அவன் காலை பற்றிய பேச்சை எடுத்தாலே அதைத் தவிர்த்தான் பிரபஞ்சன். முன்பு காதலுக்கும் அதே விதியைத்தான் பின்பற்றினான். இரண்டு நாள்களில் அவன் கொஞ்சம் தெளிந்திருந்தான்.
அவனுக்கு உணவு கொடுத்து, ஓய்வறை செல்ல உதவி, உடை மாற்றி விட்டு, அவனருகே அமர்ந்தாள்.
“பிரபா..”
“உன் கால்ல பிரஷர் போடாம, பேசாம உக்காரு பிரியா” என்று அக்கறையாக அவளிடம் மொழிந்தான்.
“ம்ம்ம், நீங்க பேச்சை மாத்தாதீங்க”
“ப்ச், திரும்பவும் என் காலை பத்தி ஆரம்பிக்காத பிரியா” என்றான் கடினமான குரலில். அவள் கண்ணீரில் நனைந்து மின்னிய ஈர இமைகளுடன் அவனையே இமைக்காமல் பார்த்தாள்.
“ஐ லவ் யூ பிரியா” என்றான் அவள் முகத்தை ஒற்றைக் கரத்தில் ஏந்தி.
அவளது கண்ணீரை காண மனம் தாளாமல், “எப்போவும் கவனமா இருப்பேன்னு சொன்னியே.. நேத்தும் மழை பெய்யுதுன்னு ரொம்ப ரொம்பக் கவனமாதான் இருந்தேன் பிரியா. நாம கவனமா இருந்தாலும் சிக்னல் விழுந்ததுக்கு அப்புறமா ராங் சைடுல வர்றவனை என்ன செய்யச் சொல்லு..” என்று கேட்டான். அவள் ஆங்கிலத்தில் அசிங்கமாகத் திட்ட, “ஏய்” என்றான். மெல்ல பிரிந்த அவன் உதட்டில் புன்னகையின் சாயல்.
“நான் எவ்வளவோ டிரை பண்ணேன் பிரியா. ஆனா, கை வழுக்கிடுச்சு. ஹெல்மெட் போட்டிருந்ததால உசுருக்கு..”
“பிளீஸ்” வேகமாக அவன் வாயை மூடினாள். அவளின் உள்ளங்கையில் மீசை உரச அழுந்த முத்தமிட்டான். அவள் கையை விலக்கி, “கீழ விழுந்ததும் படக்குன்னு எழுந்து நிக்க டிரை பண்ணேன், ஆனா என்னால காலை அசைக்கவே முடியல பிரியா” என்றான்.
ஒற்றை விரலால் அவள் கன்னம் துடைத்து, “என் கை, கால்னு அந்த நிமிஷம் எதையுமே யோசிக்கல நான்” என்று அசட்டையாகச் சொன்னவன், அவள் கண் பார்த்து, “அந்த நிமிஷம் உன்னைத் தவிர எதுவும் என் நினைவில இல்ல பிரியா” என்றான்.
“என் மூஞ்சி முழுக்க மழை தண்ணி. கண்ணைத் திறக்க முடியல. ஆனா அந்த நிமிஷம் உடனே உன்னைப் பார்க்கணும்னு இருந்தது. அப்பவே, அந்த நிமிஷமே உன்னைப் பார்க்கணும். அவ்ளோதான். உன்னைப் பார்த்திட்டா போதும். அப்புறம் எனக்கு என்ன ஆனாலும்.. அழாத பிரியா..”
“போங்க..”
“சரி, நான் போறேன். நீ பக்கத்துல வா” என்று அவளின் முதுகில் கை வைக்க முயன்று முடியாமல் முகம் சுழித்தான். தான் அமர்ந்திருந்த இருக்கையை இன்னும் அவனுக்கு நெருக்கமாக இழுத்துப் போட்டு அமர்ந்தாள்.
“காலை அசைக்காத, வலிக்கப் போகுது” இப்போதும் அவளுக்காகத் துடித்தான் அவன்.
“எனக்கு வலிக்கல. நீங்க சொல்லுங்க” என்றாள்.
“பல வருஷமா என் உலகமா நீதான் இருந்திருக்கப் பிரியா. நீ மட்டும்தான் இருந்திருக்க. அந்த நிமிஷம் உன்னைப் பார்க்காமலேயே போய்..”
