ஒவ்வொரு வீட்டின் அரசியலும், அடிதடியும் அடுப்படியில் இருந்துதான் ஆரம்பமாகிறதோ என்ற சந்தேகம் அவளுக்குச் சமீபமாக வந்திருந்தது. மரகதவல்லியின் மற்ற குணங்களைக் கூட மாற்றிக் கொள்வார் போல. ஆனால் இந்தச் சமையல் அறை விவகாரம் மட்டும் அவரை விடுவதாக இல்லை.
மூவரும் காலை உணவருந்த அமர்ந்தார்கள். மரகதவல்லி தானாகவே பரிமாறிக் கொண்டார்.
“நீயும் உக்காரு பிரியா” என்று பிரபஞ்சன் அவளை அழைக்க, “இருங்க வர்றேன்” என்று அவனுக்குத் தோசை வார்த்து எடுத்து வந்தாள்.
“வெண்பொங்கல் பண்ணிட்டு அவனுக்கு ஏன் தோசை வைக்குற?”
“நான்தான்ம்மா கேட்டேன்” என்று பிரபஞ்சன் மனைவிக்காகப் பரிந்து பேச, மகனை முறைத்தார் அவர்.
“அம்மா மட்டன் குழம்பு குடுத்து விட்டிருக்காங்க அத்த. அதான் இவருக்குப் பிடிக்கும்னு தோசை ஊத்தினேன்”
“மாவு எப்போ அரைச்ச?”
“அதுவும் அம்மாதான் குடுத்து விட்டாங்க” என்றாள்.
“ம்ம்ம்” என்று ஏதோ சொல்ல போனவர், மகனின் பார்வையில் அடங்கி அமைதியாக உண்ணத் தொடங்கினார்.
பிரபஞ்சன் உணவு முடித்துச் சற்று நேரம் வாக்கர் உதவியுடன் நடந்தவன், வேலை இருக்கிறதென்று அறைக்குச் சென்று விட்டான்.
அவன் மடிக்கணினியுடன் அமர்ந்திருக்க, பிரியதர்ஷினி சமையல் வேலை முடித்து, லட்சுமி அக்கா வேலை முடிக்கவும் அவருக்கு உணவு கொடுத்து அனுப்பி விட்டு அறைக்கு வந்தாள்.
அவர்கள் அறையின் பால்கனியை ஒட்டி அறைக்குள்ளேயே இருவர் அமரும் சோபாவை போட்டிருந்தார்கள். அதில் கால் நீட்டி அமர்ந்திருந்தான். மடியில் மடிக்கணினி இருந்தது. மழை சாரலாக அறைக்குள் அவ்வப்போது பொழிந்து கொண்டிருந்தது.
அவன் கால் வைக்கத் தோதாக ஒரு குட்டி முக்காலியை எடுத்து போட்டு, அவளும் கால் மடித்து அமர்ந்து, அவன் காலை தன் மடியில் தூக்கி வைத்து மருந்து தேய்த்து மெதுவாக மசாஜ் செய்து விட்டாள்.
என்னமோ அவன் காலை அவள் பிடித்தாலே முன்னர் அப்படிக் கத்துவான். இப்போதும் முகம் சுருங்கதான் அமர்ந்திருந்தான்.
அவள் கையைக் கழுவி வரவும்தான் அவனால் இயல்பாக வேலை செய்ய முடிந்தது.
அவன் சாய்ந்து அமர இரண்டு தலையணை எடுத்து வாகாக வைத்து விட்டு, அவனது காலடியில் சாய்ந்து அமர்ந்தாள். மழை மெலிதாக அறைக்குள் நுழைய முயன்றது. சாரல் சில்லென்று அவர்களை நனைத்துக் கொண்டிருந்தது.
அவர்களின் பால்கனியில் ஒரு ஜோடி புறாக்கள் மழைக்குத் தஞ்சமடைந்திருந்தன.
“பிரபா..” என்று கிசுகிசுப்பாகக் கணவனின் கையைச் சுரண்டி அழைத்தாள். வேலையில் கவனமாக இருந்தவன், கண நேரம் கண்ணை மட்டும் உயர்த்தி மனைவியின் கண்கள் சென்ற திசையை நோக்கினான்.
