“அண்ணா கல்யாணம் இந்த வாரம் முடிவாகிடும்டா குட்டிம்மா. இப்பத்தான் பொண்ணோட அப்பா போன் பண்ணி அவங்களுக்குச் சம்மதம்ன்னு சொன்னார்” என்று சந்தோஷ தகவலை பகிர்ந்தார்.
“அப்படியாப்பா? அப்பாடா ஒரு வழியா அவங்க சம்மதிச்சுட்டாங்க” என்றாள் மகிழ்ச்சியுடன்.
“ஆமா குட்டிம்மா. இந்த வெள்ளிக்கிழமை ஈவ்னிங் நம்ம வீட்டுக்கு வர்றேன்னு சொல்லியிருக்காங்க”
“நான் பெர்மிஷன் போட்டுட்டு நம்ம வீட்டுக்கு வந்துடுறேன்ப்பா” என்று அவர் கேட்கும் முன்னே பதில் சொல்லி விட்டாள். அதைக் கேட்டுச் சத்தமாகச் சிரித்தார் மாணிக்கவேல்.
“மாப்பிள்ளைக்கிட்டயும், உங்க அத்தை கிட்டயும் நான் ஈவ்னிங்கா கால் பண்ணி விவரம் சொல்லிடுறேன் தர்ஷிம்மா”
“சரிங்கப்பா” என்றாள். அப்பா அழைப்பை துண்டித்ததும் அண்ணனுக்கு அழைத்துப் பேசினாள்.
அன்று மாலை வீடு சென்றதும், கணவன், மாமியார் இருவரிடமும் தகவல் தெரிவித்தாள்.
மரகதவல்லி உன் விருப்பம் போலச் செய் என்று சொல்லி விட்டார்.
“ப்ரைடேவா? என்னால வர முடியாது பிரியா. நீ மட்டும் போயிட்டு வா. கோபிச்சுக்காத, பிளீஸ்” என்று கெஞ்சலாகப் பிரபஞ்சன் சொல்ல, அவளும் அவனை, “நீ வந்தே ஆக வேண்டும்” என்று வற்புறுத்தவில்லை.
பிரகாஷின் வருங்கால மாமனார் குடும்பம் கொஞ்சம் அலட்டல் பேர் வழிகள்தான்.
அவனின் வருங்காலம் பிரவீனா, அவளிடம் அதிகமாகப் பேசியிருக்கிறாள். அதுவும் சமீபகமாகத்தான். அவளுக்கும் பிரபஞ்சனுக்கும் விபத்து நேர்ந்த பிறகு அடிக்கடி அவளை அழைத்து நலம் விசாரித்திருந்தாள் பிரவீனா. அதனால் அவர்களுக்கு இடையே நல்ல பிணைப்பு உருவாகி இருந்தது.
அவளின் அப்பா திருமணத்தை உறுதி செய்யும் நிலைக்கு வந்த பிறகும், “உங்க வீடு எப்போ கட்டினது? மூனு ரூம் தானா? வெளில இருந்து பார்க்க சின்னதா தெரிஞ்சுது. ஆமா, வீடு எத்தனை ஸ்கொயர் பீட்” என்று கேள்விகளாகக் கேட்டு மாணிக்கவேலை திணறடித்தார். கார், பணம், மனைகள் என அவரின் பேச்செல்லாம் பணம் பற்றியதாகவே இருந்ததைக் கேட்க கேட்க அவளுக்கு என்ன மனிதர் இவர் என்று அயர்ச்சியாக இருந்தது.
“அவர முறைக்காத குட்டிம்மா. உனக்கு அவர் பேசுறது ஓவரா தெரியும். ஏன்னா நீ உன் அண்ணனுக்காக யோசிக்கற. அவனோட மரியாதை, மதிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து யோசிக்கிற. ஆனா அவருக்கு இது அவரோட ஒரே செல்லப் பொண்ணோட வாழ்க்கை. பொண்ணு நல்லா வசதியா இருக்கணும்னு அவர் நினைக்கிறதை நாம தப்பு சொல்ல கூடாதுடா. அவரை ஜட்ஜ் பண்ணாத. அப்பாவும் உனக்காக இப்படித்தான் யோசிச்சேன். நானும் அவர் இடத்துல இருந்திருக்கேன்டா” என்று ஒரு தகப்பனாக மாணிக்கவேல் பேச, ஒரு நொடி மலைத்து, பின் இயல்பாகி அவரைப் பார்த்து புன்னகைத்தாள்.
“ஆனாலும் எல்லார் முன்னாடியும் நீங்க இப்படிப் பேச மாட்டீங்கப்பா” என்று அப்பாவை விட்டுக் கொடுக்காமல் பேசினாள். புன்னகைத்தார் அவர்.
“உங்கப்பா என்னை மறுக்க முடியாத இடத்துல நிக்கணும்னு ஓடுனேன் பிரியா.” என்ற பிரபஞ்சனின் வார்த்தைகள் அவள் மனத்தில் மேலேழ, அவன் பிரியம் தந்த பிரமிப்பு இப்போதைக்கு அவளுக்கு விலகாது என்றே தோன்றியது.
பிரவீனாவின் அப்பா, “நீ எங்கம்மா வேலை பார்க்கற? மாப்ள என்ன பண்றார்? ஓ உங்க மாமியார் டீச்சரா?” என்று அவள் குடும்பத்தைக் குறித்தும் விசாரித்துத் திருப்திப்பட்டுக் கொண்டார்.
இரண்டு குடும்பங்களும் மனமொத்து நிச்சய, திருமணத் தேதியை அப்போதே முடிவு செய்திருந்தார்கள்.
