பிரிய பிரபஞ்சமே – 28 (2)

சூரியன் அவர்களைப் போலவே சோம்பலாகத் தலையை வெளியே காட்டாமல் மழைக்கு வழி விட்டு ஒதுங்கியிருந்தான்.

பிரியதர்ஷினி முதலில் கண் விழித்து நேரத்தைப் பார்த்து, “ஒன்பதே முக்காலா?” என்று பதறி எழுந்து குளித்து, சுடிதாரில் கூடம் சென்றாள்.

மரகதவல்லி கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரின் பக்கத்தில் சென்று அமர்ந்து, “அத்த, உங்களுக்குக் காஃபி தரவா?” என்று கேட்டாள்.

“இந்த மழையில தலை அலசினியா நீ? எப்படித் தண்ணி சொட்டுது பாரு. போய் ஒழுங்கா தலைய துவட்டிட்டு வா” என்று அவளை அதட்டினார்.

“நேத்துக் கிரவுண்ட் போய் மேட்ச் பார்த்தப்போ ஒரே காத்து அத்த. புழுதி, மழைன்னு மாத்தி மாத்தி மேலப் பட்டது, ஒரு மாதிரி இருந்துச்சு. அதான் ஹேர் வாஷ் பண்ணேன்” என்று அவருக்குக் காரணம் சொல்லி அங்கிருந்து எழுந்துச் சென்றாள்.

அவள் தலை முடியை உலர்த்தி, மொத்தமாக உயர்த்திக் கொண்டையிட்டு வெளியே வர, அவளுக்கான காஃபியுடன் காத்திருந்தார் மரகதவல்லி.

“இந்தா நீ காஃபி குடிச்சுட்டு போய் ரஞ்சனுக்கும் குடு” என்று நீட்டினார். அவளுக்குப் பிடித்தது போல மணமும் திடமும், சக்கரை குறைவாக இருந்த காபியை ரசித்து அருந்தினாள்.

கணவனுக்கும் கொண்டு போய்க் கொடுத்தாள்.

“பிரபா..” மெல்ல அவனை உலுக்கி எழுப்பினாள். கண்ணைத் திறக்காமல் படக்கென்று அவளைப் பிடித்திழுத்து மார்பில் போட்டுக் கொண்டான். நல்லவேளையாகக் காஃபி கோப்பையைப் படுக்கையை ஒட்டிய மேஜையில் வைத்திருந்தாள். இல்லையென்றால் அவன் மேல் காஃபி அபிஷேகம் நடந்திருக்கும் என்று நினைக்க அவளுக்குச் சிரிப்பு வந்தது.

மெதுவாகக் கண்களைத் திறந்து மனைவியின் சிரிப்பை மையலுடன் பார்த்து, முத்தமிட போனான்.

அவன் உதட்டில் கை வைத்து தடுத்து, “நீங்க பிரஷ் பண்ணல” என்று மூக்கை சுருக்கினாள்.

அவள் கையை விலக்கி, “அடிங்க, அதெல்லாம் பொண்டாட்டி கிட்ட பார்த்தா..” என்று அவன் ஆரம்பிக்கவும், “அய்யோடா” என்று கூச்சத்துடன் அவன் வாயை வேகமாக மூடினாள்.

“சென்சார் போடுங்க பிரபா” என்று விழி விரித்து மிரட்டினாள். அந்த விழிகளில் மொத்தமாக விழுந்து, அவளின் உள்ளங்கையில் ஈரமாய் முத்தம் வைத்தான்.

அவனுக்குக் காஃபியை கொடுத்து விட்டு அவள் வெளியேறினாள்.

மரகதவல்லி உணவு மேஜையில் அமர்ந்து சின்ன வெங்காயம் உரித்துக் கொண்டிருந்தார்.

அவர் முன் சென்று, “அத்த என்ன சமைக்கட்டும்?” என்று அவள் கேட்க, “மட்டன் குழம்பு வச்சுருக்கேன். இப்போதான் இட்லி ஊத்தி வச்சேன். ரஞ்சன் வந்ததும் சூடா சாப்பிடுங்க” என்றார். அவள் சரியெனத் தலையசைத்து அமர, அவர் சட்டென எழுந்து சென்று கை கழுவி வந்தார்.

அவள் பின்னால் வந்து நின்று, அவளின் கொண்டையைப் பிரித்துக் கையால் கோதி விட்டு, இரண்டு பக்கமும் முடி எடுத்து கிளிப் போட்டு பாதி மலர்ந்து மணம் வீசிய மல்லிகை சரத்தை அழகாக வைத்து விட்டார்.

“ரஞ்சன் பொறுமையா வரட்டும், அதுக்கு முன்னாடி நீ சாப்பிடுறியா? ரொம்ப நேரமாச்சு இல்ல? பசிக்குதா?” என்று கேட்டவரை ஆச்சரியமாக ஏறிட்டு, “அவர் வரட்டும்த்த” என்றாள்.

