அங்கே சமையல் அறையில் மும்முரமாகச் சமைத்துக் கொண்டிருந்தார் மரகதவல்லி. அவரின் அலைபேசி உணவு மேஜையில் இருக்க அதிலிருந்து எழுபதுகளின் திரைப்பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது.
“சாரி, அத்த. நீங்க தள்ளிக்கோங்க, நான் சமைக்கிறேன்” என்று அவள் பரபரக்க, “நான் முடிச்சுட்டேன் பிரியதர்ஷினி. நீ போய் அவனைக் கவனி” என்றார் அதிகம் அலட்டிக் கொள்ளாமல்.
“இல்ல அத்த” என்று அவள் இழுக்க, “ஒரு சாம்பாரும் சட்னியும் வைக்க எனக்கு எவ்வளவு நேரம் ஆகப் போகுது. நீ போய் ரஞ்சனை கவனி” என்றார் அழுத்தமாக. அப்போதும் விலகாமல் அங்கேயே நின்று அவருக்குச் சிறிய சிறிய உதவிகள் செய்து கொண்டிருந்தாள். அவர் சமைத்த பாத்திரங்களை ஒழித்துக் கழுவ போட்டாள்.
“பாத்திரத்தை நீ தேய்க்காத. அதை லட்சுமி வந்து செய்யட்டும்” என்றார். இவர்தான் இத்தனை மாதங்கள் அவளை வேலை வாங்கினார், அதட்டி உருட்டினார் என்று சொன்னால் அவளாலேயே நம்ப முடியாது.
“நீ போய் ரஞ்சனை கவனி” என்று இரு முறை அவளிடம் சொல்லி விட்டார். மகன் அத்தனை வருடமாக அவள் மேல் ஆசைப்பட்டு, அவளைக் காதலித்து மணந்திருக்கிறான்.
அதன் பிரதிபலிப்பு என்னிடம் இல்லையென்று இவருக்கு வருத்தமோ? அதனால்தான் எப்போதும் அவனுக்கு இதைச் செய், அவனுக்கு அதைச் செய். நீ வேலைக்குப் போக வேண்டாம், அவனுக்காக வீட்டில் இரு. என்னால் அவனைப் பார்க்க முடியவில்லை. நீயாவது அவனை நன்றாகக் கவனி என்று சொன்னாரோ? என்று யோசித்தாள் அவள்.
அதை அவரிடமே கேட்டு விடலாம் என்று அவள் நினைக்க, “மதியத்துக்கு என்ன செய்யுறது பிரியதர்ஷினி?” என்று அவளிடம் கேட்டார் அவர். என்னடா இது இப்போதுதானே இவரைப் பற்றி நல்ல விதமாக யோசித்தோம் என்று அவள் யோசிக்க, “பிரிட்ஜில என்ன காய் இருக்குன்னு பாரு.” என்று அவளை ஏவினார்.
குளிர்சாதனப் பெட்டியை திறந்து ஆராய்ந்தபடியே, “ஏன் அத்த, உங்களுக்கு எல்லாமே முன்ன கூட்டியே பிளான் பண்ணிடணுமா?” என்று கேட்டாள்.
“ஆமா” என்று ஒரு வேகத்தில் பதில் சொன்னவர், “ஏன் அப்படிக் கேக்கற?” என்று கேட்டார்.
“சும்மா தெரிஞ்சுக்கத்தான் அத்த” என்றாள் புன்னகையுடன்.
“ம்ம், டீச்சர் நான். ஸ்கூலுக்கு நானே லேட்டா போனா நல்லா இருக்காது இல்ல? அதுனால எல்லாத்தையும் முந்தின நாளே பிளான் பண்ணிடுவேன். அப்போதான் காலையில எழுந்து வீட்டு வேலை, சமையல் எல்லாம் முடிச்சு கிளம்ப சரியா இருக்கும். என்னைக்காவது ஒரு நாள் நான் லேட்டா எழுந்துட்டா பிளான் பண்ண மாதிரி சமைக்க முடியாது. சில நாள் ரஞ்சனுக்குச் சட்னி அரைக்கக் கூட நேரம் இல்லாம பொடி வச்சுத் தோசை கொடுப்பேன். சில நாள் தோசை மாவு இல்லாம கோதுமை மாவு கரைச்சுத் தோசை ஊத்தி கொடுப்பேன். அவனுக்குக் கோதுமை தோசை பிடிக்கவே பிடிக்காது. ஆனாலும் நான் குடுத்தா ஒன்னும் சொல்லாம சாப்பிட்டு போவான். லஞ்ச் கேண்டீன்ல சாப்பிட சொல்லியிருக்கேன். எப்பவாவது அவனுக்கு ஒத்துக்காம போயிடும். ஒத்த பிள்ளைக்கு ஒழுங்கா சாப்பிட கூடக் குடுக்க முடியலையேன்னு எனக்கு வருத்தமாகிடும்”
“இதெல்லாம் எல்லா வீட்லயும் நடக்குறதுதானே அத்த? எங்கம்மாவும் இப்படித்தான் ஓடிட்டே இருப்பாங்க. ஒரு நாள் சரியா சமைக்கலைன்னா மறுநாள் எனக்குப் பிடிச்சது செஞ்சு கொடுத்து அதைச் சரி கட்டிடுவாங்க” என்றாள் புன்சிரிப்புடன்.
