பிரியதர்ஷினி பற்கள் தெரிய வாய் விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தாள்.
“டேய்” என்று நண்பனை கடிந்து மனைவியைப் பிரபஞ்சன் மிரட்சியுடன் நோக்க, அவளின் சிரிப்புச் சத்தம் இன்னுமே கூடியது.
“உங்களுக்குக் கால் ஒடஞ்சுருக்குன்னு அண்ணாக்கு மறந்துருச்சா?” என்று அவள் கேட்க, “அந்த நக்கல் பிடிச்சவனுக்கு அதெல்லாம் நல்லாவே ஞாபகம் இருக்கும், என்னை வம்புல மாட்டி விடணும்னே இப்படிக் கேள்வி கேக்கறான்” என்று அவன் பல்லைக் கடித்துப் புலம்ப, அலைபேசி வழியே பார்த்திபனின் சிரிப்பு சத்தமும் கேட்டது.
“டேய், அந்த ஓட்டை கால வச்சுட்டு எப்படி ஓடுவ நீ? நான் உன்னை வேடிக்கை பார்க்கத்தான் கூப்பிட்டேன்” என்று பார்த்திபன் சொல்ல, “நான் எதுக்கும் வரல, ஆளை விடுடா எப்பா..” என்று கும்பிடு போடாத குறையாகச் சொன்னான் பிரபஞ்சன்.
“சரி, பொழைச்சு போடா மிஸ்டர் பி” என்று சிரித்த பார்த்திபன், “காதல் மனைவிக்காகக் காலை உடைத்துக் கொண்ட கிரிக்கெட் வீரன்னு உன் வரலாற பொன் எழுத்தில் பொறிக்க வேண்டியது என் பொறுப்பு. நீ எந்தக் கவலையும் இல்லாம சீக்கிரமா சரியாகி கிரவுண்ட் வாடா. டேக் கேர் மச்சா.” என்று சொல்லி அழைப்பை துண்டித்திருந்தான் பார்த்திபன்.
“ம்ம், உங்க ஃப்ரெண்ட் ஆள் கொஞ்சம் நல்லவர்தான் போலயே” என்று கண்ணைச் சுருக்கி அவள் சொல்ல, “என்னை நக்கல் பண்றான்னுதானே அவனை நல்லவன்னு சொல்ற பிரியா?” என்று சந்தேகம் போலக் கேட்டான் அவன்.
“ச்சே இல்ல பிரபா. அந்த அண்ணா விளையாட்டாதானே சொன்னாங்க. நீங்க அதைச் சீரியஸா எடுத்துக்கிட்ட மாதிரி ஆக்டிங் கொடுக்காதீங்க” என்று அவன் தலைக் கலைத்து அவள் சொல்லவும், அவன் உதடுகள் மந்தகாசப் புன்னகையில் பிரிந்தன.
“அவன் எங்களைக் கள்ளக்காதலிகள்னு சொன்னானே. உனக்குக் கோபம் வரலையா?”
“எதுக்கு வரணும்? அவர் சும்மா விளையாட்டுக்குத்தானே சொன்னார். அதை நான் ஏன் சீரியஸா எடுத்துக்கப் போறேன்?” என்று அவன் மீசையைத் திருகி கேட்டவள், “பிரபஞ்சன் லைஃப்ல ஆதியும் அந்தமுமான பொண்ணு பிரியதர்ஷினி மட்டும்தான்னு எனக்குத் தெரியும்” என்றாள், கணவனின் காதல் தந்த கர்வத்துடன்.
“எப்படித் தெரியுமாம்?”
“நீங்கதான் ஒரு நாள் என்கிட்ட உளறினீங்க மக்கு பிரபா. இப்போ கொஞ்ச நாளா உங்க பழைய பேச்செல்லாம் ஆராய்ச்சி பண்ணும் போது இதெல்லாம் கண்டுபிடிச்சேன் நான். எப்படி?” என்று இல்லாத காலரை அவள் உயர்த்தி விட, “நீ சமத்துச் செல்லம் தெரியுமா? ஆனாலும் என்னை மக்கு சொல்ற பாரு. அதைக் கேட்டாதான் நெஞ்சு வலிக்குது” என்றான் நெஞ்சில் கை வைத்து.
“அய்யோடா..” என்று அவன் கை மேல் கை வைத்து அவன் நெஞ்சை நீவினாள். பிரபஞ்சனின் கண்கள் மயங்கி கிறங்கி மூடின.
