பிரியதர்ஷினி மதிய உணவு சமையலில் இறங்க, “நானும் ஹெல்ப் பண்றேன்” என்று அவளோடு இணைந்தாள் பார்கவி. தோழிகள் இருவரும் நேரில் சந்தித்து வெகுநாள்கள் ஆகியிருந்தன. ஆனாலும் விட்ட இடத்தில் இருந்து அவர்களின் பேச்சை தொடர்வது நட்பில் மட்டுமே சாத்தியம்.
பிரபஞ்சன் மடிக்கணினியுடன் வந்து கூடத்துச் சோஃபாவில் அமர்ந்து அவர்களின் பேச்சை கேட்டபடியே அலுவலக வேலையை முடித்திருந்தான்.
கதம்பச் சாம்பார், காலிஃபிளவர் வறுவல், புடலங்காய் கூட்டு, தக்காளி ரசம், புதினா துவையல், உளுந்து வடை, பால் பாயாசம் என அமர்க்களமாக விருந்து சமையல் செய்திருந்தார்கள்.
“பிரபா மணி பனிரெண்டாகப் போகுது. நான் போய் அத்தைக்கு லஞ்ச் கொடுத்துட்டு வர்றேன்” என்று பரபரத்தவள், அவன் வேகமாக எழவும், “நீங்க இருங்க. நானும் பாருவும் போயிட்டு வர்றோம்” என்று சொல்லி தோழியுடன் கிளம்பினாள்.
பார்கவியின் வண்டியில் இருவரும் மரகதவல்லி பணிபுரியும் பள்ளிக்குச் சென்று அவருக்கு உணவை கொடுத்தார்கள்.
“மரகதம் மிஸ் இன்னைக்கு லஞ்ச் எடுத்துட்டு வரலையா நீங்க? வாங்க ஷேர் பண்ணிக்கலாம்” என்று உடனிருந்த ஆசிரியர்கள் அவரை அழைக்கையில் அவருக்கான உணவு வந்தது.
வடை, பாயாசத்துடன் இருந்த உணவை சக ஆசிரியர்களுடன் பகிர்ந்து உண்டார் அவர்.
“என் மருமக வந்து குடுத்துட்டு போய் இருக்கா” என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டார்.
வீட்டுக்குச் செல்லும் வழியில், “பாரு, லஞ்ச் சாப்பிட்டுட்டு எங்கயாவது வெளில போகலாமா?” என்று தோழியிடம் கேட்டாள் பிரியதர்ஷினி.
“ம்ம் போலாம் ப்ரியூ. நாம ஒன்னா வெளில சுத்தி எவ்ளோ நாளாச்சு. நீ சொல்லு எங்க போகலாம்? மூவி, மால், பீச், ஷாப்பிங்?” என்று பார்கவி அடுக்கினாள்.
“மூவி ஓகே. ஆனா மால், பீச்லாம் சுத்தினா பிரபாவால ரொம்ப நேரம் நடக்க முடியாது” என்றாள் பிரியதர்ஷினி.
“ரைட் அப்போ மூவி போகலாமா? நேர்ல போனா டிக்கெட் கிடைக்கும்தானே? என்ன படம் ஓடுதுன்னு பாரு” என்று பார்கவி சொல்ல, “பாரு, நாம மால் போய் ஷாப்பிங் பண்ணலாம். இல்லன்னா எங்கம்மா வீட்டுக்கு போய்ட்டு வரலாம்” என்று இழுக்க, “அது கூட நல்ல ஐடியாதான். நானும் அப்பாம்மா பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. ஆனா அதையேன் சந்தேகமா இழுக்கற?” என்று கேட்டு அவர்களின் அபார்ட்மெண்ட் வளாகக் கீழ் தளத்தில் வண்டியை நிறுத்தி திரும்பி தோழியைப் பார்த்தாள்.
பிரபஞ்சனின் கிரிக்கெட் புராணத்தைத் தோழியிடம் பகிர்ந்தாள் அவள்.
“அவருக்கு ஆக்சிடென்ட் ஆகுறதுக்கு முன்னாடியே கிரிக்கெட் விளையாட போறதை விட்டுட்டார் பாரு. ஆனா என்னாலதான்னு எனக்கு ரொம்பக் கில்டியா இருக்கு. இன்னைக்குக் கூடப் பார்த்திபன் அண்ணா மேட்ச் பார்க்க இவரைக் கூப்பிட்டாங்க. இவர் போக மாட்டேன்னு சொல்லிட்டார்”
“நான் வர்றேன்னா போகல?”
