மரகதவல்லி ஒற்றைப் பார்வையில் சூழலை கிரகித்து விட்டார். ஆசிரியர் அனுபவம் அப்படி.
“பிரியதர்ஷினி” என்று அதட்டினார்.
“ஸ்கூல் ஒர்க் முடிஞ்சுதா அத்த? லஞ்ச் சாப்பிடுறீங்களா, எடுத்து வைக்கவா?” என்று அவரிடம் இயல்பாகக் கேட்டாள் அவள்.
“ம்ம்” என்று தலையசைத்தவர், “ரஞ்சன், இந்தக் காலோட எதுக்கு இப்படி நின்னுட்டு இருக்க? போய் ரெஸ்ட் எடு” என்றார் மகனிடம் திரும்பி.
பிரபஞ்சன் மனைவியை ஓர் பார்வை பார்த்து விலகி நடக்க முயல, அவளோ விடாமல் அவனைப் பிடித்து அறைக்குள் அழைத்துச் சென்றாள்.
இருவருக்கும் இடையே வாரி இறைத்தது போல மௌனம் இழையோடி இம்சித்தது.
பால்கனியை பார்த்திருந்த சோஃபாவில் அமர்ந்து விட்டான் பிரபஞ்சன். அவள் கடினமான முகத்துடன் விலகப் போக, அவளின் கைப் பிடித்து நிறுத்தினான்.
அவன் விரல் மென்மையாய் அவள் உள்ளங்கையை வருடியது. அவனைக் குனிந்து நோக்கிய அவள் விழிகளில் வருத்தத்தின் சாயல்.
இருவரும் மற்றவர் மேல் வாரி இறைத்த வார்த்தைகள் அவர்களைக் காயப்படுத்தி இருக்க, இப்போது காயத்திற்கு மருந்திட வார்த்தைகள் இன்றித் தவித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது, “பிரியதர்ஷினி” என்று மரகதவல்லி அவளை அழைக்க, “அத்த கூப்பிடுறாங்க, இருங்க என்னன்னு கேட்டுட்டு வர்றேன்” என்றாள். அவன் முகத்தில் மெல்லிய முறுவல் உதயமானது.
“மிஸ் இப்போ மாமியார் ஆகிட்டாங்க போலப் பிரியதர்ஷினி” அவள் கையை விடாமல் வருடியபடி கேட்டான்.
சட்டென அவன் சொன்னது புரியாமல் குழம்பி, “என்னது?” என்று கேட்டவள், அவனது பார்வையில் தெளிந்து, “இப்போ இல்ல.. எப்பவோ” என்றாள் புன்னகையை உதட்டுக்குள் ஒளித்து.
“அது எப்போ?” குறும்பு சிரிப்பில் மீசை துடிக்க அவன் குறும்பாகக் கேட்க, “உங்களுக்கு நான் ஓகே சொன்னப்போவே” என்றாள் முகத்தை நிமிர்த்தி.
“பிராடு” என்றான் சத்தமாகச் சிரித்து.
“பிரியா பிராடுன்னா பிரபாவும் பிராடுதான்” என்று முறைப்புடன் முணுமுணுத்து அறையை விட்டு வெளியேறி இருந்தாள்.
கூடத்தில் மரகதவல்லி அமர்ந்திருக்க, “உங்களுக்கு டீ தரவா அத்த?” என்று அவரிடம் கேட்டாள்.
“கொஞ்ச நேரம் கழிச்சுக் குடிக்கிறேன். இப்போ வேணாம்” என்றவர், அவர்கள் மருத்துவமனை சென்றது, அங்கு நடந்தது, மகனின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் என்ன சொன்னார்கள் என அவளிடம் விசாரித்தார். அவள் சொல்லி முடிக்கவும், தொலைக்காட்சியில் ஐக்கியமாகி விட்டார்.
பிரியதர்ஷினிக்கு எழுந்து அறைக்குச் செல்லவே தயக்கமாக இருந்தது. கணவனுடன் மீண்டும் சண்டையிட அவளுக்குத் தெம்பில்லை.