“பிரபா..”
“ம்ம்ம்”
“அந்த மிஸ்டர் பி மீனிங் என்ன?” அவனை நெருங்கி அவன் முகத்தில் நிலைத்த பார்வையுடன் வினவினாள்.
சில நொடிகள் மௌனத்தில் அவளை மூழ்கடித்தான். அவனைப் போட்டு உலுக்கினாள் அவள்.
“மிஸ்டர் பிரியதர்ஷினி” என்றான் மந்தகாசப் புன்னகையுடன். அவளும் அதைக் கணித்திருக்க, இதழ்கள் தாமாகப் புன்னகையில் பிரிய அவனையே பார்த்திருந்தாள்.
“எப்படிப் பிரபா, ஒரு வேளை எங்க வீட்ல நம்ம கல்யாணத்துக்குச் சம்மதிக்காம போய் இருந்தா என்ன செஞ்சிருப்பீங்க?”
“சம்மதிக்க வச்சுருப்பேன் பிரியா. இப்போ போலவே” என்றான் உறுதியாக. அவனைக் கனவு போலக் கண் சிமிட்டாமல் பார்த்திருந்தாள். அவன் காதல் அவளுக்குத் தேவதை கதை கேட்பது போலிருந்தது.
“மிஸ்டர் பி-ன்னு எப்போ ஜெர்சில பேர் போட்டீங்க?”
“அதுவா?” என்று மீசை மடித்து அவன் தயங்கி இழுக்க, “கிவ் மீ டூ மினிட்ஸ். நான் உங்களுக்குப் பாயாசம் எடுத்துட்டு வர்றேன்” என்று எழுந்துச் சென்றாள்.
ஒரு கிண்ணத்தில் பாயாசம், இரண்டு கரண்டிகள், குடிக்கத் தண்ணீர், இனிப்பு உண்ட பிறகு உண்ண காரத்திற்காக வெங்காயப் பக்கோடா என எடுத்து வந்தாள்.
“நான் மடியில வச்சுக்கறேன். நீங்க சாப்பிடுங்க” என்று அவன் உண்ண தோதாகப் பாயாசம் இருந்த டிரேவை தன் மடியில் வைத்து கொண்டாள்.
பிரபஞ்சன் முதல் கரண்டியை அவளுக்குதான் ஊட்டினான். பின்னர் அவனும் உண்ணத் தொடங்க, “பிரபா, மிஸ்டர் பி-ன்னு எப்போ போட்டீங்க?” என்று விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தாள் அவள்.
அவள் கண்களைச் சந்திக்காமல் பார்வையைப் பால்கனிக்குத் திருப்பிப் பாயாசத்தை ரசித்து ருசித்தான்.
அவளுக்குப் பொறுமை இல்லை. “பிரபா, சொல்லுங்க பிளீஸ்” என்று அவன் கையைச் சுரண்டினாள்.
“அந்த மொட்டை மாடி இன்சிடெண்ட் நடந்ததுக்கு அப்புறமா..” என்றான்.
“அப்பவேவா?” அவள் விழிகள் அதிர்ந்து விரிய, “ஏய் எல்லாத்துக்கும் இதே ஷாக் ரியாக்ஷன் குடுக்காத பிரியா” என்றான் சிரிப்புடன்.
“நான் அப்போ ஸ்கூல் படிச்சுட்டு இருந்தேன்”
“ம்ம், ஆனா நான் காலேஜ் போயிட்டு இருந்தேன்தானே?”
“ஹலோ நீங்க காலேஜ் ஃபைனல் இயர் அப்போ” வெடுக்கென்று சொன்னாள்.
“பாரேன், என் செல்லம் என்னைக் கவனிச்சிருக்கு” என்று உற்சாகமானான்.
“இல்லயில்ல, நம்ம ஏஜ் கேப் வச்சு நம்ம மேரேஜ் டைம்ல கால்குலேட் பண்ணேன்” என்று உண்மையைச் சொல்லி அவனது உற்சாகப் பலூனில் ஊசி ஏற்றி உடைத்து விட்டாள்.
அவன் முகம் வாடவும், “அச்சோ பிரபா..” என்று கண்ணைச் சுருக்கி அவனுக்குப் பாயாசத்தை ஊட்டினாள்.
