பிரிய பிரபஞ்சமே – 20 (2)

அவளின் பரிசோதனை முடிவுகளைப் பார்த்த மருத்துவர், “குட்” என்றார் சன்ன சிரிப்புடன்.

“நான் சந்தேகப்பட்ட மாதிரி கால்ல ஹேர்லைன் ஃப்ராக்ஷர் கூட இல்ல. உங்களுக்குக் கால் பிசகியிருக்கு, அவ்ளோதான். ஒரு வாரம் காலுக்கு நல்லா ரெஸ்ட் கொடுத்தா சரியா போகும். ஸ்ப்ரையினுக்குக் கட்டுப் போட்டுடலாம். அப்புறம் நான் சொன்ன மாதிரியே அது அதிர்ச்சியினால வந்த மயக்கம்தான் சார். பாருங்க, சிடி ஸ்கேன் ரொம்பக் கிளியரா இருக்கு” என்று சோதனை முடிவை அவர் முகத்துக்கு முன் மருத்துவர் அசைத்துச் சொல்ல, அக்கணம் சிரிக்க உதடுகளைப் பிரிப்பது கூட அவருக்குச் சிரமமாக இருந்தது.

மற்ற நேரமாக இருந்திருந்தால் மகளை இப்போதே வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன் என்று பரபரத்து இருப்பார் மாணிக்கவேல்.

இன்று மருத்துவர், “நெத்தி காயம் கொஞ்சம் ஆழமா இருக்கு. இந்தக் காலோட நடக்கறதும் சிரமம். அதுனால இன்னைக்கு ஒரு நைட் இவங்களை அப்சர்வேஷன்ல வச்சு கவனிச்சிட்டு காம்ப்ளிகேஷன் எதுவும் இல்லைன்னா, நாளைக்குக் காலையில டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்” என்று மருத்துவர் பரிந்துரைக்க, உடனே மண்டையை ஆட்டி விட்டார் மாணிக்கவேல்.

பிரியதர்ஷினி அறைக்கு வந்ததும், “ம்மா..” என்று ஆரம்பித்து விட்டாள். ராதாவுக்கு அதற்குள் செய்தி சொல்லியிருந்தார் மாணிக்கவேல்.

“அத்தைக்குப் போன் பண்ணி இன்பார்ம் பண்ணணும். நான் நைட் வீட்டுக்கு வந்துடுவேன்னு அவங்ககிட்ட சொல்லிட்டுதான் வந்தேன். அத்தை எனக்குக் கால் பண்ணியிருக்கப் போறாங்க. அப்பா, அத்த நம்பருக்கு அடிங்களேன். நான் பேசறேன்” என்று கெஞ்சினாள். அவள் முகமெல்லாம் வாடி, வெளிறி, சோர்ந்து தெரிந்தாள்.

நெற்றியில் பெரிய கழித்தல் குறியீடு. காலில் சிறிய பிசகு என்று சொல்லி, கணுக்கால், பாதம் முழுக்க மூடி பெரிய கட்டை போட்டு விட்டிருந்தார்கள். அந்த மருத்துவமனை உடையை அணிந்தாலே இயல்பாக நோயாளி தோற்றம் வந்து விடுகிறது.

“நீ படு தர்ஷிம்மா. அம்மா இதோ இப்பவே உன் மாமியாருக்கு போன் பண்ணி..”

“அத்த..ம்மா”

“ம்ம், உன் அத்தைக்குப் போன் பண்ணி சொல்லிடுறேன்” என்று திக்கி திணறி சொன்னார்.

“நான் பேசறேன்ம்மா, நீங்க பேசினா, எனக்கு என்னமோ ஏதோன்னு அத்தை பயப்படப் போறாங்க.” என்று மெல்ல முணுமுணுத்தவள் சோர்வுடன் கண்ணை மூடினாள்.

அவளுக்கு வலி நிவாரணி மருந்துகளைச் சலைனில் செலுத்தியிருந்தார்கள். அதன் விளைவால் சற்று நேரத்தில் உறங்கி விட்டிருந்தாள். ஆனாலும் ஆழ்ந்த உறக்கமில்லை. மெதுவாகப் புரண்டு படுக்க முயன்று காலும், கையும் வலித்ததினால் கண் விழித்து, “அம்மா.. பிரபா வரல?” என்று அம்மாவிடம், அம்மாவை காணாத குழந்தை போல, மீண்டும் மீண்டும் கணவனைக் கேட்டுக் கொண்டிருந்தாள் அவள்.

