மரகதவல்லி மாணவர்களின் முன்பு மருமகளைக் கண்டிக்க மாட்டார் என்பது நிச்சயம். அவரும் ஒரு ம்ம்முடன் தன் கவனத்தை மாணவர்களின் பக்கம் திருப்பியிருந்தார்.
அவளிடம் ஏதேனும் கேட்பார், இதுதான் வாய்ப்பென்று அவரின் மாணவர்களின் முன்னேயே தன் வேலை வாய்ப்பை பற்றிச் சொல்லி விடலாம் என்று அவள் நினைத்திருக்க, அப்படி எதுவுமே நடக்கவில்லை.
பிரபஞ்சன் நின்ற இடத்திலேயே தலையை அலைபேசிக்குக் கொடுத்திருந்தான்.
அதற்கு மேல் அங்கு நின்று என்ன செய்வதென்று தெரியாமல் அவளும் படுக்கை அறைக்குள் நுழைந்தாள்.
படுக்கையில் கிடந்த கைப்பையைத் தூக்கி அதிலிருந்த அலைபேசியை எடுத்தாள்.
அம்மா, அப்பா, அண்ணன், பார்கவி என வரிசையாகத் தவறிய அழைப்புகள் இருந்தன.
பார்கவிக்குக் குறுஞ்செய்தியை தட்டி விட்டு, அம்மாவை அழைத்தாள்.
“என்னடா தர்ஷி? வீட்டுக்கு போயாச்சா? அம்மாவுக்குப் போனே பண்ணல? இன்டர்வியூ எப்படிப் போச்சு?” என்று அடுக்கடுக்காகக் கேள்விகளை அடுக்கினார் ராதா.
“பேங்க்ல வேலை பார்த்திட்டு இப்படிக் கணக்கு வழக்குல்லாம கேள்வி கேட்காதீங்கம்மா”
“ஹாஹா, சேட்டையைப் பாரு. என்னாச்சு, இன்டர்வியூல சொதப்பிட்டியா?” என்று சிரிப்புடன் கேட்டார்.
“இல்லம்மா..”
“அப்புறம்..”
“அவங்க கால் பண்றேன்னு சொல்லியிருக்காங்க”
“ம்ம், கடைசியில ஒரு பட் கேட்குதே எனக்கு..”
“பட்..” என்று இழுத்தவள், “கால் பண்ண மாட்டாங்கன்னு தோனுதும்மா” என்றாள்.
“உனக்கு இதை விடப் பெட்டர் ஜாப் கிடைக்கும் டா. அதுனால தள்ளி போகுதுன்னு நினைச்சுக்கோ”
“ம்ம், ம்மா.. ஒருவேளை நான் வேலைக்குப் போகாம வீட்லயே இருந்தா?”
“அது உன் விருப்பம்டா. கொஞ்ச நாளைக்கு வீட்ல இருக்க ஆசைப்பட்டா இருந்துக்கோ. யார் உன்னை வேணாம்னு சொல்ல போறாங்க? பொறுமையா உனக்குப் பிடிச்ச, நீ எதிர்பார்க்கற வேலை கிடைச்சதும் ஜாப் போ.” என்றார். இத்தனை புரிதலுடன் பேசும் அம்மாவிடம், மாமியார் தன்னை வேலைக்குப் போகக் கூடாதென்று நிபந்தனை போட்டிருப்பதை எப்படிச் சொல்லுவாள்?.
திருமணத்திற்கு முன்பு அவள் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனம், அவள் வீட்டிலிருந்து கொஞ்சம் தூரம்தான். அதுவே பிரபஞ்சன் வீட்டிலிருந்து பயணித்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பயணிக்க வேண்டியிருந்தது.
“டெய்லி எப்படி அவ்ளோ தூரம் போயிட்டு வருவ? ரஞ்சன் போலக் கொஞ்சம் பக்கத்துல ஜாப் பாரு” என்று அவளிடம் சொன்னதோடு இல்லாமல் அவளின் பெற்றோரிடமும் பேசினார் மரகதவல்லி. எப்படியோ அவர்களைச் சம்மதிக்க வைத்து விட்டார்.
