பிரிய பிரபஞ்சமே – 19 (2)

அவர்களின் திருமண இரவிலும் அப்படித்தான் நாணம் கொண்டாள்.

“பிரபஞ்ச…ன்.. அது வந்து… பிளீஸ்..” அவன் பெயரை கூட உச்சரிக்கத் தடுமாறினாள். அவள் எதிர்பார்த்த பொறுமை பெயரளவில் கூட அவனிடம் இல்லை. அவள் கேட்டிருந்தால் நிச்சயம் அவகாசம் தந்திருப்பான். அப்படியொன்றும் அனுமதி இன்றி அவளை ஆக்கிரமித்து விடவில்லை அவன்.

மலரினும் மென்மையாய் மலரைப் போலவே மலரச் செய்து சூடிக் கொண்டான்.

அவளின் வெட்கங்கள் விடைபெற்று, கூச்சங்கள் விலகிட, சிரிப்பும், சிணுங்கலுமாய் ஓர் கூடல். அவள் தந்த காயங்கள் எல்லாம் காதல் பரிசாகவே பார்த்தான் பிரியம் கொண்ட பிரபஞ்சன்.

நுனிக்காலில் எக்கி நின்று, “பிரபா” என்று அவன் தாடையில் பற்கள் பதிய அவள் பதிக்கும் ஈர முத்தத்திற்கு ஏங்கியது அவன் மனம்.

மறுகணம் அலமாரியை திறந்து அவசரமாக உடை மாற்றி, வெளியேறினான்.

“மழை பெய்யுது, பார்த்து போ ரஞ்சன். கவனமா டிரைவ் பண்ணு” அம்மா அக்கறையுடன் எச்சரிக்க, “சரிங்கம்மா. நான் அங்க போனா உடனே கிளம்பி வர முடியாது. நாங்க வர லேட்டானாலும் ஆகும். நீங்க எங்களுக்காக வெயிட் பண்ணாம சாப்பிட்டு படுங்க.” என்றான்.

“இல்லப்பா. பிரியதர்ஷினி வரட்டும். நீங்க வந்ததுக்கு அப்புறம் உங்களோட சேர்ந்து சாப்பிட்டுக்கறேன் நான்”

“ம்மா, நான் அங்க போனா என்னை டின்னர் சாப்பிட வைக்காம எப்படிமா அனுப்புவாங்க? நீங்க மொத சாப்பிடுங்க, சொல்லிட்டேன்” என்று மிரட்டியதோடு நிற்காமல் அவருக்கான உணவை எடுக்கச் சமையல் அறை நோக்கி நடந்தான்.

“ரஞ்சன், அம்மா சொன்னா கேட்கணும். நான் சாப்பிட்டுப்பேன். நீ நேரத்தோட போய் அவளைக் கூட்டிட்டு வா” என்று அவனை அதட்டினார்.

சரியெனத் தலையசைத்துக் கார் சாவியுடன் கீழிறங்கினான்.

அவனது நேரம் காரின் ஒரு சக்கரத்தின் டயரில் காற்றில்லை.

“டயர் பஞ்சரா? எப்படி?” காரை சுற்றி வந்து ஆராய்ந்தான். இடது பக்க ஒரு டயரில் காற்று முழுமையாய் இறங்கி இருந்தது. அலைபேசி திரையை ஒளிர்பித்து நோக்க, டயரில் ஒரு பெரிய ஆணி ஏறியிருந்தது.

“ப்ச்” எனக் கோபமாகச் சலித்தான். அவசரமாகத் தலையைக் கோதி எழுந்து நின்றவனுக்கு அப்படியொரு ஆத்திரம் வந்தது. காரின் சக்கரத்தை காலால் ஓங்கி எத்தினான்.

“என் நேரம் எல்லாம் சொதப்புது பார்” என்று புலம்பிக் கொண்டே மனைவியை அழைக்கப் போனான். அவள் அழைத்த போது, முகத்தில் அறைந்தார் போலப் பதில் அனுப்பி இருந்தான்தானே? அது உறுத்த அவளை அழைத்து, உன்னை அழைக்க வீடு வருகிறேன் என்று சொல்ல விரும்பினான்.

“ம்ம், வேணாம். சர்ப்பிரைஸா இருக்கட்டும்” பின்னே அவன் பேசிய பேச்சுக்கு அவன்தானே பரிகாரம் செய்திட வேண்டும்.

அவளுக்குத் தகவல் சொல்லாமல் அவளது வண்டியில் அவளின் வீடு செல்ல முடிவெடுத்து மாடியேறினான்.

“என்ன ரஞ்சன் அதுக்குள்ள திரும்பி வந்துட்ட? பிரியதர்ஷினிய கூப்பிட போகல?” என்று மரகதவல்லி குழப்பத்துடன் மகனைப் பார்க்க, “இப்போதான் மா பார்த்தேன், கார் டயர் பஞ்சர். அதான் ஸ்கூட்டி எடுத்துட்டு போலாம்னு கீ எடுக்க வந்தேன்” என்றான்.