“என்ன பிரியா?” நமுட்டு சிரிப்புடன் அதே கிசுகிசு குரலில் அவனும் கேட்க, “அந்தப் புறா ரெண்டும் கிஸ் பண்ணுது பிரபா” என்றாள் மேலும் குரலை தழைத்து.
“மேனர்ஸ் இல்லையா உனக்கு? நீயேன் அதுங்களைப் பார்க்கற?”
“அதுங்க எதுக்கு என் முன்னாடி வந்து கொஞ்சுதுங்க? அதுங்களுக்கு முதல்ல மேனர்ஸ் இருக்கணும் இல்ல?” என்று அவள் கடுப்புடன் கேட்க, சத்தமாகச் சிரித்து விட்டான் அவன்.
“வேணும்னு நம்மள வெறுப்பேத்துதுங்க” என்று அவள் உதடு சுழித்துச் சொல்ல, அவன் அடக்க மாட்டாமல் வாய் விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தான். அவ்வளவு நேரமும் ஆண் புறா, பெண் புறாவின் பின்னேயே சுற்றி சுற்றி நடந்து கெஞ்சி கொஞ்சி கொண்டிருந்தது. இப்போது அவன் சிரிப்புச் சத்தத்தில் வேகமாகப் படபடத்து பிரிந்து நின்றன. நொடியில் பறந்து போயின.
“ஐயோ பிரபா நீங்க அதுங்களை விரட்டி விட்டுட்டீங்க” என்று அவன் தொடையில் அடித்தாள்.
“ஆ..” என்று அவன் கத்தவும், “சாரி..” என்று அடித்த இடத்தைத் தடவி கொடுத்தாள்.
“நீதானே அதுங்க உன்னை வெறுப்பேத்துது விரட்டி விடப் போறேன்னு சொன்ன?”
“ச்சே விரட்டி எல்லாம் விட்டிருக்க மாட்டேன். அதுங்க கிஸ் பண்ணது பார்க்க க்யூட்டா இருந்தது பிரபா.” விழிகளை விரித்து அவள் சொல்ல, அவன் முகம் குறும்பு சிரிப்பில் வசீகரித்தது. அந்தப் புறாக்கள் இரண்டும் அலகை உரசி உரசி கொஞ்சியதை முத்தம் என்று சொல்லிக் கொண்டிருந்தாள் அவள்.
“புறா ரொம்ப ரொமான்டிக் தெரியுமா உனக்கு? அதுங்களும் மனுஷங்களைப் போல அதுங்க இணைக்கு ஊட்டி விடுமாம்.”
“நான் பார்த்திருக்கேன் பிரபா”
“அடிக்கள்ளி” என்று அவள் கன்னத்தில் இடித்தான்.
“நம்ம வீட்டு மொட்டை மாடிக்கு வரும்ல அப்போ” என்று அவள் விழியால் மொழிய, “ம்ம்” என்றான் குறுநகையுடன்.
“ஆண் புறா, பெண் புறாவை மயக்க இப்படிப் பின்னாடியே போய்ச் சத்தம் குடுக்கறது, டான்ஸ் ஆடுறதுன்னு எல்லா வேலையும் செய்யுமாம். பொண்ணு விழுந்ததும் அதோட சிறகெல்லாம் சுத்தம் பண்ணி விடுமாம். அப்புறம் கூடு கட்ட ஹெல்ப் பண்றதுன்னு பயங்கர ரொமான்டிக் இதுங்க.”
“இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“பொது அறிவு பிரியா” என்றான் புன்னகை மாறாமல்.
“ரெண்டும் ஜோடியா மாத்தி மாத்தி ரெக்கையெல்லாம் க்ளீன் பண்ணி க்ரூம் பண்ணிக்குமாம்..”
“இந்த மயக்கற வேலையெல்லாம் எதுக்குன்னு அந்த அப்பாவி பெண் புறாக்கு தெரியல பாருங்களேன்”
“ஏய்..” என்றான் கோபமாக. “அதுங்க ஒரு பார்ட்னர் கூடத்தான் வாழ்க்கை முழுக்க இருக்குமாம் பிரியா. தன் ஜோடி சாகிற வரைக்கும் அத்தோடதான் இருக்குமாம்”
“பாருங்களேன்” என்றாள் ஆச்சரியத்துடன்.
