பிரபஞ்சன் வேலையில் மூழ்கியிருந்தாலும், அவன் கவனம் மனைவியின் மேலும் இருக்கத்தான் செய்தது. அது பல வருடத்தைய பழக்கம். அவனது விழி ஓரத்தில் அவள் விழுந்து விட்டால் போதும், அவனும் விழுந்து விடுவான்.
இப்போதும் மனைவியின் முறைப்பை உணர்ந்தாலும் தலையை நிமிர்த்தவில்லை அவன்.
பிரியதர்ஷினி பல்லைக் கடித்து, கண்ணை உருட்டி, “பிரபா..” என்று அழுத்தமாக அழைத்தாள். அவனது பெயரை அவள் உச்சரிக்கும் ஒவ்வொரு நொடியும், அவனது பல வருட காதலுக்குப் பிரபஞ்சமே பிரியா எனும் வரத்தை கொடுத்தது போலிருந்தது அவனுக்கு.
கண்கள் கணினியில் மூழ்கி இருக்க, உதடுகள் பிரிந்து முறுவலித்தன.
“நான் கூப்பிட்டுட்டே இருக்கேன், என்னன்னு கேட்காம என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு உங்களுக்கு?” என்று எகிறினாள். இப்போது தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்தான்.
“அவன்தான் வேலையா இருக்கான்னு தெரியுது இல்ல? அவனை ஏன் தொந்தரவு பண்ற பிரியதர்ஷினி?” என்று மரகதவல்லி கேட்க, “தொந்தரவு பண்றேனா? இவரை யாரு இப்போ வேலை பார்க்க சொன்னது? ஹாஸ்பிட்டல்ல வச்சும் வேலைதான் செஞ்சார். அப்போ கேட்டப்போ முக்கியமான ப்ராஜெக்ட்டோட லாஸ்ட் ஸ்டேஜ், புரொடக்ஷன் ஹேன்ட்ஓவர் வேலை இருக்கு அது இதுன்னு காரணம் சொன்னார். சரின்னு விட்டுட்டேன். இப்போ வீட்டுக்கு வந்தும் ரெஸ்ட் எடுக்காம வேலைப் பார்த்தா எனக்குக் கோபம் வராதா?” என்று அவள் கோபமாகக் கேட்க, “என்னப்பா ரஞ்சன் நீ?” என்று மகனைப் பார்த்தார் மரகதவல்லி.
“இருங்க, நான் ஒன்னும் அவரை அதுக்காகக் கூப்பிடல. நீங்க பேச்சை மாத்தாதீங்க அத்த” என்று அவர் மேல் பாய்ந்தாள். சட்டெனச் சிரித்து விட்டான் பிரபஞ்சன். பிரியா வேகமாகச் சென்று அவன் பக்கத்தில் அமர்ந்தாள்.
“உங்க ஒர்க் முடிஞ்சதா?”
என்று கேட்டு அவன் தலையசைக்கவும் அவனது மடிக்கணியை மூடி வைத்தாள்.
“அத்தையை என்னன்னு கேளுங்க. அவங்க வேலையை விட்டுட்டாங்களாம்” என்று சிறுபிள்ளை போலக் குற்றம் சாட்டினாள்.
“அப்படியாம்மா?” என்று மட்டுமே கேட்டான் அவன்.
“என்ன அப்படியாம்மா? ஏன் வேலையை விட்டாங்கன்னு கேளுங்க” என்று அவள் குரல் உயர்த்த, பால் அருந்தியபடி உணவு மேஜையில் அமர்ந்திருந்த மரகதவல்லி அவரையும் மீறி புன்னகைத்து விட்டார்.
“ரெண்டு வாரத்துக்கு மெடிக்கல் லீவ் போட்டிருக்கேன் ரஞ்சன்” என்று அவர் சொல்லவும், “என்கிட்ட இப்பத்தான் வேலையை விட்டுட்டேன்னு சொன்னீங்க?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.
“பொறுமை பிரியதர்ஷினி. நான் ரிசைன் பண்ணிட்டேன். ஆனா ஸ்கூல் மேனேஜ்மென்ட் இந்த அகாடெமிக் இயர் முடிஞ்சதும் என்னைப் போகச் சொல்றாங்க. பப்ளிக் எக்ஸாம் டைம் பசங்களைப் பாதியில விட்டுட்டு வர முடியாது இல்ல?”
