பிரிய பிரபஞ்சமே – 29 (3)

மாணிக்கவேல் மகளை வீட்டில் கொண்டு வந்து விட்டுப் போனார்.

அன்றிரவு பிரபஞ்சன் தாமதமாகத்தான் வீடு வந்தான். அதற்குள் மரகதவல்லி இரவு உணவு முடித்துப் பள்ளி வேலையில் மூழ்கியிருந்தார்.

பிரியதர்ஷினி உஷாராக முதலில் அவனுக்கு இனிப்பு கொடுத்து விட்டாள்.

“டின்னருக்கு அப்புறம்தானே ஸ்வீட் சாப்பிட மாட்டீங்க? அதான் இப்பவே கொடுத்துட்டேன்” என்று கேசரியை சூடுப்படுத்தி நீட்டினாள்.

“நீ சாப்பிடு” என்று அன்பாய் அவளுக்குக் கொடுத்தான்.

“நான் எங்க வீட்லயே சாப்பிட்டேன் பிரபா. நீங்க சாப்பிடுங்கன்னு உங்களுக்குக் கொடுத்தா எனக்கு ஊட்டுறீங்க..” என்று செல்ல கோபம் காண்பித்தாலும் அவன் ஊட்டியதை வாங்கிக் கொண்டாள்.

“ரொம்ப அலுத்துக்கறியே உனக்கு வேணாம்னா குடு, நான் சாப்பிட்டுக்கறேன்” என்று கோபம் போலச் சொன்னவன், தான் சொன்னதைச் செய்திருந்தான். மறுகணம் அவள் உண்ட இனிப்பு அவன் தொண்டையில் தித்திப்பாய் இறங்கிக் கொண்டிருந்தது.

“நான் டின்னருக்கு அப்புறம் ஸ்வீட் சாப்பிட மாட்டேனா? அதெல்லாம் நல்லாவே..” என்று குறும்பாக இழுத்து நிறுத்தி அவளை மேலிருந்து கீழாக ஓர் பார்வை பார்த்தான். அந்தப் பார்வையின் பொருள் அவளுக்குப் புரிந்து விட, அவன் மேலே விளக்கும் முன் ஒரு கரண்டி கேசரியை எடுத்து அவன் வாயில் திணித்திருந்தாள் அவள்.

“ஆஹாங் பிரியா பாப்பா வளர்ந்துட்ட போலயே” என்று அவள் இடையில் கைக் கோர்த்து அவளை வளைத்து தன் மார்பில் மோதச் செய்தான்.

எக்கி அவன் தாடையில் முத்தமிட்டு அவனைத் தன் வசப்படுத்திப் பேச்சு மறக்கச் செய்தாள் அவள்.

மறுநாள் காலையில், “பிரபா, எங்க வீட்ல இருந்து என்னோட ஸ்கூட்டி எடுத்துட்டு வரணும்” என்று அவனிடம் சொன்னாள்.

“நீ நேத்து ஈவ்னிங் போனியே, எடுத்துட்டு வர வேண்டியதுதானே?”

“அப்பா தர மாட்டேங்கறார்” என்று முகம் சுருக்கினாள்.

அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த மரகதவல்லி, “ரெண்டு பேரும் ஆஃபீஸ் பஸ்லதானே போறீங்க? இப்போ உனக்கு வண்டி எதுக்கு?” என்று அவளிடம் கோபமாகக் கேட்டார்.

“இங்க பக்கத்துல கடைங்களுக்குப் போக எனக்கு ஸ்கூட்டி இருந்தா ஈஸியா இருக்கும்த்தே”

“அதான் கார் இருக்கே, நீயும் நல்லா ஓட்டுற. அதை எடுத்துட்டு போ” என்றார் முடிவாக. இதற்கு மேல் எதுவும் பேசாதே என்ற கண்டிப்பு அவர் கண்களில் தெரிய கணவனைத் திரும்பிப் பார்த்தாள்.

“விடு பார்த்துக்கலாம்” என்று கண் ஜாடை காட்டினான் அவன்.

