பிரியதர்ஷினி மெல்லிய வெளிச்சம் நிறைந்திருந்த அபார்ட்மெண்ட் படிக்கட்டில் அமர்ந்திருந்தாள். பெரும்பாலானோர் மின்தூக்கியை பயன்படுத்துவதால் படிக்கட்டுப் பகுதியில் ஆள் நடமாட்டமே இல்லை. அதனால்தான் அங்கு அமர்ந்திருந்தாள்.
அவள் வீட்டுக்கு செல்ல வேண்டுமென்றால் கையில் சாவி இல்லையே. மேலும் சற்று நேரத்தில் மாமியார் வீடு திரும்பி விடுவார். அவரின் கேள்விகளுக்கு வேறு பதில் சொல்ல வேண்டும். அவளுக்கு இருக்கும் கோபத்தில் பேச்சு வாங்கவோ, பதில் பேசவோ தெம்பில்லை. அதனால் அங்கேயே அசையாமல் அமர்ந்திருந்தாள். எவ்வளவு நேரம் எனக் கணிக்கவில்லை, கணக்கிட கையில் கைக் கடிகாரமும் இல்லை. அலைபேசி வந்த பிறகு அதற்கு அவசியமின்றிப் போனதே.
சுவரில் சாய்ந்து கண் மூடி அமர்ந்திருந்தாள். கணவனின் மீதான கோபம் தந்த துக்கத்தில் தூக்கம் கூட அவளை அணுகவில்லை. ஆனால், அவன் அணுகினான். அவள் எங்கிருப்பாள் என்று அறிந்தவன் போல நேராக அங்கு வந்திருந்தான்.
“பிரியா” என்று அவளின் தோளை தொட்டு அழைத்தான். மாடிப் படிக்கட்டுக் கதவு திறக்கும் போதே அவனை உணர்ந்து விட்டாள். ஆனாலும் கண்ணைத் திறக்கவில்லையே அவள்.
பேண்ட்டை மேலேற்றி விட்டு பொத்தென்று அவள் பக்கத்தில் அமர்ந்தான்.
“ப்ச்”
“என்ன ப்ச்? எதுக்கு இப்படிச் சலிச்சுக்கற? நான் உன்னை வெயிட் பண்ண சொல்லிட்டுதானே போனேன்? அங்க இல்லாம எதுக்கு வீட்டுக்கு வந்த? என்ன அவசரம் உனக்கு? எப்படி வீட்டுக்கு வந்த? நான் அங்க ஹோட்டலுக்குப் போனா உன்னைக் காணோம். உன் ஹேண்ட்பாக், போன் எல்லாம் கார்ல இருக்கு. எங்க போன, என்னாச்சோன்னு பதறிட்டேன். நீ என்னன்னா கூலா இங்க வந்து உக்காந்து சில் பண்ணிட்டு இருக்க? என்ன பிரியா இது? பொறுப்பில்லாம?” என்று அடிக்குரலில் சீறினான்.
“பொறுப்புப் புடலங்கா பத்தியெல்லாம் யார் பேசுறாங்க, பாருங்க” கண்ணைத் திறக்காமலே பதிலுக்குச் சீறினாள்.
“ஏய், என்ன? உன் பேச்சு டோனே சரியில்லையே பிரியா?” அவள் தோளை தொட்டு உலுக்கினான்.
“எதுக்கு வீட்டுக்கு வந்தன்னு அசால்ட்டா கேட்கறீங்க?”
“அப்புறம் என்ன அழுதுட்டே கேட்கவா? கொஞ்ச நேரம் உன்னால வெயிட் பண்ண முடியாதா?”
“அது உங்களுக்குக் கொஞ்ச நேரமா? ஆல்மோஸ்ட் ஒன் அவர்” என்று கத்தினாள்.
“ஒன் அவரானா என்ன? வெயிட் பண்ண முடியாதா உன்னால? நான் சொல்லிட்டுதானே போனேன்?”
“நீங்க எப்போ வருவீங்கன்னு லூசு மாதிரி ஹோட்டல் வாசலை எட்டி எட்டி பார்த்துட்டே உக்கார்ந்திருக்கச் சொல்றீங்களா என்னை?”
“அப்போ வெயிட் பண்றது உன் பிரச்சினையில்ல. நான் வர மாட்டேன்னு நினைச்சுருக்க? அவ்ளோ நம்பிக்கை என் மேல, இல்லையா?”
