பிரிய பிரபஞ்சமே – 26 (3)

அந்த வாரம் மீண்டும் மருத்துவமனை சென்று மருத்துவரை சந்தித்து அவரது பரிந்துரையில் அவன் காலுக்கு எக்ஸ்ரே எடுத்தார்கள். அதன் முடிவை பார்த்து, எலும்பு நன்றாகக் கூடி விட்டது. ஆனாலும் காலுக்கு அதிகச் சிரமம் கொடுக்காமல் கவனமாக இருங்கள் என்று வலியுறுத்தினார் மருத்துவர்.

அதைக் கேட்டதும், “அப்பாடா” என்று நிம்மதியாக இருந்தது அவளுக்கு. அதைக் கண்டு பிரபஞ்சன் முகத்தில் புன்னகை.

இருவரும் வீடு திரும்பியதும், “பிரபா, எனக்கு ஆபீஸ் போக என் ஸ்கூட்டி வேணும்” என்றாள் அவள்.

“உங்கப்பா வீட்ல போய் வண்டிய எடுத்துட்டு வருவோமா?” என்று அவன் கேட்க, “அண்ணாவ எடுத்துட்டு வரச் சொல்லவா?” என்று கேட்டாள் அவள்.

அதற்கு நடுவில், “யாரும் எடுத்துட்டு வர வேணாம். அந்த வண்டியை நீங்க ரெண்டு பேரும் தொடவே கூடாது சொல்லிட்டேன்” என்று கண்டிப்பும் கறாருமாகக் குரல் உயர்த்திச் சொன்னார், உணவு மேஜையில் அமர்ந்து விடைத் தாள்கள் திருத்தி கொண்டிருந்த மரகதவல்லி.

“ஏன் வண்டியை தொட கூடாதும்மா? அதில்லாம பிரியா எப்படி வேலைக்குப் போவா?” என்று பிரபஞ்சன் கேட்க, “பிரபா, அப்பா கூட அந்த வண்டியை நான் இனிமே ஓட்ட கூடாதுன்னு சொல்லிட்டார்” என்று அவனிடம் ரகசியம் போலச் சொன்னாள் மனைவி.

“வாட்? மாமா ஏன் அப்படிச் சொன்னார்?” என்று குழப்பத்துடன் அவன் கேட்க, “அந்த வண்டியிலதானே உனக்கு ஆக்சிடென்ட் ஆச்சு. அதுக்குத்தான் அதைத் தொட வேணாம்னு சொல்றேன்” என்று அவனது கேள்விக்கு மரகதவல்லி பதில் சொன்னார்.

“ஆக்சிடென்ட்டானா அதுக்காக அந்த வண்டியை தொட கூடாதாம்மா. நான் சைக்கிள்ல இருந்து எத்தனை முறை கீழ விழுந்திருப்பேன்..”

“அதுவும் இதுவும் ஒன்னில்ல ரஞ்சன். அம்மா சொன்னா சரின்னு கேக்கற பழக்கமே இல்ல உனக்கு” என்று மகனை முறைத்தார்.

“ம்மா, சும்மா என்னைக் குறை சொல்லாதீங்க. நீங்க சொல்றதுல ஏதாவது லாஜிக் இருக்கா நீங்களே சொல்லுங்க? நான் ஒழுங்கா போனப்போ எவனோ ராங் சைட்ல வந்து இடிச்சதுக்கு ஸ்கூட்டி என்னம்மா செய்யும்? வீணா எதுக்கு அது மேல பழி போடுறீங்க?” என்று அழுத்தமாகக் கேட்டான்.

“அந்த வண்டி வேணாம்” என்று சொன்னதையே திருப்பிச் சொன்னார் அவர்.

“வாட் நான்சென்ஸ் மா, எனக்கு ஆக்சிடென்ட் ஆனதுக்கு அந்த வண்டியை ப்ளேம் பண்றீங்களா நீங்க? இந்த மூட நம்பிக்கை எல்லாம் உங்களுக்கு எப்போம்மா வந்தது?”

மகனை நேராகப் பார்த்து, “என் பிள்ளைக்கு ஒன்னுன்னா எனக்கு எல்லா நம்பிக்கையும் வரும்” என்றார் தீர்க்கமாக.

“அப்பா கூட இப்படித்தான் சொன்னார்” என்று முணுமுணுத்த மனைவியை முறைத்தான் அவன்.