திருமணமான ஆரம்ப நாள்களில் இருந்தே எல்லாவற்றையும் பேசி, சண்டையிட்டுத் தெளிவு பெற்றிருக்க வேண்டுமோ? என்று காலம் கடந்து ஞானோதயம் பெற்றுச் சரியாக யோசித்தாள் அவள்.
ஓவ்வொரு பிரச்சினையின் போதும் அவள் பேசாமல் அவனைப் புறக்கணிக்க, அவன் பதிலுக்குப் பேசி பேசியே அவளைச் சரி செய்திடுவான். ஒருநாளும் பிரச்சினையை மனம் விட்டு இருவரும் பேசி தீர்த்ததில்லை. அதுதான் இன்றைக்கு அவர்களை இங்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
அவனுக்கு அவள் மேல் கொள்ளை காதல். திருமணமான முதல் நாளில் இருந்தே அதை வெளிப்படுத்திக் கொண்டேதான் இருந்திருக்கிறான் அவன். அவளும் அவனது அதீத அன்பை அப்படியே ஏற்றுக் கொண்டாள். அதற்கான காரணம் அவனது காதல் கொண்ட மனம், அதுவும் பல்லாண்டு காதல் என்பதை அறிந்து கொண்ட பிறகு அவளுக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும்தான் மிகுந்திருந்தது.
அவனது பிரியம் புரிகிறது. அதற்காக ஆரம்பக் காலங்களில் அவன் செய்தவை எல்லாம் எப்படி மறக்க முடியும்? மறக்க முடியவில்லை என்றாலும் கடக்கத்தான் வேண்டும் இல்லையா?
அப்படியில்லை என்றால் நிம்மதியான குடும்ப வாழ்க்கையை அவர்கள் வாழவே முடியாது.
பிரபஞ்சன் கேட்ட, “காலத்துக்கும் இதைச் சொல்லியே என் கூடச் சண்டை போட போறியா?” என்ற கேள்வி அவளை அதிகம் தொந்தரவு செய்து யோசிக்க வைத்தது.
அன்பு இன்னொருவரை வெறுக்கச் சொல்லாது என்று அவளேதான் அவனிடம் வசனம் பேசினாள். அப்படிக் கணவனின் மேல் அன்பிருந்தால் அவளால் அவனை மன்னிக்க முடியாதா என்ன? மறக்க முடியாதா என்ன? குறைந்த பட்சமா அதை அவனுக்கு எதிரான குற்றமாகத் தூக்கிப் பிடித்து அவனைக் குற்றவாளி கூண்டில் எப்போதும் நிறுத்துவதை அவள் நிறுத்த வேண்டும்.
இல்லையென்றால்.. அதைப் பற்றி யோசிக்கவே அவளுக்குப் பயமாக இருந்தது.
அவனுக்கு அவளைப் பற்றி அனைத்தும் தெரியும். அவளை அணு அணுவாக உள்ளும் புறமுமாகத் தெரிந்து வைத்திருக்கிறான் அவன். ஆனால் அவள்? அந்தக் கேள்வியும், அதற்கு அவள் மனம் சொல்லிய பதிலும் அவளை மிரட்டியது.
அவனைப் பற்றிய புரிதல் வந்தால் போதுமே, அதன் பிறகு எல்லாமே எளிதாகி விடும் என்ற நம்பிக்கை துளிர்க்க அவள் உதட்டில் புன்னகை துளிர்த்தது.
பிரபஞ்சனுக்குப் பிடித்த எதையாவது செய்ய வேண்டும் என்று மனம் பரபரக்க, சமையல் அறைக்குள் நுழைந்தாள்.
அந்நேரம் அவளின் அலைபேசி அடிக்க, “பிரியதர்ஷினி உன் போன் அடிக்குது பாரு” என்று மரகதவல்லி சொல்லவும், ஓடி போய்க் கூடத்துச் சோஃபாவில் கிடந்த அலைபேசியை எடுக்க, திரையில் அப்பாவின் பெயர் ஒளிர்ந்தது.
அவசரமாக அழைப்பை ஏற்று, “சொல்லுங்கப்பா” என்றாள்.
