இரவு முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. அந்தப் பல்நோக்கு மருத்துவமனை அவ்விரவிலும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.
“அப்பா..” தீனமான குரலில் பிரியதர்ஷினி அழைக்க, “இரு குட்டிம்மா. இப்போ டாக்டர் வந்துடுவாங்க” என்று அவளின் கைப் பிடித்துத் தைரியம் கூறினார் மாணிக்கவேல்.
பிரியதர்ஷினி மாடிப் படியில் இருந்து வழுக்கி விழுந்ததில் மயங்கியிருந்தாள். இடது காலில் கணுக்காலுக்குக் கீழே நன்றாக வீங்கியிருந்தது. அவளின் வலது நெற்றி படிக்கட்டின் விளிம்பில் மோதியதில் ஆழமான வெட்டுக் காயம், அதனால் ஏற்பட்ட ரத்த போக்கு அவள் முகம் முழுக்க ரத்த கறையை உருவாக்கி இருந்தது.
குறுகிய படிகளில் தாறுமாறாக விழுந்ததில் உடலெங்கும் நிச்சயமாக அடிபட்டிருக்க வேண்டும் என்று கணித்தார் ராதா.
“உடம்புல எங்கங்க அடிபட்டு இருக்குன்னு தெரியல, கவனமா தூக்குப்பா” என்று மகனை எச்சரித்தார் மாணிக்கவேல்.
“ஆம்புலன்ஸுக்கு கால் பண்ணிடலாம். அவங்க வந்தா ஃபர்ஸ்ட் எயிட் பண்ணிடுவாங்க” என்று ராதா சொல்ல, “வேணாம். அதுக்கெல்லாம் வெயிட் பண்ணிட்டு இருக்க முடியாது. அதுவும் இந்த மழை நேரத்துல எதுக்கு ரிஸ்க் எடுத்துட்டு? நீ காரை எடு பிரகாஷ்” என்று மகனிடம் கத்தினார் அவர்.
காரில் பயணிக்கும் போதும், “தர்ஷி” என்று தவித்து விட்டார்.
“நீங்க மாப்ளைக்குப் போன் போடுங்க. தர்ஷி கீழ விழுந்துட்டா, நாம ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறோம்னு அவர்கிட்ட சொல்லணும்”
“ஹாஸ்பிடல் போய்ட்டு போன் பண்ணிக்கலாம் ராதா”
“என்ன பேசுறீங்க நீங்க? உங்க பொண்ணு அடிபட்டு மயங்கிட்டா, மாப்ளக்கு சொல்லியே ஆகணும். அவரு அரை மணி நேரத்துல வர்ற தூரத்துலதானே இருக்கார். நாம இப்போ சொல்லாம விட்டா, அவங்க மாமியார் கோபிச்சுப்பாங்க. அதுவும் இல்லாம உங்க மக கண்ணு முழிச்சதும் முதல்ல உங்க மருமகனைத்தான் தேடுவா பாருங்க” என்று அவர் சொல்லவும், மனைவியை முறைத்தவர் அப்போதும் மாப்பிள்ளைக்கு அழைக்கவே இல்லை.
“குட்டிமா, அப்பா பாரு” என்று பரிதவித்துக் கதறிக் கொண்டிருந்தார். ராதா அலைபேசியை எடுத்து தானே பிரபஞ்சனை அழைத்து விவரம் பகிர்ந்து விட்டார்.
அவன் குரலில் இருந்த பதட்டம், சில நொடிகள் அவன் உறைந்து பேசாமல் இருந்ததில் அவரே பயந்து போனார்.
மகனிடம் திரும்பி, “மாப்ள நேரா ஹாஸ்பிடல் வந்துடுறாராம். வெளிலதான் இருக்கார் போல, கொஞ்ச நேரத்துல வந்துடுவார். நீ வேகமா போ பிரகாஷ்” என்றார்.
“தர்ஷிம்மா” மாணிக்கவேல் மடியில் இருந்த மகளின் முகம் வருடி அழைக்க, இறுக மூடியிருந்த அவள் கண்கள் மெல்ல சுருங்கின. புருவங்கள் சின்னதாக ஒன்றையொன்று தொட முயல, “பி..ரபா..” என்று முனங்கினாள்.