“அது எனக்கு நீங்க வாங்கிக் கொடுத்த வண்டி, ரொம்ப ஸ்பெஷல்” என்று அவள் சிறுகுரலில் சொல்ல, மரகதவல்லிக்கு கேட்டு விட்டது.

“இந்தா உன் பிரியதர்ஷினி சொல்றாளே அது மட்டும் என்ன?” என்று மகனிடம் கோபமாகக் கேட்டார் அவர்.

“வண்டி மேலலாம் அட்டாச்மெண்ட் வளர்த்துப்பியா நீ?” என்று அவளை அதட்டினார். அந்தப் பிணைப்பை என் பிள்ளை மேல் வை என்று அவரின் பார்வையே சொன்னது. ஆனால் வீடு, வாகனம், அலைபேசி என நம் பிடித்தங்களை, பிணைப்புகளைப் பிரித்திட முடியாதே.

அது ஆசிரியருக்கு புரியாதா என்ன? மகன், மருமகள் என்று வரும் போது அவரின் நம்பிக்கைகள் எல்லாம் தகர்ந்து புது உருவம் பெற்றிடுகின்றன.

“உனக்குப் புது வண்டி நான் வாங்கித் தர்றேன்” என்று மருமகளிடம் சொன்னார் அவர்.

அவளின் வண்டி பற்றிய பேச்சு வந்தாலே மாணிக்கவேலும் அதைத்தான் சொன்னார்.

“குட்டிமா, அப்பா உனக்குப் புது ஸ்கூட்டி வாங்கித் தர்றேன்டா” என்றிருந்தார்.

அது பிரபஞ்சன் வாங்கித் தந்தது என்று அவள் சொன்னால், “அப்போ புதுசா வேற வண்டி மாப்ளய வாங்கித் தர சொல்லவா?” என்று மாற்றிக் கேட்டார். அவளுக்கு அப்படியே எதிலாவது முட்டிக் கொள்ளலாம் போலிருந்தது.

கணவனின் மார்பில் முட்டினாள்.

“விடு பார்த்துக்கலாம்” என்று லகுவாக அவளைத் தேற்றினான் அவன்.

இப்போது பெரும்பாலும் யாரின், எவற்றின் உதவியும் இன்றி அவனால் நடக்க முடிந்தது. வாரத்தில் ஓரிரு நாள்கள் அலுவலகம் சென்று வந்தான்.

பிரியதர்ஷினியும் அவளின் வண்டி பிரச்னை தீர்க்கப்படாததால் அலுவலகப் போக்குவரத்தை பயன்படுத்தித் தினமும் அலுவலகம் சென்று வந்தாள்.

பிரபஞ்சனும் அதையே பின் பற்றினான்.

பிரியதர்ஷினிக்கு எப்போதும் வார இறுதி நாள்கள் விடுமுறைதான். அந்த வாரம் பிரபஞ்சனுக்கும் விடுமுறை இருக்க, நெடுநாள்கள் கழித்துத் தோழி பார்கவியை வீட்டுக்கு அழைத்திருந்தாள். அவள் முன்னரே வர வேண்டியது. ஆனால் அப்போது வர முடியாமல் போனதால், “ப்ரியூ, கோபிச்சுக்காத. நான் இன்னொரு நாள் வர்றேன்” என்று சொல்லியிருந்தாள்.

இந்த முறை அவளே உன்னைப் பார்க்க வீடு வருகிறேன் என்று வலியுறுத்தவும், “சரி வா” என்று விட்டாள் அவள்.

மாமியாரிடம் தோழியின் வருகையைத் தெரியப்படுத்தினாள்.

“பார்கவியா? வரட்டும் வரட்டும்.” என்றார் ஆவலாக. அவளும், அவர் மாணவிதானே.

“நாளைக்கு என்ன மெனு? அதுக்கு என்ன வாங்கணும்னு சொல்லு பிரியா. இப்பவே போய் வாங்கிட்டு வந்துடலாம்” என்று பிரபஞ்சன் சொல்ல, அவனையே கூர்ந்து பார்த்தாள் அவள்.

“நாம வெளில போய் ரொம்ப நாளாச்சு இல்ல பிரபா? பேசாம நாளைக்குப் பார்கவியோட வெளில எங்கயாவது போயிட்டு வருவோமா? நம்ம காரை எடுத்துப்போம். அவ டிரைவ் பண்ணுவா” என்றாள்.

