பிரிய பிரபஞ்சமே – 24 (2)

அப்பாவை வழியனுப்பி விட்டு மீண்டும் சமையல் அறை வந்தாள்.

பிரபஞ்சனுக்குப் பிடிக்குமென்று பருப்புப் பாயாசம் செய்தாள். நெய்யில் தேங்காய் வறுபடும் மணமே நாவில் எச்சில் ஊற செய்தது. வீடு முழுக்க ஏலக்காய், நெய் மனம் நிறைந்தது.

சோஃபாவில் படுத்திருந்த பிரபஞ்சன் அப்படியே ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்திருந்தான். லேசாகத் திறந்திருந்த பால்கனி வழியே மழைச் சாரல் அறைக்குள் நுழைந்து அவன் மேல் பொழிய, உடல் சிலிர்க்க உறக்கம் கலைந்து எழுந்தான் அவன்.

அவன் கண்களைக் கடினப்பட்டுத் திறக்க, பால்கனியில் தஞ்சமடைந்திருந்த ஜோடி புறாக்கள் அவனது கவனத்தை ஈர்த்தன.

இரண்டும் மழையில் நனைந்து நடுக்கத்துடன் அமர்ந்திருந்தன. ஆண் புறா தன் அலகால் பெண் புறாவை கொஞ்ச, “பிரபா அந்தப் புறா ரெண்டும் கிஸ் பண்ணுது” என்று அவனிடம் கிசுகிசுத்த மனைவியின் குரலே அவன் செவியில் எதிரொலித்தது.

அந்தப் பறவைகளையே இமைக்காமல் பார்த்திருந்தான்.

அவைகளுக்குள் இருந்த இணக்கத்தைக் காண காண அவனுக்குப் பெருமூச்சு எழுந்து அடங்கியது.

“நீங்க என் கூடவே இருப்பீங்கன்னு சந்தோஷப்பட்டுச் சுவீட் சாப்பிட்டேன் பிரபா. உங்களை ஹர்ட் பண்ண இல்ல” மனைவியின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவன் மனத்தில் வந்து போனது.

அவள் வார்த்தைகளை நம்பினான் அவன்.

அவளுக்குத் தேவையெல்லாம் அவனது நேரமும், அவனும் மட்டுமே. எனக்கு முக்கியத்துவம் தா என்கிறாள் மனைவி. அவனுக்கு அது புரியாமல் இல்லை. ஆனால் அவள் கேட்பதை கொடுக்க முடியாமல் போய் விடும் என்ற பயத்தில்தான் கிரிக்கெட்டை உதறினான்.

நண்பனை புறக்கணித்தான். இப்போது யோசிக்கப் பார்த்திபனிடம் பேசாமல் இருந்தது அவனை மட்டுமல்ல, அவனை அழைத்த மனைவியையும் காயப்படுத்தி இருக்கும் என்பதை உணர்ந்ததும் தன்னைத்தானே நொந்து கொண்டான் அவன்.

ஒரு விதத்தில் நண்பனை அவமானப்படுத்தி அனுப்பி இருக்கிறான். அவன் இடத்தில் நான் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன்? அந்தக் கேள்வியே அவனை அலைக்கழித்தது.

அன்று மருத்துவமனையில் வைத்து மனைவியிடம் அத்தனை முறை மன்னிப்புக் கேட்டிருந்தான். ஆனால் திரும்பத் திரும்ப அவளைக் காயப்படுத்ததான் போகிறான் என்றால் அந்த மன்னிப்புக்கு என்ன அர்த்தமிருக்கப் போகிறது?

அவள் மேல் பிரியம், பிரியம் என்பதெல்லாம் வெறும் பேச்சில் தானா? அவளைப் புரிந்துக் கொள்ளா விட்டால் அவள் மேல் வானளவு பிரியம் இருந்தாலும் பிரயோஜனம் இல்லையே!

அவனே அவனைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தி சரி, தவறுகளை ஆராய்ந்து கொண்டிருந்தான்.

காதல் காயப்படுத்துமா என்ன? அப்படிக் காயப்படுத்தும் என்றால் அது காதலே இல்லைதானே?

காதல் என்பதே சரணாகதிதானே!

