பிரிய பிரபஞ்சமே – 27 (1)

“இப்ப எதுக்குப் பிரியா நீ மூஞ்சிய தொங்க போட்டுட்டு இருக்க?” என்று பிரபஞ்சன் மனைவியைக் கடிய, “உங்களுக்கு இன்னும் என் மேல கோபம் போகல. அதான் கிரிக்கெட் மேட்ச் பார்க்க போக மாட்டேங்கறீங்க” என்றாள், அவனைக் குற்றம் சாட்டும் பார்வையுடன்.

“பைத்தியம் மாதிரி பேசக் கூடாது. உன் ப்ரெண்ட் பார்கவி நம்ம வீட்டுக்கு வரும் போது நான் வீட்ல இல்லன்னா நல்லா இருக்குமா, நீயே சொல்லு?”

“பார்கவி கோபிச்சுக்க மாட்டா பிரபா. அவ நான் சொன்னா புரிஞ்சுப்பா”

“ஹே நீ புரியாம பேசாத பிரியா, அவ எதுக்கு நம்ம வீட்டுக்கு வர்றா?”

“என்னைப் பார்க்க..” என்று பட்டென்று சொன்னவள், “இல்லயில்ல நம்மள பார்க்க..” என்று வேகமாகத் திருத்தினாள். அவன் முறைக்கவும், “உங்களுக்கு ஆக்சிடென்ட் ஆனப்போ வந்து பார்க்க முடியலன்னு இப்போ வர்றா” என்று முடித்தாள்.

“ம்ம்ம், அவ என்னை நலம் விசாரிக்க வர்றா. ஆனா நானே வீட்ல இல்லன்னா நல்லாவா இருக்கும்?” என்று கேட்டான். அதற்கு அவள் திருதிருக்க, “அம்மாக்கு இன்னைக்கு ஸ்கூல் இருக்கு. நானும் வெளில போயிட்டா.. அவங்க வரும் போது நீ மட்டும் வீட்ல இருந்தா நல்லா இருக்காது பிரியா” என்றான். அவன் சொல்வதும் சரியெனப் பட, “ம்ம், ஓகே. ஆனா எனக்கு நீங்க வேணும்னு கிரிக்கெட் பார்க்க போகாம அவாய்ட் பண்ற மாதிரி இருக்கு” என்று தயக்கத்துடன் இழுத்தாள்.

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. இந்தக் காலை வச்சுட்டு எனக்கு அங்க போக விருப்பம் இல்ல. அவ்ளோதான்” என்று முடித்து விட்டான். ஒரு பெருமூச்சுடன் அவன் வார்த்தைகளை அப்படியே ஏற்றுக் கொண்டாள்.

“அத்தைக்கு ஸ்கூலுக்கு நேரமாகுது. நான் போய் அவங்களுக்கு டிஃபன் கொடுக்கறேன்” என்று சமையல் அறை சென்றாள்.

அன்றைக்குக் காலை உணவாக இடியாப்பம் செய்திருந்தாள். பார்கவி வருவதால் மதிய உணவு சற்றே தாமதமாகச் செய்யும் எண்ணத்தில் இருந்தாள்.

ஆக, “உங்களுக்குக் குக்கர்ல தக்காளி சாதம் செஞ்சுடவாத்தே?” என்று மாமியாரிடம் கேட்டாள் அவள்.

“எனக்காகத் தனியா எதுக்குச் செஞ்சிட்டு, நான் லஞ்ச்சுக்கு இடியாப்பம் எடுத்துட்டு போறேன்” என்றார் மரகதவல்லி. மதிய உணவுக்கு இடியாப்பமா? என்று மனம் கேளாமல், அவள் வேகவேகமாகத் தக்காளியை எடுக்க, “பிரியதர்ஷினி, நான் சொன்னா கேட்கணும்” என்று அதட்டலாகச் சொன்னார் அவர். அவளும் தக்காளியை அப்படியே ஓரமாக வைத்து விட்டாள்.

