கணவனின் கரம் மெல்ல அவள் தோளில் பதிய, தலையை உயர்த்தி, “உங்க ஃப்ரெண்ட் கிட்ட பேசாதீங்கன்னு நான் என்னைக்குமே உங்களைச் சொன்னது இல்லையே பிரபா? ம்ம், அப்படி எப்பவாவது சொன்னேனா நான்?” என்று அவனையே கேள்வி கேட்டாள். அதற்கு மறுப்பாகத் தலையசைத்தான்.
“அப்புறம் ஏன் இப்படிப் பண்றீங்க?” என்று கத்தினாள்.
“அன்பு எப்பவும் யாரையும் வெறுக்கச் சொல்லாது. லவ் கேன் நெவர் ஃபோர்ஸ் யூ டூ அன்லவ் சம்ஓன்” என்று அவள் விரக்தியுடன் சொல்ல, அவன் உதட்டில் கசப்பான புன்னகை நெளிந்தது.
“சோ நானும் உங்களை அவரை வெறுக்கச் சொல்லல. உங்க ஃப்ரெண்ட்டை” என்று தெளிவுப்படுத்தினாள்.
“அவன் போன் பண்ணா உன்னைய அம்போன்னு விட்டுட்டு போயிடுவேன்னு நீ சொன்ன பிரியா” என்று அவள் சொன்ன வார்த்தைகளை அவளுக்கே நினைவு படுத்தினான்.
“அது அப்போ இருந்த கோபத்தில் சொன்னேன் பிரபா. அதைச் சொல்லி காட்டி நீங்க இன்னைக்குப் பண்ணதை நியாயப் படுத்தாதீங்க”
“ஓகே ஓகே. ஆனா உனக்கு அந்தப் பயம் இருக்குதானே இப்பவும்?”
“அப்படி இல்ல பிரபா. உங்க ஃபர்ஸ்ட் ப்ரையாரிட்டி நானா இருக்கணும் நான் நினைக்கறேன். அது தப்பா?”
“இதுதான் உன் பிரச்னை. பல வருஷமா என் ஃபர்ஸ்ட் அண்ட் ஃபோர்மோஸ்ட் ப்ரையாரிட்டியா நீயாதான் இருந்திருக்க, நீ மட்டும்தான் இருந்திருக்க. அது உனக்குப் புரியாட்டி.. என் மேல உனக்கு நம்பிக்கை இல்லாட்டி நான் என்ன செய்ய? நீயே சொல்லு?” இப்போது அவன் குரலும் உயர்ந்திருந்தது.
“எதையும் என்கிட்ட டைரக்ட்டா சொல்லாம.. எனக்கே தெரிஞ்சுடும் நீங்க நினைச்சா அது என் தப்பா பிரபா? என் இடத்துல யார் இருந்திருந்தாலும்..”
“என் பொண்டாட்டியா பிரியதர்ஷினி மட்டும்தான் இருப்பா. உன்னை மாதிரி அப்பா சொன்னார்னு..”
“ஸ்டாப் இட் பிரபா. புருஷனா நீங்க காட்டுற லவ் எனக்குப் புரிஞ்சது. அதுக்கு மேல உங்களோட பல வருஷ லவ் எனக்குத் தெரியலைன்னா அது என் தப்பில்ல. நீங்க ஐ லவ் யூ சொன்னதும் எல்லாத்தையும் நான் மறந்து, எதுவுமே நடக்காத மாதிரி நடந்துக்க முடியாது. உங்க பிரெண்ட் கால் பண்ணதும் என்னை அம்போன்னு ஹோட்டல்ல விட்டுட்டுப் போனது நீங்க” என்று கோபத்தில் வெடித்து விட்டாள்.
“நான் உன்னை வெயிட் பண்ண சொல்லிட்டுதானே போனேன்? திரும்பி உன்கிட்ட வராம எங்க போய் இருப்பேன்? நீயே சொல்லு? உனக்காகப் பல வருஷமா காத்திருக்கேன் நான். உன்னால என் வார்த்தையை நம்பி ஒரு மணி நேரம் கூடக் காத்திருக்க முடியல.”