“அவங்க சொல்றதும் சரிதான் டா தர்ஷி.” என்று ராதாவும் மகளை வேலையை விடச் செய்திருந்தார்.
மகள் திருமணத்துக்குப் பின் அவ்வளவு தூரம் தினமும் பயணம் செய்து சோர்ந்து போக வேண்டாமே எனத் தாயாக யோசித்திருந்தார் அவர். அதைத் தவறென்று சொல்லிட முடியாது. ஆனால் இப்படி ஒரேடியாக வீட்டில் உட்கார வைக்க மரகதவல்லி திட்டமிடுவார் என அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மகளும் அவரிடம் சொல்லப் போவதில்லை. ஏனென்றால் மாமியாரின் மறுப்பை மீறி நிச்சயமாய் வேலைக்குச் செல்லும் எண்ணம் அவளுக்கிருந்தது.
“தர்ஷி” என்ற அம்மாவின் குரலில் கலைந்தாள்.
“சொல்லுங்கம்மா”
“வர்ற வாரம் சித்தி வீட்ல உங்களுக்கு விருந்து. சித்தி, உனக்குப் போன் பண்ணாதானே?”
“ம்ம், சித்தியும், சித்தப்பாவும் நேத்து போன் பண்ணி எங்களை இன்வைட் பண்ணாங்கம்மா. இவர் கிட்டயும் பேசினாங்க”
“சரிடா. எங்களையும் கூப்பிட்டுருக்கா. அப்பா, நானு, உங்கண்ணா எல்லாம் நேரா அங்க வந்துடுவோம். நீங்க காலையிலேயே வந்துடுவீங்கதானே?” என்று கேட்டார்.
“சித்தி பிரேக்பாஸ்ட்டுக்கே வீட்ல இருக்கற மாதிரி வாங்கன்னுதான் சொன்னாங்கம்மா. சோ ஒரு எட்டு மணி போல இங்கருந்து கிளம்பப் பிளான் பண்றேன்ம்மா” என்றாள்.
“சரிடா. உன் இன்டர்வியூ பத்தி அப்பாகிட்ட நான் சொல்லிக்கிறேன். நீ சும்மா மனசை போட்டு குழப்பிக்காம ஃப்ரீயா இரு. உனக்குப் பிடிச்சா மாதிரி ஜாப் சீக்கிரம் அமையும்” என்று ஆருடம் போலச் சொன்னார். அந்த நாளின் கசப்புகளெல்லாம் மெல்ல கரைவது போலிருந்தது அவளுக்கு. மேலும் சில நிமிடங்கள் பேசி விட்டு அழைப்பை துண்டித்திருந்தார்.
வேலை கிடக்கிறது, இப்போது வீட்டு வேலையைப் பார்ப்போம் என எழுந்து சமையல் அறைக்குச் சென்றாள். தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தான் பிரபஞ்சன்.
மரகதவல்லி தீவிரமாக வினாத் தாள்கள் திருத்திக் கொண்டிருந்தார்.
அவள் சத்தமில்லாமல் அவரைக் கடக்க, “டின்னருக்கு இடியாப்பம், காய்கறி குருமா செஞ்சுடு பிரியதர்ஷினி” என்றார்.
அவள் பதில் சொல்லும் முன், “குருமா, தேங்காய்ப்பால் விட்டு செஞ்சுடு” என்றிருந்தார்.
மெலிதான தலையசைப்புடன் சமையல் அறைக்குள் நுழைந்தாள். அவளுக்கு இடியாப்பம் என்றாலே பிடிக்காது. தேங்காய்ப்பால், காய்கறி, கறி குருமா என இனிப்பு, காரம் என எப்படிக் கொடுத்தாலும் அவளுக்கு இடியாப்பம் இறங்காது.
அவளைப் பொறுத்தவரை அது சிற்றுண்டி. அவ்வளவுதான். என்னமோ அதை உண்டால் வயிறு நிறையாத உணர்வுதான் அவளுக்கு இருக்கும்.
“ம்மா, டின்னர் சாப்பிட்ட மாதிரியே இல்லம்மா” என்பாள். அதனால் ராதாவும் இடியாப்பம் செய்யும் நாள்களில் அவளுக்காகத் தனியாக ஏதேனும் செய்து வைத்து விடுவார்.
