மழை குளிரினால் மட்டுமல்ல, மனம் விட்டு பேசியதால் இருவரின் மனமும் லகுவாகி இருக்க, அப்படியொரு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
பிரியதர்ஷினியின் அலைபேசி அலாரம் அடிக்கவும்தான் கண் விழித்தாள் அவள். கணவன் எழுந்து விடக் கூடாதென்று வேகமாக அதை அணைத்து எழுந்திருந்தாள்.
அரை மணி நேரத்தில் அவள் சமையல் அறை செல்ல அவளுக்கு முன்னே அங்கிருந்தார் மரகதவல்லி.
“உங்களுக்கு இன்னைக்கு ஸ்கூல்தான் இல்லையே அத்த. எதுக்கு இவ்வளவோ அவசரமா எழுந்து சமைக்க வந்துட்டீங்க?” என்று அவரிடம் கேட்டாள்.
மரகதவல்லிக்கு அதிகாலையில் எழுவது பல வருடத்தைய பழக்கம், ஒரே வாரத்தில் அதை மாற்றிக் கொள்வது கடினம் இல்லையா.
“எனக்கு அஞ்சரை மணிக்கு எழுந்து பழகிருச்சு பிரியதர்ஷினி. உனக்குக் காஃபி கலக்கவா?” என்று கேட்டு அடுப்பில் பொங்கிய பாலின் தீயை குறைத்து வைத்தார்.
“நானே கலந்துக்கறேன்த்தே. இப்படித் தள்ளி வாங்க. நான் உங்களுக்கு டீ போடுறேன்” என்றாள். காலை உணவுக்கான ஆயத்தங்களில் இருந்தார் அவர். தக்காளி சட்னி, டிஃபன் சாம்பார் செய்யத் தேவையான பொருட்களை எடுத்து மேடையில் வைத்திருந்தார்.
அவர் சின்ன வெங்காயத்தை உரிக்க எடுக்க, “அதை வச்சுட்டு முதல்ல, டீ குடிங்கத்தே. டிஃபன் வேலையை நான் பொறுமையா பார்த்துக்கறேன்” என்றாள் அவள்.
“நீயே எப்படி எல்லாத்தையும் செய்வ? நான் வெங்காயத்தை உரிச்சு வைக்கறேன்” என்று உணவு மேஜைக்குச் சென்று வெங்காயத்தை உரிக்கத் தொடங்கினார்.
பிரியதர்ஷினியின் பார்வை கொதிக்கும் தேநீரில் பதிய, முன்னர் மாமியார் சொன்னது இப்போது அவள் மனத்தில் வெளிச்சமிட்டுச் சென்றது.
“ரஞ்சனுக்கு டீதான் பிடிக்கும். உனக்காகதான் காஃபி குடிக்க ஸ்டார்ட் பண்ணான்”
“அவன் உன்னை விரும்பி கல்யாணம் பண்ணான். ரெண்டு பேரும் மனசு விட்டு பேசுங்க. எல்லாத்தையும் மனசுல வச்சுட்டு இருக்காத” என்று சொன்னாரே. அதைக் கவனிக்காமல் எப்படித் தவற விட்டாள். அவளால் ஒரு நேரத்தில் ஒரு வேலையில் மட்டுமே கவனம் செலுத்த முடியும். இதற்குப் பிறகு யார் பேசினாலும் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று தனக்குத்தானே அறிவுறுத்திக் கொண்டாள் அவள். மனம் மீண்டும் கணவன் அவனது காதல், தங்களின் பிரச்சனை என அந்தச் சுழலில் சென்று சிக்கிக் கொண்டது.
“இந்தாங்க அத்த டீ” என்று மாமியாருக்கு டீ கொடுத்து விட்டு கணவனுக்கும் எடுத்துச் சென்றாள்.
அவனும் அப்போதுதான் எழுந்து ஓய்வறை சென்று வந்திருந்தான்.
“பிரபா, டீ”
“இந்த மழைக்கு வாசமா காஃபி போட்டிருக்கலாம் இல்ல?” என்று அவன் சொல்ல, அவளுக்கான காபியை அவனிடம் நீட்டி அவள் தேநீர் அருந்தினாள்.
