பிரபஞ்சன் நீண்ட நாள்களுக்குப் பிறகு அங்கு வந்திருக்க, முதலில் அமைதி, பின்னர்க் கொஞ்சம் ஈடுபாடு என முன்னேறினான்.
“பதினொரு பேர்தானே பிரபா? அம்பயர் ஏன் அங்க நிக்கறார்? ஆப்போசிட் டீம் எந்த ஏரியா?” என்று ஏகப்பட்ட கேள்விகள் கேட்டு அவனை ஆட்டத்துக்குள் இழுத்து லகுவாக மாற்றினாள் அவனது சரிபாதி.
பார்கவிக்கு இயல்பிலேயே கிரிக்கெட் பிடிக்கும்.
“பார்த்திபன் எத்தனாவது பேட்ஸ்மேனா இறங்குவாரு?” என்று அவனது ஆட்டத்தைக் காண ஆர்வமாக வினவினாள்.
“நாலாவதா இறங்குவான்” என்று பிரபஞ்சன் சொல்ல, “ஹே விக்கெட் விழணும்னு வேண்டிக்கோ ப்ரியூ” என்றாளே பார்க்கலாம். சத்தமாகச் சிரித்து விட்டான் பிரபஞ்சன்.
அவளின் எதிர்பார்ப்பு படியே அடுத்தடுத்த ஆட்டக்காரர்கள் வெளியேற, பார்த்திபன் உள்ளிறங்கினான்.
“பார்த்திபன், பார்த்திபன்” என்று அவள் கத்த, “பாரு, பிளீஸ். கொஞ்சம் ம்யூட் போடு. இது ஒன்னும் ஐபிஎல் இல்ல” என்று அவளின் ஆர்வத் தீயில் நீரை ஊற்றி அணைத்தாள்.
இப்படி இரண்டு உள்ளூர் அணிகளுக்கு இடையில் நடக்கும் போட்டிகளுக்கு எல்லாம் அத்தனை ஆர்ப்பாட்டங்கள் செய்ய மாட்டார்கள்.
அதற்காகக் கொண்டாட்டங்கள் இல்லை என்று கிடையாது.
தோழியின் பேச்சை அசட்டை செய்து, “பார்த்தி” என்று கத்தி அவனை உற்சாகமூட்டினாள் பார்கவி.
பார்த்திபன் அடுத்தப் பந்தை சிக்ஸருக்கு பறக்க விட்டான்.
“ஹே சிக்ஸே” என்று பார்கவி கத்த, அடுத்தப் பந்து நான்கிற்கான கோட்டை தொட்டிருந்தது.
இடைவேளை நேரத்தில், “டேய் அடங்குடா” என்று பிரபஞ்சன் நண்பனை கண்டிக்க, “ஏன்டா நான் அடங்கணும்? எவனாவது மிஸ்டர் பி-ன்னு கூப்பிட்டா போதும், பந்த பக்கத்து கிரவுண்ட்டுக்கு பறக்க விட மாட்ட நீ? நாங்க மட்டும் என்ன தொக்கா? எங்களுக்கும் சிக்ஸ் அடிக்கத் தெரியும் தம்பி” என்று ஜெர்சியைத் தூக்கி விட்டான்.
“பிரியா ஃப்ரெண்ட்டு டா” என்று அவன் எச்சரிக்க, “ஹாங் எங்களுக்குத் தெரியாது பாரு. ஆமா அது நம்ம பாருதானே?” என்று பார்கவியைச் சுருக்கி வேறு அவன் அழைக்க, கோபத்தில் பற்றிக் கொண்டான் பிரபஞ்சன்.
நண்பனின் தோளில் ஓங்கி அடித்தான்.
“உன் விளையாட்ட கிரவுண்ட்டோட நிப்பாட்டிக்கோ” என்று ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தான்.
“ரைட் மிஸ்டர் பி” என்று கண் சிமிட்டி சென்றான் அவன்.
ஆட்டம் தொடர, அவனது அதிரடியும் தொடர்ந்தது.
“சலம்பாம ஆடு டா பைத்தியக்காரா, அவுட்டாகப் போற..” என்று நண்பனை பார்த்து வாயசைத்தான் பிரபஞ்சன்.
அதற்கு நேர்மாறாக அவனை ஊக்கப்படுத்த கைத் தட்டி கொண்டிருந்தான்.
“பார்த்திபன்” என்று பார்கவி கத்த, பிரியதர்ஷினி தோழியின் தோளில் இடித்தாள்.
“என்ன ப்ரியூ?”
“ஒன்னும் இல்ல”
“இல்ல. என்னமோ இருக்கு சொல்லு”
“அந்த அண்ணாக்கு கல்யாணமானதும் கவனிச்சுக்கறேன்னு நான் கறுவி இருக்கேன் பாரு. பாவம் நீ போய்ச் சிக்கிடாத” என்று பாவமாக அவள் சொல்ல பக்கென்று சிரித்து விட்டாள் பார்கவி. ஆனாலும் அவள் போக்கில் மாற்றம் இருக்கவில்லை.
ஆட்டம் இறுதிக் கட்டத்தை நெருங்க, பரபரப்பு அனைவரையும் தொற்றிக் கொண்டது.
