மரகதவல்லி மிஸ் தன் மாணவர்களிடம் ரொம்பவே கண்டிப்பு காட்டுவார். ஒழுக்கத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார்.
வீடு, பள்ளி என இரண்டு இடங்களிலும் ஆசிரியராகத்தான் பெரும்பான்மையாக நேரங்கள் நடந்து கொள்வார். பின்னே வீட்டிலும் அவர் நிறைய மாணவர்களுக்கு டியூஷன் எடுத்தார் இல்லையா? அதனால் எப்போதும் கண்டிப்பும், கறாருமாகத்தான் இருப்பார்.
“எங்க வீட்டுக்கு நிறையப் பிள்ளைங்க டியூஷன் படிக்க வந்ததால அவங்க பாதுகாப்பு பத்தின பயம் அம்மாக்கு அதிகமா இருக்கும். டெய்லி பசங்க பத்திரமா வீட்டுக்கு போகணும்னு வாசல்ல நின்னு பார்ப்பாங்க”
“ம்ம் தெரியும்” என்றாள் புன்னகையுடன்.
“ஸ்கூல் படிக்கும் போதே இப்போ எல்லாம் லவ்னு ஸ்டார்ட் பண்ணிடுறாங்களே” என்று அவன் சொல்லி முடிக்கும் முன், “உங்களை மாதிரி” என்று நாக்கை துருத்தி கண்ணடித்து அவனைச் சீண்டினாள்.
“ஏய்” என்று போலியாக முறைத்தான்.
“பிளீஸ் கண்ட்டினியூ பிரபா” என்றாள் ஆர்வத்துடன்.
“ஸ்கூல் படிக்கும் போதே லவ், அது இதுன்னு பசங்க டிஸ்ட்ரேக்ட் ஆகக் கூடாதுன்னு அம்மா ரொம்பவே கவனமா இருப்பாங்க. எனக்கு அந்த வயசுலேயே பொண்ணுங்க கிட்ட எப்படிப் பேசணும், எப்படிப் பேச கூடாதுன்னு எல்லாமே சொல்லித் தந்திருக்காங்க. அவங்ககிட்ட படிக்கிற பொண்ணுங்க யாராவது என்னை ஆர்வமா பார்த்துட்டா போதும், அம்மா பதறிடுவாங்க. மாடிக்கு போன்னு என்னைத் துரத்தி விடுவாங்க. பார்த்தி வீட்டுக்கு ஓடிடுவேன் நான்..”
“அத்தைக்கு அவங்க பையனை யாரும் எதுவும் சொல்லிட கூடாதுன்னு பயம் இருந்திருக்கும். அதுவும் இல்லாம என் பொண்ணை உங்ககிட்ட படிக்க அனுப்பினா, உங்க பையன் அவளைப் பார்ப்பானான்னு யாரும் கேட்டுட கூடாதுன்னு யோசிச்சு பயந்திருப்பாங்க இல்ல?”
“எக்ஸாட்லி” என்றான் அவளின் வார்த்தைகளை ஆமோதித்து.
“நான் பிள்ளைங்களுக்குப் பாடமும் ஒழுக்கமும் சொல்லிக் கொடுக்கறேன். அப்போ என் பிள்ளை நீ எப்படி மத்தவங்களுக்கு முன்னுதாரணமா இருக்கணுமா இல்லையா? உன் பிள்ளையே ஒழுக்கம் கிடையாதுன்னு யாரும் கை நீட்டி உன்னைக் குத்தம் சொல்ல வாய்ப்பு கொடுத்திடாதன்னு கண்டிப்பா என்கிட்ட பல முறை சொல்லி இருக்காங்க” என்றான் அந்த நாள் நினைவில் மூழ்கியவனாக.
“ஆனா உங்க லவ் ட்ரு லவ்னும் போது அத்தை இப்படிச் சொல்லும் போது உங்களுக்குக் கோபம் வரலையா? அப்செட் ஆகலையா நீங்க?”
“அப்போ அது லவ்னு நானும் முடிவு பண்ணல. அம்மாவும் இதெல்லாம் இந்த வயசுல வர்ற ஈர்ப்பு, இதுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்காம படிப்புல, உனக்குப் பிடிச்ச விளையாட்டுல கவனம் பண்ணுன்னு என்னையும் என் கவனத்தையும் திசை திருப்பி விட்டாங்க”
“ஓ. அப்புறம்?”
“நானும் எல்லாத்தையும் டிரை பண்ணி பார்த்தேன். உன்னை நேரடியா பார்த்தது பேசினது எதுவும் செஞ்சது கிடையாது. ஆனா என் மனசு உன்னைத் தாண்டி போகவே மாட்டேன்னு அடமா நின்னுடுச்சு.”
