மரகதவல்லி மிஸ் வீடு அப்போது, அவர்கள் வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளி இருந்தது. அவர்கள் தனி வீட்டில் தரைத் தளத்தில் வாடகைக்கு இருந்தார்கள். மாடியில் வீட்டின் உரிமையாளர் வசித்தார்கள். மரகதவல்லி மிஸ் வீட்டுக் கூடத்தில்தான் அவர்களின் டியூஷன் வகுப்புகள் எடுக்கப்படும்.
அன்று மாலை டியூஷன் முடிந்து வெளியே வரும் வேளையில், மாடி படிக் கூண்டின் உள்ளிருந்து சின்னதாய் முனங்கல் போன்றதொரு சத்தம் வரவும், ஆர்வ மிகுதியில் அதன் பக்கத்தில் சென்றாள் பத்து வயது பிரியதர்ஷினி.
மெல்ல அவள் குனிந்து பார்க்க அவளின் காலடியில் பழுப்பு நிற பந்து உருண்டது.
அந்தப் பந்துக்கு நான்கு கால்கள். நாக்கை நீட்டியது நாய் குட்டி. புசுபுசுவெனக் கரடி பொம்மை போன்று முடியுடன் இருந்தது, அவள் காலை உரசி, எச்சில் செய்தது. குட்டி கண்களுடன் நாக்கை நீட்டி அவளை நிமிர்ந்து நோக்கியது. அதன் அழகில் மயங்கி அதைக் கையில் தூக்கி விட்டாள். அவ்வளவுதான், வரிசையாக மேலும் மூன்று வந்தன.
“அய்யோடா” என்று செல்லம் கொஞ்சி, மினுமினுத்த கருப்பு குட்டியையும் இன்னொரு கையில் தூக்கி விட்டாள். அவளின் புத்தகப்பை ஓரமாகக் கவிழ்ந்து கிடந்தது. அப்போது லேசான உறுமல் சத்தம் கேட்டது அவளுக்குக் கேட்கவில்லை. அவள் கவனமெல்லாம் கையிலிருந்த நாய் குட்டியின் மீதுதான் இருந்தது.
அவள் கையை உரசி, முகர்ந்து, நக்கின. அவளுக்குக் கூச்சத்தில் சிரிப்பு வந்தது.
“ச்சீ, எச்சி பண்ணாத” என்று செல்லமாய் மிரட்டி எச்சரித்தாள். அவை இரண்டையும் குழந்தையைப் போல ஒரு கையில் வைத்துக் கொண்டு அதன் முதுகை தடவினாள். மேலும் இரண்டு குட்டிகள் அவள் கால் முட்டியை உரசின.
“உங்களையும் தூக்கணுமா?” கொஞ்சி கேட்டபடி அவள் கையை நீட்ட, வள்ளென்று கத்தி உறுமியபடியே அவள் முன் வந்து நின்றது ஒரு பெரிய உருவம். பயந்து விட்டாள்.
“அய்யோடா” அப்படியே அரண்டு பின்னால் சரிந்திருந்தாள். அவள் தலை தரையில் மோதும் முன் ஒரு கரம் அவளைத் தாங்கி பிடித்தது. பயத்தில் உடலை உதறி சிலிர்த்து அவள் நிமிர, “ஏய் ப்ளூ, தூர போ” என்று நாயை மிரட்டி துரத்தினான் அவளைத் தாங்கி பிடித்திருந்தவன். அவள் மேல் புரண்டு கொண்டிருந்த நாய்க் குட்டிகளைத் தூக்கி அதன் தாயிடம் விட்டான். மறுகணம் அவளை ஒற்றைக் கையால் தூக்கி நிற்க வைத்திருந்தான். அவளுக்கும், தாய் நாய்க்கும் நடுவே பாதுகாப்பாக நின்றிருந்தவனை அவள் பார்க்க, அவன் கண்கள் ஒரு நொடிக்கும் மேலாக அவள் மேல் அழுத்தமாகப் படிந்து மீண்டன. சட்டென அவளை விட்டு ஒதுங்கினான்.
“ப்ளூ” என்றழைத்த நாயை அதன் இடத்துக்கு விரட்டி விட்டான்.
அவன், பிரபஞ்சன்!
அவர்களின் முதல் சந்திப்பு அப்படித்தான் நிகழ்ந்தது.