ராதா தன் இருக்கையை இழுத்து மகளின் படுக்கைக்கு அருகில் போட்டு, அவளின் கைப் பிடித்து, “தூங்கு தர்ஷி” என்று தட்டிக் கொடுத்தார். அவளின் கைக் சூட்டை அவரால் உணர முடிந்தது. உடனே செவிலியை அழைத்தார். அவர் பரிசோதித்து, காயத்தின் காரணமாகக் காய்ச்சல் கண்டிக்கிறது என்று சொல்லி அதற்கும் மருந்துகள் கொடுத்தார்.

ஒரு மாலை வேளையில் மங்கலாகப் போய் இருந்தது பிரியதர்ஷினி எனும் ஓவியம்.

மருந்துகளின் உபயத்தால் ஆழ்ந்த உறக்கத்துக்கு மகள் செல்லவும், அவளைச் செவிலியின் பொறுப்பில் விட்டுவிட்டு கணவரைத் தேடி ஓடினார் ராதா.

மாணிக்கவேல், பிரகாஷ் இருவரும் அறுவை சிகிச்சை அரங்கு இருந்த பகுதியில் காத்திருந்தார்கள்.

“மாப்ளைக்குச் சர்ஜரி முடிஞ்சதா? டாக்டர் என்ன சொல்றாங்க?” உயிரை கையில் பிடித்தபடி கணவரிடம் கேட்டார்.

இதுவென்ன அவர்களுக்கு வந்த சோதனை காலம். மகள் என்றால் அவர்களுக்கு உயிர். அந்த மகளுக்கு உயிரானவனைப் பத்திரமாக அவளிடம் சேர்ப்பித்திட வேண்டும் என மனதார வேண்டிக் கொண்டார்.

“டாக்டர் பயப்பட வேண்டாம்னு சொன்னாங்கம்மா. ஆனா, சர்ஜரி முடிஞ்சாதான் எதுனாலும் தெரியும்.” என்ற பிரகாஷுன் கண்களில் இன்னமும் பிரபஞ்சனின் உருவமே பளிச்சென்று நின்றது.

அவனது உடையெல்லாம் ரத்தமாக, மயக்க நிலையில், எலும்பு முறிந்து வெளியே தெரிய, ஐயோ.. இப்போது மனக் கண்ணில் வந்த உருவம் கூட அவனைப் பதறச் செய்தது.

அந்த இரவை கடந்திட்டால் போதும் என்றிருந்தது அவர்களுக்கு. மறுநாளைய விடியல் அவர்கள் வாழ்விலும் விடியலைத் தரும் என்று உறுதியாக நம்பினார்கள்.

“பிரகாஷ், நீ போய்த் தர்ஷி அத்தைக்குத் தகவல் சொல்லி அவங்களைக் கூட்டிட்டு வா.” என்று மகனிடம் சொன்ன ராதா, “அவங்க பயப்படுற மாதிரி எதுவும் சொல்லாத. தர்ஷி விஷயம் மட்டும் சொல்லு, போதும். மாப்ள விஷயம் அவங்க இங்க வந்ததும் சொல்லிக்கலாம்” என்று அழுத்தி சொல்லியே அவனை அனுப்பி வைத்தார்.

பிரியதர்ஷினி கண் விழிக்கையில் விடிந்திருந்தது. அனுதின வழக்கமாக அவள் புரண்டு படுக்க முயன்றாள், அவள் கரம் அனிச்சையாக அருகில் கணவனைத் தேடியது. அவனைக் காணவில்லை, அதற்கு மேல் நெற்றி, கால் வலி வேறு சுள்ளென்று உயிரை உருவி எடுக்க, “ம்மா..” என்றாள் முணுமுணுப்பாக.

ராதா பக்கத்துப் படுக்கையில் இருந்தார். மகளின் குரல் கேட்டதும் அடித்துப் பிடித்து எழுந்து, “தர்ஷிம்மா, என்னடா வேணும்? பாத்ரூம் போகணுமா?” என்று படபடத்தார்.