“ம்ம். அதான் நாம வெளில போகும் போது அவரை மேட்ச் பாக்க அனுப்பலாம்னு நினைச்சேன்” என்று தயக்கத்துடன் இழுத்தாள்.
“நல்ல ஐடியாதான். அந்தப் பார்த்திபனுக்குப் போன் பண்ணி வந்து கூட்டிட்டுப் போகச் சொல்லு” என்றாள்.
பிரபஞ்சன் என்ன சொல்வானோ என்று தயங்கினாள் பிரியதர்ஷினி.
பார்கவி, அவர்களின் அகாடெமி எங்கே இருக்கிறது? போட்டிகள் எங்கு நடக்கும்? அது விளையாட்டு திடலா? பள்ளி மைதானமா? என்று அவளிடம் கேள்வி கேட்டுக் கொண்டே வந்தாள்.
“ஏன் பாரு, பேசாம நாமளும் அவர் கூடப் போகலாமா?” என்று கண்கள் ஆர்வத்தில் மின்ன கேட்டாள் பிரியதர்ஷினி.
“போகலாமே” என்று புன்னகைத்து சொன்ன பார்கவி, “புருஷனுக்காகப் பிடிக்காததயெல்லாம் செய்யுறாளுகப்பா” என்று அலுத்துக் கொள்ள, அவளின் தோளில் அடித்தாள் அவள்.
மதிய உணவு நேரம் பொதுவான பேச்சில் கலகலப்பாக, உணவின் ருசியோடு உள்ளிறங்கியது.
பிரபஞ்சன் தொலைக்காட்சியைப் போட்டு அமர, “பிரபா, நாம மேட்ச் பார்க்க போகலாமா?” என்று நேரடியாக அவனிடம் கேட்டு விட்டாள் பிரியதர்ஷினி.
அதை எதிர்பார்த்திராதவன், “நாமளா?” என்று அதிர்ச்சியுடன் வினவ, “ம்ம், பாரு கூடப் பார்க்கணும்னு சொல்றா” என்று தன் கூட்டணியில் தோழியையும் சேர்த்தாள்.
அவன் வேண்டாம், எதற்கு, அந்தப் போட்டி அப்படியொன்றும் சுவாரசியமாக இருக்காது, உங்களுக்குப் பிடிக்காது என்று என்னன்னவோ சாக்குப் போக்குகள் சொன்னான். ம்ஹும், எதற்கும் அசையவில்லையே அவள்.
“அதை நாங்க பார்த்துட்டு சொல்றோம்” என்று தன்னிலையில் நின்று விட்டாள்.
“பார்கவி அது பசங்க..” என்று அவன் ஆரம்பித்ததும் பார்கவி அவனை முறைத்து, “அது எங்களுக்குத் தெரியாது பாருங்க” என்றாள் இடக்காக.
“பிரபா பிளீஸ்” என்று மனைவி கெஞ்ச, அதற்கு மேல் எப்படி மனம் இறங்காமல் இருப்பான் அவன்.
அடுத்த அரை மணி நேரத்தில் கிரிக்கெட் போட்டியை காண கிளம்பி விட்டார்கள்.
அவர்கள் காரில் இருந்து இறங்குகையில் அங்கிருந்த பார்த்திபன் அவர்களைப் பார்த்து விட்டான்.
“ஹலோ மிஸ்டர் பி, என்ன பிரபஞ்ச காத்து இந்தப் பக்கம் வீசுது?” என்று கிண்டலாகக் கேட்டபடியே அவர்களிடம் வந்தான்.
“வாங்க” என்று பெண்கள் இருவரையும் புன்னகையுடன் வரவேற்றான்.
“இவங்களுக்கு மேட்ச் பார்க்கணுமாம்” என்று பிரபஞ்சன் சொல்ல, “நிஜமாவா மச்சா, நீ எதுவும் பொருட்காட்சி போட்டிருக்காங்கன்னு பொய் சொல்லி பொண்டாட்டியை கூட்டிட்டு வந்துட்டியா?” என்று சிரிக்காமல் தீவிரமாகக் கேட்டான்.