“அம்மாக்கு இப்போதான் தர்ஷி நிம்மதியா இருக்கு” என்ற ராதா, மகளின் கன்னம் கிள்ளி கொஞ்சினார்.
“இந்தா இதுல வடை மாவு இருக்கு. வீட்ல போய்ச் சூடா போட்டுக்கோ. பைனாப்பிள் கேசரி, உன் புருஷனுக்குப் பிடிச்ச கல்லு மைசூர் பாக்கு வச்சுருக்கேன். இதையும் எடுத்துக்கோ. வெஜ் குருமா இதுல இருக்கு. இப்பவே சப்பாத்தி போட்டு தந்துடவா? இனிமே வீட்டுக்கு போய் நீ டின்னர் செய்யணும் இல்ல?” என்று எல்லாவற்றையும் பையில் கவனமாக அடுக்கிக் கொண்டே ராதா அக்கறையுடன் கேட்க, “அம்மா” என்று அவரை முறைத்தாள் மகள்.
“உங்களை விட்டா நம்ம வீட்டு கிச்சனயே தூக்கி என்கிட்ட குடுத்துருவீங்க போல” என்று அவள் நொடிக்க, “உங்கப்பாவால முடிஞ்சா அதையும் செய்வார் தர்ஷி” என்று தீவிரமாகச் சொல்லி சிரித்தார் ராதா.
“அ..ம்மா..”
“அப்புறம் இல்லையா பின்ன.. இப்போ கிளம்பி போனாங்களே உங்க அண்ணனோட வருங்கால ஃபேமிலி. அந்தப் பொண்ணோட அப்பா அவ்ளோ கேள்வி கேட்குறார், இத்தனை நாள்ல அவர் குணம் தெரிஞ்சே, இந்த வீடு என் பொண்ணுக்கும்தான். என் பொண்டாட்டி நகையெல்லாம் என் பொண்ணுக்குதான்னு பெருமையா சொல்றாரே உங்கப்பா, இவரை வச்சுட்டு நான் என்ன செய்ய?” என்று போலியாகச் சலித்துக் கொண்டார்.
அந்நேரம், “தர்ஷி, அப்பா உன்னை வீட்ல கொண்டு விடவா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார் மாணிக்கவேல்.
“அண்ணா வர்றேன்னு சொன்னான்ப்பா”
“அப்படியா? அவனுக்கு வேலை இருக்கும். நீ வா, அப்பா உன்னை ட்ராப் பண்றேன்” என்றார்.
அண்ணன், அம்மாவிடம் விடைப் பெற்று அவள் வாசலுக்கு வர, “உனக்குப் போற வழியில ஏதாவது வாங்கணுமா குட்டிம்மா?” என்று மகளிடம் கேட்டார்.
“ம்ம்ம், நம்ம மொட்டை மாடியில பத்து நிமிஷத்துக்கு முன்னாடி பூத்த மல்லிகை பூ மொத கொண்டு உங்க மகளுக்குப் பேக் பண்ணியாச்சு. அப்படி அவளுக்கு ஏதாவது வாங்கியே கொடுத்தாகணும்னு நீங்க ஆசைப்பட்டா போற வழியில இந்த மதராஸ பட்டினத்தை அவ பேர்ல பதிஞ்சு கொடுத்துடுங்க” என்றார் ராதா கிண்டலாக. அவர் கணவரை முறைத்து நிற்க,
“மதராஸ பட்டினம்தானே? இப்பவே என் பொண்ணு பேர்ல பட்டா போட்டுடுவோம். ஊரை வாங்க பேங்க் லோன் நீங்க தர மாட்டீங்க பேங்க் ஆஃபீஸர் மேடம்” என்று தீவிரமாக அவர் திருப்பிக் கேட்க, “ஹாங் தர்றாங்க, தர்றாங்க வாங்க” என்று கழுத்தை ஒடித்து முகம் திருப்பினார் ராதா.
“ம்மா, அப்பா பாவம்மா. சும்மா கிண்டல் பண்ணாதீங்க” என்று சிரித்த பிரியதர்ஷினி, “நீங்க ஏன்ப்பா அவ்வளவு தூரம் எனக்காக வந்துட்டு, என் ஸ்கூட்டி எடுத்துட்டு நானே போய்க்கவா?” என்று கேட்டாள்.
அவளது இரு சக்கர வாகனம் அங்குதான் இருந்தது. அதைப் பழுது பார்த்து புதிய வண்டி போல மாற்றி நிறுத்திருந்தார் மாணிக்கவேல்.
மகள் கேட்கவும், “அந்த ஸ்கூட்டிய அப்புறமா எடுப்ப. இப்போ உன்னை அப்பா கொண்டு போய் விடறேன்டா குட்டிம்மா” என்று அவசரமாகத் தன் மறுப்பைப் பதிவு செய்தார்.
“அப்பா” என்று கண்டிப்புடன் பிரகாஷ் அழைக்க, “அண்ணா கூப்பிடுறான் பார், அவன்கிட்ட சொல்லிட்டு வா” என்று மகளை ஏவினார் அவர்.
“இந்த டாடி அண்ட் அவரோட பிரின்சஸ் தொல்லை தாங்கல” என்று வேண்டுமென்றே சத்தமாகப் புலம்பினான் பிரகாஷ்.
“பார்த்துப்பா பிரகாஷ், உன் மாமனார் காதுல விழுந்துட போகுது” என்று மாணிக்கவேல் பதிலடி கொடுக்க, பிரகாஷ் திருதிருவென்று முழிக்க, மற்ற அனைவரும் சிரித்து விட்டனர்.