சூரியன் சட்டென்று காணாமல் போனான். வானில் வெண்மேகங்கள் மறைந்து கருமேகங்கள் சூழ்ந்தன.
“அச்சோ மழை வர போகுது” என்று பிரியதர்ஷினி பதற, சத்தமாக இடி இடித்தது.
அதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாக இடைஞ்சலாகவே இருக்கவில்லை. ஆட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது.
மெதுவாக மழைத் தூறல் விழுந்தாலும், “நீ பாலை போடுடா” என்று கத்தி ஆட்டத்தைத் தொடர்ந்தார்கள்.
“நீ நனையாத வா பிரியா” என்று பிரபஞ்சன் மனைவியை இழுக்க, “இருங்க மேட்ச் முடியட்டும்” என்றாள் அவள். அவனுக்குச் சிரிப்பு வந்தது.
“ஒரே ஒரு சிக்ஸ் அடிச்சு தல தோனி ஸ்டைல்ல மேட்ச்சை முடிங்க பார்த்திபன்” என்று பார்கவி கத்த, பந்தை பறக்க விட்டான் அவன். அதை எதிரணி பிடித்து விடவும், சோகமாக வெளியேறினான்.
“ஆவணும்டா உனக்கு” என்று நண்பனை கேலி செய்து சிரித்தான் பிரபஞ்சன். ஆனால் அவர்கள் அணிதான் போட்டியை வென்றது.
பார்த்திபன் ஆட்ட நாயகன் விருது பெற்றான்.
“பார்த்தீங்களா மிஸ்டர் பி” என்று நண்பனிடம் அவன் பெருமையாய் காண்பிக்க, “சூப்பர் பார்த்திபன்” என்று அவனுக்குக் கைக் கொடுத்தாள் பார்கவி. பிரபஞ்சன் நண்பனை முறைக்க, “பார்த்திப் படி தாண்ட மாட்டான் டா, பதறாத” என்று நண்பனை வெறுப்பேற்றினாலும், பார்கவியிடம் ஒரு எல்லைக் கோடு வரைந்து கொண்டான் பார்த்திபன்.
சற்று நேரத்தில் மழை வலுக்க அங்கிருந்து கிளம்பினார்கள்.
பார்த்திபன் அவர்களிடம் விடைப்பெற்று வீடு சென்றிட, பார்கவி அவர்களோடு வந்தாள்.
“மேட்ச் செம்மையா என்ஜாய் பண்ணேன் அண்ணா. நெக்ஸ்ட் டைம் நீங்க போகும் போது சொல்லுங்க. நான் கண்டிப்பா வர்றேன்” என்றாள்.
மரகதவல்லி வீடு வந்திருக்க, அவரிடம் பத்து நிமிடங்கள் பேசிய பின் விடைபெற்று அவளும் வீடு சென்றிருந்தாள்.
“நாங்க மேட்ச் பார்க்க இவரோட கிரவுண்ட்டுக்கு போனோம் அத்த” என்று மாமியாரிடம் கதைச் சொல்லி கொண்டிருந்தாள் பிரியதர்ஷினி.
பிரபஞ்சன் மனம் பல நாள்களுக்குப் பிறகு ஆவாசப்பட்டது. மனைவியின் குரலை கேட்க கேட்க அவளை இழுத்து இறுக அணைக்கும் தாபம் எழ, மெல்ல அங்கிருந்து நழுவி விட்டான்.
பால்கனி கதவை லேசாகத் திறந்து வைத்து மழையை ரசித்து நின்றிருந்தான்.
அவனைப் பின்னிருந்து இடையில் கைக் கோர்த்து அணைத்து முதுகில் முகம் பதித்து நின்றாள் பிரியதர்ஷினி.
வார்த்தைகளுக்கு அவசியமற்ற அர்த்தமுள்ள மௌனம் அவர்களிடையே ஆட்சி செய்ய, மெல்ல அவளின் கைப் பிடித்து முன்னே இழுத்தான் அவன்.
“பிரபா” என்று உச்சரித்த அவள் உதடுகள் அவன் வசமானது.
அவளின் சேலை மறைக்காத இடையில் கைப் பதித்து, தனக்கு நெருக்கமாக இழுத்தான். இடைவெளிகள் இல்லாமல் போனாலும் நெருக்கம் போதவில்லை அவனுக்கு.
“பிரபா..” பிரிய மந்திரம் பிரபஞ்சனின் பிரியம் உச்சரிக்க, அவனுக்குப் பித்தேறியது.
மெதுவாகக் குனிந்து அவளின் கழுத்தில் முகம் புதைத்து மீசையால் உரசினான். அவள் மேனியில் ஓடிய சிலிர்ப்பை அவனது விரல் நுனிகள் உணர்ந்தன.
காதோரம் ஈரமாய் உதடு பதித்து, “பிரியா” என்றழைத்தான்.
“ஐ லவ் யூ பிரபா” அழுத்தமாய் அவன் மார்பில் முத்தமிட்டு காதலை சொன்னாள்.
மறுகணம் காதல் மழை அவர்களுக்கு இடையே பொழிய தொடங்கியது.