“அதுங்க குஞ்சுகளைக் கூடச் சேர்ந்துதான் வளர்க்கும்.
பேசாம நாமளும் ஒரு ஜோடி புறா வளர்க்கலாமா?” என்று கேட்டான்.
“ஐயோ, அதுங்களைக் கூட்டுக்குள்ள அடைச்சு வைக்கிறது எல்லாம் பாவம் பிரபா” என்று அவள் முகம் சுழிக்க, “நீ எப்ப பிரியா வளருவ?” என்று அவளின் தலை கலைத்துக் கன்னம் வருடி, இதழ் குவித்துக் காற்றில் அவளுக்கு முத்தத்தைக் கடத்தினான். அவளோ எட்டி அவன் கன்னத்தில் முத்தம் பதித்து அமர்ந்தாள்.
“புறாவ காப்பாத்தி வளர்த்தோம்னு வைய்யி, அது நம்ம கூடவும் ரொம்ப அட்டாச்சாகி, நம்மளையும் தன்னோட ஜோடியா நினைச்சுக்குமாம்”
“அய்யோடா, இது வேறயா? எனக்குப் புறாலாம் வேணாம் என் பிரபா போதும்” என்று முழங்காலில் எழுந்து நின்று அவனை இழுத்து இறுக அணைத்து கொண்டாள். அந்த வார்த்தைகள் அவனின் காதல் மனத்துக்குப் போதையைத் தந்தது.
அவனின் ஏக்கங்கள் எதிர்பார்ப்புகள் எல்லாம் அவளின் அன்பின் முன்னே கரையத் தொடங்கின.
சற்றுமுன் பறந்து போன புறாக்கள் மீண்டும் வந்து விட்டன. பெண் புறா மிஞ்ச, ஆண் புறா அதன் பின்னேயே கொஞ்சி திரிந்ததைக் காணவே கவிதையாக இருந்தது.
“பிரபா, புறா திரும்ப வந்துடுச்சு” இருவரும் இணைந்து ரசித்துப் பார்த்திருந்தனர்.
“அப்போ புறா வேணாம்னா, நாய்க்குட்டி வாங்கித் தரவா?” என்று அவள் காதில் அவன் கிசுகிசுக்க, “திரும்பவுமா?” என்று கேட்டாள்.
“திரும்பவுமான்னா? இதுக்கு முன்னாடி நான் எப்போ உனக்கு நாய்க்குட்டி வாங்கிக் கொடுத்தேன்?” என்று முகத்தைப் பின்னால் இழுத்து அவளைப் பார்த்து அவன் கேட்க, “மரகதவல்லி மிஸ்..” என்று சத்தமாக மாமியாரை அழைத்து, “திருட்டு பையன் மிஸ் இந்தப் பிரபஞ்சன்” என்று கத்தினாள்.
“ஏய்” என்று அவளின் வாயை இறுக மூடினான்.
“இப்படியொரு வார்த்தை என்னைப் பார்த்து யாரும் சொல்லிட கூடாதுன்னுதான் அம்மா என்னை அப்படிக் கண்ட்ரோல் பண்ணாங்க” என்று அவன் சொல்ல, அவளால் மாமியாரின் அப்போதைய மனநிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது.
“நீங்க எனக்கு நாய்க்குட்டி குடுக்கல? ப்ளூவோட குட்டியை தூக்கிட்டு வந்து என் வீட்டு வாசல்ல நீங்க விடல? ம்ம், எங்க இல்லைன்னு என் கண்ணைப் பார்த்து சொல்லுங்க பார்ப்போம்” என்று மிரட்டலாக அவள் கண்ணை உருட்ட, “நாய்க்கு டாஃபின்னு ஸ்வீட்டா பேர் வச்சியே, அந்தக் குட்டியையா கேட்கற?” என்று அவன் குறும்பு புன்னகையில் மீசை துடிக்கக் கேட்க, “உங்களுக்கு அதோட பேர் கூட ஞாபகம் இருக்கா” என்று ஆச்சரியத்துடன் வினவினாள்.