அவளுக்குப் பிடிக்கவே பிடிக்காத ஒன்றை இப்போது பிடித்துதான் செய்தாள். ஏனென்றால் அது பிரபஞ்சனுக்குப் பிடிக்குமே!
முதலில் மாவு தயார் செய்து ஓரமாக வைத்து விட்டு, தேங்காய்ப்பால் எடுத்து காய்கறி குருமாவை தயாரித்தாள். அதன் மணம் சமையல் அறையை நிறைக்கையில், பிரபஞ்சன் உள்ளே வந்தான்.
“என்னங்க வேணும்?” என்று கேட்டவளை கண்டு கொள்ளாமல் அவளை உரசியபடியே, அவள் தலைக்கு மேலிருந்த அலமாரியை திறந்து, நிதானமாகத் தேடி ஒரு சம்படத்தை எடுத்தான்.
“என்ன எடுக்கறீங்க?”
பதில் வரவில்லை.
அவளே பார்த்து தெரிந்து கொண்டாள். கோதுமை மாவை அளந்து எடுத்து உப்பு, தண்ணீர், சிறிது எண்ணெய் சேர்த்து பிசைய தொடங்கியிருந்தான் அவன்.
“என்ன பண்றீங்க?”
“சில்ல்ல்ல், பிரியா” என்றான் வேலையில் கவனமாக. அவளுக்குச் சுள்ளென்று கோபம் வந்தது.
“இடியாப்பமும், குருமாவும் செஞ்சாச்சு. இப்போ எதுக்காகக் கோதும மாவ பிசையறீங்க? அத்த பார்த்தா திட்ட போறாங்க” என்றாள்.
“அப்படியா?” என்பதாகப் புருவம் உயர்த்தி விட்டு வேலையில் மூழ்கினான். பல்லைக் கடித்தாள் பிரியதர்ஷினி.
“இங்க குடுங்க, என்ன செய்யணும்னு சொல்லுங்க. நான் செய்யறேன்”
“நீ இடியாப்பம் பிழியற வேலையைப் பாரு” என்று கண் காட்டினான்.
“என்னமோ பண்ணுங்க, எனக்கென்ன. உங்கம்மா திட்டினா நான் உங்களை மாட்டி விட்டுடுவேன். ஆல்ரெடி நான் இன்டர்வியூ போன கோபத்தில் இருக்காங்க. இதுல கோதும மாவுல இடியாப்பம் செஞ்சு கொடுத்தா அவ்ளோதான். என்னை டைனிங் டேபிள் மேலே ஏறி நிக்கச் சொல்லிடுவாங்க” என்று அவள் கடுப்புடன் சொல்ல, “சில்ல்ல்” என்றான் அவன்.
“ஷ்ஷ்ஷ்ஷப்ப்பா” ஆழ்ந்த மூச்செடுத்து, இடியாப்பம் பிழியத் தொடங்கினாள். மாவை பிசைந்து அதன் மேல் துளி எண்ணெய் தேய்த்து மூடி வைத்து, வெளியே சென்று விட்டான் பிரபஞ்சன்.
அவளும் இடியாப்பம், காய்கறி குருமா செய்து அதை வேறு பாத்திரங்களுக்கு மாற்றி விட்டு வெளியேறினாள்.
“நீ குளிக்கல?” அவளைக் கண்டதும் பிரபஞ்சன் கேட்க, குனிந்து தன்னைப் பார்த்தாள் அவள். தான் கேட்ட கேள்விக்குப் பதிலை எதிர்பாராமலே வெளியேறினான் அவன்.
“ப்ச்” சலிப்புடன் சென்று குளித்து வந்தாள்.
இரவு உணவு உண்ணும் மனநிலையே அவளுக்கு இல்லை. அப்படியே குப்புற படுத்து தூங்கிட விட வேண்டும் போலிருந்தது.
“பிரியதர்ஷினி” என்று நீட்டி முழக்கி மரகதவல்லி அழைக்க, “வர்றேன் மிஸ்” என்று குரல் கொடுத்தாள்.
