அவர்கள் கோவிலில் இருந்து நேராக வீடு திரும்பி, தேநீர் அருந்திய பின், பிரபஞ்சன் பிரியதர்ஷினியுமாகச் சென்று அந்த வாரத்திற்குத் தேவையான காய்கறிகள், முட்டை, பழங்கள் என வாங்கி வந்தார்கள்.
பிரபஞ்சன் வீட்டிற்கு வந்ததும் மடிக் கணினியுடன் ஐக்கியமாகி விட்டான்.
பிரியதர்ஷினி வாங்கி வந்த பொருட்களைப் பிரித்து அடுக்கி வைத்துக் கணவனிடம் வந்து அமர்ந்தாள்.
அன்றைக்குக் காலை, மதியம் சமைத்ததே மிச்சம் இருக்க, அதையே இரவு உணவுக்கு வைத்துச் சமாளித்துக் கொள்ளலாம் என்று ஓய்வாகச் சாய்ந்து அமர்ந்தாள்.
பிரபஞ்சன் மடிக் கணினியை மடியில் இருந்து லேசாக நகர்த்தி, மனைவியின் பாதத்தைத் தன் மடியில் தூக்கி வைத்தான்.
ஒற்றைக் கரத்தால் அவள் பாதம் பற்றியபடி பணியில் மூழ்கியிருந்தான்.
“என் கால விடுங்க பிரபா. அத்த வர போறாங்க” மாமியாரின் அறை வாசலை திரும்பிப் பார்த்து அவள் சொல்ல, “உன் மாமியாருக்கு நீதான் பயப்படணும். யாரைப் பார்த்தும் எனக்கொன்னும் பயம் இல்ல” என்றான் அசட்டையாக.
“அப்படியா? நான் கம்ப்ளைன்ட் பண்ணா என் அத்த உங்களை அடிப்பாங்க பாக்கறீங்களா?” என்று கெத்தாகச் சொல்லி புருவம் உயர்த்தியவள், “என்ன கம்ப்ளைன்ட் பண்ணவா? அடி வாங்க ரெடியா நீங்க?” என்று அவனை மிரட்டினாள்.
“ஆமா, உன் அத்தைக்கிட்ட என்னன்னு கம்ப்ளைன்ட் பண்ணுவ?” என்று குறுநகையுடன் கேட்டான்.
“அது..” என்று அவள் தடுமாற, “என் புருஷன் பிரபா என் காலை பிடிக்கிறார் மிஸ், கட்டிப் பிடிக்கிறார் மிஸ், கிஸ் பண்ணுறார் மிஸ்னா கம்ப்ளைன்ட் பண்ணுவ? காமெடியா இருக்காது?” என்று கிண்டலாகக் கேட்டுக் கொண்டே அவளைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்திருந்தான்.
“கேடி பிரபா நீங்க” என்று அவன் தோளில் அடித்தாள், சிரித்துக் கொண்டே தன் வேலையைத் தொடர்ந்தான் அவன்.
“பிளீஸ், என் காலை விடுங்க. நான் போய் டிரஸ் மாத்திட்டு வர்றேன்” என்று அவள் எழப் போக, அவள் பாதத்தை இறுக பற்றி, “ஏன் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணணும்? இந்தப் புடைவைக்கு என்ன குறைச்சல்? உனக்கு அம்சமா இருக்கு. இதுலயே இரு” என்றான், அவள் கண் பார்த்து.
அந்தக் கண்கள் கடத்திய செய்தியில் முகம் சிவக்க, “பத்து விரல் பட்டால் என்ன? முத்த மழை இட்டால் என்ன?” என்று தொலைக்காட்சியில் ஒலித்த பாடலை அவளைப் பார்த்து ரசனையுடன் பாடினான் அவன்.
“ஒரு புதிய மயக்கம் உனக்கும் எனக்கும் கூடி வரும் நாள் இது. அடி நேற்றிரவு நடந்ததென்ன நீ அறிவாயோ?” என்று சத்தமாக முணுமுணுத்து அவள் விழியோடு விழி கலந்தான்.
“அடி நேற்றிரவு நடந்ததென்ன..” என்ற வரிகளை மையலுடன் அவளின் இடையில் கைப் போட்டு அவன் மீண்டும் பாட, “அய்யோடா பிரபா, அடங்குங்க” என்று அவன் வாயை மூடினாள். ஆனால் அவளுக்குச் சிரிப்போடு சேர்த்து வெட்கமும் வந்தது.
அப்பொழுது ஆசிரியருக்கே உரிய வழக்கமாக, “தர்ஷினி” என்று சத்தமாக அவளை அழைத்தபடி கூடத்துக்கு வந்தார் மரகதவல்லி. அவரின் சத்தத்தைக் கேட்டதும் அவளும் சமத்தாக, கணவனை விட்டு விலகி, நேராக அமர்ந்திருந்தாள்.