“வெளில மழை பெய்ஞ்சுட்டு இருக்கேப்பா. நீ வண்டியில போயிட்டு திரும்ப எப்படி ரெண்டு பேருமா வண்டியில வருவீங்க?” என்று வினவினார்.

“மழை எப்பவோ நின்றுச்சும்மா. லேசா தூறுது, அவ்ளோதான். நான் வண்டியில போயிட்டு அங்கருந்து வரும் போது பிரியாவோட அண்ணனை எங்களைக் கார்ல ட்ராப் பண்ண சொல்றேன். இல்லையா ஆட்டோ எடுத்திட்டு உங்க மருமக மழையில் நனையாம அவளைப் பத்திரமா கூட்டிட்டு வர்றேன். போதுமா?” என்று கேட்டான். அவன் முகத்தில் குறும்பு புன்னகை. மரகதவல்லி சிரிப்புடன், “பத்திரமா போய்ட்டு வா ரஞ்சன்” என்றார்.

அவனும் வேகமாகக் கீழே வந்து வண்டியை ஆக்கிரமித்து, தலை கவசத்தைத் தலையில் கவிழ்த்து வண்டியை இயக்கி நகர்த்தினான்.

ஒற்றை நிமிடத்தில் முக்கியச் சாலையை அடைந்திருந்தான். மழை மெல்லிய தூறலாய் அவன் மேனி நனைத்துக் கொண்டிருந்தது.

எத்தனையோ இரவுகள் மனைவியுடன் மழையில் நனைய ஆசைக் கொண்டிருக்கிறான். ‍மழையில் நனைந்தபடி அவளோடு இனிமையாய், குளுமையாய் இப்படியொரு பயணம், கனவுதான் அவனுக்கு. இன்றைக்கு அது கை வரப் போகிறது. ஆவலுடன் வாகனத்தைச் செலுத்தினான்.

அவன் மழையில் நனைந்து விடாமல் இருக்க, முன்னெச்சரிக்கையாக ரெயின் கோட் அணிந்திருந்தான். அதன் உள்ளே பாதுகாப்பாக இருந்த அவனது அலைபேசி அடிப்பது மெலிதாக அவன் செவியை எட்டியது.

இரண்டு அழைப்புகள் அடுத்தடுத்து வரவும் வாகனத்தின் வேகத்தைக் குறைத்துச் சாலையோரம் நிறுத்தியிருந்தான்.

ஒருவேளை மனைவிதான் அழைக்கிறாளோ என்று அவசரமாக அவன் அலைபேசி திரையை நோக்க, “மாணிக்கவேல்” என மாமனார் பெயரை அடை மொழியுடன் காண்பித்தது.

அவனது புருவங்கள் கேள்வியாகச் சுருங்க, “பிரியா அங்க இருக்கும் போது, அவ கால் பண்ணாம.. மாமா ஏன் கால் பண்றாங்க? என்னாச்சு?” என்ற பதற்றத்துடன் அவரது அழைப்பை ஏற்றான்.

“மாமா..” என்றான். மறுநொடி காதில் விழுந்த செய்தியில், அவனது சர்வமும் செயலிழந்து போக, உறைந்து நின்றான்.

“மாப்ள..”

“மாப்ள” என்று ராதா கத்த, அவர் குரலே அவன் செவியைச் சென்றடையவில்லை.

மாறாக, “குட்டிமா, அப்பா பாரு” என்று பின்னால் கத்திக் கொண்டிருந்த மாணிக்கவேல் குரல்தான் அவன் செவியை மோதி மூளையை அடைந்தது.

“மாப்ள..”

“இங்க குடும்மா, நான் பேசறேன்” என்று பிரகாஷ் அலைபேசியை அம்மாவிடம் இருந்து பிடுங்க, “பிரகாஷ், மாப்ளகிட்ட நான் பேசறேன். நீ பாஸ்ட்டா டிரைவ் பண்ணு. கேர்ஃபுல்” என்று கத்தினார் மாணிக்கவேல்.

“மாமா.. மாமா..” என்று பதறி அலறினான் பிரபஞ்சன்.

“பிரியா, பிரியாவுக்கு என்ன? எங்க அவ? அவகிட்ட போனை குடுங்க”

“அவளுக்கு ஒன்னுமில்ல மாப்ள. நீங்க டென்ஷன் ஆகாதீங்க. நாங்க ஹாஸ்பிடல் போயிட்டு இருக்கோம்”

“எந்த ஹாஸ்பிடல்?”

என்று கத்தினான். அவர் மருத்துவமனையின் பெயரை சொல்லவும், “நான் நேரா அங்க வந்துடுறேன். பிரியாவை.. பிரியாவை பார்த்துக்கோங்க, பிளீஸ்” என்று நடுங்கும் குரலில் கெஞ்சினான்.

“ச்சே, எல்லாம் என்னால..” ஓங்கி நெற்றியில் அறைந்து கொண்டான். அவனது பொறுமை எங்கே போனது?

“பிரியா.. அவளுக்கு ஒன்றும் ஆகியிருக்கக் கூடாது. அவளுக்கு ஒன்றென்றால் அவனால் தாங்கிக் கொள்ளவே முடியாது. அவளின்றி.. ஐயோ..” நெஞ்சில் யாரோ ஏறி நின்றது போல அவனுக்கு மூச்சடைத்தது.