“அதானே நீங்க மேத்ஸ் மிஸ் வேற. உங்களை எப்படிப் போக விட்டாங்கன்னு எனக்கு ஷாக்காகிடுச்சு” என்றாள் அவள்.
“அவங்க என்ன என்னைப் போக விடுறது? அங்க வேலை பார்க்கறதும், விடுறதும் என் முடிவுதான்” என்றார் ஆசிரியருக்கே உரிய மிரட்டல் தொனியில்.
“இல்லைங்க அத்த. நீங்க எதுக்கு இப்போ வேலையை விட்டீங்க அதைச் சொல்லுங்க முதல்ல? இப்போ அதுக்கு என்ன அவசியம்? இவரை நான் பார்த்துக்க மாட்டேனா? உங்க ஸ்கூல் பசங்க பாவம் இல்லையா?” என்று அவள் கேட்க, அவரின் பார்வையெல்லாம் மகனின் மேல் தானிருந்தது. எனக்கு என் பிள்ளைதான் முக்கியம் எனச் சொல்லாமல் சொல்லியது அவர் பார்வை.
“நீங்க என்னன்னு கேளுங்களேன் பிரபா” என்று கணவனின் தோளில் இடித்தாள்.
“என்ன கேக்க சொல்ற?”
“ஏன் வேலையை விட்டாங்கன்னு கேளுங்க. வேறென்ன?”
“அது அம்மாவோட விருப்பம் பிரியா. இட்ஸ் ஹெர் டெசிஷன்.”
“அவங்க டெசிஷன்லாம் ஒன்னும் இல்ல. நீங்க வேலையை விடச் சொன்னதை மனசுல வச்சுட்டு இப்போ வேலையை விட்டுட்டாங்க அத்த” என்று அவள் கோபமாகச் சொல்ல, “பிரியதர்ஷினி” என்று அவளை அதட்டினார் மரகதவல்லி.
“நான் சொன்னேன்தான் இல்லன்னு சொல்லல. பட் ஃபைனல் டெசிஷன் எடுத்தது அவங்கதானே? ஐ நெவர் போர்ஸ்ட்டு ஹெர். அப்புறம் எப்படி என்னை ப்ளேம் பண்ற நீ?” என்று பிரபஞ்சன் சொல்லவும் அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது.
“நல்லா சாமாளிக்கறீங்க பிரபா. அத்தையை வேலையை விட வேணாம்னு சொல்லுங்க..” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னே இடையிட்டு, “நேரமாச்சு, ரெண்டு பேரும் போய்ப் படுங்க” என்று சொல்லி அத்துடன் அந்தப் பேச்சை தொடர விரும்பவில்லை என்பது போல அங்கிருந்து எழுந்து சென்று விட்டார் மரகதவல்லி.
அவர் வேலையை விட்டதில் பிரியதர்ஷினிக்கு மிகுந்த வருத்தம். அவரை ஆசிரியராக மிகவும் பிடிக்கும் அல்லவா. தங்களால்தான் தற்போது வேலையை விட்டு விட்டாரோ என்ற மனசஞ்சலம் அவளை வருத்தத்தில் ஆழ்த்தியது.
“பிரபா..”
“ப்ச்” என்றான். அவள் விழிகள் அவனைக் குற்றம் சாட்டின. அவனோ இதற்கு நான் காரணம் இல்லை என்று தோள் குலுக்கினான்.
“இட்ஸ் ஹெர் டெசிஷன் பிரியா. நாம சொன்னா உடனே அதை மாத்திப்பாங்களா என்ன?”
“எப்படி, நான் அப்செட்டாகுறேன்னு தெரிஞ்சு நீங்க கிரிக்கெட் விளையாடுறதை விட்டது போலவா? அப்போ உங்க முடிவும் மாறாதுன்னு சொல்றீங்களா?” என்று நன்றாகத் திரும்பி அவன் முகம் பார்த்துக் கேட்டாள்.
மடிக்கணினியை பட்டென அடித்து மூடி அதே வேகத்துடன் எழுந்து விட்டான் பிரபஞ்சன்.
“பிரபா, பார்த்து..” என்று பதறி எழுந்து அவன் தோள் பற்றித் தாங்கினாள் அவள்.