“அப்படியெல்லாம் உங்களுக்கு எதுவும் ஆகியிருக்காது” அழுகையுடன் சொன்னாள்.
“உன்கிட்ட என் லவ்வை சொல்லாமலே.. முறைக்காத பிரியா. உன் கண்ணைப் பார்த்து என் பல வருஷ காதலை சொல்ல முடியாம போயிடுமோன்னு நினைக்கும் போதுதான் எனக்கு உயிரே போயிட்ட மாதிரி இருந்தது.” என்றான் நடுங்கும் குரலில், உணர்ச்சி வசப்பட்டு.
“இத்தனை வருஷமா எத்தனையோ முறை எனக்குள்ள போராடியிருக்கேன். நீயில்லாம வாழவே முடியாதுன்னு நினைச்சுருக்கேன். ஆனா, அந்த நிமிஷம் ரியாலிட்டி அப்படியே என் கண்ணு முன்னாடி படம் காட்டிட்டு போயிடுச்சு. இவ்ளோ நாள் நான் காதல்னு நினைச்சுதுலாம் காதலே இல்ல.. அப்படி உன் மேல கண்மூடித்தனமான காதல் எனக்கு இருந்திருந்தா எப்படி உன்னைக் கஷ்டப்படுத்தி இருப்பேன் நான். சொல்லு? ரெஸ்டாரண்ட்ல உன்னைத் தனியா தவிக்க விட்டு போய் இருப்பேனா? அதுவும் போன், காசுன்னு உன் கையில எதுவுமே இல்லாம.. எவ்ரி வீக் எண்ட் உன்னைத் தனியா வீட்ல விட்டுட்டு விளையாட போய் இருப்பேனே? இல்ல..”
“இல்ல பிரபா. உங்க மேல மட்டும் தப்பில்ல. என் மேலயும் தப்பிருக்கு. நீங்க வர்ற வரைக்கும் நான் வெயிட் பண்ணி இருக்கணும். உங்ககிட்ட என் மனசுல இருக்கதை சொல்லியிருக்கணும். அதை விட முக்கியமா நான் உங்களை நம்பியிருக்கணும்” என்றாள் அவன் கையோடு கைக் கோர்த்து. அந்த நம்பிக்கை என்ற வார்த்தையை அவள் சொன்னதும், இறுக கண்களை மூடித் திறந்தான் பிரபஞ்சன்.
“நான் கண்ணைத் திறக்கும் போது நீ என் முன்னாடி இருக்கணும். உன்கிட்ட மனசார மன்னிப்பு கேட்கணும். இத்தனை வருஷமா உன்கிட்ட சொல்லாம இருந்த என் லவ்வை சொல்லிடணும்னு என் மனசு கிடந்து அடிச்சுக்கிச்சு பிரியா. நான் மயக்கமாகும் போது இந்த ரெண்டை மட்டும்தான் பிரியா நினைச்சேன். பிரியாகிட்ட என் லவ்வை சொல்லிடணும்”
“அதான் சொல்லிட்டீங்களே. இப்போ கண்ணை மூடி ரெஸ்ட் எடுங்க. நான் இன்னொரு நாள் உங்ககிட்ட உங்க காதல் கதையைப் பொறுமையா கேட்கறேன்” என்றாள் புன்னகையுடன்.
“உனக்கு நானே சொல்றேன்” என்றவன் உடல் சிரிப்பில் குலுங்கியது.
“உங்க கள்ளத்தனம் எல்லாம் நான் கண்டுபிடிச்சுட்டேன். எனக்குத் தெரியும்.” என்றாள் உதடு சுழித்துப் பெருமையாக.
“ஹாஹாஹா அப்படியா? என்ன தெரியுமாம்? சொல்லு கேட்போம்” என்று அவள் முகத்தைக் கையில் ஏந்தினான்.
“எனக்காக உங்க அம்மா டெஸ்க்ல ரோஸ் வச்சது நீங்க..”
“ஆமா, அன்னைக்கு விட்டாங்க பாரு எங்கம்மா ஒரு அறை..” என்று கன்னம் தடவ கையை உயர்த்தினான். அவளின் கரம் நீண்டு அவன் கன்னம் வருடியது. மெதுவாகத் திரும்பி தலையைச் சாய்த்து அவள் கரத்தில் முகம் பதித்தான்.