“ஏய், என்ன நீ. உன் பிரெண்ட் உன்னைப் பார்க்க நம்ம வீட்டுக்கு வர்றா. அவளைக் கூட்டிட்டு வெளில போகலாம்னு சொல்லிட்டு இருக்க?” என்று கேட்டான். அவனது கேள்வியே மறுப்பான பதிலை தர அவனை முறைத்தாள் அவள்.

“அவளுக்கு நம்ம கூட டைம் ஸ்பெண்ட் பண்ணணும். அவ்ளோதான். அது வீட்லயா, வெளிலயான்னுலாம் அவ பார்க்க மாட்டா”

“இருந்தாலும் வீட்டுக்கு வர்றேன்னு சொன்னவங்ககிட்ட வெளில மீட் பண்ணலாம்னு சொன்னா நல்லா இருக்காது” என்று தன் நிலையில் இருந்து அவன் மாறவில்லை. அவனுக்கு வெளியில் செல்ல விருப்பமில்லை போலும், அதுவும் பார்கவி வரும் போது என்று அவனது மனநிலை புரிந்து வேறு வழியின்றி அவன் போக்கில் சென்றாள் அவள்.

ஆனாலும் மனத்தில் சிறியதொரு உறுத்தல் அவளுக்கு இருக்கத்தான் செய்தது.

அவர்களுக்குத் திருமணமான நாளில் இருந்து, விபத்து நேர்ந்த நாள் வரை பிரபஞ்சன் வெளியே செல்லாத வார இறுதிகளை விரல் விட்டு எண்ணினால் பூஜ்யம்தான் வரும்.

ஒன்று அவளை வெளியே அழைத்துச் செல்வான். இல்லையேல் நண்பனை காண, நண்பனுடன் கிரிக்கெட் விளையாட என்று வாரம் தவறாமல் வெளியே சென்றவன் அவன். நண்பன், கிரிக்கெட் இரண்டையும் உதறிய சில மாதங்கள் அவளோடு அவளின் அப்பா வீட்டுக்கு சென்றிருந்தானே. இப்போது என்னவென்றால் வீட்டிலேயே அடைந்து கிடக்கிறான்.

கடந்த சில நாட்களாக அலுவலகம் செல்கிறான்தான். ஆனால் அது கடமை அல்லவா. அவன் வாழ்வில் இருந்து களிப்புக்கான நேரம் காணாமலே போய் விட்ட குற்ற உணர்ச்சி அவளை அழுத்தியது.

பிரபஞ்சன் பிடிவாதக்காரன்தான். ஆனால் பிரியா கேட்டு எதையும் மறுக்க அவன் பிரியத்துக்கு மனம் வராது என்று மனதார நம்பினாள் அவள்.

“பிரபா” என்று மீண்டும் அந்தப் பேச்செடுத்தாள்.

“தூக்கம் வருது பிரியா” என்று உறக்க குரலில் அவன் முணுமுணுக்க, அவளும் தொல்லை செய்யவில்லை.

மறுநாள் காலை எட்டு மணி அளவில் பிரபஞ்சனின் அலைபேசி ஒலியெழுப்ப பிரியதர்ஷினிதான் அதை எடுத்தாள்.

அலைபேசி திரையில் பார்த்திபன் பெயர் ஒளிர்ந்தது.

“பார்த்திபன் அண்ணா” என்று அவனிடம் நீட்டினாள்.

“சொல்லு பார்த்தி”

“….”

“கிரவுண்ட்டுக்கா? நான் வரலடா.‌‍ இன்னைக்கு எங்க வீட்டுக்கு பிரியா ஃப்ரெண்ட் பார்கவி வர்றாங்க. சோ என்னால எங்கேயும் வர முடியாது” என்று திட்ட வட்டமாக மறுத்தான். அவள்தான் விரைந்து என்னவென்று விசாரித்து, “அண்ணா மேட்ச் பார்க்கத்தானே கூப்பிடுறாங்க, போய்ட்டு வாங்களேன் பிரபா” என்றாள்.

“நோ” என்று ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டான் பிரபஞ்சன்.

பிரியதர்ஷினியின் முகம் அனிச்சையாக வாடியது.

error: Content is protected !!
Scroll to Top