அறைக்குள் நுழைந்ததும், “அத்தகிட்ட நீங்க பேசுவீங்கன்னு பார்த்தா.. என்ன பிரபா நீங்க” என்று அவனைக் கடிந்து கொண்டாள்.

“அவங்க பயம் எனக்குப் புரியுது பிரியா. அதான் அமைதியா வந்துட்டேன். கிவ் தெம் சம் டைம், அப்புறம் அவங்களே ஓகேன்னு சொல்லுவாங்க பாரு” என்றான் அவள் தோளில் கைப் போட்டு. அவளுக்கு அந்த நம்பிக்கை இல்லை. அதனால் அந்தப் பேச்சை அப்போதைக்கு விட்டு விட்டாள்.

அந்த வார இறுதியில் அவர்கள் மூவருமாக அவளின் அம்மா வீடு சென்றார்கள்.

பிரியதர்ஷனிதான் காரோட்டினாள்.

“கவனம், பார்த்து. ஒன்னும் அவசரமில்ல ஸ்லோவா ஓட்டு.” என்று பின்னால் இருந்து அவளை எச்சரித்துக் கொண்டே வந்தார் மரகதவல்லி. அவளுக்குத்தான் பதட்டத்தில் எரிச்சலானது.

“ம்மா, பேசாம வாங்கம்மா. நீங்க இப்படிச் செய் செய்யாதன்னு சொல்றதுலயே அவ பதட்டமாகிடுவா” என்று பிரபஞ்சன் கடுப்புடன் சொல்லவும்தான் அமைதியானார் அவர்.

பிரியதர்ஷினி இரு சக்கர வாகனம் ஓட்டி பழகிய நாள்களில் இப்படித்தான் பார்கவி அவளைப் போட்டு படுத்தி வைப்பாள்.

“ப்ரி, ப்ரி பார்த்து பார்த்து. எதிரே நாய்க் குட்டி வருது நாயே” என்று கத்தி அவளின் தோளை பிடித்து அழுத்தி அவளுக்குப் பிரேக் போட முயல்வாள்.

இப்போது அனைவரும் அவளை அப்படித்தான் நடத்துகிறார்கள்.

அந்த விபத்து நேர்ந்த நாளில் இருந்து அம்மா வீட்டில் இருந்து உணவு மட்டுமல்ல, மளிகை, காய்கறி, கறி, மீன் என வாரா வாரம் அவளுக்கு வந்து விடுகிறது.

“அப்பா நானே கடைக்குப் போய் வாங்கிக்கறேன்ப்பா” என்று அவள் சொன்னாலும் அவர்கள் கேட்பதில்லை. பிரபஞ்சன், “உங்களுக்கு வீண் அலைச்சல் மாமா” என்று சொன்ன பிறகுதான் நிறுத்தினார்கள்.

அக்கம் பக்கம் கடைகளுக்குச் செல்ல, அவசரத்துக்குக் காரை எடுக்க முடியாதே. அப்படி அவள் எடுத்தாலும் மரகதவல்லி பதறி விடுகிறார்.

சரி, நடந்து போகலாம் என்றால் பிரபஞ்சனை வருத்த அவளுக்கு மனம் வரவில்லை. அலுவலகப் பேருந்தில் இருந்து இறங்கி அவளே நடந்து சென்று தேவையான பொருட்களை வாங்கி வந்து விடுகிறாள்.

இப்போதும் அப்பா வீடு சென்றதும் வண்டியைதான் பார்த்தாள் அவள்.

“முதல்ல வீட்டுக்குள்ள வா நீ” என்று அவளை உள்ளே இழுத்துச் சென்றார் ராதா.

சுவையான மதிய விருந்து, பேச்சு எனப் பொழுது கழிந்தது.

“பத்து நாள்ல பிரகாஷ் எங்கேஜ்மெண்ட் வருது. நீங்க வர்ற வீக் ப்ரீன்னா ஷாப்பிங் போகலாம் மாப்ள.” என்று மாணிக்கவேல் தயங்கி இழுக்க, “ஓ, போலாமே மாமா. நீங்க என்னைக்குன்னு சொல்லுங்க, நான் ஃப்ரீயாகிடுறேன்” என்று மாமனாருக்கு உறுதி அளித்தான் பிரபஞ்சன்.