“என்னங்க அத்த?”
“டின்னர் எடுத்து வைக்கவா? சாப்பிடுவோமா? நாளைக்கு உங்களுக்கு ஆபீஸ் இருக்குல்ல?” என்று கேட்டார் மரகதவல்லி.
“நீங்க சாப்பிடுங்கம்மா, எனக்குப் பசிக்கல. நான் கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிடுறேன்” என்று பிரபஞ்சன் சொல்ல, “ஓகே ரஞ்சன். ஆனா ரொம்ப லேட் பண்ணாத. பசிக்கலன்னாலும் டைமுக்கு சாப்பிட்டு வேலையைப் பாரு” என்றார் மகனிடம்.
அவருக்கு இரவு உணவை சூடுபடுத்திப் பரிமாறினாள் பிரியதர்ஷினி.
“நீயும் உட்கார்ந்து சாப்பிடு தர்ஷினி” என்றார்.
“நான் அவரோட சாப்பிடுறேன்த்த” என்று மறுத்து விட்டாள்.
“ம்ம், நாளைக்கு என்ன சமைக்கப் போற? பிரேக் பாஸ்ட் இட்லி ஊத்திக்கலாம். நீங்க என்ன காய் வாங்கிட்டு வந்தீங்கன்னு சொல்லு. லஞ்ச்சுக்கு என்ன குழம்பு, என்ன பொரியல் வைக்கிறதுன்னு சொல்றேன்” என்று தீவிரமாகச் சொன்னார்.
‘ஐயோ இவர் இதை விடவே மாட்டாரா?’ என்று அவளுக்கு அலுப்பாக இருந்தது. ஆனாலும் மனத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அன்று வாங்கி வந்த காய்கறிகளைப் பட்டியலிட்டாள்.
“உப்புப் பருப்பு வச்சுட்டு அதுக்கு வாழைக்காய் வறுத்துடலாம். அவரைக்காய் பொரியல் பண்ணிட்டு பாசிப்பயறு அவிச்சு, தாளிச்சுடு. அப்புறம் புரோட்டீனே இல்லன்னு உன் புருஷன் நம்மளை தாளிப்பான்.” என்று மகனை கண் காட்டி அவர் சொல்ல அவளுக்குச் சிரிப்பு வந்தது.
‘பாருடா, பையனுக்குப் பயப்படுறாங்க’ என்று ஆச்சரியமாக அவரைப் பார்த்தாள்.
இவர்தான், ‘நான் சொன்னதைச் செய். அவன் சாப்பிடுவான்’ என்று முன்பு பேசியவரா என்று அவளால் அதிசயிக்காமல் இருக்க முடியவில்லை. மாற்றங்கள் ஒன்றுதானே மாறாதது. அதிலும் நல்ல மாற்றங்கள் என்றால் மகிழ்ச்சிதானே.
அவர் உணவை முடித்ததும், “சீக்கிரம் சாப்பிட்டு படுங்க” என்று சொல்லி உறங்கச் சென்றார்.
கணவனின் அருகில் சென்று பொத்தென்று அமர்ந்தாள் அவள்.
“என்ன மாமியாருக்கும் மருமகளுக்கும் மெனு பிளானிங் முடிஞ்சுதா?” என்று அவளிடம் கிண்டலாகக் கேட்டான் பிரபஞ்சன்.
“காலையில எழுந்து நானே என்ன இருக்குன்னு பார்த்து, என்ன சமைக்கலாம்னு டிசைட் பண்ணிக்கிறேன்னு அம்மா கிட்ட தெளிவா சொல்றதுக்கு என்ன உனக்கு? ஒரு விஷயம் உன்னை இரிட்டேட் பண்ணுதுன்னா அவங்ககிட்ட இமீடியட்டா சொல்லிடணும் பிரியா” என்றான்.
“ப்ச்” என்றாள் அசட்டையாக.
“இந்த ப்ச் சொல்றதுக்கு ஒருநாள் என்கிட்ட செம்மையா வாங்க போற நீ..”
“அதெல்லாம் ஏற்கனவே நிறையக் குடுத்துட்டீங்க மிஸ்டர் பி” என்று கண் சிமிட்டி எக்கி அவன் கழுத்தில் ஈரமாய் இதழ் ஒற்றினாள்.
“ஹேய் பிரியா, என்ன பண்ற? பேச்சு பேச்சா இருக்கணும்” என்று அவளை நெருக்கமாக இழுத்தான்.
“என்ன பேச?”