நல்ல உயரம், அவனை அண்ணாந்து பார்க்க வேண்டியிருந்தது அவள். அவனது பக்கத்தில் அவளையே குறுகுறுவெனப் பார்த்தபடி நின்றிருந்தவன் அவனது நண்பன் பார்த்திபன் எனப் பின்னாளில் தெரிந்து கொண்டாள்.
“தர்ஷி, வா வீட்டுக்குப் போகலாம்” என்று அவளின் அண்ணன் வரவும், அவனோடு சென்றாள் அவள். அதற்கு முன்பே, “நாய்க் குட்டியை தொடக் கூடாது, அவங்கம்மா கடிக்க வரும்” என்று போகிற போக்கில் அவளை எச்சரித்து விட்டு விலகியிருந்தான் பிரபஞ்சன்.
மறுநாள் மாலை மரகதவல்லி மிஸ் மகன் அவன் எனத் தெரிந்து கொண்டாள்.
மூன்று வாரங்கள் கழித்து அவள் செல்லம் கொஞ்சிய பழுப்பு நிற நாய்க்குட்டி, அவளுக்கு மிகப் பிடித்த கறுப்பு நிற கழுத்து பட்டையோடு அவர்கள் வாசலில் கட்டப்பட்டிருந்தது.
“அய்யோடா, அ…ம்மா நாய்க் குட்டிம்மா” என்று அவள் அதிசயிக்க, “ஐய்ய” என்று முகம் சுளித்தான் அவளின் அண்ணன் பிரகாஷ்.
“இத யாரு இங்க கொண்டு வந்து விட்டது?” அம்மா ராதா கடுப்புடன் கத்த, “இது எங்க மிஸ் வீட்ல இருந்த குட்டிம்மா. அவங்க ஹவுஸ் ஓனர் நாய் வளர்க்கறாங்க இல்ல, அது குட்டி போட்டு இருக்கு. இவ அதைப் போய் எட்டி எட்டி பார்த்தத நான் பாத்தேன், அதுக்குத் தெரியாம தூக்கிட்டு வந்துட்டா போல” அம்மாவிடம் அவளைப் போட்டு கொடுத்து விட்டான் பிரகாஷ்.
“குட்டியை பேக்ல ஒழிச்சு வச்சுக் கொண்டு வந்தியா?” அண்ணன் மிரட்டி கேட்க, “ம்மா, இன்னைக்குச் சண்டே நான் டியூஷன் போகவே இல்லம்மா” என்று கத்தினாள் அவள்.
“தர்ஷி” என்று அம்மாவும் அவளைச் சந்தேகத்துடன் பார்க்க, அவர்களை நோக்கி எகிறி குதித்துக் குரைத்தது நாய்க்குட்டி.
“அழகா இருக்கும்மா, குட்டியா, க்யூட்டா” கண்ணில் இதயம் வைத்த ஸ்மைலிகள் போல முகத்தை வைத்துக் கொண்டு அவள் சொல்ல, “குட்டியா இருக்கும் போது எல்லாம் க்யூட்டாதான் இருக்கும்” என்று சொல்லி, அம்மாவிடம் திட்டு வாங்கினான் அவளின் அண்ணன்.
அதற்குள் நாய்க்குட்டியின் பக்கம் சென்று குனிந்து அதன் தலையைத் தடவினாள். அதன் வால் கழண்டு விடும் போல அப்படியொரு ஆட்டம் ஆட்டியது.
“ச்சீ அத தொடாத தர்ஷி” என்று பிரகாஷ் அவளைப் பிடித்து இழுக்க, அவனை நோக்கி பாய்ந்து குரைத்தது.
“ஹேய்” என்று ராதா அதனை அதட்ட, முன்னங்கால்களை முன்னே நீட்டி அதன் உருவத்துக்குச் சம்மந்தமே இல்லாத சத்தத்தில் குரைத்தது.
வீட்டினுள்ளிருந்து வெளியே வந்த மாணிக்கவேல், சிரித்தபடியே, “இது சைஸுக்குச் சவுண்டை பார்த்தியா?” என்று கேட்டார்.
“அப்பா, நாம இத வளர்க்கலாமா?” ஆசையுடன் கேட்டாள் பிரியதர்ஷினி.
“ச்சீ வேணாம்ப்பா” என்றான் பிரகாஷ்.