“என்ன குட்டிமா, உன் குரலே டல்லடிக்குது?” என்று எடுத்ததும் மாணிக்கவேல் அக்கறையுடன் கேட்க, “டல்லாவா? இல்லையேப்பா, நான் நல்லாதான் இருக்கேன்” என்றாள், அவரைச் சமாதானம் செய்யும் விதமாக.
“ சரி, அப்பா உங்க வீட்டுக்குத்தான் வந்துட்டு இருக்கேன். உனக்கும், மாப்ளைக்கும் ஏதாவது வாங்கிட்டு வரணுமா குட்டிமா?”
“இல்லப்பா, நீங்க வாங்க போதும்” என்றாள். மாணிக்கவேல் அடுத்த ஐந்தாம் நிமிடம் மகளின் வீட்டில் இருந்தார். மரகதவல்லி அவரிடம் நலம் விசாரித்து, சம்பிரதாயப் பேச்சுக்கள் முடித்து, தேநீர் கொடுத்து உபசரித்து உள்ளே சென்று விட்டார்.
“என்னப்பா நீங்க மட்டும் தனியா வந்திருக்கீங்க?”
“அம்மாவ பார்க்கணுமா உனக்கு? சொல்லியிருந்தா பேங்க் ஆஃபீஸர் மேடமை கூடவே கூட்டிட்டு வந்திருப்பேன் இல்ல?”
“ஹாஹா என்னப்பா அம்மா கூடச் சண்டையா? பேங்க் ஆஃபீஸர் மேடம்ன்னு சொல்றீங்க?”
“ஆமா குட்டிமா, உங்கம்மா காலையில இருந்து என்கிட்ட பேசலன்னா பார்த்துக்கோ.”
“உங்க கூடப் பேசாம இருக்காங்களா? அம்மாவா? ஏன்ப்பா?” அவள் அதிர்ச்சியுடன் கேட்க, “ம்ம்ம்ம்” என்று இழுத்து மகளைத் தவிர்க்கப் பார்த்தார் அவர்.
“சொல்லுங்கப்பா”
“அது ஒன்னுமில்ல குட்டிமா. நாங்க காலையில சண்டை போடும் போது பெரிய விஷயமா பட்டுது. இப்போ யோசிச்சா இதுக்கா அவ கூடச் சண்டை போட்டோம்னு இருக்கு. நைட் உங்கம்மாவை பார்த்ததும் இதுக்குப் போய் இவளோட சண்டை போட்டுட்டேனேன்னு ஃபீல் பண்ணி சாரி சொல்லிடுவேன். அதுனால நீ ஃப்ரீயா விடுடா” என்று கூறி மகளின் தலைக் கோதினார்.
“எனக்குக் கோபம்னு அவளைக் குத்தம் சொல்ல விரும்பல குட்டிமா” என்றார் புன்னகையுடன்.
அவர் வந்ததும் முதல் வேலையாக மருமகனைத்தான் கேட்டார்.
அவளும் அறைக்குள் சென்று பார்த்து விட்டு வந்து, “தூங்குறார்ப்பா” என்றிருந்தாள். இப்போதும் மாணிக்கவேலின் கண்கள் அவர்களின் அறையின் மேல் படிந்து படிந்து மீளவும், “என்னப்பா பிரபா கிட்ட பேசணுமா? அவரை எழுப்பவாப்பா?” என்று கேட்டாள் அவள்.
“இல்லடா வேணாம், வேணாம். அவர் தூங்கட்டும்” என்று வேகமாக மறுத்து, “உன் முகமே சரியில்லையே தர்ஷி, டாக்டர்ஸ் பேட் நியூஸ் எதுவும் சொல்லலன்னு சொல்ற அப்புறம் ஏன் அப்செட்டா இருக்க?” என்று மகளின் முகத்தைக் கூர்ந்து கேட்டார். அவர் கரம் உயர்ந்து மகளின் நெற்றி காயத்தை ஆராய்ந்தது.
“அப்பா” என்று அவள் தயங்க, “பிரபஞ்சன் கூடச் சண்டையா?” என்று நேரடியாகக் கேட்டிருந்தார்.