இவள் என் மாணவி, நான் சொன்னால் அப்படியே சமத்தாகக் கேட்டுக் கொள்வாள் என்ற அவரின் எண்ணம் இப்போதும் வெளிப்பட்டது. அதற்கு ஏற்றார் போல அவளும் அப்படித்தானே இருக்கிறாள். பிரபஞ்சன் சொல்வது போல முதலில் இவர் மேலிருக்கும் தேவையற்ற பயத்தைக் களைய வேண்டும் அவள்.

“நான் கேண்டீன்ல சாப்பிட்டுக்கறேன்” என்றார்.

அவள் லேசாகத் தலையசைக்கவும், “உன் ஃப்ரெண்ட் வர்றா இல்ல? நீ, அவளைப் பாரு. அவளுக்கு ஏதாவது ஸ்பெஷலா செய். இப்போ எனக்கும் செஞ்சு, அந்தப் பொண்ணுக்கும் சமைச்சு.. எத்தனை வேலை செய்வ நீ?” என்று கேட்டவரை ஆச்சரிய அதிர்ச்சியுடன் நோக்கினாள்.

“அம்மா மட்டன் குழம்பு குடுத்து விட்டிருக்காங்க அத்த” என்று அவள் சொன்ன பிறகும், “அப்போ எனக்கு மட்டும் மோர் குழம்பு வச்சுடு” என்று சொன்னவரின் மாற்றம் அவளை ஆச்சரியப்படுத்தாமல் என்ன செய்யும்!

அவரை மாமியார் என மனதார ஏற்று, அவளும் முறையாக அழைக்க, அவரும் மனதளவில் மாறி விட்டாரோ என்னவோ!

இடியாப்பம், காய்கறி குருமா, தேங்காய்ப் பால் எனக் காலை உணவை எடுத்து வைத்தாள். மரகதவல்லி காலை உணவை முடித்து, “நான் பெர்மிஷன் சொல்லி இருக்கேன். பார்கவி வரட்டும் நான் பார்த்திட்டு ஸ்கூலுக்குப் போறேன்” என்று காத்திருந்து பார்கவி வந்ததும் அவளை வரவேற்று பேசி, நலம் விசாரித்து, அவளுக்கு முந்தின நாள் மாலையே வாங்கிக் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்த ரோஜாவை எடுத்து கொடுத்தார்.

“வாவ், தேங்க்யூ மிஸ்” என்று ஆர்ப்பரித்துப் பூரிப்புடன் வாங்கிக் கொண்டாள் பார்கவி.

“நாங்க டியூஷன் வரும் போது இவளுக்கு மட்டும் ஸ்பெஷலா பூ கொடுப்பீங்க, அப்போ எனக்குப் பயங்கரப் பொறாமையா இருக்கும் மிஸ்” என்று அவள் சொல்ல, பிரியதர்ஷினி சிரிப்பை அடக்கினாள்.

மரகதவல்லி புன்னகையுடன் மகனை பார்த்துப் பின் தன் பார்வையைப் பார்கவியிடம் திருப்பினார், “என் ஸ்டூடண்ட்ஸ் எல்லாருமே எனக்கு ஸ்பெஷல்தான்” என்று எல்லா ஆசியர்களைப் போலவே அவரும் சொன்னார்.

“எனக்கு இன்னைக்கு ஸ்கூல் இருக்கு. அதுனால நான் கிளம்பறேன். நீ இருந்து லஞ்ச் சாப்பிட்டுட்டுதான் போகணும். சரியா?” என்று அவளுக்கு அன்பு கட்டளையிட்டு விட்டே சென்றார்.

“மரகதவல்லி மிஸ் என்னைப் பார்த்துச் சிரிக்கவெல்லாம் செய்யுறாங்க ப்ரியூ” என்று அதிசயம் போலத் தோழியிடம் சொன்ன பார்கவி, பிரபஞ்சனின் பார்வையில் நாக்கை கடித்தாள்.

