பிரபஞ்சன் கண் மூடவும் பதறி விட்டாள் பிரியதர்ஷினி.
“பிரபா” அதிவேகமாக நிமிர்ந்து அவன் கன்னம் தட்டினாள். மெதுவாகக் கண்களைத் திறக்க முடியாமல் திறந்து அவளைப் பார்த்து முறுவலித்தான். அவன் எப்போதும் அவள் மீது பிரிய பித்தனாகத்தான் இருப்பான். ஆனால் இன்று அவன் பார்வை அவள் உயிரை உருக்குவதாக இருந்தது.
அவன் படுக்கையில் அவள் சாய்ந்து அமர்ந்திருக்க, குறிப்பாகத் தன் கையைக் காட்டினான். அதில் சலைன் ஏறிக் கொண்டிருந்தது.
அவன் கையில் ஆங்காங்கே காயங்கள் கன்றி போய் இருந்தன. புறங்கையில் மோசமாகச் சிராய்த்திருந்தது.
மெல்ல அவன் கரம் பற்றி வருடினாள். இருவரின் விரல்களையும் அவனுக்கு வலிக்காமல் பின்னி பிணைத்தாள்.
அவன் விரல்கள் மென்மையாய் அவள் விரல்களை வருடின. பிரியதர்ஷினி கண்ணீருடன் புன்னகைக்க முயன்று தோற்றாள்.
அவன் விரல்கள் மெதுவாகப் பிரிந்தன. தன் கையை உயர்த்த முயன்றான்.
“டிரிப்ஸ் போயிட்டு இருக்கு பிரபா, கையை அசைக்காதீங்க பிளீஸ்” என்று அவள் தடுக்க, “பிளீஸ்” என்று மெலிதாக முனகினான். அவள் சற்றே விலக, அவன் கரம் உயர்ந்து அவளது முகத்திற்கு வந்தது.
ஒற்றை விரலால் அவளின் நெற்றிக் காயத்தை வருடி, “வலிக்குதா பிரியா?” என்று கேட்டான். அவளின் கண்கள் மளுக்கென்று குளம் கட்டின.
“எத்தனை தையல் போட்டாங்க?” என்று முணுமுணுத்தவன், அவள் கண்கள் கலங்குவதைக் கண்டதும், கலங்கிய குரலில், “ரொம்ப வலிக்குதா பிரியா?” என்று மயிலிறகால் வருடுவது போலக் கேட்டான்.
அவளின் கலங்கிய கண்களுக்குள் அவனது பிம்பமே பிரதிபலித்தது.
அவன் கையைத் தன் கன்னத்தோடு அழுத்தி, “சாரி பிரபா, ஐ ஆம் ரியலி சாரி” என்று கதறி அழுது விட்டாள்.
அவன் கையில் ஊசியிருக்க, அவள் அழுத்தி பிடித்ததில் வலித்திட அவன் முகம் மெல்ல சுருங்கியது. ஆனாலும் மனைவியின் பிடியில் இருந்து கையை விலக்கவில்லை அவன்.
“எப்பவும் என்னை மட்டுமேதான் யோசிப்பீங்களா பிரபா? உங்க கால்.. உங்க கால்..” என்று திக்கி திணறினாள்.
“ஷ்ஷ்ஷ் பிரியா, எனக்கு ஒன்னும் இல்லடா. இங்க பாரு. என்னைப் பாரு” என்று அவளுக்கு அவன்தான் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் படுக்கையில் தலை வைத்து, எட்டி ஒரு கரத்தால் அவன் கால் பற்றி அழுது கொண்டேயிருந்தாள்.
“அழாத பிரியா, பிளீஸ்..” அவனது கரகரத்த குரலில் கண்ணீரின் தடம்.
இப்போதும் அவளது கண்ணீர்தான் அவனைக் கலங்கடிக்கிறது. அவனது காலை குறித்தெல்லாம் அவனுக்குக் கவலை இருப்பதாகவே தெரியவில்லை. கணவனுக்கு விபத்து நேர்ந்ததே தன்னால்தான் என மிகுந்த குற்ற உணர்ச்சி கொண்டாள் அவள்.
“பிரி..யா..”