அன்றும் வீட்டுக்குக் கிளம்புகையில், “அப்பா, என் வண்டிப்பா” என்று சிறுபிள்ளை போல அவள் அடமாகக் கேட்க, மாணிக்கவேலுக்குக் கோபம் வந்து விட்டது.

“கார்லதானே வந்தீங்க? இப்ப வண்டி எடுத்து தனியா என்ன பண்ண போற?” என்று குரலை உயர்த்தி விட்டார். சட்டென அவள் முகம் வாட, “நாளைக்குக் காலையில நான் வந்து ஸ்கூட்டிய எடுத்துக்கறேன் மாமா. கீ உங்ககிட்டதானே இருக்கு? எடுத்து குடுங்க” என்று கூறி அழுத்தமாக அவரையே பார்த்து நின்றான் பிரபஞ்சன்.

“இல்ல மாப்ள” என்று மாமனார் தடுமாற, “இட் வாஸ் அன் ஆக்சிடென்ட் மாமா. அதுக்காக நான் வண்டியே ஓட்ட கூடாதுன்னு சொல்றீங்களே நீங்க? அது நியாயமா? என்னை நம்புங்க மாமா. நான் கவனமா இருப்பேன். உங்க பொண்ணு என்னை விட ரொம்ப ரொம்பக் கேர்ஃபுல்லா இருப்பா. அவளைத் திட்டாதீங்க. அதுவும் என் முன்னாடி.. பிளீஸ்” என்று அழுத்தமாக அவரின் கண் பார்த்துச் சொன்னான்.

அவரின் தொண்டைக் குழி ஏறியிறங்க மெதுவாகத் தலையசைத்தார் மாணிக்கவேல்.

“ஜஸ்ட் எமர்ஜென்சிக்கு பக்கத்துல கடைக்குப் போகத்தான்ப்பா வண்டி கேக்கறேன். அத்தயும் புது வண்டி வாங்கித் தர்றேன்னு சொல்றாங்க. நீங்களும் அதையே சொல்றீங்க. ஆனா எனக்கு..” என்று இழுத்து நிறுத்தினாள் பிரியதர்ஷினி. அந்த வண்டி அவளுக்கு வேலை கிடைத்து விட்டது என்று தெரியும் முன்னே பிரபஞ்சன் அவளுக்காக வாங்கித் தந்தது. அவளுக்கு அது நிரம்ப ஸ்பெஷல். அவரவருக்கு அவர்கள் நம்பிக்கை.

“சரி, குட்டிம்மா. நீ வண்டியை எடுத்துக்கோ” என்று சம்மதித்து விட்டார் மாணிக்கவேல். பிரகாஷிடம் வண்டியை அவர்கள் வீட்டில் கொண்டு விடச் சொன்னார். ஆனால் மரகதவல்லி முறைப்பை மாற்றவில்லை. மருமகள் அதைக் கண்டும் காணாமல் இருந்து கொண்டாள்.

ஒரு வழியாக அவளின் வண்டி அவள் கைக்கு வந்து சேர்ந்தது. ஆனால் அதைப் பயன்படுத்த அவளுக்குச் சமயம் வாய்க்கவில்லை.

புதன்கிழமை ராதா அவளை அழைத்து, “வெள்ளிக்கிழமை ஈவ்னிங் ஷாப்பிங் போலாம் தர்ஷி” என்றார்.

“ம்மா, எனக்கு ஆஃபீஸ் இருக்கும்மா” என்று சொல்லி நாக்கை கடித்தாள்.

அது என்னவோ அம்மா வீட்டு விசேஷம் என்றால் வேலை கூடப் பின்னுக்குப் போய் விடுகிறது.

பிரகாஷின் நிச்சயத்திற்குப் பொண்ணுக்கு நிச்சய புடைவை எடுக்க இருந்தார்கள். அப்படியே அவர்கள் அனைவருக்கும் புதுத் துணி எடுக்கும் திட்டமும் இருந்தது.

“நீங்க டைம் சொல்லுங்கம்மா. நான் வந்துடுறேன்” என்று உடனடியாகத் திருத்தி சொன்னாள்.