அவனோ சிரிப்புடன், “சாப்பிட வாங்க” என்றான்.

ஒரு பத்து நிமிடம் எனச் சோஃபாவில் அமர்ந்து விட்டார்கள் தோழிகள்.

“எப்படி வந்த பாரு?” என்ற பிரியதர்ஷினியின் கேள்வியில் ஆரம்பித்த அவர்களின் பேச்சு அப்படியே வால் பிடித்து நீண்டு கொண்டே போனது.

இடியாப்பம் என்றாலே பிரியதர்ஷினிக்கு பிடிக்காதே.

“பிரியா, டைமாகுது பாரு. சாப்பிடலாம். வாங்க பார்கவி” என்று இருவரையும் அழைத்தான் பிரபஞ்சன்.

“சாரி பாரு. வா சாப்பிடுவோம்” என்று அவளும் தோழியை அழைத்து உணவு மேஜைக்கு வந்தாள்.

இடியாப்பத்துடன் இப்போது வெந்தயக்கீரையில் செய்த பராத்தாவும் மேஜையில் இருந்தது.

நீங்களா செஞ்சீங்க என்று கண்ணில் தொக்கி நின்ற கேள்வியுடன் கணவனை ஏறிட்டாள் அவள்.

“சாப்பிடு” என்று கண்ணால் மொழிந்தான் அவன்.

பார்கவி இரண்டு வாய் உண்ட பிறகே, “இடியாப்பம் உனக்குப் பிடிக்காதே பிரியூ?” என்று கேட்டாள்.

“அதான் எனக்கு மட்டும் மேத்தி பராத்தா செஞ்சிருக்கு. இந்தா..” என்று தோழிக்கும் பரிமாறினாள்.

அவர்களின் பால்கனி தோட்டத்தில் சிறிய பையில் வெந்தயக் கீரை வளர்கிறது. அதைப் பறித்து வந்து, அத்துடன் மிளகாய், தனியா, மஞ்சள் தூள், சீரகம், தயிர், உப்பு சேர்த்து பிசைந்து பராத்தா செய்திருந்தான் பிரபஞ்சன்.

அதை அப்படியே சாப்பிடவே ருசியாக இருந்தது. காய்கறி குருமா தொட்டு சாப்பிட சுவை கூடியது.

அவளுக்காக ஒன்று செய்திருக்கிறான் கணவன் என்பதே பிரியதர்ஷினிக்குப் பிரதானமாகத் தெரிந்தது. நினைவின் பக்கங்களைச் சற்றே புரட்டினால், அவர்களுக்குத் திருமணமான புதிதில் கூட இதையெல்லாம் செய்திருக்கிறான் அவன் என்பது அவள் புத்தியில் உரைத்தது. பிரியம் மிக அவனையே பார்வையால் விழுங்கினாள்.

கண்ணைச் சிமிட்டி, சாப்பிடு என்று கண்ணால் அதட்டினான் அவன்.

அவர்களின் பார்வை பரிமாற்றத்தை கண்டு, “ம்க்கும்” என்று தொண்டையைச் செருமினாள் பார்கவி.

அவளுக்கு இவர்களின் காதல் கதையெல்லாம் தெரியாது அல்லவா. காலை உணவை முடித்ததும் சற்று நேரம் பார்கவியுடன் பொதுவாகப் பேசி, பின்னர், “நீங்க பேசிட்டு இருங்க. நான் வந்துடுறேன்” என்று அவர்களுக்குத் தனிமையைக் கொடுத்து விட்டு அறைக்குள் சென்றிருந்தான் பிரபஞ்சன்.

இத்தனை நாள்கள் தோழியிடம் கூடப் பகிர்ந்திடாமல் ரகசியமாய்ப் பாதுகாத்த கணவனின் காதல் கதையை இப்போதுதான் அவளிடம் பகிர்ந்தாள் அவள்.