“நான் நம்ம வீட்ல இருந்திருக்கணும். அண்ணா கூப்பிட்டான்னு அப்பா வீட்டுக்கு போய் இருக்கவே கூடாது. எல்லாம் என்னாலதான், இல்லன்னா உங்களுக்கு இந்த ஆக்சிடென்ட் நடந்திருக்கவே நடந்திருக்காது.”
“பைத்தியம் போலப் பேசாத..”
“சாரி பிரபா..” அழுகையுடன் அரற்றினாள். அவனது கை வலியையெல்லாம் பொருட்படுத்தாமல் அவள் முகத்தை வேகமாய் நிமிர்த்தி அவன் கண்களைக் காண செய்து, “அழாத” என்று அடர்ந்த குரலில் அதட்டினான்.
அவன் சொன்னவுடன் அழுகையை நிறுத்தினாலும், உதடு பிதுங்க விசும்பிக் கொண்டேயிருந்தாள். அவள் கரம் அவன் காலை வருடி கொண்டேயிருந்தது.
“என் மேல கோபமாவே இருந்திருக்கலாம் இல்ல நீங்க? எதுக்காக அந்நேரத்துல..” கிளம்பி வந்தீங்க? என்று அவளின் கேள்வியைக் கூட முடிக்க விடவில்லை அவன்.
“உன்னை.. போ, திரும்ப வராதன்னு சொல்லிட்டேனே பிரியா. அப்போ நான்தானே வந்து உன்னைச் சமாதானம் பண்ணி கூட்டிட்டு போகணும்?” சிரமப்பட்டுப் பேசினான்.
“அவர் ரெஸ்ட் எடுக்கட்டும் மேடம்” செவிலி தலையை உள்ளே நுழைத்து பிரியதர்ஷினியை எச்சரிக்க, அவரிடம் கண்ணைச் சுருக்கி, “பிளீஸ்” என வாயசைத்துக் கெஞ்சினான் பிரபஞ்சன்.
அவரும் தயக்கத்துடன் தலையசைத்து சென்றார்.
பிரியதர்ஷினி சற்றே சக்கர நாற்காலியை நகர்த்திப் போட்டு, பிரபஞ்சனின் கட்டுப் போட்டிருந்த காலை வருடினாள்.
அவனுக்கு மருந்துகளின் உபயத்தால் தற்போது வலி இருக்காது என அவளுக்குத் தெரியத்தான் செய்தது. ஆனாலும் அவள் கண்கள் அவன் கால் பக்கம் சென்றாலே மனம் கலங்கி கண்ணீர் கன்னம் தொட்டது.
ஒரே நாளில் அவர்கள் வாழ்வில் எத்தனை மாற்றங்கள்? முன்தினம் கிரிக்கெட் விளையாடி விட்டு வந்து அதற்காக மனைவி வருந்துவாளோ என்று அத்தனை வருந்தினான் அவன். ஆனால் இன்று?
கிரிக்கெட் விளையாட முடியாதபடி கால் உடைந்து படுத்திருக்கிறான். சிறுவனாக இருக்கும் போதிருந்தே வாரம் தவறாமல் கிரிக்கெட் விளையாடுபவன் அவன். இனி? அந்தக் கேள்வியே அவளைக் கலங்கடித்தது.
அவனை மறுபடியும் கிரிக்கெட் விளையாட அனுப்ப வேண்டும் என்று முன்னரே அவள் முடிவெடுத்து விட்டாள். ஆனால், இத்தனைக்குப் பிறகு அதைச் சொன்னால் கணவன் கேட்பானா? அவளுக்குக் கிரிக்கெட் பிடிக்காது, அவனது உடல்நிலை எனப் பல்வேறு காரணங்களை அடுக்கி தனக்குப் பிடித்த ஆட்டத்தை இனிமேல் ஆடாமலே தவிர்த்திடுவானோ? என்று யோசிக்க யோசிக்கத் தவித்துத் துடித்தது அவள் மனம்.
தீவிர சிந்தனையில் மூழ்கி அவன் காலை பிடித்திருந்தவளை, “பிரியா..” என்றழைத்து நிமிர செய்தான்.
“உன் காலுக்கு என்ன?” அவன் கருவிழிகள் அவள் காலை காண அலைபாய்ந்தன.
“என்னைப் பத்தி மட்டும்தான் யோசிப்பீங்களா பிரபா. என் காலுக்கு என்ன? அதுக்கு ஒன்னும் ஆகல. என் கால் உடைஞ்சிருந்தா கூட..” பட்டென்று வலிக்க அவள் வாயில் அடித்து மூடினான். அவன் கண்கள் ஏற்கெனவே சிவந்திருக்க, இப்போது கனல் வீசியது.