“நாலு மணிக்கு மேல போகலாம் தர்ஷி. நீ மாப்ளயையும் கூட்டிட்டு வா. உங்கண்ணாவும், அப்பாவும் அவரைக் கூப்பிடுறேன்னு சொன்னாங்க” என்று அவர் சொல்ல, “சரிம்மா. நானும் அவர்கிட்ட சொல்றேன்” என்றாள். அதைப் பற்றி அவள் பிரபஞ்சனிடம் பேச, “ஃப்ரைடேவா?” என்று யோசனையாகக் கேட்டான் அவன்.

“பிளீஸ் பிரபா”

“அன்னைக்கு ஆபீஸ்ல என்ன வேலை இருக்கும்னு சொல்ல முடியாதே பிரியா” என்றவன், “நான் வர டிரை பண்றேன். ஓகே?” என்று அவளின் கன்னம் தட்டினான்.

அவனுக்கு வெள்ளிக்கிழமை காலையில் மீண்டும் நினைவுப்படுத்தினாள்.

“ஈவ்னிங் இம்பார்டென்ட் கிளையண்ட் கால் ஒன்னு இருக்கு. அது முடிச்சுட்டு நான் வந்துடுறேன். ஓகே?” என்று அவளை அணைத்து முத்தமிட்டுச் சொன்னான்.

“ம்ம்ம்” என்று தலையசைத்தாள் அவள்.

மாலை அலுவலகத்தில் இருந்து நேராக அம்மா குறிப்பிட்ட கடைக்குச் சென்று விட்டாள். அவள் போகும் வழியில் பிரபஞ்சனை அழைக்க, “மீட்டிங்கில் இருக்கிறேன். ஒரு மணி நேரத்தில் வந்துடுவேன். வெயிட் ஃபார் மீ” என்று பதிலை குறுஞ்செய்தியாக அனுப்பினான்.

ஆகவே, அவனுக்காகக் காத்திருக்காமல் பெற்றோருடன் சேர்ந்து துணித் தேர்வில் இறங்கினாள் அவள்.

இரண்டு மணி நேரங்கள் கடந்திருக்க, அனைவருக்கும் எடுத்து விட்டார்கள்.

“மாப்ள எங்கடா இன்னும் காணோம்? உனக்கும் அவருக்கும்தான் எடுக்காம இருக்கு” என்று ராதா அவளிடம் சொல்ல, “அவர் வருவார்ம்மா. வெயிட் பண்ணுங்க” என்று நம்பிக்கையுடன் சொல்லி அவனுக்காகச் சட்டை பார்க்கத் தொடங்கினாள் அவள்.

“லேட்டாகுது தர்ஷி” என்று மாணிக்கவேலும் சொல்ல, “எங்களுக்கு நான் செலக்ட் பண்றேன்ப்பா. அவர் சொன்னா கண்டிப்பா வருவார். உங்களுக்கு லேட்டாகுதுன்னா நாம கிளம்பலாம்ப்பா” என்று அவள் சொல்லவும் மாணிக்கவேலின் முகமே மாறி விட்டது.

பிரகாஷ் தன் வருங்காலத்திடம் அலைபேசியில் பேசிக் கொண்டே, “இந்தாம்மா டேடிஸ் லிட்டில் பிரின்சஸ், உன் பிரின்ஸ் வர்றதுக்காக நாங்க கால் கடுக்க வெயிட் பண்ணணுமா? அவர் மட்டும்தான் வேலை பார்க்கிறாரா, நாங்க எல்லாம் பெர்மிஷன் போட்டு வரல. அவரு வர்றாரா இல்லையான்னு போன் பண்ணி கேளு.” என்று கடுப்பாகச் சொல்லி அவளைக் கோபப்படுத்தினான்.

அப்பாவிடம் திரும்பி, “மாப்ள வரல போல. நீங்க பில் போடுங்கப்பா. நாம கிளம்புவோம்” என்றான்.

பிரியதர்ஷினி கையில் இருந்த துணியைக் கீழே போட்டு, இறுக்கமாக நின்று அண்ணனை முறைத்தாள்.

error: Content is protected !!
Scroll to Top