“என்னாது? என்ன பிரியா சொல்ற? அப்போ நீ மிஸ்க்குச் செல்லம் இல்ல, அவங்க பிள்ளைக்குத்தான் செல்லமா?. அப்படிப் போடு” என்று பல விதமாகக் கேலி செய்து, சிரித்து அவளை ஒரு வழியாக்கி விட்டாள்.

“ஆரம்பத்துல நீ அடிக்கடி அவரைப் பத்தி கம்ப்ளைன்ட் பண்ணும் போது எனக்கு மனசு கேட்கவே இல்ல. இப்போ உன்னைச் சந்தோஷமா பார்க்கவே எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கு ப்ரியூ” என்று தோழியின் மகிழ்ச்சியில் மனம் மகிழ்ந்தாள் அவள்.

“இப்போ எல்லாம் சரியாகிடுச்சுதானே?” மெய்யான அக்கறையுடன் பார்கவி கேட்க, “எஸ் எஸ் பாரு. எல்லாத்தையும் பேசி சரி பண்ணிட்டோம்” என்றாள் புன்னகையுடன்.

“ம்ம் சூப்பர் பிரியூ. இப்படியே இருங்க” என்றவள், “உங்களுக்கு இடையில இந்தப் பார்த்திபன் கரடியை மட்டும் வர விட்டுராதீங்க” என்று கோபமாக எச்சரித்து, சற்றே தலையைத் திருப்பி அறைப் பக்கம் பார்த்தாள்.

“ஹே பாரு. நான்தான் சொன்னேன் இல்ல, அந்த அண்ணா பிரச்சினை இல்லைன்னு. எனக்கு நீ எப்படியோ அது போலத்தான் இவருக்குப் பார்த்திபன் அண்ணா. அவரும் நல்லவர்தான் பாரு”

“நீயும் என்னவோ பாரு பாருன்னு சொல்ற பிரியூ, ஆனா என்னால நீ சொல்றதை கேட்க கூட முடியல” என்று உதட்டை பிதுக்கிய பார்கவி, “பார்த்திபன் அண்ணாவா.. பார்த்தும்மா பிரியூ. அந்த அண்ணா போன் பண்ணா உன் ஆளு உன்னை ஹோட்டல்ல தனியா விட்டுட்டு ஓடிப் போய்டுவார். நீதான் எப்பவும் ஹேண்ட்பேகை கையிலயே வச்சுட்டு கேர்ஃபுல்லா இருக்கணும்” என்று நக்கலாகச் சொன்னாலும், அதில் அக்கறை கலந்த எச்சரிக்கையே இருந்தது.

“லூசு மாதிரி பேசாத பாரு. அன்னைக்கு இவர் என்னை ஹோட்டல்ல விட்டுட்டு போன ரீசன்தான் நான் ஆல்ரெடி உன்கிட்ட சொன்னேன் இல்ல?” என்று கணவனைக் குறை சொல்லவும், கோபமாகக் கேட்டாள்.

“பார்த்திபன் தங்கச்சி விஷயம்தானே? அதுக்கு எதுக்கு உன் ஆளு அவசரமா ஓடணும்? அவர் தங்கச்சிக்குப் பணப் பிரச்சினைன்னா பார்த்திபன்தானே பார்க்கணும்..”

“டி பாரு” என்று அதட்டி, பட்டென்று அவளின் வாயை மூடினாள்.

“பார்த்திபன் அண்ணாவோட தங்கச்சி அன்னைக்குச் சூசைட் அட்டெம்ட் பண்ணிட்டாங்களாம்.” என்று கடின குரலில் கிசுகிசுத்தாள்.

அவள் கையை விலக்கி, “ஐயோ” என்று விழிகளை விரித்தாள் பார்கவி.

பிரபஞ்சன் சொல்லி கேட்கும் போது அவளுக்கும் அப்படித்தான் இருந்தது. ஒவ்வொரு முறை இந்தப் பேச்சு வரும் போதும் பிரபஞ்சன், நான் உனக்காகப் பதறி ஓடி வந்தேன் என்று சொல்லும் போது அவளுக்குக் கோபம்தான் வந்திருக்கிறது.