“டேய்..” என்று பிரபஞ்சன் பல்லைக் கடிக்க, “பின்ன என்னடா, காலையில நான் உன்னைக் கூப்பிட்டப்போ சின்ன வீடு மாதிரி இன்னைக்கு வர முடியாதுன்னு கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டு, இப்போ என்னைச் சமாதானப்படுத்த வந்தியோன்னு..” என்று அவனைப் பார்த்திபன் சீண்ட, “டேய் பைத்தியக்காரா, என் பொண்டாட்டி முன்னாடி இப்படிப் பேசி என் பல வருஷ காதல்ல பட்டாசு கொளுத்தி போட்டுடாதடா” என்று பதறினான்.
அவர்கள் மைதான வளாகத்திற்குள் நுழையவும், பிரபஞ்சனை கண்டு கொண்டு அவனிடம் ஓடி வந்தார்கள் அவனது குழுவினர்.
“பிரபஞ்சன், மிஸ்டர் பி, எப்டி இருக்கீங்க? கால் எப்படி இருக்கு?” என்று கத்தி அழைத்து அவனை நலம் விசாரித்தனர்.
மிஸ்டர் பி என்று ஒவ்வொரு முறை உச்சரிக்கப்படும் போதும் பிரியதர்ஷினி அவளையும் அறியாமல் புன்னகைத்தாள்.
“ஓ, அப்படி?. ஹ்ம்ம் நடக்கட்டும்” என்று பார்கவியும் அவளைக் கேலி செய்ய, அவள் முகத்தில் செம்மை படர்ந்தது.
“நீ வருவேன்னு நினைச்சு உனக்காக ஜெர்சி எடுத்துட்டு வந்தேன்” என்று பிரபஞ்சனின் சீருடையை அவனிடம் நீட்டினான் பார்த்திபன்.
“இது எதுக்குடா இப்போ? நான் என்ன கிரவுண்ட்க்குள்ளயா இறங்க போறேன்?” என்று பிரபஞ்சன் அதை வாங்காமல் அப்படியே நிற்க, பிரியதர்ஷினி அதை வாங்கி மடித்துக் கையில் வைத்துக் கொண்டாள்.
“அண்ணா, இந்தாங்க” என்று பார்த்திபனுக்கு எடுத்து வந்திருந்த வடை, பாயாசத்தை அவனிடம் நீட்டினாள். பெரிதாகப் பிகு செய்யாமல், “அட பால் பாயாசமா, குடுங்க” என்று அவள் நீட்டிய பாத்திரத்தை கையில் வாங்கிக் கூச்சப்படாமல் கரண்டியில் எடுத்து உண்ணத் தொடங்கினாள்.
பல வருட பழக்க தோஷத்தில் நடுவில் நண்பனுக்கும் நீட்டினான். பிரபஞ்சன் பதிலுக்கு முறைக்க, “ஓ, நீ உன் பொண்டாட்டி கூட இருக்கறத மறந்துட்டேன் மச்சா” என்று கண்ணடித்தான். பிரபஞ்சனால் பல்லை கடிக்க மட்டுமே முடிந்தது. பிரியதர்ஷினி புன்னகையுடன் அவர்களைப் பார்த்திருந்தாள்.
இதுவே முன்னர் என்றால் பொறாமையில் பொசுங்கி இருப்பாள், சண்டைக் கோழியாகச் சிலிர்த்து நின்றிருப்பாள். இப்போது பிரபஞ்சனின் பிரியம் தந்த கர்வத்துடன் மெளனமாய் அவர்களின் பேச்சை ரசித்திருந்தாள்.
“இப்போ பிரேக்கா?” பார்கவி கேட்க, “ஆமாங்க லஞ்ச் ப்ரேக், முடிஞ்சது. இப்போ மேட்ச் ஸ்டார்ட் ஆகிடும். நாங்க பேட்டிங்” என்றான் பார்த்திபன். அவர்களை நிழலான இடம் பார்த்து வசதியாக அமரச் செய்து, அவன் விளையாட போய் விட்டான்.
இந்தக் கிரிக்கெட் கவர்ச்சியாகத் தொலைக்காட்சியில் பார்ப்பது போலில்லை. ஆனாலும் ஆட்டம் ஒன்றுதானே. ஆகச் சுவாரசியம் குறையவில்லை.