“இது அபாண்டம் பிரபா.. நீங்க பேசுறது”
“அது கூட ஓகே. உன் கையில போன் பர்ஸ் எதுவும் இல்லாம, நீ ஹோட்டல்லயும் இல்லன்னு தெரிஞ்சதும் நான் எப்படிப் பதறி இருப்பேன்னு நீ என்னைக்காவது யோசிச்சுப் பார்த்திருக்கியா பிரியா? அன்னைக்கு நான் கார் ஓட்டின வேகத்துக்கு..” என்று அவன் இழுக்க, “ப்ச்” என்றாள் கோபமாக.
“உன்னை நேர்ல பார்க்கற வரைக்கும் மனசு கிடந்து அடிச்சிக்கிட்டது அப்படி.”
“சாரி. போதுமா? ஆனா அன்னைக்கும் உங்க ஃப்ரெண்ட்க்காகதானே போனீங்க?” என்று கேட்டாள்.
“எஸ், அவனுக்காகதான் போனேன். திரும்ப அப்படிப் போகக் கூடாதுன்னுதான் அவனை அவாய்ட் பண்றேன். போதுமா?” என்றவன் தலையைப் பிடித்து உலுக்கும் வேகம் அவளுக்குள் அலையென எழுந்தது.
“பிரபா அது மட்டும் நமக்குள்ள பிரச்சனை இல்ல.. நீங்க எப்பவும் எனக்கு இம்பார்ட்டென்ஸ் குடுக்காததுதான் என்னைக் கஷ்டப்படுத்துச்சு. என் சித்தி வீட்டுக்கு விருந்துக்கு வராம கிரிக்கெட் விளையாட போனீங்க. காலையில போக வேண்டிய இடத்துக்கு நாம மதியம் போய் நின்னோம்”
“ஓகே, சாரி. இனிமே கிரிக்கெட் விளையாட மாட்டேன். அந்த மாதிரி சிட்டுவேஷன் இனிமே உனக்கு வராது. டோண்ட் வொர்ரி” என்றான் கையைக் காற்றில் வீசி.
“நான் உங்களைக் கிரிக்கெட் விளையாட வேணாம்னு சொல்லவே இல்லைங்க” என்றாள் இறைஞ்சும் குரலில்.
“அப்படியா?” என்று கேட்டவன் குரல் இரும்பின் கடினத்தோடு ஒலித்தது.
“நான் எப்போ உங்களைக் கிரிக்கெட் விளையாட போக வேணாம்னு சொன்னேன்?” அதைக் கேட்கையிலேயே அவள் குரல் உள்ளே சென்று விட்டது.
“நீ நேரா சொல்லல. ஆனா, நீ அதுக்குத்தானே ஆசைப்பட்ட?” என்று தீர்க்கமாகக் கேட்டான். அது உண்மைதானே. அவளால் மறுக்க முடியாமல் அவனைப் பார்க்க, “உன் ஆசைப்படி நான் நடந்தா அதுவும் தப்பா?” என்று கேட்டான்.
“உங்களை ஒரேடியா கிரிக்கெட்டை ஒதுக்குங்கன்னு..”
“நீ சொல்லல பிரியா. அதுக்கு உன்னை நான் பிளேம் பண்ணல. பண்ணவும் மாட்டேன். ஆனா இதே பார்த்திபன் கிட்ட நான் மேட்ச்க்கு வரலைன்னு சொன்னதும் நீ என்ன பண்ண?” என்று கண்களில் நிறைந்திருந்த வலியுடன் கேட்டான். உண்மையில் அவளுக்கு நினைவில் இல்லை. அவள் கண்கள் யோசனையில் சுருங்க, குழப்பத்துடன் அவனை ஏறிட்டாள்.