அப்பா என்று அவர் காதில் விழ, “அப்பா, இங்கதான் குட்டிம்மா. அப்பா இருக்கேன். உனக்கு ஒன்னும் இல்ல. பயப்படாத, இந்தா ஹாஸ்பிடல் போயிடலாம்..” என்றார் வேகமாக.
“பி..ர..பா” இப்போதுதான் மகளின் அழைப்பே அவரின் மனத்தில் பதிந்தது. புருஷனை தேடுகிறாள் பெண். அவன் குரல் என நினைத்துதானே அத்தனை வேகமாகக் கீழிறங்கினாள். அவளின் ஆழ்மனம் இப்போதும் பிரபஞ்சனையே தேடியது.
“பி..ரபா” அவள் மீண்டும் மென்மையாய் அழைக்க, “மாப்ள வந்துட்டே இருக்கார். நீ தண்ணி குடுக்கறியா? அப்பா தண்ணி தரவா?” என்று கலங்கிய குரலில் கேட்டார்.
மெதுவாகக் கண்களைத் திறக்க முயன்றவள், சோர்வுடன் அப்படியே கண் மூடிக் கொண்டாள். இதோ மருத்துவமனையும் வந்து விட்டார்கள்.
“நீங்க வெளில இருங்க சார். நாங்க என்னன்னு பார்க்கறோம்” மருத்துவர் சொல்ல, “இல்ல, நான் இங்கேயே இருக்கேன்” கையைப் பிசைந்து கொண்டு கலங்கிய கண்களுடன் சொன்னார் மாணிக்கவேல். அவரின் செல்ல மகள், அவரின் கண் முன்னே புயலில் சிக்கிய செடியாகத் துவண்டு கிடக்கிறாள். அவளை அப்படியே விட்டுவிட்டு எப்படிச் செல்வார் அவர்.
“கால் வலிக்குதுப்பா” கண்ணீருடன் சொன்னாளே. அவரால் எப்படித் தாங்கி கொள்ள முடியும். மகளின் வலியை தான் வாங்கிக் கொள்ள முடிந்தால், நிச்சயமாக அதைச் செய்திடுவார் அவர்.
“சார், பிளீஸ்” மருத்துவர் கோபமும், கண்டிப்புமாகச் சொல்ல, “நீங்க இப்படி வாங்க முதல்ல, தர்ஷிய டாக்டர் செக் பண்ணட்டும்” ராதாதான் கணவரை கைப் பிடித்து வெளியே இழுத்துப் போனார்.
நொடிகள், நிமிடங்களை விழுங்க, பதைபதைத்து அமர்ந்திருந்தார்கள் மூவரும்.
சற்று நேரத்தில் மருத்துவர் உள்ளே அழைக்கக் கிட்டத்தட்ட ஓடினார் மாணிக்கவேல்.
பிரியதர்ஷினியின் நெற்றி காயத்தில் ஆறு தையல் போட்டிருந்தார்கள். சற்றே ஆழமான காயம், ஆற சில வாரங்கள் எடுக்கும் என்றார் மருத்துவர்.
“தர்ஷி கீழ விழுந்ததும் மயங்கிட்டா.. நாங்க பார்க்கும் போதே மயங்கிதான் இருந்தா. அதுனால ஒரு ஹெட் ஸ்கேன் எடுத்துப் பார்த்துடலாமா டாக்டர்? நீங்க என்ன சஜெஸ்ட் பண்ணுவீங்க?” மாணிக்கவேல் மருத்துவரிடம் கேட்க, “அது ஷாக்னால மயக்கம் வந்திருக்கும். அவங்களுக்குத் தலையில வேற காயம் இல்லையே. சோ, ஸ்கேன் ஐ டோண்ட் ரெக்கமெண்ட்..” என்று அவர் சொல்லி முடிக்கவில்லை.
