பிரிய பிரபஞ்சமே – 19 (1)

“சிலருக்குப் பைத்தியம் தெளிய காதல் தேவை.

சிலருக்குப் பைத்தியம் பிடிக்கக் காதல் தேவை.

சரி,

விவசாயத்திற்கும் வெள்ளத்திற்கும்

ஒரே மழைதானே தேவைப்படுகிறது”

அந்தக் கவிதையை நான்கைந்து முறை வாசித்து விட்டான் பிரபஞ்சன். முதல் முறை வாசிக்கையில் வெடித்துச் சிரித்திருந்தான். நல்லவேளையாகக் காரில் இருந்தான். இல்லையேல் கடந்து செல்பவர்கள் அவன் சிரிப்பைக் கண்டு மிரண்டு போய் அவனை வினோதமாகப் பார்த்திருப்பார்கள்.

அக்கவிதையை நண்பன் பார்த்திபன் அவனுக்கு அனுப்பியிருந்தான், கேலி செய்கிறானாம். இருக்கட்டும். அவனைப் பிறகு பேசிக் கொள்வான் பிரபஞ்சன்.

கவிதையை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் அவனது கவிதை காரிகைதான் அவனது கண்களுக்குள் வந்தாள்.

“பிரியதர்ஷினி” அவள் பெயரை உச்சரிக்கும் போதே அவனுள் பிரியம் பிரவாகமாய்ப் பெருகியது. அவளைப் போய் எப்படித்தான் பேச அவனுக்கு மனம் வந்ததோ. வேலையின் அழுத்தத்தை அவளிடம் வெளிப்படுத்தி இருக்க வேண்டாம் என நினைத்து இப்போது வருந்தினான். அவளது கலங்கிய கண்களும், கசங்கிய முகமும் இப்போது அவன் கண் முன் தோன்றி அவனை வதைத்தது.

எத்தனை வருட பிரியம் அவள் மீது, இப்படியா அவசர கோலத்தில் அதைப் போட்டு உடைப்பான். அவன் காதலை அவளே கண்டறிய வேண்டும் என ஆவல் கொண்டிருந்தான். அவனே சிறப்பானதொரு தருணத்தில் அவளிடம் தெரியப்படுத்த வேண்டும் என நினைத்திருந்தான். ஆனால், சத்தியமாய் இப்படிக் கோபமாகச் சொல்லிட ஒருநாளும் அவன் நினைத்ததில்லை‌. கற்பனை கூடச் செய்ததில்லை.

அவனது நெடுநாள் கனவு அவள், அது நிஜமானதே அவனைப் பொறுத்தவரை அதிசயம்தான். அவனது அனைத்தும் அவளே. அது அவளுக்குப் புரியாமல் போனதில்தான் அவனுக்கு நிரம்பக் கோபம். ஆனால், இப்போது நிதானமாக யோசிக்கையில் அதைப் புரிய வைக்கத் தவறிய தன் மேல்தான் தவறு என அவனுக்குப் புரிகிறது.

மனைவி, “ஐ லவ் யூ” சொல்லும் போதெல்லாம் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறான். ஒருநாளும் அவளிடம் திரும்பிச் சொன்னதில்லை. அவன் சிறந்த தருணத்திற்காகக் காத்திருந்து தன்னவளை காயப்படுத்தி விட்டானோ.

அவளிடம் மனதார மன்னிப்பு கேட்க வேண்டும்.

அவள் மன்னிக்கும் வரை அவள் காலடியில் மண்டியிடவும் அவன் தயார்.

அவள் கண் பார்த்து, தன் மனத்தின் ஆழத்தில் இருந்து பொங்கி பெருகும் தன் பிரியத்தைப் பகிர்ந்திட வேண்டும். என்ன பதில் சொல்வாள் அவள்? அந்த எதிர்பார்ப்பே இதயத் துடிப்பை ஏகத்துக்கும் எகிற செய்தது.

கிட்டத்தட்ட பதிமூன்று, பதினான்கு வருட பிரியம். முதலில் பிடித்ததில் தொடங்கி, பிரியமாகப் பரிணமித்து, அவளே அவனின் பிரிய பிரபஞ்சம் என்றானது.

அவளிடம் பிரியம் பகிர இன்னும் என்ன தயக்கம் அவனுக்கு? அவனின் சரி பாதி அல்லவா அவள். அந்த எண்ணமே இனிக்க, முகத்தை நிறைத்த முறுவலுடன் வீடு சென்றான்.