“அய்யோடா, ப்ளேட்ட மாத்தாதீங்க” என்று பல்லை கடித்தாள். ஒட்டு மொத்த தவறும் அவள் மீது என்பது போல மாற்றி விட்டானே, திறமைசாலிதான்.
“வா, வீட்டுக்குப் போகலாம்” என்று எழுந்து கொண்டான்.
“நான் எப்படி வந்தேன்னு..”
“வந்துட்ட இல்ல பிரியா, அப்புறம் என்ன? வா” என்று விட்டு முன்னே நடந்தான். அவளுக்குக் கோப மிகுதியில் மூச்சு வாங்கியது.
“எவ்ளோ அசால்ட்டா வந்துட்ட இல்லன்னு சொல்றீங்க? கையில காசு, போன், வீட்டுச் சாவி எதுவும் இல்லாம, நான் எப்படி முழிச்சுட்டு நின்னேன் தெரியுமா?”
“யாரு உன்னை அப்படி நிக்கச் சொன்னது? சாப்ட்டு வெயிட் பண்ணத்தானே சொன்னேன் நான்?” சட்டெனத் திரும்பி குரல் உயர்த்தினான். அந்தக் கடுமையில் அனிச்சையாக அவள் முகம் சுருங்கி விட்டது.
“இங்க நின்னு கத்தாம வீட்டுக்கு வா” மீண்டும் அழுத்தமாகச் சொல்லி முன்னே நடந்தான். அவளுக்குக் கோபத்தில் தொண்டை வறண்ட உணர்வு, எச்சில் கூட்டி கோபத்தையும் சேர்த்தே விழுங்கினாள்.
இருவரும் வீடு வர, கூடத்தில் இரண்டு மாணவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார் மரகதவல்லி.
“காஃபி போடவா ரஞ்சன்? என்ன இன்னைக்குச் சீக்கிரம் வந்துட்ட?” என்று மகனிடம் கேட்டவர் கண்கள் மருமகளின் மீது அழுத்தமாகப் பதிந்தன.
அவள் நேர்த்தியான அலுவல் உடையில் இருந்தாள். அவளின் கைப்பை மகன் கையில் இருக்க, அவரின் கண்கள் கேள்வியாகச் சுருங்கின.
பிரியதர்ஷினி எதையும் பொருட்படுத்தாமல் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
“இன்னைக்குக் கொஞ்சம் ப்ரீம்மா, அதான் சீக்கிரம் வந்துட்டேன். காஃபி வேணாம். நீங்க பசங்களைக் கவனிங்க” என்றான்.
“பிரியதர்ஷினி எங்க..” என்ற அவரின் கேள்வியைக் காதிலேயே வாங்காமல் அவனும் அறைக்குள் சென்று மறைந்தான்.
அவன் மனைவி உடை கூட மாற்றாமல் கட்டிலில் கண் மூடி மல்லாந்திருந்தாள்.
அவளின் கைப்பையை அவள் கையருகில் வைத்து விட்டு ஓய்வறைக்குள் நுழைந்தான். பத்து நிமிடங்கள் கழித்து லகுவான இரவு உடைக்கு மாறி வந்தவன், கைப்பையை ஒதுக்கி, மனைவியின் இடையில் கைப் போட்டுப் படுத்தான்.
மின்னல் வேகத்தில் அவன் கையை உதறினாள் அவள்.
“சில்ல்ல் பிரியா”
“நீங்க இன்னைக்கு என்கிட்ட சிக்கினா சிறப்பா செய்யணும்னு இருந்தேன்”
மெதுவாகப் புரண்டு படுத்து, அவளின் முகம் பார்த்து, “செய்யேன், நான் வேணாம்ங்கலையே” என்று கண் சிமிட்டி மல்லாந்து படுத்தான். ஆவென்று அதிர்ச்சியில் வாயை திறந்தாள் அவள்.
“அதென்ன என்கிட்ட சிக்கினா? உன்கிட்ட வராம எங்க போகப் போறேன் நான்?”
“ம்ம், உங்க ஃப்ரெண்ட் பார்த்திபன் கிட்ட..” அவள் கோபத்தில் படபடக்க, “சும்மா குதிக்காத பிரியா. இப்போ எதுக்குத் தேவையில்லாம அவனை இழுக்கற? நான் உன்னை வெயிட் பண்ண சொல்லிட்டு போனேன். என்னை நம்பாம பயந்து அடிச்சு பிடிச்சு வீட்டுக்கு வந்தது நீ..” என்று அவளையே குற்றம் சாட்டினான்.