இதயம் எகிறி குதித்துத் தொண்டையில் துடிக்கும் உணர்வு. அந்த மழை நாளிலும் அவன் கைகள் வியர்த்து பிசுபிசுத்து வழுக்கின. வாகனத்தையும் சாவியையும் இறுக பற்றினான்.

அவனுக்கு இந்த நிமிடமே அவன் மனைவியைப் பார்த்திட வேண்டும். அவளைப் பார்த்து விட்டால் போதும், மிச்சத்தை அவன் பார்த்து கொள்வான்.

அவளிடம் கோபப்பட்டிருக்கக் கூடாது அவன். குற்ற உணர்ச்சி குரூரமாக அவனைக் குத்தி கிழித்தது.

“சாரி பிரியா” மானசீகமாக மனைவியிடம் மன்னிப்பை வேண்டினான்.

“ஐ லவ் யூ பிரியா” மென்மையாய் முணுமுணுத்தான். அவளிடம் பகிராத பிரியம் இப்போது பாரமாய் அவன் மனத்தை அழுத்தியது.

மறுகணம் விரைந்து வண்டியை ஆக்கிரமித்து அதி கவனமாய், நிதானமாக வண்டியை செலுத்தினான்.

நெஞ்சின் படபடப்பு அவனது நிதானத்தைச் சோதித்தாலும் சாலையில் இருந்து தன் கவனத்தை, கண்களை விலக்கவில்லை அவன்.

அந்த இரவு நேரத்திலும் சென்னையின் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்திருந்தது.

மழை நாளில் விரைவாக வீடு செல்லும் அவசரம் அனைவரிடமும் வெளிப்பட்டது. வாகனங்கள் ஒன்றையொன்று முந்திக் கொண்டு சாலை விதிகளைப் பின்பற்றாமல் விரைந்தன.

பிரபஞ்சனுக்குக் கண்கள் கலங்கிட, எதிரே நிற்கும் வாகனங்கள் எல்லாம் மறைவது போலிருந்தது. கண்ணைப் படபடவெனச் சிமிட்டி சிமிட்டி கண்ணீரை உள்ளிழுத்தான்.

சிக்னலில் பச்சை விழவும் முதல் வரிசையில் நின்றிருந்தவன், மறுபக்கம் செல்ல வண்டியை மிதவேகத்தில் இயக்கினான்.

பிரபஞ்சனின் மனம் அவனின் பிரியத்தைக் காண செல்லும் வேகத்திற்கு இந்த ஈர சாலையும், மழையும், அதில் உடன் வந்த வண்டிகளும் கண்ணீரோடு சேர்த்து எரிச்சலை மட்டுமே கொடுத்தது.

வண்டியில் ஏறும் போது அவன் ரசித்த அந்தப் பிரிய மழை அவனது பிரியத்தைத் தாக்கியதாலோ என்னவோ அவன் உடலை நனைத்து மனம் தொட முடியாமல் மரணித்தது.

எதிரும், பக்கவாட்டிலும் வரும் வாகனங்கள் எல்லாம் அவன் கண்களுக்குத் தெரிந்தும், கருத்தில் எட்டியும், கொதிநிலையில் இருக்கும் மனத்தோடு பிரியத்தின் பிரியத்தைப் பகிர்ந்தபடி வண்டியை வலப்புறம் மெல்லத் திருப்பினான்.

சாலையில் பச்சை விளக்கு ஒளிர்ந்த பின்னும், எதிர்சாலையில் இருந்து அதைக் கவனிக்காமல் அவசரமாக வந்த இரு சக்கர வாகனமும், காரும் ஒன்றோடொன்று மோதி, வேக கட்டுப்பாடில்லாமல் முன்னே சென்ற பிரபஞ்சனின் வண்டியை மூர்க்கமாக முட்டித் தள்ளியது.

பிரபஞ்சன் எத்தனை இறுக்கமாக வண்டியை பிடித்திருந்தும் மழை ஈரம் அவனை வழுக்கி விழ செய்திருந்தது. கண்ணிமைக்கும் நொடியில் பிரஞ்சன் ஒரு புறம், அவனது வண்டி ஒரு புறமாக விழுந்து கிடந்தார்கள்.

மனம் முழுதும் அவனின் பிரியம் சூழ, பயமும் வலியும் மிக, “பிரியா..” என மெல்ல முணுமுணுத்தவன் கண்கள் இயலாமையில் இறுக மூட அவனுக்கு நினைவு மெதுவாகத் தப்பத் தொடங்கியது.

மழை நீரோடு சேர்ந்து சிவப்பாய் பிரபஞ்சனின் ரத்தமும் சாலையில் கலந்து ஓடத் தொடங்கியது. விபத்தில் மயங்கியவனின் மனத்தில் முழுதாய்க் காதலால் மயக்கிய அவனின் பிரிய பிரபஞ்சம் மட்டுமே நிறைந்து நிலைத்து நின்றது.

error: Content is protected !!
Scroll to Top