“இல்ல, பொண்ணு மயங்கிட்டாளே.. கார்ல வரும் போதுதான் மயக்கம் தெளிஞ்சது. நாம எதுக்கும் ஒரு ஸ்கேன் எடுத்து பார்த்துட்டா நல்லதுதானே? நாங்களும் பயமில்லாம இருப்போம் இல்ல?” என்று கேட்டார். மருத்துவர் சொன்ன எதுவும் அவர் காதில் விழுவதாக இல்லை. மகளின் உடல்நிலை மட்டுமே அவருக்கு முக்கியமாகப் பட்டது.
“ஓகே, அவங்க காலுக்கு எக்ஸ்ரே எழுதறேன். அத்தோட ஹெட்க்கு சிடி ஸ்கேனும் சேர்த்து எழுதித் தாரேன். நீங்க இப்பவே ரெண்டும் எடுத்துட்டு அதோட ரிப்போர்ட்டும் வாங்கிட்டு வாங்க” என்றார் மருத்துவர்.
பிரியதர்ஷினி அறையில் இருந்தாள். வலி, உறக்கம், மயக்கம் என மூன்றும் கலந்த நிலையில் மிகவும் பலவீனமாக உணர்ந்தாள்.
பிரகாஷ் அவளோடு இருக்க, அந்நேரம் அறைக்குள் நுழைந்தார்கள் அவளின் பெற்றோர்.
செவிலி அவளை ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரேவுக்கு அழைத்துச் செல்ல தயார்படுத்த வந்தவர், “நீங்க வெளில இருங்க” என்றார், அவளது குடும்பத்தினரிடம்.
“அப்பா, பிரபா.. அவர வரச் சொல்லுங்கப்பா.. என் போன் எங்கம்மா? அவருக்குக் கால் பண்ணுங்களேன். நான் கால் பண்ணா உடனே வந்துடுவார்” என்றாள் கலங்கிய கண்களுடன், தொண்டை அடைக்க. அவளுக்குத் தெரியும் கணவனைப் பற்றி. அவள் மேல் அதிக நேரம் அவனால் கோபமாகவெல்லாம் இருக்கவே முடியாது.
அவள் கோபமாக முறுக்கி கொண்டு முகம் திருப்பினாலும், அவனாக வந்து அவளிடம் பேசிடுவான். அவன் கரம் இயல்பாக அவளின் பாதம் பற்றிடும். இப்போது அந்தப் பாதத்தை அவளால் லேசாக அசைக்கக் கூட முடியவில்லை. காலை அசைக்க முயன்றாலே, சுண்டி இழுத்தது வலி.
இப்போது தன் பாதத்தை மென்மையாய் பற்றும் முரட்டு கரங்களுக்காக ஏங்கினாள் அவள்.
மகளை நெருங்கி, அவளின் தலைக் கோதினார் ராதா.
“அம்மா போன் பண்ணி சொல்லிட்டேன் டா. மாப்ள வந்துட்டே இருக்கார்” அதைக் கேட்டதும் வலியை மீறிய புன்னகை அவள் முகத்தை நிறைத்தது. நெற்றி காயத்தின் காரணமாகத் தலை வேறு விண்விண்னென்று வலியில் தெறிக்கக் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
அப்போது அவளை ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க அழைத்துச் சென்றார் செவிலி. ராதா மட்டும் மகளுக்குத் துணையாகச் செல்ல, மாணிக்கவேல், பிரகாஷ் அங்கேயே காத்திருந்தார்கள்.
பிரகாஷ் சென்று அப்பாவுக்குக் குடிக்கத் தண்ணீரும், தேநீரும் வாங்கி வந்தான்.
“இந்தாங்கப்பா டீ குடிங்க” என்று அவன் நீட்ட, “தர்ஷி வரட்டும்ப்பா” என்று அவள் போன திசையைப் பார்த்தபடியே மறுத்தார்.
“அவளுக்கு ஒன்னும் இருக்காது. நீங்க டீயை குடிங்கப்பா” என்று அதட்டினான். இரவு உணவு அவர்கள் யாரும் உண்டிருக்கவில்லை. காலியான வயிறு கவலையை அதிகரிக்கச் செய்தது. ஆக, கொஞ்சம் இனிப்பு உள்ளே சென்றால் தெம்பாக இருக்கும் என்றே வாங்கி வந்து கட்டாயப்படுத்தி அவரைக் குடிக்கச் செய்தான்.