நீ, நான் என்பதைக் காதலால் கடந்து நாம் என்பதில் உறைந்து சரணாகதி நிலையை அடைய காதலுடன் காத்திருந்தான் பிரபஞ்சன்.

“பிரியா..” என்று மென்மையாக அழைத்தான்.

அவன் குரல் அவளை எட்டவில்லை.

சமையல் அறை மேடையில் சாய்ந்து நின்றிருந்தாள் பிரியதர்ஷினி.

“ஒரு பிரச்சினையை எப்பவும் உன்னோட கோணத்துல இருந்து மட்டும் பாக்க கூடாதுடா. அந்த விஷயம் பிரபஞ்சனை எப்படிப் பாதிச்சுருக்கும்னு நீ யோசிச்சா போதும்” என்று அப்பா சொன்னதுதான் அவள் மனத்தில் அலை மோதிக் கொண்டிருந்தது.

எனக்குப் பிடித்த ஒன்றை நான் இனி செய்யப் போவதில்லை என்று சொன்ன பொழுதில் பிரபஞ்சன் அதை இனிப்பு உண்டு கொண்டாடியிருந்தால் நான் என்ன செய்திருப்பேன்? கண்டிப்பாகக் காயப்பட்டிருப்பேன். அந்தக் கணம் அவனைக் கேள்வி கேட்டு அவனுடன் சண்டை போட்டிருப்பேன். இல்லை, அதுவல்ல என் இயல்பு. அந்த நொடி மௌனமாய் அவனை முறைத்து சில நாள்கள் அவனிடம் பேசாமல் இருந்து அவனைக் குற்ற உணர்வுக்கு உள்ளாக்கி இருப்பேன் என்று அவளின் சிந்தனை சிதற அப்படியே நின்றிருந்தாள்.

திடீரென்று அவர்களின் அறையில் இருந்து டொம்மென்று சத்தம் கேட்க, “பிரபா” என்று பதறி அறைக்குள் ஓடினாள்.

ஓய்வறை வாசலில் நின்றிருந்தவன் கையில் வாக்கர் இல்லை. அது கீழே அவனது காலடியில் விழுந்திருந்தது. ஒற்றைக் காலில் தடுமாறி நின்றிருந்தான் அவன்.

“அச்சோ பிரபா” என்று பதறி ஓடி அவனைத் தாங்கிப் பிடித்தாள்.

“ஐ ஆம் ஓகே பிரியா” என்றான்.

“டோர் மேட் காலை வழுக்கிடுச்சு. அதான் விழுந்துடுவேனோன்ற பயத்துல அடுத்த அடியை எடுத்து வைக்கப் பயந்து அப்படியே பிரீஸ்ஸாகி நின்னுட்டேன். நான் திரும்ப விழுந்து வச்சா..”

“பிளீஸ், என்ன பேசுறீங்க” வேகமாக அவன் வாயை மூடினாள்.

“எனக்கு அவசரம் பிரியா, நீ அப்புறமா கவலைப்படு. இப்போ கதவை திறந்து விடு” என்று அவன் சொல்லவும், “சாரி, சாரி..” என்று மின்னல் வேகத்தில் கதவை திறந்து அவனுக்கு வாக்கரை எடுத்து கொடுத்தாள்.

அவன் வெளியே வரும் வரையும் அங்கேயேதான் நின்றிருந்தாள். அவன் முகம் கழுவி வர, துவாலை எடுத்து துடைத்து விட்டாள்.

“உங்களுக்குத் தாடி வளருது பிரபா. பார்க்கவே நல்லாவே இல்ல. சேவ் பண்ணணும். பார்லர் போவோமா?” அவன் மீசையையும், தாடியையும் வருடி அவள் கேட்க, “சாரி பிரியா” என்றான் தீவிரமாக, அவள் கண்களைக் கூர்ந்து.

இருவரும் இயல்பாக இருக்க முனைந்தாலும் இருவரின் மனத்திலும் சற்று முன் அவர்கள் அள்ளி வீசிய வார்த்தைகள் அழுத்திக் கொண்டிருந்தது நிஜம்.

அவனை நிமிர்ந்து நோக்கி, “நானும் சாரி” என்றாள் அவள்.