“வாப்பா, ரஞ்சன். காஃபி தரவா?” அவனைப் பார்த்ததும் கேட்டார் மரகவதல்லி.

“வேணாம்மா”

“ஆஃபீஸ் வொர்க் முடிஞ்சதா?”

“ம்ம், முடிஞ்சதும்மா” சோர்வுடன் கண்ணைத் தேய்த்தபடி சொன்னவன், அப்படியே சோஃபாவில் சரிந்தான்.

“நீ மதியம் சாப்பிட்டியா இல்லையா? காலைல செஞ்ச எல்லாமே கிச்சன்ல அப்படியே இருக்கு. நீ சாப்பிடலன்னு பிரியதர்ஷினியும் சாப்பிடல போலயே”

“என்னம்மா சொல்றீங்க?”

“நீங்க ரெண்டு பேரும் சாப்பிடலையான்னு கேட்டேன்?”

“நான் ஆபீஸ் மெயில் வரவும் அவசரமா கிளம்பிட்டேன்ம்மா. பிரியா..” என்று அவன் தயங்க, “அவ சாப்பிடல போல. செஞ்சது எல்லாம் அப்படியே இருக்கு” என்றார் அவர், கரிசனத்துடன்.

“நீ ஆஃபீஸ்ல என்ன சாப்பிட்டு இருக்கப் போற? நான் சாப்பாட்டைச் சூடு பண்ணி எடுத்துட்டு வர்றேன், ஃபர்ஸ்ட் சாப்பிடு என்ன?”

“இல்லம்மா, நீங்க உக்காருங்க. நானே சூடு பண்ணிக்கறேன்.. அப்புறமா” என்று இழுத்தான்.

“ஏன் உனக்கு இப்போ சாப்பிடுறதுக்கு என்ன?”

“பசிக்கலம்மா”

“உன் முகமே பசியில வாடிப் போய் இருக்கு. ஆனா பசியில்லன்னு சொல்ற. ஹ்ம்ம், இந்தப் பிரியதர்ஷினி எப்போ வர்றாளாம்? ஈவ்னிங் வந்துடுவேன்னு என்கிட்ட சொல்லிட்டுதான் அவங்கம்மா வீட்டுக்கு போனா. ஆனா, ஆளை இன்னும் காணலயே. உனக்கு எதுவும் போன் பண்ணாளா?” என்று கேட்டார்.

“நான் போய் அவளைக் கூட்டிட்டு வர்றேன்ம்மா” என்றவன், எழுந்து வேகமாகச் சமையல் அறைக்குச் சென்றான்.

“நீ இப்பத்தானே ஆஃபீஸ்ல இருந்து வந்த? இந்த மழையில திரும்பவும் வெளில போகணுமா? நீ வர்ற வழியிலயே அவளையும் கூட்டிட்டு வந்திருக்கலாம் இல்ல? எதுக்கு இத்தனை தரம் அலையற?”

“நானும் அப்படித்தான் மா நினைச்சேன். ஆனா, மழையினால ரோடு முழுக்கத் தண்ணி, டிராபிக்னு டென்ஷன் பண்ணிடுச்சு. கார் வேற ரெண்டு இடத்துல நிக்கவும் எரிச்சலாகிடுச்சு” என்று காரணம் சொன்னான். உண்மையான காரணம் அவனது உள்ளம் மட்டுமே அறியும்.

அதென்ன, “போகவா?” என்று மொட்டையாகக் கேட்கிறாள்.

“போயிட்டு வரவா?” என்று கேட்பதற்கு என்னவாம்?

“போயிட்டு வர்றேன்” என்று தகவல் சொன்னால் போதுமே. அவனது எதிர்பார்ப்பு அவ்வளவுதானே. அப்பொழுது மனைவி மீது அப்படியொரு கோபம் அவனுக்கு. ஆனால், வீடு என்றாலே அவனுக்கு அவள்தான். இன்று அவளில்லாத வீடு அத்தனை வெறுமையை அவனுக்குத் தந்தது.

அவள் மேல் அவனது கோபம் எல்லாம் பனியை கண்ட சூரியன் போலத்தான். அவளை நினைத்தாலே அவன் மனம் தானாக உருகி விடும்.

இப்போதும் அந்நிலையில்தான் இருந்தான்.

அவனே சமையல் அறைக்குள் நுழைந்து காஃபி தயாரிக்க, பாலை அடுப்பில் ஏற்றினான்.