“நான் என்ன உன்னை மாதிரி பாப்பாவா, பாயாசம் குடுத்து என்னை ஏமாத்துற?” என்று அவன் எகிற, “வேற என்ன கொடுத்தா சமாதானம் ஆவீங்க?” என்று அவனிடமே அவனை வீழ்த்த வழி கேட்டாள் அவள்.
அவளது பார்வையும், கேள்வியும் அவனுக்குக் கிச்சு கிச்சு மூட்டியது.
சிரிப்புடன், “நீ யுனீக் பீஸ் பிரியா” என்றான்.
“என்னைச் சமாதானம் பண்ண என்கிட்டயே ஐடியா கேட்பியா நீ? அது உனக்கா தெரிஞ்சுருக்கணும்”
“அதெல்லாம் எனக்குத் தெரியும். ஆனா இப்போ முடியாதே” என்று அவள் நாக்கை துருத்தி கடிக்க, அவன் கண்களில் மயக்கம் கூடியது.
அவனைப் பார்த்தபடியே மெல்ல அசைந்து நகர்ந்து நகர்ந்து அவனை நெருங்கி அமர்ந்தாள். அவன் மார்பில் கைப் போட்டு அணைத்து அவன் தோள் சாய்ந்து அவனது வாசத்தைச் சுவாசித்து மூச்சை ஆழ உள்ளிழுத்தாள்.
“இப்படியெல்லாம் பண்ணாத பிரியா. நான் கிரவுண்டுக்குள்ள கால் வைக்கிறதுக்கு முன்னாடியே என்னை அவுட் ஆக்கிருவ போலயே நீ” என்று கிசுகிசுத்து அவள் தலை மீது தன் முகம் பதித்தான்.
“உதாரணம் சொல்றார் பாருங்க, அதுக்குக் கூடக் கிரிக்கெட், அவுட்னுதான் வருது” என்று அவள் செல்லமாகச் சலிக்க, சிரித்தான் அவன்.
அவனது சிரிப்புச் சத்தத்தைத் தொடர்ந்து படபடவென்ற சத்தம் கேட்கவும், இருவரின் பார்வையும் பால்கனி பக்கம் பாய்ந்தது.
அங்கே புறாக்களின் காதல் நாடகம் தொடர்ந்து கொண்டிருந்தது. அந்த மழை நாளிலும் பறவைகளுக்குப் பாதுகாப்பாக இரை வைத்திருந்தாள் அவள்.
அதற்கு உணவு வைத்திருந்த செயற்கை மரக் கிளையில் அமர்ந்து, இரையைக் கொத்தி எடுத்து தன் இணைக்கு ஊட்டியது ஆண் புறா.
“இதுங்க லவ்ஸ் தாங்க முடியல பிரபா” என்று புலம்பி அவன் மார்பில் முட்டினாள்.
“இப்போ அந்தப் புறா நம்மைப் பார்த்தா என்ன சொல்லும் பிரியா?” கேலியாக அவன் கேட்க, “ஐயோ ஆமா இல்ல” என்று உதட்டை கடித்தாள்.
“என்ன ஆமா?”
“இல்ல, அதுங்களும் நம்மைப் பார்த்து கடுப்பாகும்ங்கனு சொல்ல வந்தேன்” என்றாள். சிரிப்புடன் அவள் தோளை சுற்றி கைப் போட்டு அணைத்துக் கொண்டான்.
“பிரபா, என்னை எப்போல இருந்து உங்களுக்குப் பிடிக்கும்?” என்று கண்களை மலர்த்தி அவனைப் பார்த்துக் கேட்டாள்.
“எப்பவுமே பிடிக்கும்” என்றான் ஆழ்ந்த குரலில். அவளின் கண்களைப் போலவே உதடுகளும் மலர, “எனக்குக் குட்டி பப்பிக் கொடுத்தீங்களே அப்பவேவா?” என்று ஆவலுடன் கேட்டான்.
“என் லவ், பப்பி லவ் இல்ல பிரியா”
“ப்ச்” என்று கோபமாகச் சலித்து, “உங்களுக்கு டைரக்ட்டா பதில் சொல்லத் தெரியாதா? ஒழுங்கா எனக்குப் பதில் சொல்லுங்க” என்று அதட்டினாள்.
அவன் லேசாக நகர்ந்து காலையும் நகர்த்த, சட்டென அவனிடம் இருந்து விலகினாள். அவன் காலை மேலே தூக்கி சோஃபாவில் நன்றாக நீட்டி வைத்து, மென்மையாகப் பிடித்து விட்டாள்.