“இப்போ நான் என்ன கேட்டுட்டேன்னு உங்களுக்கு இப்படிக் கோபம் வருது?”
“கோபம் இல்ல தூக்கம் வருது” என்று சொல்லி கொட்டாவி விட்டான்.
“ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாது சொல்லிட்டேன்” என்று கத்தி, அவனைப் படுக்கையறை அழைத்துச் சென்றாள்.
பிரபஞ்சன் மூன்று வாரங்கள் மருத்துவ விடுமுறையில் இருந்தான். ஆனாலும் அவன் பார்த்துக் கொண்டிருந்த ப்ராஜெக்ட் முக்கியக் கட்டத்தில் இருந்த காரணத்தால் வீட்டில் இருந்தே பணி புரியும் சூழல் அவனுக்கு. அவனுக்கு அடுத்த நிலையில் இருப்பவனிடம் பொறுப்பை ஒப்படைக்கும் பணிகளை மேற்கொண்டிருந்தான்.
மறுநாள் விடிந்ததும் வழக்கம் போல அதிகாலையில் எழுந்து விட்டாள் பிரியதர்ஷினி. சரி, விடுமுறைதானே என்று கண்ணை மூடினாலும் அவளுக்கு உறக்கம் வரவில்லை. மெதுவாகப் புரண்டு கணவனையே பார்த்திருந்தாள். இரவு உறக்கத்தில் அவன் காலை இடித்து விடக் கூடாதென்று அப்படியொரு கவனமாகப் படுத்து உறங்கியிருந்தாள்.
அவன் காலை கவனித்துப் போர்வையை நேராக்கியவள், அவன் மார்பில் தலை சாய்த்து படுத்தாள்.
அவன் கரம் உயர்ந்து அவளை அணைத்துக் கொண்டது. அவனது அணைப்பு தந்த கதகதப்பில் மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். அவளுக்கு மீண்டும் விழிப்பு வருகையில் பொழுது நன்றாகப் புலர்ந்திருந்தது.
அந்நேரம் அவளது அலைபேசியில் அழைப்பு வரவும், கணவன் உறக்கம் கலைந்து விடக் கூடாதென்று அவசரமாக அழைப்பை ஏற்றாள்.
ராதாதான் அழைத்திருந்தார்.
“ம்மா, சொல்லுங்க”
“தூங்கிட்டு இருந்தியா தர்ஷி? அம்மா எழுப்பிட்டேனா?”
“இல்லம்மா, இப்போதான் எழுந்தேன் சொல்லுங்கம்மா” என்றாள். அவர் பேச பேச உம் கொட்டி, “சரிம்மா” என்று பேசி முடித்தாள்.
இன்னும் மழை விட்ட பாடில்லை. அவர்களின் பால்கனியை ஒட்டிய படுக்கையறை கண்ணாடி கதவு முழுக்க ஓவியம் போல மழைத் தாரைகள் தெறித்திருந்தன. அவள் ஓய்வறை சென்று முகம், உடை திருத்தி கூடம் செல்ல, மரகதவல்லி சமையல் அறையில் இருந்தார்.
“அத்த, எழுந்துட்டீங்களா? காஃபி போடவா?”
“இப்பத்தான் எழுந்தேன் பிரியதர்ஷினி. இந்தா பால் வச்சுட்டேன். இரு, உனக்கும் சேர்த்து நானே கலக்கறேன்” என்றார்.
அவள் காஃபி கோப்பைகளை எடுத்து வைக்க, “ரஞ்சனுக்குச் சின்ன வயசுல இருந்து டீ குடிச்சுத்தான் பழக்கம். நான் லேட் நைட் உக்கார்ந்து பேப்பர் திருத்தும் போது டீ இல்லாம என்னால கண்ணு முழிக்க முடியாது. அப்போல்லாம் அவன்தான் எனக்கு ஃப்ளாஷ்க்ல இஞ்சி டீ போட்டு வைப்பான். டியூஷன் டைம், அடுத்த நாளுக்கு நோட்ஸ் எடுக்கற டைம்லாம் எனக்குக் கண்டிப்பா டீ இருக்கணும். இல்லனா வேலை ஓடாது.” என்றார்.