“சரி, ரஞ்சன். அவளுக்குப் போன் பண்ணி எப்போ வர்றான்னு கேளு. இல்ல, நீ இருப்பா. நானே அவளுக்குக் கால் பண்றேன்” என்று தன் அலைபேசியுடன் சமையல் அறை வாசலில் வந்து நின்றார் மரகதவல்லி.

பிரபஞ்சன் அவர் புறமாகத் திரும்பி, “நீங்க கால் பண்ணாதீங்கம்மா. பத்து நிமிஷம் குடுங்க, நானே போய் அவளைக் கூட்டிட்டு வர்றேன்” என்றான்.

“இந்த மழையில திரும்ப அலைஞ்சு, நனைஞ்சிட்டு வர போறியா நீ? ஏற்கெனவே நல்லா நனைஞ்சு போய் இருக்கப் பாரு” வேகமாகச் சென்று அவனுக்குத் துவாலை எடுத்து வந்து நீட்டினார்.

அவன் தலைத் துடைக்க, “அவங்க அண்ணனை கொண்டு வந்து விடச் சொல்லு. இந்நேரம் நீ அலைய வேணாம். இன்னைக்கு ஒரு நாள் மழைக்கே நம்ம ஏரியா ரோடெல்லாம் ஆறாட்டம் தண்ணி ஓடுது. எங்க ஸ்கூல் முன்னாடி ரொம்ப மோசம், ரோடும் சரியில்லாம குண்டும் குழியுமா இருக்கு. நீ அவங்க அண்ணனை கொண்டு வந்து விடச் சொல்லு ரஞ்சன்” கொஞ்சம் புலம்பி, கண்டிப்புடன் அவர் சொல்ல, “நான் போய்க் கூட்டிட்டு வர்றேன்ம்மா. நீங்க டென்ஷன் ஆகாம போய் உக்காருங்க” என்று முடித்து விட்டான்.

அப்போதும் விடாமல், “உங்க ரெண்டு பேருக்கும் எதுவும் சண்டையா?” என்று சந்தேகத்துடன் கூர்பார்வை பார்த்தார் அவர்.

“ம்மா” சிரிப்புடன் அவன் சினக்க, சன்ன சிரிப்புடன், “சரி, சரி. நான் ஒன்னும் கேட்கல. நீயே போய் அவளைக் கூட்டிட்டு வா. ஆனா, சாப்பிட்டுக் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு போ” என்றார் கண்டிப்புடன்.

“இந்தா, ஈவ்னிங் பார்த்திபன் வந்து செக் கொடுத்துட்டு போனான்.” என்று காசோலையை எடுத்து வந்து நீட்டினார்.

“டேபிள்ல வைங்கம்மா. நான் எடுத்துக்கறேன்”

“இந்தப் பார்த்திப் பையன், வீட்டுக்கு நாளைக்குப் போவோமாப்பா ரஞ்சன்?”

“ம்மா..”

“சரி, ஃபர்ஸ்ட் நீ போய்ப் பிரியதர்ஷினிய கூட்டிட்டு வா. அவ இல்லாம நீ எங்கேயும் வர மாட்டியே” அவர் கோபமாகச் சொல்வது போலிருந்தாலும், அதில் செல்ல அலுப்புதான் இருந்தது.

அவனும் சிரித்தபடி திரும்பி, பாலை அணைத்தான். காரில் இருந்து இறங்கி இரண்டு முறை என்னவென்று காரை சோதித்ததில் நன்றாக மழையில் நனைந்திருந்தான் அவன். தலை முடிகள் ஈரத்தில் பளபளத்து மின்னின.

அவன் குளித்துத் தலையைத் துவட்டாமல் சமையல் அறைக்குள் நுழைந்தாலே, “பிரபா” என்று கண்ணை உருட்டி மிரட்டி அவனை அருகில் இழுப்பாள் பிரியதர்ஷினி.

அவன் மேல் அக்கறையும், மையலுமாய்ப் படியும் அவள் பார்வை. கையை உயர்த்தி அவன் முடியை கலைத்து விடுவாள். வேண்டுமென்றே குனிந்து அவள் உடையில் தலையைத் துவட்டுவான் அவன்.

“சில்லுன்னு இருக்கு பிரபா. அய்யோடா, என் டாப்பை கீழ விடுங்க. வயிறு தெரியுது” என்று அவள் அலறினால், அதை அலட்சியம் செய்து, மணி வயிற்றில் முகம் புதைத்து, அவளை வாசம் பிடித்து, ஈரமாய் முத்தமிட்டே விலகுவான்.