“பிரியா..” என்று அவன் தடுக்க, “ரிலாக்ஸ் மிஸ்டர் பி” என்று அவன் காலை வலிக்காமல் பிடித்து விட்டாள். அவன் காலில் ரத்த ஓட்டம் பாய, அதன் விளைவாக அரித்தது. அந்த இடத்தைச் சுற்றி மென்மையாய் விரல்களால் தேய்த்து விட்டாள் அவள்.
அவனுக்குச் சுகத்தில் கண்கள் சொருக, “தூங்காம கதை சொல்லுங்க” என்று அவன் காலை சுரண்டினாள். கூச்சத்துடன் அவன் காலை உருவ பார்க்க, “நான் ஒன்னும் செய்யல, நீங்க சொல்லுங்க” என்று சேட்டை செய்யாமல் அவன் காலை அழுத்தி கொடுத்தாள்.
“லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்னு கதை விட மாட்டேன் பிரியா. ஆனா அந்த வயசுல உனக்கு அந்த நாய்க்குட்டியை பிடிச்ச மாதிரி எனக்கு உன்னைப் பிடிச்சது. பிடிக்கும், அவ்ளோதான். அதைத் தாண்டி நான் யோசிச்சது இல்ல. ஆனா டெய்லி உன்னைப் பார்க்க பார்க்க உன் மேல ஒரு ஈர்ப்பு வந்தது. உன்னை ஒரு நாள் பார்க்கலைன்னாலும் கண்ணும் மனசும் உன்னை அப்படித் தேடும். எங்க வீட்டு மொட்டை மாடியில நின்னு உங்க வீட்டை பார்ப்பேன். உன்னைப் பார்க்கவே உங்க வீட்டுப் பக்கம் சைக்கிள் ஓட்டிட்டு சுத்துவேன்”
“என்னெல்லாம் சாகசம் செஞ்சுருக்கீங்க. ஆனா எனக்கு எதுவும் தெரியல” என்று உதடு பிதுக்கினாள்.
“நீதான் என் பக்கமே பார்க்க மாட்டியே” என்று அவன் சொல்லவும், “என்ன ஃபீலிங்கா?” என்று கிண்டலாகக் கேட்டாள்.
“பட் நீங்களும், நான் பார்க்கும் போது என்னைப் பார்த்ததே கிடையாதே. இல்லன்னா நீங்க என்னைப் பார்க்கறது எனக்குத் தெரிஞ்சுருக்குமே”
“அது உண்மைதான். நீ பார்க்கும் ரொம்பக் கவனமா உன் பக்கமே என் கண்ணு திரும்பாது.”
“ரொம்பக் கேர்புல்லா இருந்திருக்கீங்க இல்ல? இல்லன்னா நான் எப்பவோ கண்டுபிடிச்சு இருப்பேன்” என்று அவள் பெருமையாகச் சொல்ல, “கிழிச்ச” என்று கிண்டலடித்தான் அவன்.
“நான் எங்க செட் பசங்க கூடப் பேசுவேன். நீங்க பெரியவங்கன்னு..”
“ஏய் விட்டா என்னைக் கிழவன்னு சொல்லிடுவ போலயே” என்று அவன் கோபிக்க, “நீங்க என் அண்ணாவை விட ஒரு வயசுதான் சின்னவர். என்னை விட ரொம்பப் பெரியவங்க..” என்று அவள் ரொம்பவும் இழுக்கவும், கை நீட்டி அவளைப் பக்கத்தில் இழுத்துக் கொண்டான் பிரபஞ்சன்.
“அச்சோ பிரபா, உங்க காலு காலு.. இடிக்கப் போகுது”
“இடிக்காம உக்காரு அப்போ” என்றான். அவனை உரசி ஒட்டி அமர்ந்தாள். காதல் பறவைகள் போலக் கண் மூடி அந்தக் கணத்தை ரசித்து உள்வாங்கினார்கள்.
“உனக்கே தெரியும் எங்கம்மா டீச்சர். அப்போ அவங்க பையன் எவ்வளவு ஒழுக்கமா இருக்கணும்னு அவங்க நினைப்பாங்க, யாரும் என்னைக் கை நீட்டி ஒரு வார்த்தை குத்தம் சொல்லிட கூடாதுன்னு என்கிட்ட ரொம்பக் கண்டிஷனா இருப்பாங்க”
என்று இம்முறை தீவிரமாக அவனது காதல் கதையைச் சொல்லத் தொடங்கினான் அவன்.