பிரிய பிரபஞ்சமே – 23 (1)

பிரியதர்ஷினி கண்ணைச் சுருக்கி கணவனை முறைத்தாள்.

“ஷாக்கை குறைங்க பிரபா. இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு ‍இப்படி நெஞ்சுல கை வைக்காத குறையா ரியாக்ட் பண்றீங்க நீங்க?” என்று அவள் கேட்க, “அண்ணனா?” இன்னமும் அவனுக்கு அதிர்ச்சி குறையவில்லை.

“அப்புறம் என்ன தம்பின்னா கூப்பிட? அவருக்கு உங்க வயசுதானே? அப்போ என்னை விட வயசுல பெரியவர அண்ணா சொல்லாம என்ன சொல்றதாம்?”

“நீ திடீர்னு அண்ணா சொன்னதும் எனக்குத் திடுக்குன்னு நெஞ்சை அடைச்சுடுச்சு பிரியா” என்றான் நெஞ்சில் கை வைத்து, நாடக பாணியில்.

“என்னாது திடீர்னு சொன்னேனா?”

“இல்லையா பின்ன?”

“ஓஹோ. என்னைப் பத்தின எதுவும் உங்களுக்கு மறக்காதுன்னு ‍இப்போதானே அடிச்சு விட்டீங்க?”

“ஹேய் அதான் உண்மை. அடிச்சு விடுறாங்க உனக்கு” என்று கடுப்பானான் அவன்.

“இல்ல நான் அன்னைக்கே அண்ணா சொல்லிட்டேன். நீங்கதான் மறந்துட்டீங்க.” என்று குற்றம் சாட்டும் தொனியில் சொன்னாள்.

அவனது புருவங்கள் கேள்வியாகச் சுருங்க, “என்னைக்கு? எப்போ சொன்ன நீ? எனக்கு அப்படி எதுவும் ஞாபகம் இல்லையே” என்று குழப்பத்துடன் கேட்டான்.

“நாம சண்டை போட்ட அன்னைக்கு.. நான் அப்பவே பார்த்திபன் அண்ணான்னு சொன்னேன்” என்றாள் உள்ளிறங்கிய குரலில்.

“ஓ?” என்றான் யோசனையுடன். அன்றைக்கு அவனுக்கு இருந்த மனநிலையில் அவன் அதையெல்லாம் கவனிக்கும் நிலையிலா இருந்தான்.

மனைவி மீதான ஆதங்கம், வேலை பளு, நண்பன், கிரிக்கெட் என அனைத்தையும் ஒதுக்கியது தந்த மன அழுத்தத்தில் எதைக் கவனிக்கும் நிலையில் அவன் இருந்தான்? கோபம் பற்றிக் கொள்ள வார்த்தைகளால் தீயை கொளுத்தி விட்டு அல்லவா சென்றிருந்தான்.

இப்போது, “சாரி” என்றான் அவள் கைப் பிடித்து.

“முன்னாடி சாரி, பிளீஸ் எல்லாம் சொல்லவே மாட்டீங்க. இப்போ என்னன்னா எப்போ பாரு அதையே சொல்லி எஸ்கேப்பாகப் பார்க்கறீங்க” என்று அவள் சொல்லவும் அவனால் புன்னகையை அடக்க முடியவில்லை.

“கொஞ்சம் வேலை இருக்கு பிரியா. முடிச்சுக்கறேன் பிளீஸ்” என்றான். அதன் பின்னே, என்னைத் தனியாக விடு என்ற குறிப்பு இருக்க, அவளும் அமைதியானாள்.

அவனும் மடிக் கணினியுடன் மல்லாட தொடங்கினான்.

“நீயே காரை டிரைவ் பண்ணலாம். நாம ரெண்டு பேரும் போயிட்டு வர்றத விட்டுட்டு நீ எதுக்குத் தேவையில்லாம அவனைத் தொல்லை பண்றன்னு எனக்குப் புரியல” என்றான் திடீரென்று.

“தொல்லையா?”

“இல்லையா பின்ன? அவன் வேலைக்கு லீவ் போட்டுட்டு வரணும் பிரியா?”

“அது எனக்குத் தெரியாதா? இல்ல நான் அதெல்லாம் யோசிக்க மாட்டேன்னு நினைச்சீங்களா?”

“ப்ச்” என்று சத்தமாகச் சலித்தான். அவளுக்கேவா, என அவளுக்கு எரிச்சலானது.