“ம்ம், வீட்ல இப்படின்னா எனக்கு ஸ்கூல்ல இன்னும் பிளானிங் தேவைப்படும். மறுநாள் கிளாஸ்க்கு நோட்ஸ் எடுக்காம போய்ப் பிள்ளைங்க முன்னாடி நான் முழிச்சுட்டு நிக்க முடியாது இல்ல?” என்று கேட்டார்.
“எல்லாம் கணக்கா இருக்கணும்னு நினைக்கிறீங்க” என்று அவள் கிண்டலாகச் சொல்லவும், முறைத்தார் அவர். ஆனால் அதில் கோபமில்லை.
இப்போது அவரை அவளால் ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது. அவருக்கு எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்குத் தேவை. அது தவறினால் அவரின் நிதானம் தவறுகிறது என்பது புரிந்தது.
புரிதல் தரும் பலமே தனித் தானே! ஆக அவளும் தெளிந்தாள்.
மூன்றாம் வாரம் மரகதவல்லி விடுமுறை முடிந்து பள்ளி செல்லத் தொடங்கினார்.
இப்போதும் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து கொண்டிருந்தான் பிரபஞ்சன். பின்னே வேலை முக்கியம் இல்லையா? இன்றைய சூழலில் அவன் இல்லையென்றால் அவன் இடத்தை நிரப்ப, ஆட்களுக்கா பஞ்சம். கார்ப்பரேட் வேலை, தலைக்கு மேல் கத்தி தொங்குவது போல மன அழுத்தம் தரக் கூடிய வேலையாகவே இருந்தாலும், அவனுக்கு அந்த வேலை இன்றியமையாதது. இப்போது ஊன்றுகோல் உதவியுடன் வீட்டுக்குள் நடக்கிறான். முன்னை போலக் காலில் வலி இல்லை. ஆனால் அசௌகரியம் இருக்கிறது.
மறுவாரத்தில் இருந்து பிரியதர்ஷினியும் அலுவலகம் செல்ல வேண்டும்.
“பிரபா, நான் நெக்ஸ்ட் வீக்ல இருந்து ஆஃபீஸ் போகணும். நீங்க தனியா சமாளிச்சுடுவீங்களா?” என்று அக்கறையுடன் கேட்டாள்.
“என் செல்லமே, நெக்ஸ்ட் வீக்ல இருந்து நானும் ஆஃபீஸ் போகணும்தானே?” என்று அவன் கேட்க, “உங்களுக்கு இன்னும் கால் சரியாகலையே?” என்று கவலையுடன் அவன் கால் பிடித்துக் கேட்டாள்.
“ஆனா லீவ் முடியுது இல்ல? ஒர்க் ஃப்ரம் ஹோம் கேளுங்க பிரபா” என்றாள்.
“ம்ம், அதான் செய்யணும். ஆனா அதுக்கு முன்னாடி ஆஃபீஸ் போய்த் தலைகாட்டிட்டு வரணும்” என்றான்.
“ஓகே. நான் வர்றேன் உங்களோட..” என்று அவள் சொல்லவும் சிரித்தான் அவன். இவ்வளவு விரைவாக அவன் அலுவலகம் செல்வதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“காலுக்கு ரெஸ்ட் கொடுக்கிற மாதிரி கவனமா உக்காருறேன் பிரியா. டோண்ட் வொர்ரி” என்றான். அவள் முகம் தெளியவே இல்லை.
மறுநாள் அவனோடு அலுவலகம் சென்றாள். இருவரும் வீட்டில் இருந்தே வேலை செய்வதற்கு அனுமதி பெற்று வந்தார்கள்.
அவள் வேலை, “கண்டென்ட் ரைட்டிங்”. அதையெல்லாம் வீட்டில் இருந்து செய்ய முடியாது. ஏனென்றால் அவள் எழுத வேண்டிய விஷயத்தை அலுவகத்தில் கலந்தாலோசித்து விவாதித்து எழுத வேண்டும்.
அதற்கு அவள் கட்டாயம் அலுவலகம் செல்ல வேண்டும். எப்போதும் கணினியில் முன் இருப்பேன். அலைபேசி வழியே விவாதத்தில் கலந்து கொள்கிறேன் என்று சொல்லி சிறப்பு அனுமதி பெற்றிருந்தாள். அத்தனை எளிதாக அவளை அனுமதிக்கவில்லை. ஆனாலும் சாதித்து விட்டாள்.
அதில் மரகதவல்லிக்கு மிகுந்த மகிழ்ச்சி.
“நான் என் பிள்ளைய சரியா கவனிக்கல. எங்க நீயும் கவனிக்காம விட்டுருவியோன்னு பயந்தேன். இப்போதான் நிம்மதியா இருக்கு” என்று வாய் விட்டே அவளிடம் சொல்லி விட்டார். அவளும் புன்னகையுடன் கடந்து விட்டாள்.