அரைக் கோப்பை தேநீரை கூட அருந்தியிருக்க மாட்டார். அந்நேரம் அவரது அலைபேசி சத்தமாக அலறியது. இரவு நேர மருத்துவமனையின் அமைதியை கத்தி கிழித்தது அந்தச் சத்தம்.
அதனால் வேகமாக அழைப்பை ஏற்று அலைபேசியைக் காதுக்குக் கொடுத்து, “ஹலோ..” என்றார். மறுகணம் காதில் விழுந்த செய்தியில் அவரின் கையில் இருந்த தேநீர் கோப்பை நழுவி தரையில் சிதறியிருந்தது.
“அப்பா, என்னப்பா? என்னாச்சு?” பிரகாஷ் பதறி அப்பாவின் தோள் பிடித்துத் தாங்கி கேட்க, “மாப்ள.. மாப்ள.. ஆக்சிடென்ட்.. சொல்றாங்க” அதைச் சொல்வதற்குள் அவருக்கு நெஞ்சடைத்துக் கொண்டது.
“ப்பா, தண்ணிய குடிங்க. போனை குடுங்க. நான் பேசறேன்” என்று எட்டி அப்பாவின் கையில் இருந்த அலைபேசியைப் பறித்தான். அவரை இருக்கையில் சாய்ந்து அமரச் செய்தான்.
இமைக்கும் பொழுதில் அலைபேசியைத் தன் காதுக்குக் கொடுத்து, “சொல்லுங்க. என்னாச்சு?” என்று விசாரித்தான்.
இது என்ன இப்படியொரு சோதனை? அவனுக்கு நெஞ்சம் படபடத்து பகீர் என்றது. அதெப்படி ஒரே நாளில் நெருங்கிய இருவருக்கும் விபத்து நிகழும்.
தங்கை இதை எப்படித் தாங்கி கொள்வாள்? அவள் கண் விழித்ததும் கணவனைத்தானே கேட்டாள். அவளிடம் இந்தச் செய்தியை எப்படிச் சொல்வான்? உடைந்து போவாளே.
“ஹலோ, நான் பிரபஞ்சனோட மச்சான். நீங்க அவரை இந்த ஹாஸ்பிடல் கொண்டு வர முடியுமா பிளீஸ்? நாங்க.. இங்கதான் இருக்கோம். அதுனால நீங்க அவரை இங்க கூட்டிட்டு வந்துட்டீங்கன்னா எங்களுக்கு வசதியா இருக்கும்” என்று கெஞ்சி கேட்டுக் கொண்டான். அவன் மருத்துவனையின் பெயரை குறிப்பிட, “அது எங்களுக்கு இங்கருந்து பக்கம்தான் சார், நாங்க வந்துடுறோம்” என்று சொன்னார்கள்.
“அப்பா, பிரபஞ்சனுக்குப் பயப்படுற மாதிரி ஒன்னுமில்லன்னு சொல்றாங்க. பிளீஸ், ஸ்டே ஸ்ட்ராங்” என்று உண்மையைத் திரித்துச் சொல்லி, அப்பாவை திடப்படுத்தி விட்டு மருத்துவமனை வாயிலுக்கு ஓடினான் அவன்.
பிரபஞ்சனின் வருகைக்காகக் காத்திருந்தான். அவன் வரும் முன் பிரியதர்ஷினி பரிசோதனைகள் முடித்து வந்து விட்டாள்.
மகள், அப்பாவின் கலங்கிய கண்களைப் பார்த்து, “ப்பா, எனக்கு ஒன்னுமில்லன்னு சொல்லிட்டாங்க.” என்றாள் அவரைத் தேற்றும் விதமாக.
“அவருக்குப் போன் பண்ணேன்னு அம்மா சொன்னாங்க. அவரை எங்கப்பா இன்னும் காணோம்? நீங்க போன் பண்ணியிருந்தா இந்நேரத்துக்கு வந்திருப்பாரே. பிரபா என்னப்பா சொன்னார்?” நெற்றி காயம் தந்த வலியில் முகம் சுருங்க, எதிர்பார்ப்புடன் அவர் முகம் பார்த்து கேட்டாள் பிரியதர்ஷினி.