“நீங்க ஹாஸ்பிடல்ல இருக்கும் போது அந்த அண்ணா எத்தனை டைம் வந்தாங்க? நீங்க ஒழுங்காவே பேசல அவங்க கூட. அவங்களை வேணும்னு அவாய்ட் பண்றீங்க”

“டோண்ட் ஓவர் திங்க் பிரியா. சில்ல்ல்ல்” என்றான்.

அவளுக்குச் சுள்ளென்று கோபம் வந்தது.

“ரொம்பப் பண்ணாதீங்க பிரபா. நான் பார்த்திபன் அண்ணாவை வரச் சொல்லிட்டேன். அவர் கிட்ட நீங்க ஃப்ரீயா, ஆஃபீஸ்ல பிரேக் எடுக்க முடியுமான்னு தெளிவா கேட்டுட்டுதான் விஷயத்தைச் சொன்னேன். ஓகே? அவர் வருவார். நாம அவரோட ஹாஸ்பிடல் போறோம்” என்று அவள் திட்ட வட்டமாக உரைக்க, “ம்ம்ம்ம்” என்று முடித்து விட்டான்.

“நீங்க ம்ம்ம்ம் சொல்றதே சரியில்லையே”

“ஐ ஆம் ஒர்க்கிங் பிரியா” என்றான் அடர்ந்த குரலில். அவன் கண்கள் கணினியில் கவனமாக இருக்க, அவளும் தொந்தரவு செய்யாமல் எழுந்து சென்றாள்.

மறுநாள் குறித்த நேரத்துக்கு மருத்துவமனை சென்று அவனுக்குத் தையல் பிரித்து வீடு திரும்பினார்கள். அரை நாள் அதிலேயே ஓடி விட்டது.

மருத்துவனையில் உண்டிருக்கவில்லை அவர்கள். வெளி உணவு வேண்டாம் என்று விட்டான் பிரபஞ்சன். அங்கே பழச்சாறு மட்டும் அருந்தி வீடு வந்திருந்தார்கள்.

பார்த்திபனுக்கு நன்றி சொல்லி வழியனுப்பி வைத்தாள் பிரியதர்ஷினி. அதற்குள் வாக்கர் உதவியுடன் கட்டிடத்தின் மின் தூக்கி நோக்கி நடந்திருந்தான் பிரபஞ்சன்.

அவளுக்கு அப்படியொரு கோபம் வந்தது.

“வெயிட் பண்ணுங்க பிரபா. நான் வர்றேன்” என்று அவன் பின்னே ஓடினாள்.

“ஹே பிரியா, கேர்ஃபுல். உன் கால் இப்பத்தான் சரியாகியிருக்கு” என்று அக்கறையுடன் அவன் சொல்ல, “அய்யோடா” என்று பல்லைக் கடித்தாள்.

“சில்ல்ல் பிரியா” என்றவன் நெஞ்சில் சுள்ளென்று அடிக்கும் ஆத்திரம் வந்தது, அடக்கிக் கொண்டாள்.

மரகதவல்லியை பள்ளியில் இருந்து பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் சிறப்பு வகுப்புக்காக அழைத்திருந்தார்கள். அதனால் பள்ளிச் சென்றிருந்தார், அவர்களோடு வரவில்லை அவர்.

“நான் ஸ்கூல் முடிஞ்சுதான் வீட்டுக்கு வருவேன் பிரியதர்ஷினி. டாக்டர் என்ன சொன்னாங்க? ரஞ்சனுக்குத் தையல் பிரிச்சாச்சா? காயம் நல்லா ஆறி இருக்கா?” என அவர்கள் மருத்துவமனையில் இருக்கும் போதே அவளுக்கு அழைத்து விசாரித்திருந்தார்.

காலையில் சமைத்து வைத்து விட்டுதான் மருத்துவமனை சென்றிருந்தாள் அவள். இப்போது அவளுக்கு நல்ல பசி. இருவருக்கும் உணவை எடுத்து வைத்தாள்.

அவள் எவ்வளவு வற்புறுத்தி அழைத்தும் பார்த்திபன் அவர்கள் வீட்டுக்கு வராமல் அப்படியே திரும்பிச் சென்றது அவளுக்கு வருத்தமாக இருந்தது.

அவனும் அவர்களோடுதானே இருந்தான். அவனும் பசியில்தானே இருப்பான் என்று நினைக்க நினைக்க என்னவோ அவளுக்குத் தவறு செய்து விட்டது போலிருந்தது.

கணவன் சாப்பிட்டு முடிக்கட்டும் எனப் பொறுமையுடன் அவனுக்குப் பரிமாறினாள். ஆனால் அவளுக்குதான் உணவு இறங்கவில்லை.