“நாம அப்புறம் பேசுவோம். இப்போ நான் சொல்றதை கேளு. அம்மாகிட்ட க்ளியரா சொல்லிடு”
“ஆல்ரெடி நிறைய டைம் சொல்லிட்டேன் பிரபா. ஆனாலும் அத்த திரும்பத் திரும்பச் சொல்றாங்க. அவங்களுக்கு அப்படிப் பிளான் பண்ணியே பழகிடுச்சுன்னு அன்னைக்கு என்கிட்ட சொன்னாங்க. சோ நானும் இப்போ அவங்க சொல்றதை பெருசு பண்றது இல்ல. நான் மாத்தி ஏதாவது செஞ்சாலும் முன்ன மாதிரி அத்தை கோபிச்சுக்கறது இல்ல பிரபா. சோ நீங்க டென்ஷன் ஆகாதீங்க.” என்று அவன் தலைமுடியில் விரல் நுழைத்து அளைந்தாள்.
“ம்ம்ம்” என்று சொக்கி கண் மூடியவன், “ஆனா நீ டென்ஷன் ஆகுற போலயே” என்றான்.
“இல்லயே, இப்போ எனக்கும் பழகிருச்சு. அத்தைக்கு ஸ்கூல்ல நடக்குற மாதிரியே எல்லாம் டைம்டேபிள் படி நடக்கணும் போல. சோ, அவங்களுக்கு வாரா வாரம் புதுசு புதுசா மெனு சார்ட் போட்டுக் கொடுத்துட்டேன்னா பேசாம ரிலாக்ஸ்டா இருந்துடுவாங்கன்னு நினைக்கறேன். ஒரு வாரத்துக்கான மெனுவை நம்ம கிச்சன் வால்ல எழுதி ஒட்டிடுவோம்” என்று விளையாட்டாகச் சொல்லி சிரித்தாள்.
“தட்ஸ் அ குட் ஐடியா பிரியா” என்றான் தீவிரமாக.
“அச்சோ பிரபா, நான் சும்மா சொன்னேன்..”
“இல்ல, நாம இதைச் சீரியஸா ஃபாலோ பண்றோம். அம்மாவும் இதைப் பார்த்து ரிலாக்ஸாவாங்க நீயும் டெய்லி நைட் அண்ட் மார்னிங் டென்ஷனாக வேணாம் பாரு. தினம் என்ன சமைக்கிறதுன்னு யோசிக்கிறதுதானே பெரிய தொல்லை. இனிமே அது இல்லாம இருங்க. லெட்ஸ் பிளான் நவ்” என்று மடிக் கணினியை திறந்து திட்டமிடத் தொடங்கினான்.
“பிரபா..”
“சொல்லு. மண்டே எப்பவும் சிம்பிள் சமையல்தானே?” என்று முழு மூச்சாக வேலையில் இறங்கினான் அவன். அதற்கு முழுதாக அரை மணி நேரம் எடுத்தது.
“உங்களுக்கு எவ்ரி சண்டே நைட் மெனு சார்ட் ரெடி பண்ணி தர வேண்டியது என் பொறுப்பு, ஓகே?” என்று அவளுக்கு உறுதியளித்தான். மறுநாள் அவன் சொன்னது போலவே அந்த வாரத்திற்கான உணவு திட்டமிட்ட அட்டவணையை அலுவலகத்தில் இருந்து வரும் போதே அச்செடுத்து வந்து அவனே சமையல் அறை சுவரில் பார்வையில் படும்படி ஒட்டி விட்டான்.
மனைவியின் வாட்ஸ்அப்பிற்கும் ஒரு நகலை அனுப்பி வைத்தான்.
அன்றிரவு சமையல் அறைக்குள் நுழைந்த மரகவதல்லி அதைக் கண்டு ஒரு நொடி அசையாமல் நின்றார்.
பின்னர்த் திரும்பி, “இது ரொம்ப நல்ல ஐடியா தர்ஷினி, எனக்குத் தோனல பாரேன்” என்றார் புன்னகையுடன். என்ன வயதானால் என்ன, நம் ஆசிரியர் பாராட்டினால் பெருமையாகத்தான் இருக்கிறது. அதிலும் அவர் மாமியார் எனும் போது கூடுதல் மகிழ்ச்சிதான்.
அதில் எழுதி இருந்ததை அப்படியே பின்பற்றவில்லை பிரியதர்ஷினி. அது சாத்தியமும் இல்லையே. ஆனாலும் தினம் இரவில், “நாளைக்கு என்ன சமைக்கப் போற?” என்ற கேள்வியில் இருந்து தப்பித்ததில் ஆசுவாசப்பட்டாள் அவள்.
புதன்கிழமை அவளுக்கு மாணிக்கவேலிடம் இருந்து அழைப்பு வந்தது.
அலுவலகத்தில் இருந்ததால் அவசரமாக அழைப்பை ஏற்று, “அப்பா, சொல்லுங்கப்பா” என்றாள் பரபரப்புடன்.