“அடடே, அடமாவா? பிடிவாதத்தையும் பிரபஞ்சனையும் பிரிக்க முடியாதே. அதுக்கு அடம்னு அலங்கார பூச்சு பூசாதீங்க” என்று அவள் கிண்டலாகச் சொல்ல, புன்சிரிப்பில் வசீகரித்தான் அவன்.
“ம்ம் என் பிரியமும் பிடிவாதமும் பார்த்திக்கு தெரியுமே. என்னைச் சீண்டி விட நீ எங்களைக் கிராஸ் பண்ணும் போதெல்லாம் ஓ பிரியா பாட்டுப் பாடினான் அந்தப் பைத்தியக்காரன். நீ போய்ப் பொறுப்பா உங்க மிஸ் கிட்ட போட்டு கொடுத்துட்ட.. அவங்க ஏற்கனவே கோபத்துல இருந்த நேரம் நான் கையை வச்சுட்டு சும்மா இல்லாம உன்னைப் பார்த்துட்டே அம்மா டெஸ்க்ல ரோஸ் வச்சேனா..” என்று அவன் சொல்லும் போதே அவளுக்குச் சிரிப்பு வந்து விட்டது. கலகலவென்று சத்தமாகச் சிரித்தாள்.
“உன் பிரெண்ட் பார்கவி சொல்ற மொக்கை ஜோக்குக்கு இப்படிதான் சிரிப்ப நீ. அப்போல்லாம் உன்னைப் பார்க்காம இருக்க நான் பட்ட பாடு இருக்கே. கொடுமை பிரியா அதெல்லாம். நீ சிரிக்கும் போது காரணமே தெரியாம எனக்கும் சிரிப்பு வரும். பிரிய பைத்தியக்காரன்னு பார்த்தி என்னைக் கேலி பண்ணி ஓட்டி தள்ளுவான்” என்று நினைவு துணுக்கை பகிர்ந்தான்.
“பிரிய பைத்தியக்காரன், நல்லா இருக்கே பிரபா” என்று அவள் கண் சிமிட்ட, இப்போதும் அந்தக் கண்களில் வீழ்ந்தான் அவன்.
“பார்த்திப் பாட்டு பாடினது, நான் உனக்காக ரோஸ் வச்சதுன்னு இந்த ரெண்டு இன்சிடென்ட்டும் அம்மாவை ரொம்பக் கோபப்படுத்தி அப்செட் பண்ணிடுச்சு. நான் வளர்ந்த பிறகு அம்மா என்னை அன்னைக்குதான் அடிச்சாங்க, திட்டினாங்க. நைட்டெல்லாம் என்னை உக்கார வச்சு ஒரே அட்வைஸ் மழைன்னு வெளுத்து வாங்கிட்டாங்க”
“அப்புறம்? அதுனாலதான் என்கிட்ட பேசவே டிரை பண்ணது இல்லையா நீங்க?” என்று சந்தேகம் கேட்டாள்.
“ம்ம், உன்னை ஒரு பார்வை பார்த்திட்டு பார்த்திபன் வீட்டுக்கோ இல்ல கிரிக்கெட் விளையாடவோ போய்டுவேன்.” என்றவன் ஆழ மூச்செடுத்து, “ஐ ரியலி டிரைட் ஹார்ட் பிரியா. ஆனா நான் எவ்ளோ தடுத்தாலும் என் மனசு என் சொல் பேச்சு கேட்கல. என்னையும் மீறி உனக்காக ஏதாவது செஞ்சுட்டே இருந்தேன். அம்மாக்கு அது பிடிக்கவே இல்ல. நிறைய டைம் என்னை அதுக்காக வார்ன் பண்ணியிருக்காங்க. உன்னை அதிகமா அவங்க கேர் பண்ணதுக்கு அதுவும் கூட ஒரு காரணம்.” என்றான்.
“அட கடவுளே. உங்ககிட்ட இருந்து என்னை ப்ரொடெக்ட் பண்ணியிருக்காங்க. ஆனா நானு? என் மிஸ்க்கு என் மேல எம்புட்டுப் பாசம் பாரு. அவங்க பெட் நானுன்னு புல்லரிச்சுப் போய்த் திரிஞ்சுருக்கேன்” என்று ஏமாற்றத்துடன் சோகமாகச் சொன்னாள்.