“நான் கோபமா இருக்கேன்னு அவரைக் குற்றவாளியாக்க விரும்பலப்பா” என்று மகள் அவரின் வார்த்தைகளையே அவருக்குத் திருப்பிப் படிக்க, ஒரு நொடி அதிர்ந்து வெடித்துச் சிரித்திருந்தார் மனிதர்.
“குட்” என்று அவளின் தோளை பாராட்டாகத் தட்டிக் கொடுத்தார்.
“அப்பா உனக்கு அட்வைஸ்னு எதுவும் சொல்லணும்னு அவசியம் இல்ல. யூ நோ பெட்டர், இருந்தாலும் இப்போ சொல்லணும்னு தோனுறதால சொல்றேன். நான் எப்பவும் சொல்றதுதான் ஒரு பிரச்சினையை எப்பவும் உன்னோட கோணத்துல இருந்து மட்டும் பாக்க கூடாதுடா. அந்த விஷயம் பிரபஞ்சனை எப்படிப் பாதிச்சுருக்கும்னு நீ யோசிச்சா போதும், சரியான தீர்வு கிடைக்கும். ஆரம்பத்துல மேரேஜ் லைஃப் சீ சா மாதிரி ஏற்ற இறக்கத்தோடதான் இருக்கும். அதைச் சரியா பேலன்ஸ் பண்ற சாமர்த்தியம் நம்ம கையிலதான் இருக்கு. காலப் போக்கில் சமநிலை வந்துட்டா வாழ்க்கை ஊஞ்சல் போலச் சொகுசா சுகமா போகும் தர்ஷி” என்று அப்பாவாக அறிவுரை சொன்னார். மௌனமாகக் கேட்டு கொண்டாள்.
“என் ஸ்கூட்டி நம்ம வீட்ல இருக்குன்னு அண்ணா சொன்னான்ப்பா. அதை நான் வந்து எடுத்துக்கவா? இல்ல அண்ணாவை கொண்டு வந்து தரச் சொல்றீங்களா?”
“அந்த வண்டி ஓட்டுற கண்டிஷன்ல இல்லையே. ஆக்சிடென்ட்ல வண்டிக்கும் பலமான அடி. ரிப்பேர் பண்ணி ஓட்டலாம்தான். ஆனா அப்பாக்கு மனசு ஒப்பலடா. அந்த வண்டியை இப்போதைக்கு நீ தொட வேணாம்” என்றார் மகளின் கைப் பிடித்து.
“அது எனக்குப் பிரபா வாங்கிக் கொடுத்த வண்டிப்பா. அதுனால ரிப்பேர் பார்த்து யூஸ் பண்ணலாம்னு நினைச்சேன்”
“அப்பா உனக்குப் புது ஸ்கூட்டி வாங்கித் தர்றேன் குட்டிமா. இல்லனா மாப்ளய வாங்கித் தர சொல்றேன்” என்று அவர் சொல்லவும் சிரித்து விட்டாள் அவள்.
“நீங்களாப்பா இப்படிப் பேசுறது, எனக்கு ஆச்சரியமா இருக்கு?”
“என்னம்மா செய்ய? என் பொண்ணுக்கு ஒன்னுன்னா மனசால மட்டும்தானே யோசிக்க முடியுது. புத்தி, அறிவு எல்லாம் பின்னாடி போயிடுது” என்றார்.
அவளும் பேச்சை மாற்ற விரும்பி, “அண்ணா கல்யாண விஷயம் என்னப்பா ஆச்சு?” என்று கேட்டாள்.
“உனக்கும் மாப்ளைக்கும் ஆக்சிடென்ட்டான விஷயம் உங்கண்ணா விரும்புற பொண்ணுக்கு தெரிஞ்சு, உங்களைப் பார்க்கணும்னு சொல்லி இருப்பாங்க போல. அவங்கப்பா போகக் கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டாராம். ஆனா அவங்கம்மா உங்கம்மா கிட்ட பேசியிருக்காங்க. சீக்கிரம் எல்லாமே சரியாகும்னு நம்புவோம்” என்றார்.