“அதும்மா..” என்று சொல்வதற்குள் இரண்டு முறை தொண்டையைச் செருமி விட்டார் மனிதர். மனைவியின் கண்களை நிமிர்ந்து நேராக நோக்க முடியவில்லை அவரால்.
ராதா வேறு என்ன, என்னவென்று கண்ணால் கேள்வி கேட்க, மனைவியின் பார்வையைத் தவிர்த்தார் மனிதர். மனைவியைத் தனியாக அழைத்துத் தகவல் சொல்லி விடுவார். ஆனால், மகளிடம்? ஏற்கனவே கணவனைக் காண துடிப்பவளிடம், உண்மையைச் சொல்ல முடியாமல் அவருக்கு வார்த்தைகள் சிக்கின.
“ஒருவேள அவர் இன்னும் ஆஃபீஸ்ல இருந்து வரலையோப்பா? பாவம், பிசியா இருந்திருப்பார். நான் போன் பண்ணா வந்திடுவார். என் போனை எங்கம்மா? குடுங்க, நான் அவருக்குக் கால் பண்றேன்” என்று மகள் கையை நீட்டி அடமாகக் கேட்க, மாணிக்கவேல் உடைந்து போனார். மகளிடம் கண்ணீரை காண்பிக்க விரும்பாமல், சட்டெனத் திரும்பி அவளுக்கு முதுகு காட்டி நின்றார்.
“உன் போன் வீட்லேயே விட்டுட்டோம் போலத் தர்ஷி. இரு, ஃபர்ஸ்ட் டாக்டர் பார்த்திட்டு வந்துடுவோம். அப்புறமா நீயே மாப்ளைக்கு அடிச்சு பேசு” என்று மகளைச் சமாதானப்படுத்தினார் ராதா.
“இப்ப பேசுறேனே மா” என்று கெஞ்சினாள் மகள்.
“மேடம், உங்களுக்காக டாக்டர் வெயிட் பண்றாங்க, வாங்க” என்று செவிலி கடிந்து கொள்ளவும், மருத்துவர் அறையை நோக்கி சென்றார்கள் அவர்கள்.
“என்னங்க? என்னாச்சு? மாப்ள ஏன் இன்னும் வரல?” ராதா, கணவரின் கைப் பிடித்துச் சிறு குரலில் கேட்க, “மாப்ள..” என்று கிசுகிசுத்து மகளைப் பயத்துடன் பார்த்தார் அவர்.
பிரியதர்ஷினி சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டிருந்தாள். செவிலி அவளைத் தள்ளிக் கொண்டு நடக்க, தலையைப் பின்னே திருப்பி, “ப்பா, உங்க போனை குடுங்க. நான் அவருக்குக் கால் பண்ணணும்” என்று கிளிப் பிள்ளை போலக் கேட்டதையே கேட்டாள் அவள்.
“என் போனா குட்டிம்மா..” அலைபேசியைக் கையில் வைத்துக் கொண்டு என்ன சாக்கு சொல்ல முடியும் அவரால்?.
“டாக்டர் ரூம் வந்திருச்சு. அவங்க என்ன சொல்றாங்கன்னு கேட்போம் தர்ஷினிம்மா. நீ இப்படிக் கீழ விழுந்ததுக்கே மாப்ள கோபிச்சுக்கப் போறார்” என்று ராதா மகளின் சிந்தனையைத் திசைத் திருப்ப சொல்ல, “ம்ஹும், அவர் என்னைய கோபிக்க மாட்டார். எனக்கு அடிப்பட்டிருக்குன்னு தெரிஞ்சா அப்படிப் பார்த்துப்பார்..” கடைசி வாக்கியத்தைச் சொல்கையில் அவள் முகத்தை நிறைத்திருந்தது மென்னகை. உள்ளத்தின் ஆழத்தில் இருந்து உணர்ந்தே அந்த வார்த்தைகளை வெளிப்படுத்தினாள்.