“ஹாஹாஹா பிரியா. அவங்களுக்கு உன்னை உண்மையாவே ரொம்பப் பிடிக்கும். டிரஸ்ட் மீ”
“மகனுக்குப் பிடிச்ச பொண்ணுன்னு பிடிக்கும்னு சொல்லுங்க”
“ச்சே, ச்சே இல்ல பிரியா. நான்தான் சொன்னேனே. என் பார்வையே உன் மேல படக் கூடாதுன்னு என்னை மிரட்டி வச்சிருந்தாங்கன்னு..”
“ம்ம்ம், என்னை அவ்ளோ பிடிக்கும்னா.. இப்போ மட்டும் ஏன் என்னைத் திட்டிட்டு அதட்டி மிரட்டிட்டு ஹிட்லர் போலச் சுத்துறாங்க” என்று அவள் கேட்க, “ஏன்னா இப்போ நீ அவங்க மருமக. உன்கிட்ட அவங்க எக்ஸ்பெக்டேஷன்ஸ் இப்போ வேற பிரியா. ஆனா நீ இன்னமும் மிஸ் மிஸ்னு சொல்லிட்டு திரிஞ்சா அவங்களுக்குக் கடுப்பாகுமா ஆகாதா?” என்று அவன் கேட்க, “அதுக்காக? எனக்கு ரூல்ஸ் போட்டுட்டே இருப்பாங்களா?” என்று அவளும் கடுப்பாகக் கேட்டாள்.
“நீ அத்தைன்னு ஒத்த வார்த்தை சொல்லு போதும். அவங்க பிளாட் ஆகிடுவாங்க” என்றான் சீண்டும் சிரிப்புடன். அது உண்மைதான் என அவளும் ஒத்துக் கொண்டாள். எத்தனையோ முறை அவளும் அதை உணர்ந்திருக்கிறாளே. அவள் அத்தை என்று அழைத்தாள் போதும் அப்படியே அடங்கி விடுவாரே.
“சரி, நம்ம கதைக்கு வாங்க. எப்போ லவ்னு முடிவு பண்ணீங்க. அத்தையை எப்படி ஹேண்டில் பண்ணீங்க?”
“ஆர்வக் கோளாறு” என்று அவள் மூக்கை நிமிண்டினான்.
“அம்மாவுக்குப் பயந்துன்னு இல்ல, எனக்கே என்னைப் பத்தி ஒரு தெளிவு தேவைப்பட்டுச்சு. அதான் உன்னை எந்த விதத்திலும் நான் தொல்லை செஞ்சது கிடையாது. அம்மா வேற வீடு மாறலாம்னு சொன்னப்போ உடனே சரின்னு சொன்னேன். நீ அப்போ ஸ்கூல் முடிச்சு காலேஜ்க்காகப் பெங்களூர் போன.. நீ ஊருக்கு கிளம்பின அன்னைக்கு நானும் கூட ரெயில்வே ஸ்டேஷன் வந்தேன். உன்னைப் பார்க்கவே..” அதுவரை விளையாட்டாகக் கதை போலக் கேட்டுக் கொண்டிருந்தவள் அந்தக் கணம் அவனைப் பிரமிப்புடன் பார்த்தாள்.
“இதெல்லாம் ஸ்டாக்கிங் ரஞ்சன்னு அம்மா அப்பவும் என்னைக் கண்டிச்சாங்க.”
“என் மாமியார் ஸ்வீட்தான் இல்ல.” என்று அவள் சிலாகிக்க, நாக்கை மடித்து, “போடிங்” என்றான் கடுப்புடன்.
“ரெயில்வே ஸ்டேஷன்ல வச்சு எங்கப்பா கண்ணுல நீங்க சிக்கியிருந்தா என்ன செஞ்சுருப்பீங்க? நீங்க எங்கப்பாவோட ஸ்டூடண்ட் வேற, அப்பா உங்களை ஈசியா அடையாளம் கண்டுபிடிச்சுருப்பார் இல்ல?” என்று குரலில் பதட்டத்துடன் அவள் கேட்க, “அன்னைக்கு என்னை உங்கப்பா பார்த்தாரே” என்றான் அவன் அலட்டிக் கொள்ளாமல்.
“அப்புறம்?”
“ம்ம், இவ்ளோ சீன் இல்ல அந்தச் சீனுக்கு” என்று அலுத்தான் அவன்.
“உங்கப்பா கவனம் முழுக்க முழுக்க உன் மேலதான் இருந்தது. பொண்ணைப் பிரியற சோகம் அவருக்கு. என்னைப் பார்த்து ஸ்மைல் பண்ணிட்டு கண்டுக்காம போய்ட்டார்”
“ம்ம்ம். நான்லாம் உங்களைக் கவனிக்கக் கூட இல்ல”
“உங்கப்பா உன் முன்னாடி இருந்தா உனக்குத்தான் உலகமே மறந்திடுமே” என்று அவன் சொல்ல, கோபமாக மறுக்கப் போனவள், சுதாரித்து, “ஆமா இல்ல” என்றாள் குற்ற உணர்வுடன்.