“தட்டை பார்த்து சாப்பிடாம என்ன பிரியா பண்ற? மணத்தக்காளி கீரை கூட்டு உனக்குப் பிடிக்கும் இல்ல? இந்தா அப்பளம் நொறுக்கி போட்டு சாப்பிடு” என அவளுக்குப் பிரியமாகப் பரிமாறினான். அவள் கோபத்தை அடக்கியதில் மூக்கு விடைத்து உதடு துடித்தது.

அது பிரபஞ்சன் பார்வையில் படாமல் இருக்குமா? இருந்தாலும் என்னவென்று கேட்கவில்லையே அவன்.

“இவனது பிரியமும் புடலங்காயும்..” என்று புலம்பும் நிலையில் இருந்தாள் அவள்.

அப்பொழுது பார்த்திபன் சொன்னதுதான் அவளுக்கு மனத்தில் எதிரொலித்தது.

“எனக்கு அவனைத் தெரியாதா? நீங்க இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணாதீங்க பிரியதர்ஷினி” என்று சிரிப்புடன் சொன்னவன், அவனைத் திரும்பியும் பார்க்காமல் நகர்ந்து போகும் நண்பனையே பார்த்தபடி, “பிரியம் எல்லாப் பைத்தியக்காரத்தனங்களையும் செய்ய வைக்கும்.” என்று சிரிப்புடன் முணுமுணுத்தான். அவனது கணீர் குரலில் முணுமுணுப்பு அவள் செவியில் தெளிவாக விழுந்தது.

“பிரபஞ்சனையும் பிரியாவையும் மட்டுமில்ல, பார்த்திபனையும் கூடப் பிரிக்க முடியாது.” என்று புன்னகையுடன் அவன் சொன்ன போது பிரியதர்ஷினி கோபத்தில் மலையேறாமல் இருந்தது அவளுக்கே ஆச்சரியம்தான்.

அவள் நண்பர்களைப் பிரிக்க ஒருநாளும் நினைத்தது இல்லை. அவள் கேட்டது எல்லாம் அவளுக்கான நேரம் மட்டுமே. பிரபஞ்சனுக்கு அவள் பிரதானமாக இருக்க வேண்டும் என்று விரும்பினாள். அதுதானே ஒரு மனைவியாக அவள் எதிர்பார்ப்பது? அது பிரபஞ்சனுக்குப் புரியவில்லையா? இல்லை, தான்தான் புரிய வைக்கத் தவறி விட்டோமா என்று அவள் சிந்தனை அலைபாய்ந்தது.

“சாப்பிடு பிரியா” மீண்டும் அதட்டினான். உணவை வீணாக்க விரும்பாமல் உண்டு முடித்து எழுந்திருந்தாள். பிரபஞ்சன் பத்து நிமிடங்கள் நடக்க, அவனோடு நடந்தாள்.

“பிரபா, ஏன் இப்படிப் பண்ணீங்க?” அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் கேட்டு விட்டாள்.

“என்ன பண்ணேன்?” என்று அசட்டையாகக் கேட்டான் அவன்.

“டோண்ட் ஆக்ட் பிரபா. உங்களுக்குக் கொஞ்சம் கூடச் சூட்டாகல”

“நேரா விஷயத்துக்கு வா பிரியா” எரிச்சலுடன் சொன்னான். இப்படி நடக்க முடியாமல் முடங்கிக் கிடப்பதே அவனுக்கு எரிச்சலை தந்தது.

“பார்த்திபன் அண்ணா கிட்ட ஏன் பேசல நீங்க?” என்று அவள் கோபமாகக் கேட்க, “பேச ஒரு விஷயமும் இல்ல. அதுனால பேசல” என்று தோள் குலுக்கினான். அவனை ஓங்கி அடிக்கும் அளவு அவளுக்கு ஆத்திரம் வந்தது.