இரண்டாம் நிமிடம் அவள் கூடத்துக்குச் செல்ல, “நான் உன்னை இடியாப்பம்தானே செய்யச் சொன்னேன்? எதுக்குத் தேவையில்லாம..” என்று அவர் கண்டிப்புடன் கேட்டுக் கொண்டிருக்கையில், “ம்மா” என்றழைத்து அவரை நிறுத்தினான் பிரபஞ்சன்.
“உக்காருங்க, சாப்பிடலாம்” என்று எழுந்து சாப்பிட வந்தான். மரகதவல்லி அவனுக்காக இருக்கையை நகர்த்த, அவனோ மனைவிக்குப் பக்கத்து இருக்கையை அவள் அமர வாகாக நகர்த்தி வைத்தான்.
அவள் எங்கே அமரப் போகிறாள், எப்போதும் போல மரகதவல்லியின் பார்வை அவள் மேல் அழுத்தமாகப் படிய, அவள் பொறுப்பாக இருவருக்கும் தட்டு வைத்து பரிமாறத் தொடங்கினாள்.
பிரபஞ்சனின் வலக்கரம் நீண்டு அவளின் இடக்கரத்தை பற்றியது. ஒரே இழுப்பில் அவளை இருக்கையில் அமர்த்தினான். அவளுக்குத் தட்டு வைத்தான்.
“இடியாப்பம் இருக்கையில எதுக்குச் சப்பாத்தி செஞ்ச பிரியதர்ஷினி? இடியாப்பம் வேஸ்ட்டா போகும் இல்ல?” என்று மரகதவல்லி கேட்கையிலேயே, மனைவிக்குச் சப்பாத்தியை பரிமாறினான் பிரபஞ்சன்.
“நான் கேட்டுட்டே இருக்கேன்..”
“அவளுக்கு இடியாப்பம் பிடிக்காதும்மா” அவளுக்கான பதிலை அவன்தான் சொன்னான். ஆனால் அவனுக்கு எப்படித் தெரியும்? அவனை அதிர்ச்சியும், ஆச்சரியமுமாகத் திரும்பிப் பார்த்தாள் அவள்.
“அதென்ன இடியாப்பம் பிடிக்காதுன்னு சொல்றது? சாப்பாட்டுல எதையும் ஒதுக்கக் கூடாது. இருக்கறதை சாப்பிட்டு பழகணும். மூனு பேருக்கு தினம் ரெண்டு சமையல் செய்வியா நீ?”
என்று கோபமாகக் கேட்டார்.
“வேணும்னா செஞ்சுக்க வேண்டியதுதான் மா, நீங்க சாப்பிடுங்க” என்று அவருக்குக் குருமாவை ஊற்றினான்.
மனிதனின் மனத்தை வெல்லும் வழி வயிறென்று சொன்னதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது போலும் என்று அக்கணம் அவளுக்குத் தோன்றியது. மதியத்தில் இருந்து கணவனின் மேலிருந்த மனக்கசப்பு, அவனது சிறிய கவனிப்பில் மறைவதை அவளால் உணர முடிந்தது.
அவள் சாப்பிடாமல் அமர்ந்திருப்பதைக் கண்டு, அவள் தோளில் இடித்து, “சாப்பிடு” எனக் கண்ணால் செய்தி சொன்னான். நல்ல மிருதுவான சப்பாத்தி, காய்கறி குருமாவுடன் சாப்பிட சுவையாக இருந்தது. மூன்று சப்பாத்திகள் சாப்பிட்டவளுக்கு வயிறு நிறைந்து விட்டது.
அதனால் நான்காவது சப்பாத்தியை அவன் எடுக்கையில், “போதும்” என்று மறுத்தாள்.
“இதுக்குத்தான் சொன்னேன். சாப்பாட்டை வேஸ்ட்..” என்று மரகதவல்லி ஆரம்பிக்க, கையில் இருந்த சப்பாத்தியை தன் தட்டில் வைத்து நிதானமாக உண்ணத் தொடங்கியிருந்தான் பிரபஞ்சன்.
“எதுவும் வேஸ்ட்டாகாது மா, அப்படியே மிச்சமானா பிரிட்ஜ்ல வச்சு காலையில சூடு பண்ணி சாப்பிட்டுக்கலாம்” என்று முடித்து விட்டான்.