அதுவரை இல்லாத அளவில் அப்போதுதான் அவளுக்குக் கோபமும், ஆத்திரமும் வந்தது.
“எவ்ளோ ஈசியா சொல்றீங்க பிரபா? நீங்க போன பத்து நிமிஷத்துல நான் சாப்பிட்டு முடிச்சுட்டேன். அதுக்கு அப்புறம் அங்க நான் என்ன பண்ண? அந்த ரெஸ்டாரண்ட்ட சுத்தி பார்க்கவா? இல்ல சுத்தம் பண்ணவா? பில் பே பண்ண கூட எங்கையில காசு இல்ல, எனக்கு எப்டி இருந்திருக்கும்?”
“ஹேன்ட்பேக்க கையில வச்சுக்காதது உன் தப்பு”
“வாவ் பிரபா”
“பீ லாஜிக்கல் பிரியா. உன் ஹேண்ட்பேக் உன்கிட்ட இல்லைன்னு எனக்கு எப்படித் தெரியும்? நான் லேட்டாகும்னு சொல்ல உனக்குப் போன் அடிச்சா நீ எடுக்கல. உன் ஹேன்ட்பேக் பேக் சீட்டில் இருக்குன்னு பார்த்திதான் பார்த்து சொன்னான்..”
“பார்த்தி..” என்று பல்லைக் கடித்தாள்.
“ஹேன்ட்பேக், போன் இல்லாம என்ன செய்யறியோன்னு டென்ஷனாகி அந்த ஹோட்டலுக்கு அடிச்சா நீ கெளம்பிட்டன்னு அவனுங்க அசால்ட்டா சொல்றானுங்க. சரி, வெளில வெயிட் பண்ற போலன்னு அங்க வந்து பார்த்தா நீ இல்ல.. செக்யூரிட்டி கிட்ட கேட்டா நீ ஆட்டோல போயிட்டேன்னு சொல்றான். பில்லும் பே பண்ணிட்டன்னு சொல்றாங்க. நீ சொல்லு, அந்நேரம் நான் என்ன செஞ்சிருக்கணும்?”
“என்கிட்ட சொன்ன மாதிரி பத்து நிமிஷத்துல வந்திருக்கணும் நீங்க. முதல்ல என்னோட ஒரு இடத்துக்குப் போயிட்டு, அங்க என்னைத் தனியா விட்டுட்டு போய் இருக்கக் கூடாது நீங்க” என்று அழுத்தமாகச் சொன்னாள்.
“நீ, எனக்காக வெயிட் பண்ணாம எதுக்காக வீட்டுக்கு வந்த? அதுக்கு மட்டும் பதில் சொல்லு? அப்படியா உன்னை அம்போன்னு விட்ருவேன்னு நினைச்ச? ம்ம்ம்?” என்று கடுமையாகக் கேட்டான். அவன் பட்டென்று எழுந்து அமர்ந்து விட, பிரியதர்ஷினி என்னமோ அவள்தான் தவறு செய்து விட்டது போல அவனைப் பார்த்திருந்தாள்.
“பார்த்திபன்..”
“சும்மா சும்மா அவன் பேரை இழுக்காத பிரியா” என்று கத்தினான்.
“அய்யோடா, ஏன் இப்படிக் கத்துறீங்க?”
“நீ ஏன் எனக்காக வெயிட் பண்ணல?”
“நீங்க ஏன் சொன்ன டைமுக்கு வரல? என்னை விட அந்தப் பார்த்திபன் அவ்ளோ முக்கியமா உங்களுக்கு?”
“டிபிக்கல் வைஃப் மாதிரி பிஹேவ் பண்ணாத பிரியா. உன்னை அப்படித் தனியா தவிக்க விட்ருவேனா நான்?” என்று அழுத்தமாக அவள் கண் பார்த்துக் கேட்டான்.
அந்தக் கேள்வி அவளை மௌனியாக்கியது. அந்நேரம் உணவகத்தில் தனியாக அமர்ந்திருக்கும் போது எத்தனை தவித்திருந்தாள்.
“உங்களுக்கு நான் எத்தனை டைம் போன் பண்ணேன் தெரியுமா?”