“எனக்கு எப்பவும் காஃபிதான் பிடிக்கும் அத்த. எங்கம்மாவோட பழக்கம்” என்றவளின் புருவங்கள் சுருங்க, “நான் உங்களுக்கு டீ போடவா? என்னால நீங்க காஃபி குடிக்கறீங்களாத்த, அச்சோ” என்று புலம்பினாள்.
இருவரும் இயல்பாகத்தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“பிரேக்பாஸ்ட் என்ன செய்யப் போற? வெண்பொங்கல், சாம்பார் செஞ்சுடலாமா?” என்று அவர் ஆரம்பிக்கவும், இவரெல்லாம் மாறவே போவதில்லை என்று அவளுக்கு அலுப்பானது.
“மதியத்துக்கு வெண்டைக்காய் போட்டு மோர்க்குழம்பு வச்சுட்டு சேப்பங்கிழங்கு வறுவல் செஞ்சிக்கலாம்” என்றார்.
அந்நேரம் வீட்டு வேலைகளில் உதவும் லட்சுமி அக்கா வந்து விட்டார். அவள் சென்று அவருக்குக் கதவை திறந்து விட, அவளைத் தலை முதல் கால் வரை கண்களால் தடவி, “என்னம்மா கீழ விழுந்துட்டீங்களாம் புருஷனும் பொண்டாட்டியும்? கால்ல அடிபட்டுடுச்சுன்னு சொன்னாங்க டீச்சர். இப்போ பரவாயில்லையா?” என்று கேட்டார்.
“தம்பிக்கு எப்படி இருக்கு?”
“அவருக்குதான் கா கால் எலும்பு உடைஞ்சுருச்சு. எனக்கு லேசா சுளுக்குதான் இப்போ சரியா போச்சு” என்றாள்.
“ரெண்டு பேரும் கவனமா இருக்கக் கூடாதாம்மா. இந்த மழை நேரம் இப்படித்தான் இருக்கும். எல்லாம் கண்ணு மண்ணு தெரியாம வண்டி ஓட்டுவானுங்க” என்று அவளிடம் பேசிக் கொண்டே வேலைகளைக் கவனித்தார். அவருக்கு வேலைகளைச் சொல்லி விட்டு அவள் மாமியாரிடம் வர, சமையலுக்குத் தேவையானதை மேடையில் எடுத்து வைத்திருந்தார் மரகதவல்லி.
“அத்த, மதியத்துக்குச் சோறு மட்டும் வச்சுக்கலாம். அம்மா இவருக்குக் குடுக்கணும்னு பிரண்டை துவையல் செஞ்சு அண்ணா கிட்ட கொடுத்து விட்றாங்களாம்” என்றாள்.
“ஓ, சரி சரி. அப்பவும் குழம்பு ஏதாவது வைக்கணும் இல்ல? வெண்டைக்காய் போட்டு மோர்க்குழம்பு..”
“இல்லத்த, அம்மா எலும்பு குழம்பும் சேர்த்தே குடுத்து விடறேன்னு சொன்னாங்க. அண்ணா எடுத்துட்டு வருவான்” என்று தயங்கி அவரின் முகம் பார்த்தாள்.
“சரி அப்போ எனக்கு மட்டும் மோர் குழம்பு வச்சுடு” என்று விட்டார் அவர். வேறு வழியின்றி மண்டையை ஆட்டினாள் அவள்.
காலை உணவாக வெண்பொங்கல், சாம்பாருக்கு இரண்டு அடுப்பில் இரண்டு குக்கர்களை அவள் அடுப்பில் ஏற்றி சமையல் மேடையில் சாய்ந்து நிற்க, பிரகாஷ் வந்து விட்டான்.
“பிரபஞ்சன் எப்படி இருக்காரு?”
“தூங்குறார்ண்ணா”
“ம்ம். இந்தா. அப்புறம் எதுனாலும் போன் பண்ணு. சும்மா ஸ்ட்ரெஸ் பண்ணி திரும்ப விழுந்து வைக்காத” என்று தங்கையின் தலையைக் கலைத்து சொன்னவன், “உங்க காரை இன்னைக்கு டெலிவரி பண்ணிடுறேன்னு சொல்லியிருக்கானுங்க. நான் ஈவ்னிங் வந்து பார்க்கறேன். ஓகே? அப்புறம் உன் வண்டி நம்ம வீட்ல நிக்குது. அப்பா அது அங்கேயே இருக்கட்டும்னு சொல்லிட்டார்” என்றான்.
