறைத்ததைப் போல அழகாக்கியது.
பிரபஞ்சன் கரம் மென்மையாய் அவள் பாதத்தைப் பற்றி அழுத்தமாய் வருடி, அவள் பாதத்தை அவன் மடிக்கு மாற்றியது.
ஒற்றை விரலால் கொலுசோடு சேர்த்து அவள் பாதம் வருடினான். கூச்சத்தில் உடல் சிலிர்க்க கண்ணைத் திறந்து கணவனைப் பார்த்தாள்.
கொலுசை வருடி முத்தை சுண்டி விட்டான். சிணுங்கலாய் ஓசை வர, திரும்பத் திரும்ப அதையே செய்தான். மெல்ல குனிந்து அவள் பாதத்தில் முத்தமிட்டான்.
“பிரபா..”
அவனது, “ம்ம்” அவள் பாதத்தில் உம்மாவென முடிந்திருந்தது. அவளும் அவனில் முடிந்திருந்தாள்.
“கோபமா இருப்ப, நோ சொல்லுவன்னு நினைச்சேன்” அவள் கழுத்தில் முகம் பதித்து முணுமுணுத்தான்.
“கோபமாதான் இருக்கேன்.”
“அப்புறம்..”
“கோபத்தை எப்படிக் காட்டணும்னு எனக்குத் தெரியும்.” என்றாள்.
“எப்படி?” தலையை உயர்த்தி அவள் முகம் பார்த்தவன் முகத்தில் மந்தகாசப் புன்னகை.
“சீக்கிரம் பார்ப்பீங்க” என்றவளை வில்லங்கமாகப் பார்த்து வைத்தான். பட்டென்று அவன் விழிகளை மூடினாள்.
“பார்த்தது ஆல்ரெடி மனசுல ஓவியமா பதிந்தாச்சு. இனி நீ கண்ணை மூடி..” சொல்ல வந்ததை முடிக்காமல் சத்தமாகச் சிரித்திருந்தான். பிரபஞ்சனின் சிரிப்பு, “அய்யோடா” என வெட்கச் சிரிப்பாகப் பிரியதர்ஷினியிடம் பிரதிபலித்தது.
மறுநாள் காலையில் எப்போதும் போல மாமியாரிடம் பேசினாள். அவரும் எப்போதும் போலக் காலை, மதிய உணவுக்கான பட்டியல் கொடுத்தார். அதற்கு மேல் பேச்சை வளர்க்கவில்லை அவர். அவளும் சமையல் வேலையை மட்டும் செய்திருந்தாள்.
அடுத்து வந்த நாள்களும் மரகதவல்லியின் மௌனத்திலேயே கழிந்திருந்தது.
பிரியதர்ஷினி பொறுக்க முடியாமல் அவரிடம் சென்று, “அத்த” என்றழைத்திருந்தாள்.
நொடியில் நிமிர்ந்து அவளை ஆச்சர்யமாய்ப் பார்த்தார் அவர்.
“எங்க சித்தி கால் பண்ணாங்க. இந்தச் சண்டே நமக்கு அவங்க வீட்ல விருந்து. உங்ககிட்ட பேசணும்னு சொன்னாங்க.”
“ரெண்டு நாளைக்கு முன்னாடியே என்கிட்ட பேசிட்டாங்க. சண்டேதானே? போகலாம்” என்றார்.
“நீங்களும் வர்றீங்கதானே மிஸ்?” என்றவளை புருவங்கள் சுருக்கி விசித்திரமாகப் பார்த்தார்.
“அத்த” என்று அவசரமாகத் திருத்தினாள்.
“எங்கப்பாம்மா, அண்ணா எல்லாம் வர்றாங்க அத்த. பிளீஸ் நீங்களும் வாங்க”
“நான் வர்றேன்னு உன் சித்தி கிட்ட சொல்லிட்டேன்” என்றார் இளநகையுடன்.
அவள் இதழ்கள் பெரிதாகப் புன்னகையில் பிரிய, “ஓகே அத்த” என்றாள்.
அன்றிரவு, “பிரபா, இந்தச் சண்டே எங்க சித்தி வீட்டுக்கு விருந்துக்குப் போகணும் நாம” என்று நினைவுப்படுத்தினாள்.
“ஓ, அப்படியா? இந்தச் சண்டேவா?”
“ஆமா”
“இந்தச் சண்டே எங்க அக்கடெமில மேட்ச் இருக்கே பிரியா.” என்று கிரிக்கெட் போட்டியை பற்றி அவன் குறிப்பிட, “அது ரொம்ப முக்கியமா உங்களுக்கு” என்று முறைத்தாள்.
“இல்லையா பின்ன? முக்கியமான மேட்ச் பிரியா. அதுவும் நான் டீம்ல மெயின் பேட்ஸ்மேன்” என்றவனை, கண்ணை உருட்டி முறைத்தாள்.
“சரி, முறைக்காத. எனக்கு மறக்காம சாட்டர்டே ரிமைண்ட் பண்ணு. ஓகே?” என்று கேட்டான். சரியென்றாள்.
அந்த வார சனிக்கிழமை அவனுக்கு அலுவலகம் இருந்தது. இரவு தாமதமாகத்தான் வீடு வந்தான்.
அவனோடு பின்னிப் பிணைந்து இழைந்து குழைந்த பிரியதர்ஷினிக்கு உலகமே பின்னுக்குப் போய் விட்டது.
மறுநாள் அவள் கண் விழிக்கும் போதே மணி எட்டு முப்பது.
“அய்யோடா” என்று அடித்துப் பிடித்து வாரி சுருட்டி எழுந்தாள். அவள் பக்கத்தில் புருஷன் பிரபஞ்சனை காணவில்லை.
அவசர அவசரமாகக் குளித்து உடை மாற்றி, “பிரபா” என்றழைத்தபடி வெளியே சென்றாள். வீட்டினுள் அவன் தடயமே இல்லை.
மரகதவல்லி சமையல் அறையில் இருந்தார்.
“மிஸ், அவரை எங்க?” என்று அவள் கேட்க, “பார்த்திபன் வந்திருந்தான். அவனோட கீழ போய் இருக்கான். கால் பண்ணு வந்திடுவான்” என்றார்.
அவனது அலைபேசிக்கு அழைத்தாள். ஒன்று, இரண்டு, மூன்று, ஆறாம் முறையும் அழைப்பு ஏற்கப்படவில்லை. கீழே சென்று தேடினால் அவனது கார் மட்டுமே அங்கிருந்தது, அவனில்லை.
அந்நேரம் அவளுக்கு ராதாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
“வீட்ல இருந்து கிளம்பிட்டீங்களா தர்ஷி? எங்க வந்துட்டு இருக்கீங்க?” என்று கேட்டார் அவர். பதில் சொல்ல முடியாது தொண்டை வறண்ட உணர்வில் தவித்தாள்.