“உன் விஷயம் எதுவும் மறக்காது எனக்கு” அவள் கண்களைக் கூர்ந்து சொன்னான்.
“அப்பவே உங்களுக்கு என்னைப் பிடிக்குமா பிரபா? என்கிட்ட ஏன் சொல்லல?”
“அப்போ நீ குட்டி பொண்ணு பிரியா. நீ அந்த நாய்க்குட்டியை பார்த்த மாதிரிதான் நான் உன்னைப் பார்த்தேன்” என்று அவன் சொல்ல, “பிராடு பிரபா நீங்க. இப்பவும் ஒழுங்கா எதையும் சொல்ல மாட்டேங்கறீங்க” என்று அவன் தொடையில் வலிக்காமல் அடித்தாள்.
அவள் முகத்தை வாஞ்சையுடன் வருடி கொடுத்தான்.
அவனுக்கு அலுவலக அழைப்பு வர அதில் மூழ்கி போனான்.
அவளும் பார்கவிக்கு அழைத்துப் பேசினாள். அவளுக்கு அடுத்தடுத்து அழைப்புகள் வந்த வண்ணமிருந்தன.
பிரகாஷ் சொன்னது படி அவர்களின் காரும் புதிய டயர் பொருத்தப்பட்டு வந்து விட்டது. அதைக் கீழே சென்று பார்த்து விட்டு வந்தாள்.
“நம்ம கார் சர்வீஸ் முடிச்சுக் கொண்டு வந்து விட்டுட்டாங்க பிரபா. அண்ணா ஈவ்னிங் வந்து பார்க்கறேன்னு சொல்லியிருக்கான்” என்று பிரபஞ்சனிடம் சொன்னாள்.
“நீயே ஓட்டி பார்க்க வேண்டியதுதானே பிரியா?”
“அய்யோடா எனக்குப் பயமா இருக்கு பிரபா. அதுவும் இல்லாம அத்தை திட்டுவாங்க” என்றாள்.
“நீயும், உன் அத்தையும்..” என்று அவன் சலிக்க, “இந்த வீக் எண்ட் என் ஃப்ரெண்ட் பார்கவி நம்ம வீட்டுக்கு வர்றேன்னு சொல்லியிருக்கா” என்று தகவல் சொன்னாள்.
“ஓ, லஞ்ச் சாப்பிடற மாதிரி வர சொல்லு” என்றான்.
“அப்படித்தான் சொல்லியிருக்கேன்” என்றாள்.
“அப்புறம் பிரபா, நாளைக்குப் பார்த்திபன் அண்ணாவை வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கேன்”
“பார்த்தியா எதுக்கு?” என்று அவன் அதிர்ந்து நிமிர்ந்து அமர்ந்து கேட்க, “நாளைக்கு உங்களுக்குத் தையல் பிரிக்க ஹாஸ்பிடல் போகணும் இல்ல பிரபா? அதுக்காக வரச் சொல்லியிருக்கேன். எங்கண்ணா வர்றேன்னுதான் சொன்னான். ஆனா, நான்தான் பார்த்திபன் அண்ணாவை வரச் சொல்லி கால் பண்ணேன். அந்த அண்ணாவும் பாவம் உங்களை ரெண்டு டைம் ஹாஸ்பிடல்ல வந்து பார்த்ததோட சரி. டெய்லி அத்தைக்குப் போன் பண்ணி உங்களைப் பத்தி விசாரிச்சாரு. அவங்கம்மா கூட என்கிட்ட பேசினாங்க” என்று அவள் பேசிக் கொண்டே போக, “நீ எதுக்கு இப்போ அவனை வீட்டுக்கு கூப்பிட்ட?” என்று மட்டுமே கேட்டான் அவன். அவள் சொன்ன மற்ற அனைத்தும் அவன் மனத்தில் பதியவில்லை போலும்.
“என்ன பிரபா, பார்த்திபன் அண்ணா வந்தா நீங்க கம்பர்ட்டபிளா இருப்பீங்க இல்ல? அதுக்குத்தான்” என்று அவள் சொல்ல, “பார்த்திபன் அண்ணாவா?” என்று நெஞ்சில் கை வைக்காத குறையாக அதிர்ச்சியுடன் வினவினான் அவன்.