“அதை ஸ்வீட் எடுத்து சாப்பிட்டு கொண்டாடின. நீ சாப்பிட்டதும் இல்லாம எனக்கும் வேற குடுத்த. நான் அந்நேரம் சாப்பிட மாட்டேன்னு தெரிஞ்சும் எனக்குக் கொடுத்த. அதுவும் எனக்கு ரொம்பப் பிடிச்ச ஒரு விஷயத்தை நான் விட்டுட்டேன்னு தெரிஞ்சு நீ செலிபிரேட் பண்ணும் போது எனக்கு எப்படி இருந்திருக்கும்?” என்று அவன் கேட்க, அதிர்ச்சியில் உறைந்து அவனை இமைக்காமல் பார்த்திருந்தாள். அவள் அதைச் செய்தாள்தான். ஆனால், அவன் சொல்லிக் கேட்கும் போது அவனுக்கு ஏதோ பெரிய கொடுமையைச் செய்து விட்டது போலிருந்தது அவளுக்கு.
“நான் சத்தியமா அப்படி யோசிக்கல பிரபா. நீங்க கிரிக்கெட் ஆடலன்னா என்னோடவே இருப்பீங்கன்னு நினைச்சு சந்தோஷப்பட்டு.. நான் அதைத்தான் செலிபரட் பண்ணேன். பிளீஸ் என்னை நம்புங்க”
அவள் சொன்ன மற்றதை எல்லாம் விட்டுவிட்டு, “கிரிக்கெட், பார்த்திபன் என் லைஃப் இல்ல பிரியா. பட் யூ ஆர் மை லைஃப். நீயில்லாம எனக்கு எதுவுமே இல்லைன்னு உனக்கு என்னைக்குமே புரியாது. என்னைய கொஞ்சமாவது நம்பினியா நீ? அப்படியா உன் மேல அன்பே காட்டாம இருக்கேன் நான்? ஒரு இடத்துக்குப் போனா முன்ன பின்ன ஆகத்தானே செய்யும் பிரியா. நீ சொன்ன நேரத்துல நான் வீட்ல இல்லனா ஏன் டென்ஷன் ஆகுற? இங்க வராம எங்க போயிட போறேன் நான். உனக்கு அப்போ போன் பண்ணாதது என் தப்புதான். அது எல்லாத்துக்கும் சேர்த்துதான் சாரி சொல்லிட்டேனே. ஹாஸ்பிடல் வச்சு கூட அத்தனை முறை மன்னிப்பு கேட்டேனே பிரியா” என்று படபடவெனப் பொரிந்து தள்ளினான்.
“சாரி சொன்னா.. எல்லாம் சரியா போச்சா?”
“மன்னிப்பு கேட்டா, மன்னிக்கணும் பிரியா” என்று அழுத்திச் சொன்னான்.
“ஓகே மன்னிச்சுட்டேன். ஆனா மறக்க முடியல” என்றாள் அவன் கண்ணைப் பார்த்து.
“ஓ அப்போ காலத்துக்கும் இதைச் சொல்லியே என் கூடச் சண்டை போட போறியா? மன்னிச்சுட்டாளாம். ஆனா மறக்கலயாம். போடி” என்றான் கோப மிகுதியில், பட்டென்று இருக்கையில் இருந்து ஒற்றைக் காலில் எழுந்து நின்று, எலும்பு முறிந்த காலை தரையில் ஊன்றி, “அம்மா” என்று வலியுடன் காலை உதறி மேலே தூக்கினான்.
“பிரபா” என்று பதறி எழுந்து அவனை அணைத்துப் பிடித்தாள்.
“என்னை விடு பிரியா” என்று அவளை உதறித் தள்ளினான். அந்த வேகத்தில் தடுமாறி, பின்னே சாய்ந்து சுதாரித்து மீண்டும் நேராகி அவனைப் பிடித்து நின்றாள்.
அந்நேரம் கதவை திறந்து வீட்டுக்குள் வந்தார் மரகதவல்லி.
வீட்டுக்கு வெளியே மழையடிக்க உள்ளே புயல் அடித்து ஓய்ந்திருந்தது.