குளிர்சாதன பெட்டியில் வைத்து உண்பது உடலுக்குக் கேடு என்று மிக நீண்ட பாடத்தை மரகதவல்லி அவர்களுக்கு எடுத்து முடிக்கையில், இருவருமே உண்டு முடித்திருந்தார்கள்.
“நான் சொல்ற எதையும் கேக்க கூடாதுன்னு இருக்கியா நீ பிரியதர்ஷினி? உன்கிட்ட நான் இதை எதிர்பார்க்கல” என்றவரை அதிர்ச்சியுடன் ஏறிட்டாள்.
“இன்டர்வியூ போறேன்னு காலையில ஏன் என்கிட்ட சொல்லல நீ?” அவர் கேட்கவும், “அவளுக்கு இன்டர்வியூ இருக்கறதே காலையிலதான் மா தெரிஞ்சது” என்று பிரபஞ்சன் வேகமாகப் பதில் சொல்லவும், மகனை திரும்பியும் பாராமல் மருமகளைக் கூர்ந்தார் அவர்.
அவளிடம், “அவனைப் பொய் பேச வைக்காத” என்றார் அழுத்தமாக. அவள் முகம் சட்டென வாடியது.
“சொல்லு, இன்னைக்கு இன்டர்வியூ இருக்குன்னு எப்போ தெரியும் உனக்கு?” அவள் கண் பார்த்து கேட்டார்.
“போன வாரமே தெரியும் மிஸ்”
“அப்புறம் ஏன் என்கிட்ட சொல்லல”
“நீங்கதான் அவளை வேலைக்குப் போக வேணாம்னு சொல்லி வச்சுருக்கீங்களே, அப்புறம் எப்படிச் சொல்லுவா?”
“ரஞ்சன், நீ எங்களுக்கு நடுவுல வராத. நான் இவளுக்காகதான் சொன்னேன். இங்க பக்கத்துலயே வேலை பார்த்தா அலைச்சல் இருக்காதுன்னு..”
“இப்போ நீங்கதான் மா பொய் சொல்றீங்க” முகத்தில் அடித்தது போலச் சொல்லி விட்டான். பிரியதர்ஷினி இருவரையும் அதிர்ச்சியுடன் மாறி மாறி பார்க்க, “ஆமா, நான் அவளை வேலைக்குப் போக வேணாம்னு சொன்னேன். ஆனா என் பேச்சை உன் பொண்டாட்டி மதிக்கல இல்ல? என்கிட்ட ஒரு வார்த்தை கூடச் சொல்லிக்காம, உங்கிட்ட மட்டும் சொல்லிட்டு இன்டர்வியூ போய் இருக்கான்னா.. எனக்கென்ன மரியாதை? நான் சொன்ன வார்த்தைக்கு என்ன மரியாதை?” என்று குரலை உயர்த்தாமல் அவளைக் குற்றவாளியாக்கினார்.
“டிபிக்கல் மாமியார் மாதிரி நடந்துக்காதீங்கம்மா. அவளை வேலைக்குப் போக வேணாம்னு சொல்ல எனக்கோ, உங்களுக்கோ எந்த ரைட்ஸும் கிடையாது”
“அப்படியா பிரியதர்ஷினி? நீ ஆமாம்னு சொல்லிடு. இனிமே உன் விஷயத்துலயே நான் தலையிட மாட்டேன்” என்றார் கோபமாக.
அவள் ஆழ்ந்த மூச்செடுத்து பேசும் முன், “டிராமா பண்ணாதீங்கம்மா. அவள கார்னர் பண்றீங்க நீங்க” என்று கத்தினான் பிரபஞ்சன்.
“அவ வேலைக்குப் போவா. அவளுக்குப் பிடிச்சத செய்வா. அத நீங்க தடுக்கக் கூடாது. டாட்” என்று அப்பேச்சிற்குப் பெரிய முற்றுப் புள்ளி வைத்தான். மரகதவல்லி முறைத்து, அந்த முற்று புள்ளிக்கு காற்புள்ளி வைத்திருந்தார்.
“மிஸ்” அவள் தயக்கத்துடன் அழைக்க, பட்டென்று இருக்கையைப் பின்னுக்குத் தள்ளி எழுந்து சென்று விட்டார் அவர். அவளுக்கு முகத்தில் அறை வாங்கியது போலானது.