அவர்கள் முந்தைய இரவு உணவு உண்டிருக்கவில்லையே. ஆக, அவளுக்கு நல்ல பசி. ஆனாலும் தனியாக உண்ண மனமின்றிக் கணவனுக்காகக் காத்திருந்தாள்.

அவனும் இருபது நிமிடங்களில் வந்து விட, இருவருக்கும் உணவை எடுத்து வைத்து, தானே நின்று அவர்களுக்குப் பரிமாறினார் மரகதவல்லி.

“நாம எங்கயாவது வெளில போகலாமாம்மா? நீங்க ஃப்ரீயா?” உணவுக்கு இடையில் பிரபஞ்சன் கேட்க, “உனக்குக் கால்..” என்று காரணம் சொல்லி மறுக்கப் போனவர், “ஈவ்னிங்கா கோவிலுக்குப் போகலாம்” என்றார்.

“உங்களுக்கு எதுவும் வெளி வேலை இருந்தா சொல்லுங்க அத்த. உங்கள நான் கூட்டிட்டு போறேன். நம்ம காரை நேத்து நான்தான் ஓட்டினேன்.” என்று பிரியதர்ஷினி சொல்ல, “எனக்கு வேலை எதுவும் இல்லையே. வீட்டுக்கு காய்கறி வாங்கணும். அவ்ளோதான். அதைத்தான் நீங்களே வாங்கிட்டு வந்துடுறீங்களே” என்றார் புன்னகையுடன்.

“ஹா அத்த என்னைப் பார்த்து ஸ்மைல் பண்றாங்க பிரபா” என்று கணவனுக்குக் கண் காட்டினாள் அவள்.

“சாப்பிடு” என்று சொல்லாமல் சொல்லி, அவளுக்குக் குழம்பு ஊற்றினான் அவன்.

“அச்சோ இப்போ எதுக்குப் பிரபா என் தட்டுல குழம்பு ஊத்தினீங்க? நான் சாப்பிட்டு முடிச்சுட்டேன்.” என்று அவள் முறைக்க, “சாப்பாட்ட வேஸ்ட் பண்ணாத, இந்தா ஒரு இட்லி வச்சுக்கோ, அந்தக் குழம்பை காலி பண்ணு” என்று மரகதவல்லி அவள் தட்டில் ஓர் இட்லியை வைத்து நகர, “இதுக்கு மேல என்னால ஒரு வாய் கூடச் சாப்பிட முடியாது. நீங்கதானே குழம்பு ஊத்தினீங்க. அப்போ நீங்களே சாப்பிடுங்க” என்று இட்லியை கணவனுக்கு ஊட்டி விட்டாள். அவன் என்ன வேண்டாம் என்றா சொல்லப் போகிறான்.

அன்று மாலை மூவரும் குடும்பமாகக் கோவில் சென்று வந்தார்கள்.

நீல நிற காற்சட்டை, வெள்ளையில் கோடு போட்ட முழுக்கை சட்டை அணிந்திருந்தான் பிரபஞ்சன். அவன் சட்டை கையை மடித்து விட்டு, அடிபடாத காலை கவனமாகக் கீழே ஊன்றி அமர்ந்து, மனைவியின் மறுப்பைப் பொருட்படுத்தாமல் புறங்கையில் தள்ளி விட்டு, அவளின் சேலைக்கு மடிப்பு எடுத்து விட்டான். அவளும் நீல நிற மென்பட்டில் இருந்தாள்.

இப்போது பிரபஞ்சனால் தடுமாற்றம் இன்றி நடக்க முடிந்தது. ஆனாலும் வேகமாக நடக்கவில்லை அவன்.

கோவிலில் மரகதவல்லி கண் கலங்க கைப் கூப்பி மனமுருக வேண்டி, சாமி தரிசனம் செய்தார்.

அவர்கள் சாமி கும்பிட்டு சேர்ந்து நின்றார்கள்.

பிரபஞ்சன் ஏதோ சொல்ல புன்னகைத்தாள் பிரியதர்ஷினி. அவர்களை மனம் கனிய பார்த்து இருவருக்கும் திருநீறு, குங்குமம் பூசி விட்டார் மரகதவல்லி.

திருநீறு பூசிய விரல்களில் தன் மக்களின் வாழ்க்கைக்கான வேண்டுதலும், வாழ்த்தும் இருந்தது.

வீடு திரும்புகையில், “பிரபா, நான் நல்லா டிரைவ் பண்றேனா?” என்று பிரியதர்ஷினி திரும்பி பக்கத்தில் அமர்ந்திருந்த கணவனிடம் கேட்க, “கவனமா ரோட்டை பார்த்துக் கார் ஓட்டு தர்ஷினி” என்று அவளை எச்சரித்தார் மரகதவல்லி.

ஓரக்கண்ணால் கணவனை நோக்கி கண் சிமிட்டினாள் பிரியதர்ஷினி. அவனோ கண்ணால் மனைவியைக் கண் களவு செய்தான்.

error: Content is protected !!
Scroll to Top