“ஏன்னா? நான் வேலைக்குப் போக வண்டி வேணுமே? அடுத்த வாரம் வந்து நானே வண்டியை எடுத்துக்கறேன்”
“நீ அப்பா கிட்ட பேசிக்கோ. உன்னை வண்டியை தொட விடக் கூடாதுன்னு சொல்லிட்டு இருக்காரு அவரு”
“என்னாது? என்ன அண்ணா சொல்ற?” என்று அதிர்ந்தவள், “அது எனக்குப் பிரபஞ்சன் வாங்கித் தந்த வண்டி. அது எனக்கு வேணும்” என்று அடமாகச் சொன்னாள்.
“நீ அப்பா கிட்ட பேசிக்கோ” என்று முடித்து விட்டான் அவன்.
மரகவதல்லி வரவும் அவரிடமும் பேசி விட்டு, “எதுனாலும் யோசிக்காம எனக்குப் போன் பண்ணு தர்ஷி” என்று தங்கையிடம் திரும்பத் திரும்பச் சொல்லி வெளியேறினான்.
பிரகாஷ் கொடுத்துச் சென்ற பையைப் பிரிக்க, மூவருக்கும் மூன்று வேளை உண்ணும் அளவில் குழம்பு கொடுத்து விட்டிருந்தார் ராதா. கூடவே பிரண்டை துவையல் மற்றும் பழ வகைகள்.
“என்னம்மா இவ்ளோ குழம்பு குடுத்து விட்டிருக்கீங்க” என்று அம்மாவை அழைத்துக் கேட்டவள், “வெண்பொங்கலுக்குக் கறி குழம்பு ஊத்தி சாப்பிட்டா நல்லா தானேம்மா இருக்கும்?” என்று தீவிரமாகக் கேட்கவும் சிரித்து விட்டார் ராதா.
“இனிமே கொஞ்சமா குடுத்து விடுங்கம்மா” அவளும் சிரிப்புடன் சொல்லி அழைப்பை துண்டித்தாள்.
அவள் என்ன வேலை செய்தாலும் ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை படுக்கையறையை எட்டிப் பார்க்கத் தவறவில்லை. பிரபஞ்சன் கண் விழிக்கையில் அவன் பக்கத்தில் இருந்தாள்.
அவனுக்குப் பல் துலக்குவதில் தொடங்கி, குளிப்பது வரை எல்லா உதவிகளும் அவள்தான் செய்தாள்.
“டவல் டவல் பிரியா, பிளீஸ் பிடி” என்று உடை மாற்றுகையில் அவன் பதற வெடித்துச் சிரித்தாள் அவள்.
“எப்போ பாரு டபுள் மீனிங்ல பேசிட்டு திரிவாரு ஒருத்தர். அவருக்குப் பதில் குடுக்க எனக்கு இப்பத்தான் சரியான சமயம் அமைஞ்சிருக்கு” அவனது இடையில் இருந்து நழுவிய துவாலையை அவள் இறுக்கமாக பற்றிச் சொல்ல, அவன் முகத்தில் வெட்கச் சாயல்.
“அடி பிச்சுருவேன் பிரியா. அப்படியெல்லாம் பேச கூடாது, தப்பு” என்று கண்ணை உருட்டினான். அவள் கண்கள் அவன் மேனியெங்கும் உலாவின, வார்த்தைகளின் தேவையின்றிப் பார்வையாலேயே உணர்த்தி விட்டாள்.
ஒற்றைக் கரத்தால் அவளை நெருக்கமாக இழுத்து, அதற்கு நேர்மாறாக, “ஓடி போயிடு” என்று மிரட்டினான்.
“ஓடி எல்லாம் போக முடியாது. இப்படி உரசிட்டு தான் நிப்பேன். என்னா பண்ணுவீங்க?” என்று வீம்பாக வம்பு வளர்த்தவள், குறும்பு சிரிப்புடன் அவன் உடை மாற்ற உதவினாள்.
“நீ இப்போ உரசினாலும் பத்திக்க முடியாது, சோ பக்கத்துல வராத” என்று முணுமுணுத்தவன், அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.