மரகதவல்லி மிஸ் உனக்கு மாமியாராகப் போகிறார்கள் என்று அம்மா சொன்ன போது எத்தனை மகிழ்ந்திருப்பாள்? இந்தத் திருமணத்திற்கு அவள் சம்மதிக்க முக்கியக் காரணமும் அதுதான், அவர்தான்.
அவள் எட்டாம் வகுப்புப் படிக்கையில், அவளுடன் டியூஷன் படித்த மாணவன் நல்ல நட்புடன் அவளுடன் பழகினான். அவன் பத்தாம் வகுப்பில் இருந்தான்.
அன்றொரு நாள் வகுப்புகள் முடிந்து அவள் மரகதவல்லி மிஸ் வீட்டை விட்டு வெளியேறி சைக்கிளில் ஏற, “ஏய் தர்ஷினி, ஒரு நிமிஷம் நில்லு” என்று அவளை நிறுத்தி, அவளுக்குக் காதல் கடிதம் நீட்டியிருந்தான்.
“அய்யோடா” அரண்டு விட்டாள் அவள். அனிச்சையாக அவள் கண்கள் அண்ணனைத் தேடின. அன்றைக்கு அவன் டியூஷன் வராததையே அவள் மறந்து போனாள்.
“இல்ல, வேணாம். நீங்களே வச்சுக்கோங்க” அவன் நீட்டிய கடிதத்தையும், சாக்லேட்டையும் வாங்க மறுத்து விட்டாள். அவசரமாக அவள் கையைப் பிடித்து அழுத்தி, அதில் இரண்டையும் திணித்திருந்தான் அவன். அவளுக்கு அப்படியே வியர்த்து விட்டது. உள்ளங்கை வியர்த்து சில்லிட்டு அதில் சிக்கிய காகிதம் ஈரம் பட்டுக் கையில் ஒட்டியது. அதை வேகமாக உதறி, அவன் மேல் வீசி விட்டு, சைக்கிளை மூச்சு வாங்க மிதித்துப் பறந்திருந்தாள். அன்று பெற்றோர், அண்ணனிடம் அந்நிகழ்வை சொல்ல அவ்வளவு பயந்தாள். மறுநாள் மாலையில் மிஸ்ஸுடம் சொல்லி அவனைக் கண்டிக்க, தண்டிக்கச் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தாள்.
ஆனால் மறுநாள் மாலை அவள் டியூஷன் சென்றதும், “பிரியதர்ஷினி சாரி” என்று அவள் முன்னால் வந்து நின்றான் அவன்.
“என்னது?” இப்போது என்ன செய்யப் போகிறானோ என்று முழித்து நின்றாள் அவள்.
“நான் நேத்து அப்படிப் பண்ணியிருக்கக் கூடாது. சாரி. இனிமே உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்” என்று தலை குனிந்து மன்னிப்புக் கேட்டிருந்தான்.
அவள் ஆச்சரியமாக அவனைப் பார்க்க, அந்நேரம் அங்கு வந்த மரகதவல்லி, “உன் இடத்துல போய் உக்காரு, புக் எடு” என்று அவன் பெயரை சொல்லி அதட்டினார். அவனும் அவரைப் பார்த்து திருதிருவென விழித்து ஓடிப் போய் அவன் இடத்தில் அமரவும், அவளுக்குச் சிரிப்பு வந்தது. அதன் பிறகு அவன் அவளைத் தொல்லை செய்யவேயில்லை. தான் எதுவும் சொல்லாமலே தனக்கு உதவிய மரகதவல்லி மிஸ் அவளுக்குச் சூப்பர் வுமன் ஆகியிருந்தார்.
இப்படி எத்தனையோ நிகழ்வுகள் இருக்கிறன. இப்போது ஏன் இப்படி மாறிப் போனார்? தான் மருமகளானால் தன்னிடம் இன்னுமே பிரியமாக இருப்பார் என்ற அவளின் கணிப்பு எப்படிப் பொய்த்துப் போனது என அவளுக்குப் புரியவில்லை. கோபமாக எழுந்து செல்லும் மாமியாரையே இமைக்காமல் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.