“லூசு மாதிரி உளற கூடாது. உனக்குக் கால்ல அடிபட்டு இருக்கா? டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று கனிவாகக் கேட்டான். அவளால் பதில் சொல்லவே முடியவில்லை. வாயைத் திறந்தாலே சத்தமாக வெடித்து அழுது விடுவோமோ என்று பயந்து உதடுகளை இறுக மூடினாள்.
“பிரியா..”
“எனக்கு ஜஸ்ட் சுளுக்குதான்ங்க, வேற ஒன்னுமில்ல.” என்றாள்.
“கொஞ்சம் பின்னால தள்ளி போய்க் காலை காட்டு, பிளீஸ்” என்று கெஞ்சினான். அவ்வளவுதான். “மனுஷனா நீங்க?” என்று கண்ணீருடன் கத்தி விட்டாள்.
“ரோட்ல எப்பவும் அவ்வளவு கவனமா இருப்பீங்களே பிரபா. நானே வீட்டுக்கு வந்திருப்பேனே..” என்று நெற்றியில் அடித்துப் புலம்பினாள். அவள் கையைத் தடுத்து பிடித்து முறைத்தான். அவன் படுக்கையில் தலை சாய்த்து அவன் முகம் பார்த்திருந்தாள்.
“இட்ஸ் அன் ஆக்சிடென்ட் பிரியா. அதையெல்லாம் ஆராயக் கூடாது, விடு” என்றான், அவள் தோளில் தட்டி. அவளோ விசும்பி கொண்டேயிருந்தாள்.
அவனுக்கு நேர்ந்த அந்த விபத்தில் அவனது இடது கால் எலும்பு முறிந்திருந்தது. அதனால் அறுவை சிகிச்சை செய்து டைட்டானியம் ராட் பொறுத்தியிருந்தார்கள்.
அவனது முழங்காலுக்குக் கீழே போடப்பட்டிருந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகான கட்டை கண்டதும் கதறி விட்டாள்.
“அப்பா.. அத்த” எனக் கத்தி மாணிக்கவேல், மரகதவல்லி என இருவரையும் தேடினாள்.
“நானும் இங்கேயே தானேப்பா இருந்தேன். என்கிட்ட ஏன்ப்பா சொல்லல?” மகளின் கேள்வியே அவரை உடைத்தது.
“டாக்டர் சீக்கிரம் சரியாகிடும்னு சொல்லியிருக்காங்க குட்டிம்மா..” என்று ஆறுதலாகச் சொன்னார். அவளோ மருத்துவரை பார்த்தே தீருவேன் என்று அடமாக நிற்க, மரகதவல்லி அவளின் தோளை அழுத்திக் கொடுத்தார்.
மருத்துவர் தெளிவாகத் தீவிரமாக அவளுக்கு விளக்க, “அவர் கிரிக்கெட் பிளேயர் டாக்டர்.” என்றாள் அழுகையை அடக்க உதடு கடித்து.
அவளைப் போல எத்தனை பேரை மருத்துவர்கள் தினம் தினம் சந்திக்கிறார்கள். அவளின் மனநிலை புரியாதா என்ன!.
“மூனு மாசத்துல உங்க ஹஸ்பன்ட் நார்மலா நடக்கலாம், ஓடலாம் விளையாடலாம் மிஸஸ், பிரபஞ்சன். டைட்டானியம் ராட் ஃபிக்ஸ் பண்ணியிருக்கதால ரொம்பப் பாஸ்ட்டா நார்மல் லைஃப்க்கு வந்துடுவாங்க.” என்று அவர் சொல்ல, “பட் கிரிக்கெட் விளையாட முடியுமா? அவர் பேட் பண்ணணும், பவுல் பண்ணணும், ரன் எடுக்க ஓடணும், பீல்டிங்ன்னு கேட்ச் பண்ண கண்டபடி கிரவுண்ட்ல சுத்தணும். அதெல்லாம் எப்படி டாக்டர் ஆபரேஷன் பண்ண கால்ல பண்ண முடியும்?” என்று சந்தேகம் கேட்டாள்.