இருவருக்கும் இடையில் சில கண அமைதியே அவளுக்குப் பேரிரைச்சலாக ஒலித்தது. முந்தைய மாலை, அவர்கள் பகிர்ந்த பிரியம் என நினைவின் மிச்சங்கள் மனத்தில் மேலேழ, கணவனின் காதல் கதையில் போய்ச் சிக்கிக் கொண்டது அவள் மனம்.
சட்டென மௌனத்தைக் கை விட்டு, “ஏன் பிரபா, உங்க லவ்வ நீங்க சொல்லாமலே நான் தெரிஞ்சுக்கணும்னு நீங்க எதிர்பார்த்தீங்கதானே?” என்று அவள் கேட்க, “ம்ம்ம், அப்படிச் சொல்ல முடியாது. ஆனா அப்படித்தான்” என்றான் புன்சிரிப்புடன்.
“நான் இத்தனை வருஷம் இவளை லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இருக்கேன். இவ என்னன்னா என்னையும் என் மனசையும் கொஞ்சம் கூடப் புரிஞ்சுக்காம எப்படி இருக்கா பாருன்னு, கடுப்பானீங்கதானே?”
“ச்சே ச்சே, கடுப்புலாம் இல்ல பிரியா. ஆனா எதிர்ப்பார்ப்பு வந்தாலே ஏமாற்றத்துக்குத் தயாராகிடணும் இல்லையா?” என்று எதிர்கேள்வி கேட்டான்.
“அப்போ நான் உங்களை ஏமாத்திட்டேன்னு சொல்றீங்க?”
“அச்சோ இல்ல பிரியா” அவளின் கைப் பிடித்து இழுத்து தன் பக்கத்தில் அமர்த்தினான். ஒற்றை விரலால் அவள் முகத்தை வருடி, நாடியை உயர்த்தினான்.
“எனக்கு எங்க வீடு, அம்மாப்பா, அண்ணா, பார்கவி, ஸ்கூல் அது முடிஞ்சா டியூஷன், டிவி, பாட்டுக் கேட்கறது, எனக்குப் பிடிச்ச விஷயங்கள் செய்யறதுன்னு இப்படி என் லைஃப் ஒரு சர்க்கிள்ல லூப்ல போனது பிரபா. நீங்க ஒருநாளும் என்னைக் காதல் பார்வை பார்த்தது இல்ல, என்கிட்ட டைரக்ட்டா பேசினது இல்ல. அப்புறம் எப்படி உங்க லவ் எனக்குத் தெரிய வரும் சொல்லுங்க? அது என் தப்பு இல்லையே பிரபா”
“தப்பே இல்லன்னுதான் நானும் சொல்றேன் பிரியா.” என்றான். சட்டென அவள் முகம் மலர, “நீயொரு சமத்து சக்கரைக் கட்டி தெரியுமா?” என்று கொஞ்சி அவளை முத்தமிட்டான்.
“இப்படித் தூங்கி எழுந்ததும் உன் முகம் பார்க்கறதும், உன்னைக் கிஸ் பண்றதும், இதெல்லாம் எனக்கு ட்ரீம் கம் ட்ரு மொமெண்ட்ஸ்” என்றான் உன்மத்தத்துடன்.
“நீங்க என்னை ரொம்ப ஸ்பெஷலா லக்கியா ஃபீல் பண்ண வைக்கிறீங்க பிரபா. உங்களோட இவ்ளோ அன்புக்கெல்லாம் நான் தகுதியானவளான்னே எனக்குத் தெரியல”
“ப்ச், தகுதி அது இதுன்னு என்ன பேச்சு இது பிரியா. யூ ஆர் மை எவ்ரிதிங். இந்தப் பிரியாக்கு நல்ல புருஷனா இருக்க வேண்டியது என் பொறுப்பு. இனி உனக்கான முதலிடத்தை எப்பவும் நான் குடுப்பேன் பிரியா. உன்னை அம்போன்னு தவிக்க விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேன். உன்னைத் தனியா ஃபீல் பண்ண விட மாட்டேன். எல்லா விதத்திலும் உனக்கு நல்ல புருஷனா இருக்க என் தகுதியை வளர்த்துக்கறேன்”
என்று தீவிரமாக வாக்குறுதிகளை அடுக்கினான். அவனது தீவிரம் கண்டு மலைத்துப் போனாள். பிரஞ்சனின் பிரியம் இன்னுமே அவளுக்குப் பிரமிப்பை தந்தது.