“நாய்க்குட்டிக்குப் பதிலாதான் உன்னை வளர்க்கறாங்க அம்மாப்பா. அப்புறம் நீ எங்க போவ?” என்று அவளைக் கேட்டு, அப்பாவின் முறைப்பையும், அம்மாவிடம் கொட்டும் வாங்கினான் அவன்.
“அப்பா பிளீஸ்ப்பா” அவள் கெஞ்ச, அது வேகமாக வாலாட்டியது. மாணிக்கவேல் கை நீட்டவும் நக்கி கொடுத்தது.
“வேணாம்ங்க. நாய் வளர்க்க வீட்ல ஆள் இருக்கணும். நம்மளால முடியாது” என்ற ராதா, “ஆமா, இந்தக் குட்டி முதல்ல எப்படி இங்க வந்துச்சு?” என்று சந்தேகமாகக் கேட்டார்.
“அதானே, இவதான் தூக்கிட்டு வந்திருப்பா” அவளைக் கைக் காட்டினான் பிரகாஷ்.
“மரகதவல்லி மிஸ் வீட்டு நாய்க்குட்டிப்பா” என்று அவன் சொல்ல, அடுத்தப் பத்தாம் நிமிடம் அவர் வீட்டில் இருந்தார்கள்.
கிரிக்கெட் மட்டையுடன் வியர்த்து வழிந்தபடி அவர்களுக்குக் கதவைத் திறந்து விட்டது பிரபஞ்சன்தான். அவனோடு கையில் கிரிக்கெட் பந்துடன் நின்றிருந்தான் பார்த்திபன்.
“அம்மா இல்ல தம்பி?” மாணிக்கவேல் கேட்க, “அம்மா” என்று உள்நோக்கி கத்தினான்.
“வாங்க, வாங்க” என்று அவர்களை வரவேற்ற மரகதவல்லி, அந்த நாய்க்குட்டியை அவர்கள் வளர்க்க அனுமதி வாங்கிக் கொடுத்து விட்டார். அதற்கு மேல் அங்கே விசாரணை எல்லாம் யாரும் நிகழ்த்தவில்லை.
“அய்யோ க்யூட்டா இருக்குப்பா” என்று அதைக் கையில் வைத்து கொஞ்சியபடியே அவள் செல்ல, “இங்க இருந்த நாய்க்குட்டி எப்படி அவங்க வீட்டுக்கு போச்சு?” என்று மகனிடம் கேட்டுக் கொண்டிருந்தார் மரகதவல்லி.
“நாங்க விளையாட போகும் போது எங்க கூடவே வந்துச்சு மிஸ். அப்படியே அங்கேயே மறந்து விட்டுட்டு வந்துட்டோம் போல” என்று சமாளித்தான் பார்த்திபன்.
மரகதவல்லி இருவரையும் முறைத்து விட்டு உள்ளே செல்ல, “எதுக்குடா அந்தக் குட்டியை தூக்கிட்டு போய் அந்தப் பொண்ணு வீட்ல விட்ட?” என்று பார்த்திபன், பிரபஞ்சனிடம் கேட்டது அவள் காதில் விழுந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அங்கே வாசலில் நின்று செருப்பு போட்டுக் கொண்டிருந்த பிரகாஷின் காதில் விழுந்திருந்தது.
அவர்களின் திருமணச் சமயத்தில்தான் இதெல்லாம் ஒன்றும் ஒன்றும் மூன்றென அவளுக்கு விளங்கவே செய்தது. பிரகாஷ் பொறுப்பாகப் போட்டுக் கொடுத்திருந்தான்.
அதைப் பற்றிப் பிரபஞ்சனிடம் கேட்டால், “எந்த நாய்க்குட்டி? நான் எப்போ உங்க வீட்ல விட்டேன்? என்ன கதை சொல்ற?” என்று குழப்பத்துடன் கேட்டு அவளைக் குழப்பியிருந்தான்.
இப்போது அதை நினைக்க, முதல் முதலாய் தாய் நாயிடம் இருந்து அவளை அவன் காத்த நினைவு வர, அவன் மேலிருந்த கோபம் குறைவது போலிருந்தது.
பிரபஞ்சன் எழுந்து பால்கனிக்கு சென்று விட, அவள் எழுந்து முகம் கழுவி உடை மாற்றிச் சமையல் அறை சென்றாள்.