“ம்மா..”

“என்ன தர்ஷி? என்ன பண்ணுது? நர்ஸ் கூப்பிடவா?”

“அவர், பிரபா எங்கம்மா? அவர் இன்னுமா வரல?” அழுகையில் உதடு துடிக்க, கலங்கிய கண்களுடன் கேட்டாள்.

“நேத்து என் மேல கோபமா இருந்தார்ம்மா. நான்தான் அவர் கோபப்படுற மாதிரி பேசிட்டேன். அதான் என் மேல கோபமா இருக்காரோ? அப்போ கூடப் பிரபா எனக்காக வராம இருக்க மாட்டாரேம்மா” அழுகையுடன் புலம்பும் மகளை என்ன சொல்லி சமாதானம் செய்வார் ராதா.

“அம்மா..” என்று அவள் குரல் உயர்த்தி அழைக்க, அந்நேரம் அறைக்குள் வந்தார் மரகதவல்லி.

“பிரியதர்ஷினி..” நெருங்கி வந்து அவள் தலையைத் தன் வயிற்றோடு சேர்த்தணைத்துக் கொண்டார்.

“அத்த அவரு எங்க?” அவரின் வயிற்றில் இருந்து முகத்தை நிமிர்த்திக் கேட்டாள்.

“அவனுக்கு ஒன்னும் இல்லடா. சின்னச் சர்ஜரிதான். டைட்டானியம் ராட் ஃபிக்ஸ் பண்ணியிருக்காங்க.. அவன் சீக்கிரமே..”

“டைட்டானியம் ராடா எதுக்கு? நீங்க என்ன அத்த சொல்றீங்க? அவருக்குச் சர்ஜரியா? அவரு எங்கத்தே? எனக்கு அவரைப் பாக்கணும்.. இப்பவே…” என்று கதறினாள்.

அவளுக்கு விஷயம் தெரியாது என்பதே மரகவதல்லிக்கு அப்போதுதான் விளங்கியது.

ராதா கையைப் பிசைந்து, “தர்ஷிம்மா” என்றழைக்க, “எனக்கு அவரைப் பாக்கணும். என்னை அவர்கிட்ட கூட்டிட்டு போங்க. அத்த அவர் எந்த ஹாஸ்பிடலில் இருக்கார். வாங்க நாம போவோம்” என்று படுக்கையில் இருந்து எழுந்தே விட்டாள்.

“தர்ஷிம்மா” என்று ராதா அவளைத் தடுத்துப் பிடிக்க, அவளோ பிடிவாதமாக நின்றாள்.

எப்படியும் அவளுக்கு விஷயம் தெரிந்துதானே ஆக வேண்டும்.

அப்பா, அண்ணன் என வெளியில் அனைவரும் காத்திருக்க, அவள் கண்ணில் அனைவரும் பட்டாலும், கருத்தில் பதியவில்லை.

“பிரபஞ்சன்” மட்டுமே அவள் மனத்தில் இருந்தான்.

ஐந்து மணி நேரங்களுக்கு முன்புதான் பிரபஞ்சனுக்கு அறுவை சிகிச்சை முடிந்து அவனை அறைக்கு மாற்றியிருந்தார்கள். அனைவரும் வெளியில் இருந்து அவனைப் பார்த்ததோடு சரி, அறைக்குள் யாரும் அனுமதிப்படவில்லை.

சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு, “பிரபஞ்சன், என் ஹஸ்பன்ட். என்னைப் பார்க்க அலோ பண்ண மாட்டீங்களா?” என்று அழுத்தமாகக் கேட்டாள் பிரியதர்ஷினி.

பிரபஞ்சன் கண் விழிக்கையில் அவன் கண்ணில் விழுந்தது மனைவியின் மதி முகம்தான். அதில் அவன் என்றும் காணும் மென்னகை தொலைந்து பதட்டம் கூடி ஒரு சிதைந்த சிலையாய் அமர்ந்திருந்தாள்.