“அது பிரபா..” என்று அவள் விளக்கம் சொல்ல போக, அவனோ அவன் கதையைத் தொடர்ந்தான்.
“எனக்குப் பிரியாவை ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அவ இல்லாம என்னால இருக்கவே முடியாதுன்னு நான் ரியலைஸ் பண்ணப்போ நான் காலேஜ் முடிச்சுட்டு வேலை, கமிட்மென்ட்ஸ்னு வேற ஒரு லைஃப்க்குள்ள நுழைஞ்சேன். நீ அப்போதான் காலேஜ் போன, நீயும் வேற ஒரு உலகத்துக்குள்ள எண்டரான..” என்று எச்சில் கூட்டி விழுங்கினான்.
அந்தப் பிரிவு இப்போதுதான் நேர்ந்தது போல வருத்தம் அவன் மென்னியை நெறித்தது.
“பிரபா, எனக்காக இத்தனை வருஷமா வெயிட் பண்ணீங்களா?”
“எஸ் அண்ட் நோ” என்றான்.
“ஒருவேளை உனக்குக் காலேஜ் லைஃப்ல யார் மேலயாவது இன்ட்ரெஸ்ட் வந்தா..” என்று அதைச் சொல்லவே முடியாமல் இறுகினான்.
“வந்தா..” என்று அவள் இழுக்க, “வந்ததா?” என்று கேட்கவே விருப்பமில்லாமல் கேட்டான் அவன்.
“வரலையே” என்று உதடு பிதுக்கினாள் அவள்.
“ஆனா, சைட்டு, க்ரஷ் எல்லாம் இருந்தது. ஒரு மேங்களூர் பையன் என் பின்னாடியே சுத்தினான். எனக்குத் தமிழ்ல சண்டை போடுற பையன்தான் செட்டாகும்னு அவன்கிட்ட சொல்லிட்டேன்” என்றாள் குறும் சிரிப்புடன். அவனுக்கும் சிரிப்பு வந்தது.
அவள் கைப் பிடித்து மெல்ல வருடினான் பிரபஞ்சன்.
“முழுசா ஆறு வருஷத்துக்கும் மேல பிரியா. உன்னைப் பார்க்காம ஒதுங்கி இருந்தது எனக்குக் கொடுமையா இருந்தது. அந்த நேரம்தான் என் கவனம் மொத்தமும் வேற எதுலயாவது இருக்கணும்னு கிரிக்கெட் அகாடெமின்னு முழுசா இறங்குனேன். என் ஜெர்சியில மிஸ்டர் பி-ன்னு இருக்கவும் பி ஃபார் பிரபஞ்சன்னு நினைச்சு எல்லாரும் என்னை அப்படியே கூப்பிடுவாங்க. அப்போ எல்லாம் அடிக்கடி இல்லைன்னாலும் உன் ஞாபகம் வந்துட்டே இருக்கும். உன்னை மறக்க முடியாம, நெருங்கவும் முடியாம தவியா தவிச்சுட்டு இருந்தேன். பார்த்திக் கூடச் சொன்னான், இந்தா இருக்கப் பெங்களூர் வாடா போய்ப் பார்த்திட்டு வருவோம்னு..”
“வந்தீங்களா?” என்று அவள் ஆர்வமாகக் கேட்க, “வந்தா மட்டும் என்ன செஞ்சுருப்பியாம் செல்லக் குட்டி” என்று கொஞ்சி கேட்டான்.
அவள் யோசிக்க, “யார் நீங்கன்னு கேட்டிருப்ப நீ” என்ற அவன் குரலில் நிச்சயமாக வருத்தம் இருந்தது. அவள் மறுக்கத்தான் விரும்பினாள் ஆனால் பொய் உரைக்க வார்த்தைகள் வசமாகவில்லை.
“நீ காலேஜ் முடிச்சுச் சென்னை வந்துட்டன்னு பார்த்திச் சொன்னான். அப்போ கூட உன்னை வந்து பார்க்கல நான். நீ வேலைக்குப் போன..”