“நீங்க முதல்ல உட்காருங்க” என்று அவன் கரம் பிடித்துச் சோஃபாவில் அமர்த்தினாள்.

அவளை இழுத்து தன் பக்கத்தில் அமர்த்தியவன், அவளின் நெற்றி காயத்தை வருடினான். காயம் ஆறி இப்போது வடுவாக மாறியிருந்தது.

“பருப்புப் பாயாசம் பண்ணேன். உங்களுக்கு எடுத்துட்டு வரவா பிரபா, சாப்பிடுறீங்களா?”

“ம்ம்ம், சாப்பிடுறேன். ஆனா அதுக்கு முன்னாடி சாரி சொல்லிடறேன். ஐ ஆம் சாரி பிரியா” என்றான் அவள் கண்களைக் கூர்ந்து.

“இதை நான் தப்பிக்கச் சொல்லல. தப்பை உணர்ந்து சொல்றேன் பிரியா. பிளீஸ், ட்ரஸ்ட் மீ” என்றான் அடர்ந்த குரலில்.

“நான் உங்களை நம்புறேன்னு எப்போவோ சொல்லிட்டேன். அண்ட் எத்தனை முறை சாரி சொல்லுவீங்க? எனக்குக் கோபம் இருக்குதான், நான் இல்லைன்னு சொல்லல. அதுக்காக..”

“ஜஸ்ட் சாரி சொன்னா மட்டும் போதாது. சாரி சொன்னா மட்டும் எதுவும் சரியாகாதுன்னு எனக்குத் தெரியும் பிரியா. சாரி சொல்றதுக்குப் பதிலா என் தப்பை சரி பண்ண டிரை பண்றேன்” என்றான், அவளின் கைப் பிடித்து அழுத்தி.

“என்ன தப்பை சரி பண்ண போறீங்க?” என்று அவள் கண்ணைச் சுருக்கி புரியாத பாவத்துடன் கேட்க, “என் போனை எடுத்து குடு பிளீஸ்” என்றான்.

“என்ன பண்ண போறீங்க?” என்று கேட்டபடியே அவனது அலைபேசியை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.

“உன்னோட பார்த்திபன் அண்ணா கிட்ட பேசுவோம்” என்று கேலி சிரிப்புடன் சொன்னவன், மறுநொடியே நண்பனுக்கு அழைத்திருந்தான். அந்தப் பக்கம் பார்த்திபன் அழைப்பை ஏற்றதும் ஸ்பீக்கரில் போட்டான்.

“ஹாய் மிஸ்டர் பி, என்னடா அதிசயமா இருக்கு. எனக்குக் கால் பண்ணியிருக்க? நேர்ல பார்க்கும் போது பேசாம மூஞ்சை திருப்பிட்டு போய்ட்டுத் திருட்டுத்தனமா போன்ல பேச, நாம என்ன கள்ளக் காதலிகளாடா மச்சா?” என்று எடுத்ததும் சிக்ஸ் அடித்து, அவன் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த இருவரின் ரத்த அழுத்தத்தையும் ஏகத்துக்கும் ஏற்றி விட்டான்.

“டேய் பார்த்திப் பைத்தியக்காரா” என்று பிரபஞ்சன் பல்லைக் கடிக்கவும், “என்ன மிஸ்டர் பி..” என்று கேலியாகக் கேள்வியை இழுத்தான் பார்த்திபன்.

“ஆமா, உன் ஜெர்சியில் இருக்க மிஸ்டர் பிக்கு அர்த்தம் என்னன்னு உன் பொண்டாட்டிக்கு தெரியுமா? அதை நீ எப்போ போட்டன்னு அவங்ககிட்ட சொன்னியா?” அடுத்தடுத்த பந்தும் ஆடுகளத்துக்கு வெளியேதான் சென்றது.

“டேய் பார்த்தி..”

“சரி விடு. இந்த வீக் மேட்ச் இருக்கு வர்றியா?” என்று பார்த்திபன் கேட்க, தலையில் கை வைக்காத குறையாகத் திரும்பி மனைவியைப் பார்த்தான் பிரபஞ்சன்.

error: Content is protected !!
Scroll to Top