“பிரபா” என்று கோபமாய்ச் சிணுங்குபவளை அப்படியே கையில் அள்ளி கொஞ்சிய நாள்கள் ஏராளம். அவள் என்றும் அவனை மறுத்ததே கிடையாது.

அவளின் ஒற்றை முத்தம் போதும் அவனை மொத்தமாய் வீழ்த்த. தளிர் விரல்களால் அவனின் தலை கோதி, மீசையை வருடி, பிடித்திழுத்து அவள் பகிரும் முத்தம் அவனைப் பித்தனாக்கிடும். அவர்களுக்குள் இப்படி எத்தனையோ பிரிய பொழுதுகள் இருக்க, என்ன எதிர்பார்த்தான் அவளிடம்? இப்போது அந்தக் கேள்வியே அபத்தமாகப் பட்டது.

காஃபி கோப்பையுடன் அவன் திரும்ப, அங்கே மதியம் அவனுக்கு உணவு பொதிந்து வைத்த பை மேஜையின் ஓரமாய் இருந்தது.

ஓர் ஆர்வக்கோளாறில் அதைப் பிரித்துப் பார்த்தான். அவனுக்குப் பிடித்த காய்கறி புலாவ், வெங்காய வெள்ளரி பச்சடி, புதினா துவையல், முட்டை வறுவல் என எல்லாமே அவனுக்குப் பிடித்ததாகச் செய்திருந்தாள். இன்று அவன் வீட்டில் இருப்பான் என்று செய்திருக்கிறாள்.

உணவின் வழி கடத்தப்படும் பிரியமே அலாதிதானே.

சமயங்களில், “சாப்பிட்டியா?” என்ற ஒற்றைக் கேள்வி கூட உடைந்து அழ செய்து விடும் மாயத்தின் பின்னே அன்பு மட்டும்தானே இருக்கிறது.

அவளின் பிரிய மொழி, அவனுக்குத்தான் புரியவில்லை போலும். தன்னைத்தானே நொந்து கொண்டான்.

அவனுக்குப் பிடித்த உணவுகளை எப்போதும் அவளுக்கு ஊட்டி விடுவான் அவன், அதில் ஒரு நிறைவு.

மனம் முழுக்க முழுக்க மனைவியையே சுற்றி வர, அவனால் ஒரு மிடறு காஃபியை கூட அருந்த முடியவில்லை. அந்தக் கணமே மனைவியைக் காண வேண்டும் போலிருந்தது அவனுக்கு. அதற்கு மேல் தாமதிக்கவில்லை அவன்.

கனத்த காஃபி கோப்பையை அப்படியே வைத்து விட்டான்.

அம்மாவுக்கான காஃபியை அவரிடம் நீட்டியவன், “நான் போய்ப் பிரியாவை கூட்டிட்டு வந்துடுறேன்ம்மா” என்றான்.

“சரிப்பா, இப்படியே ஈரத் துணியோடவா போவ? சளி பிடிச்சு, காய்ச்சல் வர போகுதுப்பா. முதல்ல போய் டிரஸ்ஸ மாத்திட்டு கிளம்பு.” என்றார்.

“ப்ச்” சத்தமில்லாமல் சலித்துக் கொண்டான்.

இந்த ஆசிரியர் அம்மாவிற்கு அவனது அவஸ்தை எங்கே புரிய போகிறது.

“உங்க மருமகள கோபத்துல கண்டபடி திட்டிட்டேன்ம்மா” என்று அவன் சொன்னால் என்ன செய்வார் மரகதவல்லி? யாருக்கு தெரியும், அவனுக்குத் தண்டனை கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவனை உணவு மேஜை மேல் ஏறி நிற்க சொல்லாதவரை சரிதான் என்ற நினைப்பே அவனுக்குச் சிரிப்பை தந்தது. குறுநகையுடன் தனதறைக்குச் சென்றான்.

அறைக்குள் நுழைந்ததும் எப்போதும் போல அவன் கண்கள் படுக்கையின் எதிர் சுவரைத்தான் பார்த்தன.

பிரியதர்ஷினி மணப்பெண்ணுக்கே உரிய நாணத்துடன், கன்னம் குழைய புன்னகைத்து, அவனை நிமிர்ந்து நோக்கியிருந்தாள். அவளின் அந்தப் பார்வையும் புன்னகையும் அவனை மயக்கும், மதி மயங்கச் செய்திடும் வல்லமை கொண்டது.

error: Content is protected !!
Scroll to Top