“என் போன் சைலண்டில் இருந்துச்சு பிரியா. மிஸ்டு கால் பார்த்து அந்த நம்பருக்குத் திரும்பக் கூப்பிட்டா அவங்க ஆன்சர் பண்ணல” என்றான். அவன் சொல்லாமல் விட்ட வார்த்தைகளுக்கும் சேர்த்து அவள்தான் அர்த்தம் தேடிக் கொள்ள வேண்டியதாக இருந்தது. என்னவோ அவள்தான் தவறு செய்த மனநிலையைத் தந்திருந்தான். இப்போது யோசித்துப் பார்க்க அவனுக்காகக் கூடுதலாகக் கொஞ்ச நேரம் காத்திருந்திருக்கலாம் என்று அவளுக்கே தோன்றவும் அதிர்ந்து எழுந்து அமர்ந்து விட்டாள்.
அவ்வளவு பெரிய உணவகம். அதுவும் கணவனுடன் சென்ற இடத்தில், அவன் இல்லாமல் தான் மட்டுமே தனியாக அமர்ந்திருந்தது, அவளுக்கு என்னவோ போலாகி விட்டது. அங்கிருந்த மேஜைகள் எல்லாம் காலியாக, அவள் மட்டுமே தனியாக அமர்ந்திருந்தாள். உணவக ஊழியர் தன்னையே குறுகுறுவெனப் பார்க்கும் உணர்வு. உணவுக்குக் கொடுக்கக் கையில் பணமில்லாதது வேறு அவளை அதிகமாகப் பதற்றமாக்கியது.
ஒருவேளை கையில் பணமும், அலைபேசியும் இருந்திருந்தால், நிச்சயமாக இது நேர்ந்திருக்காது. அதுதான் சொல்லி விட்டானே, கைப்பையைக் கையில் வைத்துக் கொள்ளாதது உன் தவறு என்று.
அந்நேரம் அப்பா, அம்மா, அண்ணன் என யாரையும் அழைக்கவில்லை அவள்.
தோழி பார்கவிக்குதான் அழைத்தாள்.
“என்னது, உன்னைத் தனியா விட்டுட்டு உன் புருஷன் பிரபஞ்சன், அவர் ஃப்ரெண்ட்டை பார்க்க போய்ட்டாரா? உன் கையில போன், கேஷ் எதுவும் இல்லையா? யாரு அந்தப் பார்த்திபன் போன் பண்ணாரா? போச்சு இனி உன் புருஷன் வர்றது சந்தேகம்தான்” நாடக பாணியில் அவள் கேட்டதில் இன்னுமே பாதிக்கப்பட்டாள். பார்த்திபனை பற்றிச் சொல்ல இன்னுமே ஆத்திரம் பற்றிக் கொண்டது.
“ஒரு நீயா நானா ஷோ ஞாபகம் இருக்கா உனக்கு? மறதி புருஷர்கள் பத்தினது?”
“இல்ல” என்று பிரியா சொல்ல, “நல்லது, அதுல ஒரு ஹஸ்பன்ட் இப்படித்தான் வைஃபை ஹோட்டலுக்குக் கூட்டிட்டு போயிட்டு அவங்களைக் கூட்டிட்டு வந்ததையே மறந்துட்டு போன் பேசிட்டே வீட்டுக்குப் போய்ட்டாராம்” என்று அதே நாடக பாணியில் ராகம் போட்டு சொன்னாள் பார்கவி.
“பாரு..”
“எங்க பார்க்க? அந்தம்மா கையில போன், காசு எதுவும் இல்லாம பயந்து போய்..”
“இப்போ நீ வர்றியா இல்லையா பாரு?”
“என் டீம் லீட் உன் பிரபஞ்சன் போலப் பொறுமையான ஆள் கிடையாது. வள்ளுன்னு விழுவான்” என்றவள், உணவகத்தில் “கூகுள் பே” இருக்கிறதா என்று கேட்டு அவர்களின் உணவுக்கான தொகையை அனுப்பினாள்.
அத்துடன் அவள்தான் முன் கூட்டியே பணம் செலுத்தி அவளுக்கு ஆட்டோவும் புக் செய்து கொடுத்தாள். அந்த ஆட்டோ ஓட்டுநரின் அலைபேசியில் இருந்து அழைத்து, “வீடு வந்து விட்டேன்” என அவளுக்குத் தகவல் சொல்லி விட்டாள் பிரியா.
“உன்னை அப்படித் தனியா தவிக்க விட்ருவேனா நான்?” பிரஞ்சன் கேட்ட கேள்வி அவளுள் உழன்று கொண்டேயிருந்தது.