பார்த்திபன் உனக்கு என்னை விட முக்கியமா என்று கோபப்பட்டாளே ஒழிய, அன்றைக்கு ஏன் சென்றாய், எதற்காகச் சென்றாய் என்றெல்லாம் அவள் கேள்வி கேட்டிருக்கவில்லை. ஆனால் அவனே காரணம் சொன்னான்தான். பார்த்திபன் தங்கை வீடு வாங்க போய்ப் பணச் சிக்கலில் சிக்கிக் கொண்டாள், அதற்கு உதவச் சென்றேன் என்று சொல்லியிருந்தான். அதனால் அவன் நண்பனுக்கு உதவியதை கூடச் சொல்லியிருந்தான். “அவன் தங்கச்சி ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகுற அளவுக்கு..” என்று அவன் கூடுதலாகச் சொன்ன தகவலை அவள்தான் மனத்தில் ஏற்றியிருக்கவில்லை.‌

சமீப சண்டைக்குப் பின்னான சமாதானத்தின் போது அவளுக்கு விளக்கம் கொடுத்திருந்தான்.

அது கூட அந்த விஷயம் அவள் மனத்தை அதிகமாகப் பாதித்திருக்கிறது என்பதால் மட்டுமே சொல்லியிருந்தான்.

“நான் இதை அம்மாக்கு கூடச் சொல்லல பிரியா. பார்த்திக்கு அவன் தங்கச்சி இப்படிப் பண்ணிட்டாளேன்னு ரொம்ப வருத்தம், விஷயம் வெளில தெரிஞ்சா சொந்தக்காரன் எல்லாம் ரொம்பப் பேசுவானுங்கன்னு லோ பிபி அதுனால வீட்ல மயங்கிட்டா, அதுக்காக ஹாஸ்பிடல் வந்தோம்னு சொல்லி வச்சிருக்கான்” என்று அவளிடம் சொன்னான்.

“ஐ ஆம் சாரி பிரபா. நீங்க இதை அப்பவே சொல்லியிருந்தா நமக்கு நடுவுல இவ்ளோ பிரச்சனை வந்திருக்காது இல்ல?” என்று கேட்டவளுக்கு அவன் சொல்லாமல் விட்டதின் காரணத்தை ஊகிக்க முடிந்தது.

“நான்தான் அப்போ நீ என்னைக் கண்ணை மூடிட்டு நம்பணும்னு நினைச்சிட்டு இருந்தேனே பிரியா. அதைச் சொல்லி தப்பிக்க வேணாம்னு விட்டுட்டேன். நான் உன்னைத் தவிக்க விட்டுப் போனது தப்புதானே?” என்று அவன் இறங்கிய குரலில் கேட்க, “ம்ம், என்னைக் காணோம்னு நீங்களும் தவிச்சு இருப்பீங்க. சாரி” என்றாள் மீண்டும். அப்படியாக அதைப் பேசி சரி செய்திருந்தார்கள்.

இப்போது தோழியிடம் அதைப் பற்றி மேலோட்டமாகச் சொல்லி, தங்களுக்கு நடுவில் எல்லாம் சரியாகி விட்டது என்று சொன்னவள் முகத்தில் சந்தோஷ சாரல் அடித்தது.

“ம்ம், நல்லாருங்க, நல்லாருங்க. இப்படியே எப்பவும் நல்லா ஹேப்பியா இருங்க” என்று கையை உயர்த்தி அவளை ஆசிர்வதித்தாள் பார்கவி. அந்த வாழ்த்தை கேட்டு பிரியதர்ஷினி மலர்ந்து சிரித்தாள். கொஞ்ச நேரம் அவர்களின் காதல் கல்யாண கதையை வியந்து, ஆராய்ந்து, அலசி ஓய்ந்தார்கள் தோழிகள்.

error: Content is protected !!
Scroll to Top