“எனக்காக ஏற்கனவே நீங்க நிறைய நிறையச் செஞ்சுருக்கீங்க பிரபா. ஆனா நீங்க செஞ்ச ஒன்னு ரெண்டு சொதப்பலை உங்களுக்கு எதிரா தூக்கி பிடிச்சுட்டு..”
“அந்த ஒன்னு ரெண்டு சொதப்பல் ரொம்பப் பெரிய சொதப்பல்தானே பிரியா? அது நிச்சயமா என்னோட தப்புதான். அதுக்காக என்னை நீ எவ்வளவு திட்டினாலும் நான் கேட்டுப்பேன். நீ மன்னிக்கிற வரை சாரி சொல்லுவேன்” என்றான் திட்டவட்டமாக.
“அய்யோடா என்னைப் பேச விடுங்க பிரபா.”
“சரி சொல்லு சொல்லு” என்று சிரித்தான். அதில் இன்னும் இளமையாகத் தெரிந்தான். அவனைக் கண் களவு செய்தாள் அவள்.
“சைட் அடிக்காத செல்லம்” செல்லமாக அவள் மூக்கை மூக்கால் உரசிச் சொன்னான்.
“உங்களைப் பார்க்க மட்டுமில்ல பாயக் கூடச் செய்வேன், என் பிராப்பர்டி பிரபா நீங்க” என்று அவள் கண் சிமிட்ட, அவளை அப்படியே அலேக்காகத் தூக்கி தன் அடிபடாத காலில் அமர்த்தினான்.
“அச்சோ உங்க காலு” என்று பதறினாள்.
அவளின் இடையில் கைக் கோர்த்து இழுத்து, “எனக்கு வலிக்கல. யூ கண்ட்டினியூ” என்று கிசுகிசுத்தான்.
“ஹா.. என்ன கண்ட்டினியூ பண்ண? கிஸ்ஸா?” என்று அவள் சந்தேகம் கேட்கவும் பக்கென்று வெடித்துச் சிரித்தான் அவன்.
“ப்ச், பிரபா எதுக்குச் சிரிக்கறீங்க?”
“ப்ச் சொல்லாத” என்று கோபமாகச் சொன்னவன், அதற்கு நேர்மாறாக அவளை இறுக அணைத்து இதழில் ஆழமாய் முத்தமிட்டான்.
அவள் விழிகள் மயங்கி கிறங்கி அவனை நோக்க, “நான் செஞ்ச ஒன்னு ரெண்டு சொதப்பல் சொல்லிட்டு இருந்த, மேல சொல்லு” என்றான்.
“இருங்க மூச்சு வாங்கிக்கறேன்” என்று அவள் சொல்ல, தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் மீண்டும் முத்தமிட போனான்.
“இருங்க, இருங்க பிரபா. எனக்கு மறந்துடும்” என்று அவள் அலற, சிரிப்பை அடக்கி பார்வையால் அவளைக் கொஞ்சினான்.