மறுக்கரத்தால் அவன் புருவம் வருடி, “தூங்குங்க” என்றாள். அசதியில் ஐந்தே நிமிடங்களில் உறங்கி விட்டிருந்தான் பிரபஞ்சன்.
ஏழு நாள்கள் விரைந்து கடந்திருந்தன. அந்த ஏழு நாள்களும் அடமாகக் கணவனுடன் இருந்தாள் பிரியதர்ஷினி. அவனின் காதல் கதையைத் தவிர மற்ற அனைத்தையும் பற்றி நிறையப் பேசினார்கள்.
மாணிக்கவேல்தான் மகளை வற்புறுத்தி குளிக்க, ஓய்வெடுக்க என வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
இரவும், நான் என் கணவனோடுதான் இருப்பேன். “நீங்க எல்லாம் வீட்டுக்கு போங்க. அவரோட நான் இருக்கேன்” என்று அழுத்தமாக அனைவரிடமும் சொன்னாள்.
“உனக்கே உடம்பு முடியல குட்டிம்மா. உன்னாலயே கால ஊனி ஒழுங்கா நடக்க முடியாது. உனக்குக் காய்ச்சல் வேற விட்டுவிட்டு வருது. இதுல நீ எப்படிடா பிரபஞ்சனை பார்ப்ப? உன் காய்ச்சல் அவருக்கும் தொத்திக்கப் போகுது” என்று அவர் உண்மையைச் சொல்லி கெஞ்சினாலும், கணவனைதான் பார்த்து நின்றாள் அவள்.
அவன் கெஞ்சலாகக் கண்ணைச் சுருக்கி, “பிளீஸ்” எனவும், இரவு உறங்குவதற்கு வீடு சென்றாள்.
அவளுக்கு இப்போது நெற்றி காயத்தின் தையலை பிரித்திருந்தார்கள். காயம் ஆற சிறிய கட்டு மட்டுமே போடப்பட்டிருந்தது. கால் சுளுக்கு ஓரளவு சரியாகி வலித்தாலும் தடுமாறாமல் நடக்கிறாள்.
மரகதவல்லி மகனுக்கு ஒன்று என்றதும் தாயாகத் துடித்துப் போய் இருந்தார். பிரியதர்ஷினியின் குடும்பம் அவருக்கு உறுதுணையாக இருந்தது.
“நாங்க பார்த்துக்கறோம் அண்ணி.” என்று அவருக்கு ஆறுதல் சொல்லி அவரையும் சேர்த்தே பார்த்துக் கொண்டார் ராதா.
மாணிக்கவேல், ராதா இருவரும் விடுமுறையில் இருக்கிறார்கள். பிரகாஷ் வீட்டில் இருந்தே வேலை செய்து கொண்டு மருத்துவனை, வீடு என அலைந்து கொண்டிருக்கிறான்.
மரகதவல்லி பத்து, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்குக் கணித ஆசிரியர். இன்னும் மூன்றே மாதத்தில் அவர்களுக்கு அரசு பொதுத் தேர்வு இருக்கிறது. இந்நேரம் அவர் நீண்ட விடுமுறை கேட்டால் பள்ளி நிர்வாகம் நிச்சயமாகத் தராது. அதற்காக மகனை பார்க்காமல் இருக்க முடியுமா?
மாணிக்கவேல் கல்லூரி பேராசியர் என்பதால், அவரின் சூழல் புரிந்து, “இங்க நாங்க பார்த்துக்கறோம்.” என்று அவருக்கு நம்பிக்கை அளித்தார்.
“எப்படியும் மாப்ளயோட யாராவது ஒருத்தர்தான் இருக்க முடியும். நீங்க ரொம்ப யோசிக்காம ஸ்கூல் கிளம்புங்க. இங்க எதுனாலும் நான் உங்களுக்குக் கால் பண்றேன்” என்று ராதாவும் சொல்ல, மரகதவல்லி மகனையே பார்த்து அமர்ந்திருந்தார்.
“நான் இருக்கேன்த்த, நீங்க கவலைப்படாதீங்க.” மருமகளின் வார்த்தைகள் மட்டுமே அவருக்குத் திடத்தையும், தெம்பையும் தந்தது. தினமும் காலையில் மருத்துவனை வந்து மகன் காலை உணவு உண்ணும் வரை அவனோடு பேசிக் கொண்டிருந்து பின் பள்ளி கிளம்பிச் சென்றார். மாலை திரும்பவும் வந்து அவனைப் பார்த்து விட்டே வீடு சென்றார் அவர்.