“அவர் பிளேயர் டாக்டர். அவருக்குக் கிரிக்கெட் விளையாட அவ்வளவு பிடிக்கும்” அவருக்குச் சொல்வது போலத் தனக்குத்தானே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டாளோ? நெற்றி காயத்தை விட அழுகையை அடக்கியதில் அவளுக்குத் தொண்டை வலித்தது.
“லிசன் மிஸஸ் பிரபஞ்சன், நீங்க இவ்ளோ வொர்ரி பண்ணிக்க வேண்டாம். ஆல்ரெடி உங்களுக்கு வேற உடம்பு முடியல..”
“இல்ல, ஐ ஆம் ஓகே. நீங்க அவரைப் பத்தி சொல்லுங்க” என்றாள் அழுத்தமாக.
பிரபஞ்சனின் எக்ஸ்ரே நகலை எடுத்து மேஜையில் விரித்து வைத்து அவளுக்கு விளக்கம் கொடுத்தார்.
மூன்றே மாதங்களில் அவன் இயல்பு வாழ்க்கைக்கு வந்திடுவான். டைட்டேனியம் ராட் பொறுத்தி இருப்பதால் எந்தப் பின் விளைவுகளும் கிடையாது. ஆறே மாதத்தில் அவன் கிரிக்கெட் விளையாடலாம் என்று அவர் சொல்லவும் அவள் முகத்தில் கீற்றாகப் புன்னகை தோன்றியது.
“ஆறு மாசத்துல சுயரா விளையாடலாமா?”
“சுயரா. ஹண்ட்ரெட் பெர்செண்ட்” என்றார், சன்ன சிரிப்புடன். அவர் வார்த்தைகளை அவள் மனம் நம்பினாலும், கண்கள் கலங்கி அவரையே நோக்கின.
“புரொபஷனல் கிரிக்கெட் பிளேயர்ஸ் பிளே கிரவுண்ட்லயே தாறுமாறா விழுந்து வாருவாங்க. நீங்க பார்த்தது இல்லையா? இன்றைய ஆட்டத்தில் இருந்து காயம் காரணமாக இவர் விலகல்னு சொல்லுவாங்களே. அது எதுனால நினைச்சீங்க? இந்த மாதிரி இஞ்ஜுரிதான்” என்று அவர் சொல்லவும் மெதுவாக ஆடியது அவள் தலை.
“அவங்கல்லாம் திரும்பக் கிரிக்கெட் ஆடலையா சொல்லுங்க? ரீசண்டா ஒரு மூனு வருசத்துக்கு முன்னாடி ரிஷப் பண்ட் கார் ஆக்சிடென்ட் நியூஸ் பார்த்தீங்களா? அவர் கால் அப்படியே ட்விஸ்ட் ஆகிடுச்சு. கால் மூட்டு கம்ப்ளீட்டா மறுபக்கம் வந்துடுச்சு” என்று வரைந்து காட்டினார்.
அவள் மிரண்டு ஆழ மூச்சிழுத்தாள்.
“பிளீஸ், பயப்படாதீங்க. அவ்ளோ மோசமா கால்ல அடிபட்டவரே இப்போ திரும்பக் கிரிக்கெட் ஆடும் போது உங்க பிரபஞ்சனுக்கு என்ன தடையா இருக்கப் போகுது சொல்லுங்க? அவர் தாராளமா நாலே மாசத்துல கிரிக்கெட் விளையாடலாம்” என்று உறுதியாகச் சொல்லி அவளுக்கு நம்பிக்கை அளித்திருந்தார். அதன் பிறகுதான் அவள் முகம் தெளிந்தது. ஆனால் இப்போது கணவனின் அருகில் இருக்கையில் மனம் மீண்டும் மீண்டும் கலங்குவதைத் தவிர்த்திட முடியவில்லை.
பிரபஞ்சன் பிடிவாதக்காரன் வேறு, என்ற பயம்தான் அவளுக்கு அதிகமாக இருந்தது. அவள் சொன்ன ஒரு வார்த்தைக்காக நண்பனை, கிரிக்கெட்டை ஒரேடியாக ஒதுக்கி வைத்த ரோஷக்காரன் ஆகிற்றே. அவள் மேலான அவனது பிரியம் கூட அப்படித்தானே. பிடிவாதத்தையும், பிரபஞ்சனையும் பிரிக்க முடியாதே.