“பிரியதர்ஷினி..” மரகதவல்லி அழைக்க, “காஃபி போட போறேன் அத்த. உங்களுக்கும் சேர்த்து போடவா?” என்று கேட்டு அவர் கேட்க வந்த கேள்வியைக் கேட்க விடாமல் செய்திருந்தாள்.
“கொஞ்சமா குடு” என்றார் அவர்.
பாலை அடுப்பில் ஏற்றி அது பொங்கி வர காத்திருந்தாள். கூடத்தில் பாடம் படித்துக் கொண்டிருந்த மாணவன், மரகதவல்லியிடம் சந்தேகங்கள் கேட்டுக் கொண்டிருந்தான்.
“மிஸ், கம்ப்யூட்டர் குரூப் எடுத்தா மெடிக்கல் ஃபீல்ட் எதுலயும் போக முடியாதா?” என்று மாணவன் கேட்க,
“முடியாதே, அதுக்கு நீ பயோ குரூப் எடுக்கணும்” என்று அவர் பதில் சொல்வது கேட்டது.
“கம்ப்யூட்டர் குரூப் எடுத்தா ஏதாவது ஹாஸ்பிடல் ஐடி டிபார்ட்மெண்டில் வேலை செய்யலாம். பெரிய பெரிய ஹாஸ்பிடல்லாம் சிஸ்டம்லதான் ப்ரிஸ்கிரிப்சன் கூடக் குடுப்பாங்க. அவங்களுக்கு ஐடி டிபார்ட்மெண்ட் முக்கியம் இல்லையா?” என்றவர், “உனக்கு மெடிக்கல்தான் படிக்க ஆசைன்னா பயோ குரூப் எடு. அதுல எவ்ளோ ஆப்பர்ச்சூனிட்டி இருக்கு தெரியுமா? டாக்டர் மட்டும் இல்ல மெடிக்கல் ஃபீல்ட்ல இன்னும் நிறைய..” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்க, அடுப்பில் பொங்கிய பாலை விட அதிகமாக அவள் மனம் கோபத்தில் பொங்கியது.
ஒரு காலத்தில் அவளுக்குக் கூட இப்படித்தான் வழிகாட்டியிருந்தார். அப்போது அவள் அவரின் மாணவி. அதுவே மகனின் மனைவியானதும் எப்படி, இப்படி மாறிப் போனார்?
அவளுக்கு மட்டும் தனி விதிமுறைகள் விதிக்க அவரால் எப்படி முடிகிறது?
“சர்ஜிக்கல் அசிஸ்டன்ட்னு ஒரு கோர்ஸ் இருக்கு. அது படிச்சா நீ ஆபரேஷன் பண்ற சர்ஜன் கூடவே நிப்ப, நல்ல வேல்யூ அந்தப் படிப்புக்கு..” என்று அவர் சொல்வதைக் கேட்டபடியே அவருக்கான காஃபியை அவர் முன் நீட்டினாள். அத்துடன் மாணவர்களுக்குச் சிற்றுண்டியும் இருந்தது.
மரகதவல்லி படிப்பு குறித்த சுவாரசிய பேச்சுடன் அவளைக் கவனிக்காமல் காபியை வாங்கி அருந்தினார். பிரியதர்ஷினி, பிரபஞ்சனுக்குக் காஃபி கொடுத்து விட்டு வந்து அங்கேயே நின்றாள்.
அப்போதுதான் அவளைக் கவனித்தார் அவர்.
“ரஞ்சன் கூட வெளில போய் இருந்தியா பிரியதர்ஷினி?”
“ஆமா மிஸ்”
“ஓ, எங்க போனீங்க ரெண்டு பேரும்?” என்று அவர் கேட்கும் போது பிரபஞ்சன் கூடத்துக்கு வந்திருந்தான்.
“அவர் ஆபீஸ் போனார் மிஸ்” என்றவள், “நான் இன்டர்வியூக்கு போனேன். காலையில் அவர்தான் கூட்டிட்டுப் போனார்” என்று நிதானமாகத் திரும்பி பிரபஞ்சனை கண் காட்டிச் சொன்னாள். இருவரையும் மாறி மாறிப் பார்த்த மரகதவல்லியின் கண்களில் அப்பட்டமான கோபம். அவளோ அதிகம் அலட்டிக் கொள்ளாமல் நின்றாள்.