ஆனாலும் அவன் பார்க்கத் துடித்த காதல் இன்று அவளின் கண்கள் தாண்டி முகம் முழுவதுமே அப்பிக் கிடந்தது. இந்தக் காதல்தானே அவனை ஒற்றைக் காலில் நிற்க வைத்து அவளையே பற்ற வைத்தது.

இன்றைய விடியல் அவனுக்கானது போலும்.

அவனுக்காக அவனின் பிரியமும் ஒற்றைக் காலில் நின்று அவனுக்காகவே அவன் கைப்பற்றி அவனருகில் தலை சாய்த்து அமர்ந்திருந்தாள்.

“பி..ரி..யா..” அவன் குரலே அவனுக்குக் கேட்கவில்லை.

“பிரியா” என்றான் தொண்டையைச் செருமி சத்தமாக. படக்கென்று கண் விழித்து, “பிரபா” என்றாள் கலங்கிய குரலில்.

அவன் அவளின் ‘காதலன்‘ என்ற உணர்வெல்லாம் உரைக்கவில்லை அந்த நொடி. தன் இடது கால் கட்டையே மறந்து ஒரு வேகத்தில் காலை ஊன்றி எழுந்து விட்டாள்.

“பிரபா..” வலியில் துடித்து, சட்டென உடலின் பாரத்தை வலது காலுக்கு மாற்றினாள்.

பிரஞ்சனின் வலது கை அசைந்து மனைவியைத் தாங்கி பிடிக்க முடியாமல் தவித்தது. அந்தத் தவிப்பெல்லாம் இனி அவனுக்கு வேண்டாம் என்று அவளே தாவி அவன் கழுத்தில் கரம் கோர்த்து கட்டிக் கொண்டு, “பிரபா” என்று கதறினாள்.

“அழாத..” என்றவன் குரலும் உணர்ச்சி மிகுதியில் கலங்கி கரகரத்து ஒலித்தது.

“பயந்துட்டேன் பிரபா”

“நானும்..”

“பயமுறுத்திட்டீங்க என்னை..” அவன் கழுத்தில் முகம் புதைத்து கண்ணீருடன் கதறினாள். அவன் கண்களும் கன்னத்தை நனைத்தது.

மெல்ல நிமிர்ந்து அவன் முகம் பற்றி அழுத்தமாக இதழ் ஒற்றினாள். அக்கணம் கண்ணீரின் உவப்பும் ஏனோ இனித்தது பிரபஞ்சனுக்கு.

“பிரியா..”

இப்போது கன்னத்தில் முத்தமிட்டாள்.

“பிரியா..” என்ற குரலில் அப்படியொரு அவசரம். காதலைக் கடத்தும் கடைசி நிமிட அவஸ்தை அவனிடம்.

“பிரியா.. சாரி..” அவன் கன்னத்தின் கண்ணீரோடு காதல் பரிசாய் உறைந்திட்டது அவள் உதடுகள்.

மெல்ல விழிகளை விரித்து அவனைப் பார்த்தாள்.

அவள் கைகளுக்காகக் கை நீட்டி, “ஐ அம் சாரி பிரியா” என்றான் உணர்ச்சி வசப்பட்டு.

அவன் முகத்துக்கு நேராக அவள் முகம் இருக்க, அவளையே இமைக்காமல் பார்த்தவன், “ஐ லவ் யூ பிரியதர்ஷினி” என்றான்.

“பிரபா..” திகைத்து விழிகள் விரிய அவனைப் பார்த்திருந்தாள்.

அவளின் முகத்தைக் காணும் போதெல்லாம் அவனுள்ளே அடங்கியிருக்கும் கங்கினை ஊதி பற்ற வைத்து விடுகின்றன உணர்வுகள்.

மறுநொடி, “ஐ லவ் யூ” மனம் திறந்து தன் காதலைச் சொல்லி விட்டான். தன் பிரியத்தை உரியவளிடம் சேர்ப்பித்து விட்ட நிம்மதி அவனிடம். நீண்ட பெருமூச்சொன்று நிம்மதியின் அடையாளமாய் வெளிவர காதலின் சுவாசம் மனம் நிறைத்திட மெல்ல தன் கண்களில் பிரியத்தை நிரப்பிக் கண் மூடினான் பிரபஞ்சன்.

error: Content is protected !!
Scroll to Top