“அப்பவும் என்னைத் தேடி வரலை நீங்க. எங்கப்பாவை பார்க்கவும்தான் உங்களுக்கு ஸ்பார்க் வந்திருக்கு” என்று அவள் கோபமாகக் கண்ணைச் சுருக்கிச் சொல்ல, “நியாயமா பார்த்தா எனக்குத்தான் பிரியா கோபம் வரணும். எட்டு வருஷமா தினமும் பார்த்த என்னை உனக்கு அன்னைக்கு அடையாளம் தெரியல. நான் உன் மேல பைத்தியக்காரத்தனமா பிரியத்தை வளர்த்து வச்சுருக்கேன். ஆனா நீ.. யார் நீன்னு என்னைப் பார்த்த..” என்றான் இறுகிய குரலில்.
“சும்மா அடிச்சு விடாதீங்க பிரபா. நீங்க பிரியதர்ஷினின்னு என்னைக் கூப்பிட்டு பேசினதும் நான்தான் உங்களைக் கண்டுபிடிச்சுட்டேனே” என்று அவள் பூரிக்க, “மரகதவல்லி மிஸ் மகன்னுதான் பேசின.” என்றான் கடுப்புடன். ஆனால் அதற்கு நேர்மாறாக மறுநொடியே அவன் முகம் இளகியது.
“என்னைப் பார்த்து ஸ்மைல் பண்ண. எப்படி இருக்கீங்கன்னு கேட்ட. காஃபி கொண்டு வந்து கொடுத்த.. அவ்ளோதான்”
“பொண்ணு பார்த்த ஃபீல்ல எங்கப்பா கிட்ட உங்க பொண்ணைக் குடுங்க மிஸ்டர் மாணிக்கவேல்னு கேட்டுட்டீங்க. சரியா?” என்று கேட்டாள். சிரித்தான் அவன்.
“உங்கப்பா என்னை மறுக்கக் கூடாதா இடத்துல நான் இருக்கணும்னு நினைச்சேன் பிரியா. ஒர்க், புரமோஷன்னு நல்ல கம்பெனில, நல்ல பொசிஷன்ல நின்னேன்..” அவன் பேச்சில் இடையிட்டு, “அப்பாக்கு நான் ஓகே சொன்னாலே போதும் பிரபா” என்றாள்.
“தெரியுமே” என்றவன் குரலில் அப்பட்டமான பொறாமையின் சாயல்.
“அதேதான் என் அம்மாவும். முன்னாடி என்னைக் கண்டிக்கக் கட்டுப்படுத்த அவங்களுக்கு நிறையக் காரணம் இருந்தது. இந்த டைம் அவங்களுக்கு நோ சொல்ல ரீசன் இல்ல. மறுக்க மனசும் இல்லைன்னு வச்சுக்கோயேன். அவங்களுக்கு ரொம்பப் பிடிச்ச உன்னை ரொம்ப ஆசையா மருமகளா ஆக்கிட்டிட்டாங்க” என்றான் குருநகையுடன்.
“அத்தனை வருஷமும் என் பிரியம்னு இருந்தது, எப்போ அது உன் மேலான பிரியமா மாறுச்சோ அப்போவே காதலா ப்ரோமோட் ஆகிருச்சு” என்றான் அவளை அணைத்து.
“பிரபஞ்சனின் பிரியத்தைப் பிரபஞ்சம் என் கையில தூக்கி கொடுத்துருச்சு. ஆனா நான்தான் என் பிரியா மேல பிரியமா இல்லாம விட்டுட்டேனோ? பல வருஷம் காத்திருந்து நீ என் கையில கிடைச்சதும் உன்னை டேக் இட் ஃபோர் கிராண்ட்டடா எடுத்துக்கிட்டோனோ பிரியா?” என்று குற்ற உணர்வுடன் அவள் முகம் நிமிர்த்திக் கேட்டான்.
“அப்படி இல்ல பிரபா. நம்ம ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு. நானும் உங்கள ரொம்பவே இக்னோர் பண்ணின ஃபீல் எனக்கு. இனிமே சரி பண்ணிக்கறேன்” என்றாள் உளமார.
“நீ நீயா இரு போதும்” என்றான் அழுத்தமாக.
பிரிய பிரபஞ்சனிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்!
மழை சாரலாய் அறைக்குள் நுழைந்து அவர்களின் மேனி நனைத்தது. அவன் மார்பில் சரிந்து கண்ணை மூடியவளுக்கு அவனது இதயத் துடிப்பு இதமாகத் தாலாட்ட உறக்கத்தில் ஆழ்ந்தாள் அவள்.
அவனுக்கும் அவளுக்கும் இடையில் இருந்த மனக் கசப்புகள் அனைத்தையும் மழை கழுவி விட, காதல் மட்டுமே அவர்கள் மனங்களில் தழைத்தோங்கி நின்றது.