“ஆ என்ன சொல்லிட்டு இருந்தேன்..” என்று சத்தமாக யோசித்து, “இல்ல, எனக்காக நீங்க நிறையச் செஞ்சிருக்கீங்க. ஆனா நீங்க செஞ்ச தப்பை மட்டுமே உங்களுக்கு எதிரா தூக்கி பிடிச்சுட்டு உங்க மேல கோபமா இருந்தேன். நான் சொன்னதும் எனக்காக நீங்க எல்லாத்தையும் விட்டது.. அந்த நேரம் எல்லாமே சரின்னு பட்டது. உண்மையைச் சொல்லணும்னா ஒரு மாதிரி நிம்மதியா இருந்தது பிரபா. ஆனா, உங்க ஃப்ரெண்ட் கிட்ட பேசுறது, உங்களுக்குப் பிடிச்ச கிரிக்கெட் விளையாட போறது இதெல்லாம் எனக்காக நீங்க விட்டது சரியில்லன்னு இப்போ யோசிச்சா புரியுது. ஹெல்தி மேரேஜ் லைஃப்க்கு நாம நாமளா இருக்கறது முக்கியம் இல்லையா?” என்று கேட்டாள்.
“நாம நாமளாவும் இருக்கணும், அட் த சேம் டைம் நம்ம பார்ட்னர்க்காக வளைஞ்சும் கொடுக்கணும்” என்றான்.
“எனக்கு ஒன்னு பிடிக்கலன்னா நீங்க அதை ஒரேடியா ஒதுக்கி தூக்கி எறியணும்னு இல்ல பிரபா. உங்களுக்கு அது எவ்வளவு பிடிக்கும்னு எனக்குப் புரிய வைங்க, அதை விட்டுட்டு, ஒரேடியா உங்களுக்குப் பிடிச்சதை விடுறதுலாம் ஒர்க் அவுட் ஆகாது” என்று அவன் கண் பார்த்து தெளிவாகச் சொன்னாள்.
“இனிமே நம்ம ரெண்டு பேரையும் நான் ஹர்ட் பண்ண மாட்டேன் பிரியா” என்று சத்தியம் போல வாக்குறுதி அளித்தான்.
“நான் உங்களை நம்புறேன் பிரபா” என்றதும் புன்னகைத்தான்.
“உனக்காகத்தான் செய்றேன்னு வம்பா நான் விளையாட போகாம இருந்து உனக்குக் கில்டி பீலிங் கொடுத்துட்டேன் இல்ல? அதுக்கு ரியலி ரியலி சாரி பிரியா. என்னை அறியாம செஞ்சுட்டேன். அது உன்னைக் குற்ற உணர்வுக்குள்ளாக்கும்னு நான் ரியலைஸ் பண்ணவே இல்ல பிரியா. ஐ ஆம் சாரி செல்லம்” என்றான் அவள் முகத்தைக் கையில் ஏந்தி.
“மன்னிச்சுட்டேன். மறக்கவும் டிரை பண்றேன்” என்றாள் கெத்தாக.
அவன் குறுநகையுடன் அவளையே பார்த்திருக்க, “உங்களுக்கு எம் மேல இருந்த கோபம் போச்சா இல்லையா? இனி கிரிக்கெட் விளையாட போவீங்கதானே?” அவன் விழிகளில் விழி பதித்துக் கெஞ்சலாகக் கேட்டாள்.
சட்டெனத் தன் விழிகளை விலக்கிக் கொண்டான் அவன்.
“இந்தக் காலை வச்சுட்டு எங்க பிரியா போறது? முதல்ல ஒழுங்கா நடக்க முடியுதான்னு பார்ப்போம்” என்று அவன் சொல்ல, அவளுக்கு வருத்தமாகப் போனது.
“மூனு மாசத்துல நீங்க நார்மல் ஆகிடுவீங்கன்னு டாக்டர் சொன்னார் பிரபா. நடக்க என்ன ஓட கூடச் செய்யலாம்னு..” அவளை முடிக்க விடாமல், “எனக்குப் பசிக்குது பிரியா” என்றிருந்தான்.
“அச்சோ, நான் டிஃபன் செய்யறேன்னு அத்தைகிட்ட சொல்லிட்டு வந்தேன். நீங்களும் பசிக்குதுன்னு சொல்றீங்க. அத்தை குக்கிங் ஸ்டார்ட் பண்ணி இருப்பாங்க, நான் போய் அவங்களுக்கு ஹெல்ப் பண்றேன்” என்று வேகமாக எழுந்துச் சென்றாள். காலை மெதுவாக நகர்த்தி நீட்டி அமர்ந்தான் அவன்.