ஏழாம் நாள் மாலையில் அவனை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.
இன்னும் அவனுக்குக் காலில் தையல் பிரிக்கவில்லை. ஊன்றுகோலின் உதவியால் மெதுவாக நடக்கிறான். மருத்துவர் கண்டிப்பாக மெதுவாக வீட்டுக்குள் தினமும் நடக்க வேண்டும் என்று சொல்லி விட்டார். வாரம் தவறாமல் பிசியோதெரபி செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்கள்.
மகள், மருமகன் இருவரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, “பிரியாவும், மாப்ளயும் ஒரு மாசத்துக்கு நம்ம வீட்ல இருக்கட்டும். ரெண்டு பேரையும் தனியா பார்த்துக்கறது உங்களுக்குச் சிரமம்” என்று மரகதவல்லியிடம் சொன்னார் மாணிக்கவேல்.
“நான் இரண்டு வாரத்துக்கு மெடிக்கல் லீவ் போட்டுட்டேன். ரெண்டு பேரையும் நான் பார்த்துக்கறேன் அண்ணா. இத்தன நாள் இங்க வச்சு நீங்கதானே பார்த்தீங்க. இனிமே நான் பார்த்துக்க மாட்டேனா?” என்று மரகதவல்லி கேட்க, மாணிக்கவேல் கையைப் பிசைந்து, மகளையே பார்த்து நின்றார்.
மகளை மட்டுமல்ல, மருமகனையும் எங்கேயும் அனுப்ப அவருக்கு மனம் வரவில்லை. ஆனால் மகளே மாமியாருடன் செல்கிறேன் என்று நிற்கும் போது அவரும்தான் என்ன செய்வார். சரியெனச் சொல்வதைத் தவிர அவருக்கும் வேறு வழி இருக்கவில்லை.
அவரே தன் காரில் அவர்களைப் பத்திரமாக வீட்டில் கொண்டு விட்டார். காரில் இருந்து இறங்கும் போதும் சரி, படிக்கட்டில் கால் வைக்கும் போதும் சரி, வேகமாக வந்து கணவனுக்கு உதவினாள் பிரியதர்ஷினி.
“தள்ளு, பிரியா. உனக்குக் கால் வலிக்கப் போகுது” என்று அவன் கடிந்து கொள்ள, அதைக் காதில் வாங்காமல் அவன் கையைப் பற்றித் தன் தோளை சுற்றி போட்டு நடந்தாள்.
“தர்ஷி” என்று கண்டிப்புடன் அழைத்துத் தங்கையைப் பின்னுக்கு இழுத்து மச்சானுக்குத் தான் உதவினான் பிரகாஷ்.
அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் வாங்கித் தந்து, வீட்டை பிரபஞ்சனின் வசதிக்கு ஏற்ப ஒதுக்கி, அன்றிரவு உணவையும் அங்கேயே சமைத்து உண்டு அதன் பிறகே கிளம்பினார்கள் அவள் வீட்டினர்.
பிரியதர்ஷினி உறங்கச் செல்லும் முன் மரகவதல்லிக்கு பாலை காய்ச்சி கொடுத்தாள்.
“அத்த, நான் மூனு வாரத்துக்கு மெடிக்கல் லீவ் போட்டுட்டேன். நீங்க வேணும்னா ஸ்கூல் போய்ட்டு வாங்க. இவரை நான் பார்த்துக்கறேன்” என்று அவள் சொல்ல, “நான் வேலையை விட்டுட்டேன் பிரியதர்ஷினி” என்றார் மரகதவல்லி.
“என்னத்தே சொன்னீங்க?” தன் செவியில்தான் சரியாக விழவில்லையோ என்ற சந்தேகத்துடன் திரும்பக் கேட்டாள்.
“நான் வேலையை விட்டுட்டேன் பிரியதர்ஷினி” என்றார் சத்தமாக. அவள் அதிர்ந்து திரும்பி சோஃபாவில் அமர்ந்திருந்த கணவனைப் பார்க்க, அவனோ மடிக்கணியில் மூழ்கிருந்தான். வேறென்ன வேலைதான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் இடுப்பில் கை வைத்து அவனை முறைத்து நின்றாள்.