அண்ணனின் காதல், அதற்கு நீங்கள் எப்படிச் சம்மதித்தீர்கள்? பெண் வீட்டினரை போல உங்களுக்குக் காதல் என்றால் பிரச்சினை இல்லையா? நான் காதலித்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? என்றெல்லாம் அப்பாவை கேள்வி கேட்டுப் பதில் வாங்கிக் கொண்டிருந்தாள் பிரியதர்ஷினி.
“என்னமா புதுசா கேட்கற? நானும் அம்மாவும் உங்களுக்கு விருப்பமில்லாதத எப்போ செய்ய வச்சுருக்கோம்? அதுவும் கல்யாண விஷயத்துல போய்.. ச்சே ச்சே, உங்க லைஃப் பார்ட்னரை நீங்க தேர்ந்தெடுக்க உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு குட்டிமா. நான் பேக்கிரவுண்ட் செக் மட்டும் செஞ்சுருப்பேன். அவ்ளோதான்” என்றார் புன்னகையுடன்.
“எப்படிப் பிரபஞ்சனுக்குச் செஞ்ச மாதிரியாப்பா?” என்று அவள் கேட்கவும், சத்தமாகச் சிரித்து விட்டார் அவர்.
“அப்பா, அப்போ உங்களுக்கு.. உங்களுக்குத் தெரியுமாப்பா?” நேரடியாகக் கேட்க முடியாமல் தடுமாறினாள்.
சிரிப்புடன், “என் பொண்ணை விரும்பி ஒருத்தர் கல்யாணம் பண்ணிக்கக் கேட்டா, அப்பா எப்படிடா கண்டுபிடிக்காம இருப்பேன்?” என்று மகளிடம் எதிர்கேள்வி கேட்டார் அவர்.
“அன்னைக்குச் செம்ம மழையில நான் வண்டி ரிப்பேராகி நடுரோட்ல
மாட்டிட்டு நிக்கும் போது, நான் கை காட்டினதும் காரை நிப்பாட்டி இறங்கி வந்து எனக்கு ஹெல்ப் பண்ணார் மாப்ள. நான்னு தெரிஞ்சதும் வாங்க சார் உங்கள வீட்ல விடுறேன்னு சொன்னார். நானும் ஏறிட்டேன். நம்ம ஏரியாக்குள்ள நுழைஞ்சதும் அவருக்கு வழி தெரியாதேன்னு நான் டைரக்க்ஷன் சொன்னா.. பட்டுனு உங்க வீடு எனக்குத் தெரியும் சார்னு சொன்னார். பிரியதர்ஷினி எங்கம்மா கிட்டதான் டியூஷன் படிச்சாங்கன்னு அவர் சொன்னப்போ நான் பெருசா யோசிக்கல. பின்னாடி அவங்கம்மா பொண்ணு கேட்டு வந்ததும்தான் எனக்குக் கிளிக் ஆச்சு.” என்றார்.
“நான் உங்க ஸ்டூடண்ட்ன்னு சொல்லாம, உங்க பொண்ணு எங்கம்மாவோட ஸ்டூடண்ட்ன்னு சொன்னாரு பார்த்தியா. அதுலயே எனக்குத் தெரிய வேணாமா?”
“என்கிட்ட நீங்க சொல்லவே இல்லையேப்பா?” மனத்தாங்கலுடன் அவள் கேட்க, “நீ அவ்ளோ வேகமா மாப்ளக்கு ஓகே சொன்னதப் பார்த்திட்டு அப்பாக்கு எதுவும் சொல்ல தோனல குட்டிம்மா” என்றார் சிரிப்புடன்.
ஆக, பிரபஞ்சனின் பிரியத்தை அவளைத் தவிர அனைவரும் அறிந்துதான் இருக்கிறார்கள்.
“அப்பா கிளம்பறேன் தர்ஷிம்மா. இப்போ போய் அம்மா கூடச் சமாதானம் ஆகிட்டு, நாளைக்கு அவளைக் கூட்டிட்டு வர்றேன். என்ன?” என்று அவர் கேட்க, சரியெனத் தலையசைத்தாள் அவள்.