“பிரபா, அந்த அண்ணா நான் கூப்பிட்டு வந்தாங்க. அவங்களை நீங்க ரொம்ப இன்சல்ட் பண்ணிட்டீங்க இன்னைக்கு”

“ஹே சில்ல்ல் பிரியா”

“ப்ச், உங்க பிரச்னை என்ன பிரபா? எனக்குப் புரியல பிளீஸ் கொஞ்சம் எக்ஸ்பிளைன் பண்ணுங்களேன்”

“ஒரு பிரச்னையும் இல்ல. நீயா எதையாவது கற்பனை பண்ணிட்டு என்கிட்ட சண்டைக்கு வராத”

“நான் சண்டைக்கு வர்றேனா? அஞ்சு மணி நேரத்துக்கு மேல நம்ம கூட அந்த அண்ணா இருந்திருக்காங்க. அவங்களோட நீங்க முழுசா அஞ்சு வார்த்தை கூடப் பேசல. அந்த அண்ணா எப்படி ஃபீல் பண்ணியிருப்பாங்க” என்று ஆதங்கத்துடன் கேட்டாள். அவனோ அலட்டிக் கொள்ளவே இல்லை.

“டையர்ட்டா இருக்கு. நான் கொஞ்ச நேரம் போய்ப் படுக்கறேன்” என்று எழுந்து கொள்ளப் போனவனை, “பிரபா” என்று கத்தி நிறுத்தினாள்.

“எப்பப் பாரு இப்படிப் பதில் சொல்லாம பாதியிலேயே போறீங்க பிரபா. என்னைப் பார்த்தா பாவமா இல்லையா உங்களுக்கு?”

“ஒன்னும் இல்லாத விஷயத்தை நீதான் பிரியா பெருசு பண்ற” என்றான் சலிப்புடன்.

அவனையே விழி எடுக்காமல் பார்த்திருந்தாள் அவள்.

தூங்குவது போல நடிப்பவனை எப்படி எழுப்ப என்ற சோர்வு அவளை அழுத்த கண் மூடி தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள்.

“பிரியா” என்று அவளின் தோளில் கைப் போட்டான். பட்டென்று அவன் கையை உதறி, “என் மேல கை வைக்காதீங்க சொல்லிட்டேன்” என்று கத்தினாள்.

“ஏய்..”

“பேசாதீங்க” என்று தீர்க்கமாக உரைத்தாள். எல்லாம் செய்து விட்டு இறுதியில் தன்னையே குற்றவாளி ஆக்குகிறானே என்ற அயர்ச்சி அவளுக்கு அதிகரித்தது.

அவள் கேட்டுக் கொண்டபடி காலையிலேயே வந்து அவர்களை மருத்துவமனை அழைத்துச் சென்றான் பார்த்திபன்.

அவர்களைக் கண்டதும் உற்சாகமாக, “பிரபா, எப்படி இருக்க?” என்று நண்பனை நலம் விசாரித்தான்.

“ம்ம்ம்” என்றான் பிரபஞ்சன், அவ்வளவுதான். அதன் பிறகும், “ம்ம்ம், ஓகே. இல்ல, வேணாம்” இவ்வளவுதான் அவனது பதிலாக இருந்தது.

அவள் கணவனைக் கண்களால் கண்டிக்க, அதைக் கண்டு கொள்ளவில்லையே அவன்.

அவனுக்கும் சேர்த்து வைத்து அவள்தான் பார்த்திபனிடம் பேசினாள். அது அவளுக்கு அத்தனை எளிதாகவும் இல்லை. இது நாள் வரை அவன் மேல் கோபத்தில் இருந்திருக்கிறாள். திடீரென்று அவனோடு பாசப் பயிர் வளர்ப்பது அவளுக்குக் கடினமாக இருந்தது. ஆனால் பார்த்திபன் அவளிடம் இயல்பாகத்தான் பேசினான்.

“அண்ணா” என்று அவள் அழைத்ததும் ஒரு நொடி அதிர்ந்து நோக்கி, பின் இயல்பாகி புன்னகைத்தான்.

மருத்துவனையில் இருந்து வீடு வரும் வழியில், “ஹோட்டல்ல நிப்பாட்டவா பிரபா? ரொம்ப லேட்டாகிடுச்சே சாப்பிட்டு வீட்டுக்குப் போகலாம் இல்ல?” என்று பார்த்திபன் கேட்க, “வேணாம்” என்று மட்டுமே சொன்னான் பிரபஞ்சன்.

விக்ரமாதித்தனின் வேதாளம் போல விடாமல், “அப்புறம் மிஸ்டர் பி, எப்போ பார்க்கலாம்? கிரிக்கெட் விளையாட எப்போ வர்றீங்க?” என்று கேட்டு நண்பனை சீண்டி விட்டே சென்றான் அவன்.

அப்போது கூட எதிர்வினை ஆற்றவில்லை பிரபஞ்சன். அவளுக்கு அதுதான் அதிர்ச்சியும், ஆச்சரியமுமாக இருந்தது.

error: Content is protected !!
Scroll to Top